சிக்கவீர ராஜேந்திரன் – நூல் அறிமுகமும் விமர்சனமும்

எந்த ஒரு புத்தகமும் திரைப்படமும் ஒரு புள்ளியிலிருந்து தான் துவங்கப் பட்டு எழுதப் பட்டிருக்கும். அந்த விஷயத்தில் நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் ஜெமினி படக்கதை துவங்கிய புள்ளி. ஜெயிலுக்கு சென்று திருந்திய இரவுடி ஒருவர் மாலைக் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியதை தினசரியில் படித்து எழுதப்பட்டதுதான் ஜெமினி படத்தின் கதை.

அதே போல் புத்தகங்களில் வெட்டுப்புலி. ஒரு தீப்பெட்டியில் புலியை வெட்டும் மனிதரின் படத்தைக் காட்டி இவர் என் தாத்தாதான் என நண்பர் சொல்லப் போக அதை நோக்கிய காலப்பயணமாக அந்த புத்தகம் அமைந்திருக்கும். மேலும் திராவிட அரசியலின் வரலாறை நூல் பிடித்தார் போல் பெரியாரில் துவங்கி வைகோ வரை சொல்லியிருப்பார் எழுத்தாளார்.

ஒரு புத்தகத்தை படித்து முடித்ததும் இவர் எப்படி இந்தக் கதையை ஆரம்பித்திருப்பார்? இப்படி எழுதும் படி எதனால் தோன்றி இருக்கும்? என்று அதன் காரணிகளைப் பற்றி யோசிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த வரிசையில் வா.மணிகண்டன் அண்ணன் மூலம் எனக்கு சிக்க வீர ராஜேந்திரன் நூலைப் பற்றி அறிமுகம் கிடைத்தது.

முதலில் ஆச்சர்யப்படுத்திய விஷயம் புத்தகத்தின் விலைதான். 508 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை வெறும் 32 ரூபாய் தான். உடனே ஆர்டர் செய்து வாங்கினேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி அண்ணன் எழுதிய விமர்சனம் மிக அருமையானது. முக்கியமானது. வாசிக்கத் துவங்குவதற்கு முன்பு அதைக் கட்டாயம் ஒரு முறை படிப்பது சுவாரசியத்தைக் கூட்டும். கொஞ்சம் அடிப்படை வரலாற்று அறிவை சொல்லித் தரும். வாசித்த பின் மீண்டும் அவர் விமர்சனத்தைப் படிக்கையில் தான் அவர் தந்திருக்கும் புகைப்படங்களின் அருமை புரியும்.

தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுபவர் என் தாத்தா என சொன்னதில் ஒரு புத்தகம் உருவானதைப் போல, இப்புத்தகத்திற்கும் ஒரு கதை உண்டு. 1938-39 விடுமுறை நாட்களில் குடகு பக்கம் சுற்றும் நண்பர்களில் ஒருவர் இங்கு குடகு இராஜாவைப் பற்றிய நாடகங்கள் சொல்லும் கதையைக் கேட்டால் ஒரு புத்தகமாக எழுதும் அளவிற்கான விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. எனவே நீ எழுத வேண்டும் என தனது எழுத்தாளராக இருக்கும் நண்பரிடம் சொல்கிறார். அவரும் சரி பார்க்கலாம் என சொல்லி விட்டு விட்டு விடுகிறார்.

சிறிது நாட்களுக்கு பிறகு வட்டமேஜை மாநாட்டிற்கு இங்கிலாந்திற்கு செல்லும் அந்த நண்பர் அங்கு தேனீர் இடைவேளையில் உடன் இருப்பவரிடம் இந்த குடகு கதையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு ஒரு வெள்ளைக்கார பெண்மணி அவர்களிடம் வந்து, நீங்கள் சொல்லும் ஊருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்ல “உங்களுக்கு அங்கு ஏதும் எஸ்டேட் சொந்தமாக உள்ளதா?” என இவர் கேட்க “ஒருவகையில் அந்த நாடே எனக்கு சொந்தமாக வேண்டியது, அந்த அரச வம்சத்தின் கடைசி வாரிசு நான் தான்” என தன்னை அறிமுகப் படுத்திக்  கொள்கிறார். அவருடன் சென்று உரையாடி, கதை மாந்தர்களின் படங்களை பார்த்து விவரங்களை சேகரித்து, இங்கு குடகுவில் ஒவ்வொரு அரண்மனையாக பார்த்து, கம்பெனி அரசாங்கம் எழுதிய கடிதங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட குடகின் வரலாறுதான் இந்தப் புத்தகம்.

சிக்க வீர ராஜேந்திரன், இந்தப் பெயர் நமது பாடப் புத்தகங்களில் இருக்கிறது. எங்கு தெரியுமா? இராணி மங்கம்மாளின் ஆட்சியை விவரிக்கையில் அவர் நடத்திய போர்களைப் பற்றி சொல்லும் பகுதியில் இருக்கிறது. இருவரும் போர் செய்துக் கொள்ளவில்லை. அதற்கான முகாந்திரம் மிக முக்கியமானது. காவேரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த சிக்க வீர இராஜேந்திரனுக்கு எதிராக இராணி மங்கம்மாள் படை திரட்ட, கடுமையான மழையின் காரணமாக வெள்ளத்தில் அணை உடைந்து விடுவதால் போருக்கு வேலையில்லாமல் வெற்றியடைகிறார் இராணி. இவ்வளவுதான் அதிலிருக்கும் வரலாறு.

தமிழகத்தை பல பகுதிகளாகப் பிரித்து பல குறு நில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தது போல் கர்நாடகமும் சமஸ்தானங்களாக பிரிவுற்றுக் கிடந்தன. அதில் மைசூர் சமஸ்தானம் தான் தென்னிந்தியாவின் இறுதியான வலிமையான சமஸ்தானம். அதன் அருகில் இருந்த ஒரு சிறிய சமஸ்தானம் தான் குடகு. உண்மையில் “குடகு மலை காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா” என்ற பாட்டிலும் காவேரி தோன்றும் மலை குடகுமலை என்று பொது அறிவு வினாவிலும் மட்டுமே எனக்கு இந்த மலை அறிமுகம். அது ஒரு நாடாக இருந்தது என்பதே புதிய விஷயம்தான். அதனுடைய வரலாறுதான் இந்தப் புத்தகம்.

Image result for சிக்கவீர ராஜேந்திரன்

பின் அட்டையில் தெளிவாகப் போட்டிருப்பார்கள். கிழக்கிந்திய கம்பெனிக் காரர்கள் ஒரே நாள் இரவில் இந்தியாவை வளைத்து விடவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமாக வளைக்க அவர்கள் பெரும் பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வீழ்த்துவது எளிது. அனுசரித்து போகும் இராஜ்ஜியங்களை எப்படி அடைவது? ஆனால் அடைந்தால் தான் அதன் வளங்களைக் கொள்ளையடிக்க முடியும். ஒரு சமஸ்தானத்தை ஆட்கொள்ள முடிவெடுத்து விட்டால் காரணத்துக்காக காத்திருப்பார்கள். சரியான காரணம் வந்ததும் மெதுவாக பேச்சுவார்த்தை நடக்கும். அந்த சமயங்களிலெல்லாம் மிகவும் ஞாயமாக நடந்துக் கொள்வார்கள். சரியான தருணம் வந்ததும் படையுடன் இறங்குவார்கள். அதுவும் மக்கள் எதிர்க்காத படி, அவர்கள் நலனுக்காக செய்வது போல்தான் நடக்கும். திப்புவைக் கொன்று, கிருஷ்ண உடையாரை அரசராக்கி, 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் கம்பெனி அதிகாரத்திற்கு கீழ் அதைக் கொண்டு வந்ததைப் போல.

சுதந்திரத்திற்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம். மேலும் கன்னட நாட்டின் வரலாற்றின் மொழிபெயர்ப்பு. முற்றிலும் புதுமையாக இருக்கும். ஏனெனில் சினிமாவின் மூலமாக ஆந்திரமும் கேரளமும் தமிழகத்திற்கு அறிமுகமானது போல் கர்னாடகம் அறிமுகமாகவில்லை. ஒரே வழி, பெங்களூருக்கு வேலைக்கு சென்ற நபர்கள் வழி தெரிந்துக் கொண்டதுதான். அதனால் அன்னியமாக தெரியும் கதை நடையின் போக்கிற்கு போக 50 பக்கங்களையாவது கடக்க வேண்டி இருக்கிறது.

250 பக்கங்களை கடந்த பின் கதை நம்மை பிடித்துக் கொள்கிறது. யார்யார் யாருக்கு எதிரி, நண்பன் என்பதெல்லாம் தெளிவாக விளங்கிய பின்  அடுத்து ஆட்சி யாருக்கு போகும் என நாமும் பதற வேண்டி இருக்கிறது.

வெறுமனே வெள்ளையர்களை எதிர்த்து வீழ்ந்தவர்களின் வரலாறுகளை மட்டும் தெரிந்துக் கொண்டால் போதுமா? அவர்களை ஆதரித்து அழிந்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டாமா? வேண்டுமெனில் இது தவறவிடக் கூடாத புத்தகம்.