திகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்

 “The only way to get rid of my fears is to make films about them”

இதை யார் சொல்லியிருக்கக் கூடும்? கட்டாயம் ஒரு திரைப்பட இயக்குனராகத்தான் இருக்கும். எப்படிப்பட்ட இயக்குனர்? தனது பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துபவர். பயமுறுத்தும் வகையில் சிறந்த படங்களை எடுத்த இயக்குனர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? அப்படி ஒரு பட்டியல் தயாரித்தால் முதலிடத்திலேயே வருவார் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். சரியான உச்சரிப்பு என நம்புகிறேன். மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்றால் இவர்தான்.

முதலில் வந்த வசனம் எனக்கு “Batman begins” படத்தை நினைவு படுத்துகிறது.

“Why bats master Wayne?”

“Bats frighten me; it’s time my enemies share my dread”

தமிழில் சரித்திர நாவல் என்று எடுத்தால் அதில் கல்கியின் சாயல் இல்லாமல் போகாது என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு உண்மை இயக்குனர்களின் பார்வையில் ஹிட்ச்காக்தனம் கலந்திருப்பது. அவர் பெயரை புகழை கேள்விப் பட்டு இருக்கிறேனே தவிர படங்களை பார்த்ததில்லை. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு எழுத்தாளர் பிடித்த மாதிரி எழுதி இருந்தால் அவரது அனைத்து படைப்புகளையும் தேடி எடுத்து படிப்பது. சினிமாவும் அப்படித்தான். கிட்டத்தட்ட அனைத்து Woody Allen படங்களையும் பார்த்து முடித்து விட்டேன். ஹிட்ச்காக்கின் தேர்ந்தெடுத்த 29 படங்கள் கிடைத்தன. விடுவேனா? பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டேன். 2 வருடங்களாக பத்திரப்படுத்தி விட்டு இப்போதுதான் பார்க்கத் துவங்கினேன். தமிழ் சினிமா வேலை நிறுத்தத்தால் முடங்கி இருக்கும் பொழுது ஹிட்ச்காக் நினைவு வந்தது நல்லதாய் போயிற்று. இல்லை எனில் இன்னும் பல வருடம் ஆகி இருக்கும்.

படங்களை வழக்கமான பாணியில் விமர்சிக்க போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் வந்து குறைந்தது 50 வருடங்கள் ஆன படங்கள். திரைத்துறையில் இருப்பவர்களையும் உலக சினிமா இரசிகர்களையும் தவிர்த்து யாருக்கும் இவற்றை பார்த்திருக்க அவசியமோ நேரமோ இருந்திருக்காது. அதனால் இலைமறை காய்மறை என்றெல்லாம் பாராமல் படங்களை பற்றி முழுவதும் எழுதி விடப் போகிறேன். எழுத்தை சினிமாவாக மாற்றுவது போல் சினிமாவை எழுத்தாக மாற்ற முயற்சிக்கிறேன். திரைக்கதையை அப்படியே எழுதப் போவதில்லை. படம் எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு பிடித்ததை, நான் கவனித்ததை மட்டும் தான் எழுத இயலும். அதுதான் சரியாக இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். நான் இயக்குனரை பற்றி பெரிதாக எழுதப் போவதில்லை. அவரின் படங்களை என் பார்வையில் எழுத போகிறேன். எதற்கு சொல்கிறேன் எனில் நிறைய பேருக்கு ஹிட்ச்காக் ஆதர்ச குரு. அவரைப் பற்றி குறைத்து எழுதி விட்டதாக சண்டைக்கு வரக் கூடாதல்லவா? அதே போல் டெக்னிக்கலாக எதிர்பார்க்க வேண்டாம். உங்களுடன் பள்ளியில் படித்து வரும் பக்கத்து பெஞ்ச் மாணவன் படம் பார்த்து வந்து கதை சொல்கையில் கிடைக்கும் சுவாரசியம் நிச்சயம் கிடைக்கும். நன்றி.

படங்களின் பட்டியல்

 1. The Lodger (1927)
 2. The 39 steps (1935)
 3. THE LADY VANISHES (1938)
 4. Rebecca (1940 film)
 5. Saboteur (1942)
 6. Shadow of a Doubt (1943)
 7. Bon Voyage 1945
 8. Lifeboat (1944)
 9. Spellbound (1945 film)
 10. Notorious (1946 film)
 11. Rope (1948)
 12. Strangers on a train (1951)
 13. Dial M for Murder (1952)
 14. Rear Window (1954)
 15. The Trouble with Harry (1955)
 16. To Catch a Thief (1955)
 17. The Man Who Knew Too Much (1956)
 18. Vertigo (1958)
 19. North by Northwest (1959)
 20. Psycho (1960)
 21. The Birds (1963)
 22. Marnie (1964)
 23. Torn Curtain (1966)
 24. Topaz (1969)
 25. Family plot (1976)