ARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்திருப்பவர்கள் எத்தனை பேர் இதை கவனித்து இருப்பீர்கள் என தெரியவில்லை. மிஷ்கினுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சர்ஜரி செய்ய முயல்வார். அதற்கு உதவியாக அவனது ஆசிரியர் போனிலேயே என்னென்னெ செய்ய வேண்டும் என சொல்லுவார். அவர் முதலில் கேட்பதே இப்படித்தான் இருக்கும்.

“டிரக்ஸ் ஏதாவது வச்சு இருக்கியா?”

“இல்லை சார்”

“டேய் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட், அதுவும் ஃபைனல் இயர் படிக்கறவன்கிட்ட டிரக்ஸ் இல்லைன்னா எவனாவது நம்புவானா?” என அதட்டிய பின்புதான்

“கீட்ட்டாமைன் இருக்கு சார், மெண்டல் ஸ்ட்ரஸ் அதான்” என்பார்.

முதலில் தெளிவாக ஒரு விசயம் தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களில் பாதிக்கு மேல் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகி நாளாகி விட்டது. குடிப்பழக்கம் பற்றி சொல்லவே வேண்டாம். இதுதான் உண்மை. இல்லை என மறுப்பவர்களுக்கும் தமிழ் நாட்டில் டெங்கு பாதிப்பு பெரிதாக இல்லை என சொல்லும் அதிமுக அமைச்சர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இதை சொல்வதால் போதை பழக்கத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்? கோவையில் பல பொறியியல் கல்லூரிகள் இது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விசயம். நான் பார்த்திருக்கிறேன். இதை நீங்கள் மறுக்கிறீர்கள் எனில் தொடர்ந்து படித்து ஏதும் ஆகப் போவது இல்லை.

எதற்காக சொல்கிறேன் என்றால் படத்தில் பெரிய குறையாக அனைவரும் சொல்வது ஒரு டாக்டர் டிரக் அடித்துவிட்டு டிரிட்மெண்ட் பார்ப்பானா? என்பதுதான். படிக்கையில் பழகியவன் வாழ்க்கையை வெறுத்து திரியும் காலத்தில் அதை தொடாமல் இருப்பானா? இது நேற்று வரை பணத்திற்காக பொய் சொன்ன வக்கீல் நீதிபதியானதும் நேர்மையாய் இருப்பார் என்பதை விட வேடிக்கையானது.

அதே போல் காதலிக்கும் பெண்ணை வேறு யாரும் பார்க்க கூடாது என்று போய் அனைவரையும் மிரட்டுவதை ஏதோ நடக்காத விசயம் போலவே பேசுகிறார்கள். வகுப்பறையில் சென்று ஆசிரியர் முன்பு சொல்வது வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் அப்படி எந்த கல்லூரியிலும் நடப்பது இல்லையா? ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு தெள்ளவாரி கூட்டம் இதை செய்வதற்கென்றே இருக்கும். இந்த படத்தில் நாயகனாக காட்டுகிறார்கள். அவனை யுனிவர்சிட்டி டாப்பராக காட்டுவது வேண்டுமானால் எதார்த்தத்தை மீறிய ஒன்றாக சொல்லலாம்.

காதலிப்பதை வெளிப்படுத்தும் விதம் உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாததுதான். அதுவும் முதல் நாளே முத்தமிட்டால் அந்த பெண் ஞாயமாக போலிசில் புகார் அளித்திருக்க வேண்டும் அல்லது தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும். அதை விடுத்து குஷி பட விவேக் மாதிரி “வா கைய கொடு கிளம்பு” ரேஞ்சுக்கு எதிர்வினை ஆற்றாமல் நிற்பதை யாராலும் ஏற்க முடியாதுதான்.

மேற்சொன்னவைகள் மட்டும் தான் எனக்கு பிடிக்காத விசயங்கள், அதில் ஒன்றுதான் எதார்த்தத்தினை மீறியதாக எனக்கு பட்டது.

இதே படத்தில் இருவரும் மெதுவாக பழகி, பின் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு, இயல்பாக காதலிக்க துவங்கியிருந்தால் எதையுமே குறை என்று சொல்ல மாட்டேன். அர்ஜூன்  அனைத்து சில்லறைத்தனங்களும் செய்து விட்டு நாயகியை தடவியவனிடம் “உன் அக்கா தங்கைகிட்ட இப்படி செய்வியா?” என கேட்பதாக சொல்கிறார்கள். அப்படி அல்ல. “என்னை பழி வாங்க இவளை நீ செய்த்து போல் நான் உன் வீட்டு பெண்களை செய்தால் தாங்குவாயா?” என்றுதான் கேட்பான்.

Image result for arjun reddy poster

படம் முழுக்க முத்தமிட்டுக் கொள்வதையும் மேட்டர் செய்வதையும் தான் காட்டுகிறார்கள் என ஒரு கூட்டம் புலம்புகிறது. ஏம்பா நீங்க டீஆர் மாதிரி கை படாம காதலிச்சுருப்பிங்க, எல்லாரும் அப்படியே இருப்பாங்களா? அதை எப்படி 4 பேர் பார்க்கற மாதிரி பண்ணலாம் என ஒரு கேள்வி வேறு.

“ஏன் இரகசியமா பண்ணனும்?”

“ஏன்னா அது புனிதமானது”

“அடிங்க, கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா உடனே அந்த விசயத்தை புனிதமாக்கிடறது”

அலைபாயுதே படம் வந்த புதிதில் மாதவன் தினத்தந்திக்கு தந்த பேட்டியில் ஒரு கேள்வி “சமீபத்தில் பெற்றோரிடம் திட்டு வாங்கியதுண்டா?” என்று.

“ஆம், மனைவியை கேட்டருகே வைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தேன், அதற்கு திட்டினார்கள்”

நான் 10 வது படிக்கையில் என நினைக்கிறேன். எத்தனை வருடங்கள் ஆகிவிட்ட்து. ஆனால் இன்னமும் இதை பிரச்சனையாக்கி கொண்டிருக்கிறார்கள். டேய் அவனவன் பொண்டாட்டியை காதலியை எங்கே என்ன செய்யனும்னு நீங்க முடிவு பண்ணாதிங்கடா? இந்த விசயத்தில் நம் நாடு, சமூகம் இன்னும் தயாராகவில்லை, அதனால் பொது இடத்தில் வேண்டாம் என சொல்லுங்கள், ஆனால் இதெல்லாம் தவறு என தூக்கிக் கொண்டு வர வேண்டாம். பெரு நகரங்களில் இதெல்லாம் சகஜமாக துவங்கியாயிற்று.

காதலிப்பவர்கள், ஒன்றாக தங்கியிருந்தால் எதுவும் செய்யாமல் இருப்பார்களா? சென்னை, பெங்களூர் பக்கம் போய் பாருங்கள், வெறும் நண்பர்களாக தங்கி இருப்பவர்களுக்கும் நடப்பதை, இதையெல்லாம் குறை சொன்னால் பொறாமை என்றுதான் சொல்வேன்.

அர்ஜூன் , முன் கோபி, மருத்துவம் படிப்பவன், இறுதியாண்டு படிக்கையில் முதலாமாண்டு பெண்ணை பார்த்து காதலிக்கிறான். முட்டாள்தனமாக சில விசயங்களை செய்கிறான். அந்த பெண்ணும் அவனை காதலிக்கிறாள். அழகாக போகிறது. திருமணம் என வரும் போது ஜாதி தடையாகிறது. பிரிகிறார்கள். தனிமையில் போதைக்கு அடிமையாகிறான். இறுதியாக ஒன்று சேர்கிறார்கள்.

மிக எளிமையான கதை “நீதானே என் பொன் வசந்தம்” கூட கிட்டத்தட்ட இந்த கதைதான். என்ன அதில் ஜீவாவிற்கு போதை பழக்கம் இருந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும். அவன் கௌதம் பட நாயகன் என்பதால் பேசி மட்டும் தான் பெண்ணை காயப்படுத்துவான். உண்மையை சொல்லுங்கள், கௌதம் பட நாயகர்கள் போல் காதலிப்பவர்களை பார்த்ததுண்டா? வாய்ப்பு மிக குறைவு. அதே போல்தான் செல்வ ராகவன் பட நாயகர்களும். இரண்டும் இரண்டும் எக்ஸ்ட்ரீம்கள். இடையில் தான் சராசரி காதல் இருக்கிறது.

அர்ஜூன்  ரெட்டியை போன்றவனை நீங்கள் சந்தித்த்தே இல்லையா? நான் பார்த்திருக்கிறேன். குடித்துவிட்டு ஆப்ரசேன் செய்து கைதான டாக்டர்களை பற்றிய செய்திகளை படித்ததே இல்லையா? எனக்கு தெரிந்து உண்டு. ஆனால் இவ்வளவு அதிகமாக மயங்கி விழும் அளவிற்கு கிடையாது. ஆனால் அர்ஜீனை போல் வாழ்க்கையை வெறுத்தவன் மருத்துவனானால் இதுதான் நடக்கும்.

எதற்கு தர்மதுரையை இப்படத்துடன் ஒப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. தர்மதுரை முதல் தலைமுறை பட்டதாரி. அர்ஜூனின் பாட்டியே டெல்லிக்கு படிக்க போன இடத்தில் காதல் திருமணம் செய்தவர். அவர்கள் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கும்.

ஆனால் ஒரு கதாநாயகன் குடிப்பதால் போதை பொருட்களை பயன்படுத்துவதால் அதை பார்த்து எத்தனை பேர் கெட்டு போவார்கள் தெரியுமா என கேள்வி கேட்பவர்கள் ஒவ்வொரு விடுமுறைக்கும் டார்கெட் வைத்து மது விற்கும் அரசை எதிர்த்து என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்? அது மது மட்டும் தானே விற்கிறது என்று வேண்டுமானால் சொல்ல்லாம். ஏனெனில் அதில் மட்டும் தான் அரசுக்கு இலாபம் கிடைக்கிறது. ஒரு மாதம் முழுக்க உபயோகிக்க கஞ்சா வாங்க 500 தான் செலவாகும், குடிப்பதற்கு? ச்சே இதெல்லாம் தப்பு என்றால் ஆமாம் தவறென்றால் அனைத்து போதையையும் தடை செய்வதை பற்றி பேசலாம். கஞ்சா தவறு, மது அரசின் கொள்கை என்பதெல்லாம் வியாபார தந்திரம். கள்ளுக்கு ஏன் இத்தனை வருட தடை? சரி அதெல்லாம் அரசியல். படத்திற்கு வருவோம்.

படத்தில் நாயகனை பெண்கள் மொய்ப்பது போல் வரும் காட்சிகளெல்லாம் ஓவர் என்பவர்கள் பிரேமம் தெலுங்கு வெர்சனை பார்க்கவும். நாகசைதன்யாவை பார்த்ததும் பெண்கள் ஆர்கசமடைவதை. அப்படிப்பட்ட இண்டஸ்ட்ரியில் இருந்து வரும் படம் அப்படி இப்படித்தான் இருக்கும். இன்னொன்று இப்படி இருப்பவர்களை பெண்களுக்கு பிடிக்காது என்று எவன் சொன்னான்?

படத்தில் எங்கும் நாயகன் 40 பேரை ஒற்றை ஆளாக புரட்டி எடுக்கவில்லை. கேமிராவை பார்த்து பாட்டு பாடி ஜனங்களுக்கு கருத்தும், எதிரிகளுக்கு பஞ்சும் சொல்லவில்லை. எனும் போது இதனை வெறும் படமாக பாருங்கள் என்று அர்த்தம். நாயகனை நீங்கள் மதிக்க வேண்டாம். லூசுக்….. என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவனை போன்றவன் காதலித்தால் எப்படி இருக்கும் என படம் எடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.

படத்தில் நண்பனாக வரும் பாத்திரத்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சுயசொறிதல் பழக்கம் உள்ளவன், அதான் நான் தான் பெரிய புடுங்கி என நினைப்பவனின் காதல் கதை இது. இதற்கு முன்பு வந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லவே இவ்வளவு பெரிதாகி விட்ட்து. இப்படத்தை அழகாக சம்பத் விமர்சித்துள்ளார், படித்துக் கொள்ளுங்கள்.

படம் கிளாசிக் எல்லாம் இல்லை. ஆனால் 3 மணி நேரம் போவதே தெரியாமல் இருக்கும். பாருங்கள்.