THE LADY VANISHES (1938)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்கள் பார்க்க துவங்குவதற்கு முன்பு அவரை குறித்தான பிம்பம் மிகைப்படுத்த பட்டதாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. ஆனால் முதல் 2 படங்களை பார்க்கும் போதே அது பொய் என்பது புரிந்து விட்டது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது கூட அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத படி எடுத்திருக்கிறார் என்றால் என்னவென்று புகழ்வது. சரி அடுத்த படத்தை பார்ப்போம்.

ஐரோப்பாவிற்கும் இரஸ்யாவிற்கும் இடையிலான ஒரு பனிமலை பக்கம் ஒரு சுற்றுலாத்தாளம். அதன் பெயர் “அவிலாஞ்சி(avalanche)” அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உச்சரித்துக் கொள்ளட்டும். நமது ஊட்டி அருகே உள்ள ஊர் பெயருடன் பொருந்தும் பொழுது அதையே சொல்லுவோம். அங்கு இரயில் நிலையத்திற்கு அருகேயே ஒரு தங்கும் விடுதி. அதிக பனிப் பொலிவினால் இரயில் ஓடாத நிலையில் அனைவரும் அங்கேயே தங்க நேர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

அடுத்த வாரம் இலண்டனில் திருமணம் செய்து கொள்ளப் போகும், அதில் பெரிதாய் ஆர்வமில்லாத நாயகி, இரண்டு கிரிக்கெட் வெறியர்கள், இவர்களுக்கு எப்படியாவது நாளை இலண்டன் சென்று டெஸ்ட் மேட்ச்சின் இறுதி நாள் விளையாட்டையாவது பார்த்து விட வேண்டும். விவாகரத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியினர், ஒரு வயதான பெண்மணி, அவருக்கு இசையில் பெரிய ஆர்வமுண்டு, தன்னை ஒரு மியுசிக் டீச்சர் என்று அறிமுகம் செய்து கொள்வதுடன் அனைவருடனும் மிகவும் கனிவாக பழகுகிறார். அனைவரும் தூங்கும் நேரத்தில் மாடியில் பாடி ஆடி சத்தம் போட்டு நாயகியுடன் வம்பிழுக்கும் நாயகன். இவனும் ஒரு இசைக் கலைஞன் தான்.

சென்ற படத்திலேயே சொன்னது போல் ஒரு நல்ல திரில்லர் படத்தில் தேவையில்லாமல் ஒரு வசனம், ஒரு காட்சி கூட இருக்க கூடாது. நாம் முதலில் பார்க்கையில் இது என்னடா தேவையின்றி இத்தனை காட்சிகள், வளவளவென்று பேசுகிறார்கள் என்று கவனிக்காமல் விடுவதெல்லாம் இரண்டாம் பாதியில் முக்கியமானவைகளாக காட்டப்படும் என்று கவனத்துடன் பார்த்தாலும் நாம் யூகிக்க இயலாத வண்ணம் திருப்பத்தை வைப்பதன் மூலம் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.

அடுத்த நாள் காலை அனைவரும் இரயில் ஏறுகையில் வயதான பெண்ணின் தலைக்கு குறிவைத்து தள்ளி விடப்பட்ட பூந்தொட்டி நாயகியின் தலையில் விழுகிறது. நம்மால் அதற்கு முன்பே முந்தைய இரவு விடுதியின் வெளியே பாடிக் கொண்டிருந்தவனை கொலை செய்த கைகள் தான் இதையும் செய்திருக்கக் கூடும் என்பதை யூகிக்க முடிகிறது. ஆனால் ஏன்? தெரியவில்லை.

தலையில் அடிபட்டதால் மயங்கி எழுந்த நாயகியை அந்த மூத்தவள் கேண்டினுக்கு அழைத்துச் சென்று டீ வாங்கி தருகிறாள். தன்னை பற்றி நிரம்ப சொல்கிறாள். அவள் பெயர் சொல்கையில் இரயில் விசில் சத்தம் அதிகமாக இருப்பதால் கண்ணாடியில் எழுதி காட்டுகிறாள். இருவரும் திரும்பி வந்த பின் மீண்டும் நாயகியை ஓய்வெடுக்க சொல்லி விட்டு அந்த வயதான பெண்மணி பாடலை ஹம் செய்ய துவங்குகிறாள். தூங்கி எழுந்த நாயகி எதிரில் அந்த பெண்மணி காணாமல் இருக்கவும் அதே கம்பார்ட்மெண்டில் இருந்த மற்றவர்களை கேட்க அப்படி யாருமே இல்லை எனவும் குழப்பமாகி இரயில் முழுக்க தேடுகிறாள்.

கேண்டினுக்கு சென்று தங்களுக்கு டீ கொடுத்த சர்வண்ட்டை கேட்டால் நீங்கள் தனியாகத்தான் வந்து டீ குடித்தீர்கள் என்று ஆதாரமாக பில்லையும் காட்டுகிறான். அதையும் மனம் ஏற்க மறுக்க நாயகி இரயில் முழுக்க தேட முயல இரவு தன்னிடம் வம்புக்கு வந்த நாயகன் கண்ணில் படுகிறான். நாயகி குழப்பமாக இருப்பதை பார்த்தவன் தான் உதவுவதாக முன்வந்து இருவரும் மீண்டும் தேடுகிறார்கள். வழியில் சந்திக்கும் ஒரு நரம்பியல் மருத்துவர் இது தலையில் அடிபட்டதால் வந்த பக்கவிளைவு. மனதின் கற்பனை எனவும் வழியில் அந்த முதியவளை சந்தித்த யாரும் கவனிக்கவில்லை என்றும் தெரியாது என்றும் சொல்லியும் சமாதானமாகதவள் அப்பெண் கிடைத்து விட்டதாகவும் கம்பார்ட்மெண்டிற்கு வந்து விட்டதாகவும் தகவல் கிடைத்தால் அங்கு நாயகி சொன்ன அடையாளங்களுடன் வேறு பெண் அமர்ந்து இருக்கிறாள்.

ஒரளவு சமாதானமடையும் நாயகி தனது தேடலை விடுத்து நாயகனுடன் கேண்டினுக்கு வர அங்கு கண்ணாடியில் எழுதியிருந்த முதியவளின் பெயர் தெரியவும் பெரிய சதி நடப்பதும் அதை தான் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அனைவரும் பொய் சொல்வதையும் புரிந்து கொள்கிறாள். எப்படியாவது அப்பெண்ணை கண்டறிய முயலும் நாயகிக்கு நாயகன் துணையாய் இறங்குகிறான்.

அந்த முதியவள் கிடைத்தாளா? எங்கு சென்றாள்? யாருடைய சதி இது? எதற்காக இப்படி அனைவரும் நாடகமாடுகிறார்கள்? இறுதியில் வென்றது யார் அனைத்தையும் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் இணைப்பு

இது ஏற்கனவே நாவலாக வந்து வெற்றியடைந்த கதை. அதை இயக்கி வெற்றி அடைந்திருக்கிறார். வாசிப்பு பரவலாக இருக்கும் நாடுகளிலேயே இயக்குனர்கள் துணிச்சலோடு புத்தகத்தை படமாக எடுக்க முயற்சிக்கும் போது, இங்கு ஏன் அதை செய்யாமல் வேறு மொழி படங்களையும் ஏற்கனவே வந்த தமிழ் படங்களையுமே திரும்ப திரும்ப எடுக்கிறார்களோ தெரியவில்லை.