ரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அது வீஏஓ அலுவலகமாகட்டும் பிரதமர் அலுவலகமாகட்டும் “இவரை பிடி காரியம் நடக்கும்” என ஒருவரை சொல்வார்கள், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை சொல்லும் புத்தகம் இது. இவர்கள் எங்கும் தனியாக இல்லை, நம்முடனே கலந்து இருப்பார்கள், இவர்களது அகராதியில் சம்பளம், இலாபம் என்றெல்லாம் இருக்காது, இந்த வேலை முடித்து கொடுத்தால் இவ்வளவு வருமானம் அவ்வளவுதான், புரிகிறதா? வேலை செய்ய மாட்டார்கள், வேலையை முடித்து தருவார்கள்.

நிலத்திற்கு பட்டா வேண்டுமே?

இவ்வளவு செலவாகும்,

அடுத்த வருடம் பத்ம விருது வேண்டுமே?

இவ்வளவு செலவாகும்.

அந்த பணம் யாருக்கெல்லாம் போகும்?

அது சொல்வதற்கில்லை,

அதில் உனக்கு எவ்வளவு கமிஷன்?

அது உனக்கு தேவையில்லாதது,

இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?

ரோலக்ஸ் வாட்ச் புத்தகத்தை படித்து தெரிந்து கொள்

முதலில் வாங்கி வைத்துள்ள புத்தகங்களை படித்து முடிக்காமல் புது புத்தகங்கள் வாங்குவதில்லை என்று முடிவெடுத்து 2 வருடம் பக்கம் ஆகிறது. இன்னும் இருக்கும் புத்தகங்களை முடிக்க முடியவில்லை, ஆனாலும் வேறு ஏதேனும் வகையில் பரிசாகவே எழுத்தில் ஈடுபடும் நண்பர்களின் அன்பளிப்பாகவோ புத்தகங்கள் சேர்ந்துக் கொண்டேதான் போகின்றன. அடுத்து புத்தகங்கள் வாங்கும் போது சரவணன் சந்திரனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கிவிடுவது என்ற விருப்பத்தில் இருந்தேன். அதற்கு முன்பாகவே ஒரு சிறுகதைப் போட்டியின் பரிசாக ரோலக்ஸ் வாட்ச் புத்தகம் என் வசம் வந்து சேர்ந்தது.

படிக்க ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி 158 பக்கங்கள் முடிந்ததென்றே தெரியவில்லை, கடைசியாக வெட்டாட்டம் நாவல் இவ்வளவு வேகமாக வாசித்தது. நிழல் உலக மனிதர்களை பற்றிய கதைதான் என்றாலும் இது முழுக்க மனிதனின் மனம் பற்றியது. அவனது ஈகோவைப் பற்றியது. தொடர்ந்து எழுத்தாளரின் எழுத்துக்களை முகநூலில் வாசித்தாலும் அதற்கும் புனைவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம், ஏகப்பட்ட விறுவிறுப்பு.

சின்னதாக ஒரு கேள்வி, நீங்கள் புதிதாக ஒரு கார் வாங்குகிறீர்கள் அல்லது வீடு, யாருக்கெல்லாம் முதலில் சொல்வீர்கள்? உறவினர்களிடம், நண்பர்களிடம். எதற்காக உங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, சரி இருக்கட்டும், ஒருவர் இருப்பார் உங்கள் நட்பு வட்டத்திலோ அல்லது உறவு வட்டத்திலோ. அவரை நீங்கள் எதிர்க்க முடியாது, அவரை விட்டு நீங்கள் விலகவும் இயலாது. அப்படி ஒருவரிடம் தான் உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு முறையும் முதலில் காட்ட முனைவீர்கள் என்கிறேன். இல்லை அப்படி யாரிடமும் நான் போய் செய்வதில்லை என்கிறீர்களா? சரி இருக்கட்டும், உங்களிடம் ஒருவன் ஒவ்வொரு முறையும் நான் இதை சாதித்து விட்டேன் அடுத்து இதை செய்ய போகிறேன் என சொல்லிக் கொண்டே இருப்பானே கவனித்ததுண்டா?

கலிகாலத்தில் ஒவ்வொரு நல்லவனுக்குள்ளும் தீமை கலந்திருக்கும், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் நன்மை கலந்திருக்கும் என்பார்கள். அதே போல இங்கு ஒவ்வொரு நண்பனுக்குள்ளும் ஒரு எதிரி இருப்பார், ஒவ்வொரு எதிரிக்குள்ளும் ஒரு நண்பன் இருப்பான். அதனால் தான் பிடிக்கிறதோ பிடிக்கலையோ சிலரை விலக்காமல் உடன் வைத்துக் கொள்வது, சிலரை எதற்கும் தள்ளி தொலைவில் வைத்துக் கொள்வது. அப்படிப்பட்ட இருவர் பற்றிய கதைதான் இது

“அண்ணா இந்த இங்கிலிஸ் படத்துல யார் ஹீரோன்னே தெரியலைன்னா, எல்லாரும் ஒரே மாதிரி இருக்கானுங்க”

“நல்லா பாரு, அதுல அதிகம் பேசாதவன் தான் ஹீரோவா இருப்பான்”

நான் மிக மிக இரசித்த வசனம், எப்படியாவது தன் நண்பனை தன் குருவை தன் சகோதரனை முந்தி விட வேண்டும், அவனது பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி சுதந்திரமாக இருக்க வேண்டும் என மனதிலும் வெளியிலும் போராடும் நாயகனால் சந்திரனை இறுதி வரை வெல்ல முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதில் யார் நாயகன் என்ற முடிவுக்கே வர முடியாது.

எந்த மேடையில் என்று நினைவில்லை, ஆனால் ஒரு இடத்தில் சாரு தனது எழுத்துலக வாரிசாக சரவணன் சந்திரனை ஏன் குறிப்பிட்டார் என்பதை 50 பக்கங்கள் தாண்டுவதற்குள் புரிந்துக் கொண்டேன்.

இராயல் என்பதன் வார்த்தையை சொல்லி புரிய வைக்க முடியாது, அது ஒரு வாழ்க்கைமுறை, வாழ்ந்தால் தான் புரியும். பணம் சம்பாதிப்பது மிக சிரமமான ஒன்று என நினைப்பவர்களால் அந்த வாழ்க்கையை நெருங்கக் கூட முடியாது. அதில் சிறிதேனும் அனுபவம் உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நூல் பிடிக்கும்

எனக்கு மிக மிக பிடித்திருந்தது. சில இடங்களில் என்னை பிரதிபலிக்கும் பாத்திரங்களும் வந்ததால் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.