Lipstick Under My Burkha (2016) – பெண்கள் நம் கண்கள்

“ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசையை தூண்டனும்” – காந்தி பாபு

“ஒரு கூட்டத்தை அடிமையா வச்சுருக்கனும்னா அவங்களை அடக்க கூடாது, அவங்களை புனிதமாக்கி விட்டுடனும்” – அனைத்து மதங்களும்

“நீ ஒரு பொண்ணு, எங்களை எதிர்த்துகிட்டு இருந்துடுவியா நீ?” என மிரட்டியா பெண்கள் அடிமையாக்கப் பட்டார்கள்?. “பெண்கள் புனிதமானவர்கள், பெண்கள் நம் கண்கள், உங்களை வேறு யாரும் பார்த்து விடக்கூடாது வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காகத்தான் சொல்கிறேன், சமையலறை தாண்டி வராதீர்கள்” இப்படித்தானே உள்ளே தள்ளி கதவை சாத்தினார்கள். கொடுமை என்னவென்றால் இதை பெரும்பாலான பெண்களே புரிந்துக் கொள்வதில்லை.

இன்று கூட ஒரு செய்தி “6 வயது பெண் கற்பழிப்பு”. அந்த குழந்தைக்குமாடா கற்பு இருக்கு, அது அழிக்கப்பட்டுருக்குன்னு சொல்றிங்க? பாலியல் வன்கொடுமைன்னு சொன்னா செஞ்சவனுக்கு மட்டும் தான் அவமானம், கற்பழிப்புன்னா அந்த பெண்ணுக்கும் சேர்த்து அவமானம், நாளைக்கு இதைக்காட்டி எல்லா பெண்களையும் வீட்டுக்குள்ள அடைக்கலாம்? எப்படி திட்டம் பாருங்க.

சரி படத்திற்கு வருவோம். ஒரு ஆண். 50 வயதிற்கு பின் மனைவியை இழந்து விடுகிறார். பிள்ளைகளும் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார்கள். அவருக்கும் ஒரு துணை தேவைப்படும் இல்லையா? இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துக் கொள்கிறார். இதுவரை படித்த பொழுது உங்களுக்கு எதுவும் வித்தியாசமாக பட்டிருக்காது. இதே அந்த “ஆண்” என்ற இடத்திற்கு பதிலாக “பெண்” என்று போட்டு வாசியுங்கள். மனம் எதையெல்லாம் யோசிக்கிறது என்று பார்க்கலாம்.

படத்தில் 4 பெண்களின் கதைகள். அதில் 3 பெண்கள் முஸ்லீம்கள். ஒரு இந்து பெண்மணி. மதத்தை குறிவைத்து தாக்கியது போல் தெரியலாம். அப்படி இல்லை. இந்து மதத்தில் திருமணத்திற்கு பிறகு, தாயான பிறகு, வயதான பிறகுதான் போகப்போக புனிதம் என்ற பெயரில் சுதந்திரங்கள் பறிக்கப்படும். இஸ்லாமில் துவக்கத்தில் இருந்தே உண்டு. அனைத்து பெண்களும் விரும்பியா பர்தாக்குள் தங்களை ஒளித்துக் கொள்கிறார்கள்? அதனால் தான் 3/4:1/4 வித்தியாசம் என நினைக்கிறேன்.

முதலில் உஷா. தன் பெயரே மறக்கும் அளவிற்கு அனைவராலும் “ஆண்டி” என்றே அழைக்கப்படுபவர். அவரை விட வயது முதிர்ந்த ஒருவர் மனைவியை இழந்து விட்டார் என்பதற்காக அவரின் இரண்டாம் திருமணத்திற்கு இவரையே பெண் பார்த்து தரச் சொல்வார்கள். அந்த முதியவராவது 50 களுக்கு பிறகு துணையை இழந்திருப்பார். உஷா வாலிபத்திலேயே கணவனை இழந்து, பிள்ளைகள் கூட இல்லாமல் உறவினர்களுடன் வாழ்ந்து வருவார். தனிமையில் மற்ற புத்தகங்களுக்கு இடையே வைத்து பலான புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர். நீச்சல் சொல்லித் தரும் வாலிபன் ஒருவன் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பி, இரகசியமாக நீச்சல் உடை வாங்கி நீச்சல் பயிற்சி செல்வார். அவ்வாலிபனுடன் இரவில் தான் யார் என்று சொல்லாமல் போனில் பேசி இச்சைகளை தீர்த்துக் கொள்வார்.

அடுத்து கல்லூரிக்கு முதல் வருடம் செல்லும் இஸ்லாமிய பெண். கட்டுப்பாடான குடும்பத்தில் இருந்து வந்தாலும் மேற்கத்திய நாகரீகத்தை மிகவும் விரும்புபவள். பாட பிடிக்கும், ஆட பிடிக்கும். ஆனால் எதற்கும் அனுமதியோ வாய்ப்போ இல்லாத வாழ்க்கை. கல்லூரியில் கிடைக்கும் சுதந்திரம், மற்றவர்களுடன் நெருங்கி பழக வேண்டிய உடைகளை திருடக் கூட செய்கிறது. ஜீன்ஸ் எங்கள் உரிமை என போராடும் போது மனதில் இருந்து பேசி அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறாள். டிரம்ஸ் வாசிக்கும் ஒருவனால் கவரப்பட்டு அவனை காதலிக்க துவங்குகிறாள்.

ஓவியர்களுக்கு மாடலாக வேலை பார்க்கும் அம்மா மட்டுமே கொண்ட பெண் ஒருத்தி, தொழில் அழகுக் கலை. சிறியதாக போட்டோஷாப் வைத்திருப்பவனுடன் காதல். ஆனால் அம்மாவிற்கு வசதியான மாப்பிள்ளை வேண்டும். அவனுடன் நிச்சயம் நடக்கிறது. அதை பழிவாங்க அன்று இரவே தன் காதலனுடன் உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து வைக்கிறாள். ஒரு கட்டத்தில் காதலனா? கணவனாக போகிறவனா? என்று குழம்புகிறாள்.

துபாயில் வேலை பார்க்கும் கணவனுக்கு தெரியாமல் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்கும் இஸ்லாமிய பெண்ணொருத்தி. அவளை அவள் கணவன் வெறும் உடல்பசிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறான். கொஞ்சம் கூட அவள் மீது அக்கறைக் காட்டாமல் தன் இச்சைக்காக மட்டும் படுத்து எழுபவனால் 3 பிள்ளைகள், 3 அபார்ஷன், மேற்கொண்டு போனால் ஆப்ரேஷன் செய்தாக வேண்டிய நிலை என்ற போதும் காண்டம் கூட உபயோகிக்க மறுக்கும் மிருகம். வேலை போனதை மறைத்து, வேறொரு பெண்ணுடனான உறவை மறைத்து, அது தெரிந்து கேள்வி கேட்கும் மனைவியை வல்லுறவு கொண்டு வாயை அடைக்கும் அசிங்கம் பிடித்தவன்.

இந்த 4 பெண்களுக்குமான ஒற்றுமை என்ன தெரியுமா? யாருக்கும் தங்கள் வாழ்க்கையை பற்றி யோசிக்கவோ, கனவு காணவோ, முடிவு எடுக்கவோ உரிமை இல்லை. ஏனென்றால் பெண் என்பவளை பொறுத்துத்தான் குடும்பத்தின் கௌரவம் இருக்கிறதாம். ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண்கள் வீட்டின் கண்கள் அல்லவா?

படத்தில் 18 இடத்தில் வெட்டு விழுந்தும் குழந்தைகளுடன் பார்க்க முடியாத படம் தான். இது கணவன்-மனைவி பார்க்க வேண்டிய படம். வாழ்க்கையில் உடல் உறவுக்கு தயாரானவர்கள் பார்க்க வேண்டிய படம்.

பல இடங்கள் செருப்பால் அடிக்கிறது

1. 54ல் மனைவியை இழந்து இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் முதியவரிடம் உஷாவை “ஆண்டி” என்று அழைக்க சொல்வது

2. புதிதாய் வாங்கிய மைக்ரோஓவனில் செய்த கேக்கை ஆசையாக எடுத்து வரும் மனைவியை எதுவும் பேச விடாமல், அவள் கையை பிடித்து மைதுனம் செய்ய வைக்கும் இடம், அந்த கேக்கை அழுது கொண்டே தனியாக வந்து கொங்கனா சாப்பிடும் இடம்.

3. உறவினர்களே உஷாவின் அந்தரங்கத்தை எடுத்து நடுவில் கொட்டி அவமானப்படுத்தும் இடம்

4. காதலி என்று சொன்னவளை, போலிஸ் வந்ததும் விட்டு விட்டு நகர்ந்து “யார் நீ?” என கேட்கும் இடம்

5. “உனக்கு செக்ஸ் தான் வேணும்னா நிறைய பசங்களை அனுப்பறேன்” என்று சொல்லிவிட்டு விலகியவன், அவள் நிச்சயிக்கப்பட்டவனை முத்தமிடுவதை பார்த்து பொறமையால் ஓடிப்போக அழைக்கும் இடம்

சொல்லிக் கொண்டே போகலாம். சத்தியமாக அடுத்து குறைந்தது 10 வருடங்களுக்கு தமிழில் இப்படி ஒரு படம் வர வாய்ப்பே இல்லை. தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

“ஆண்களுக்கு இணையாக பெண்கள் தவறு செய்வதுதான் பெண்ணியமா?” என்று சில அறிவு ஜீவன்கள் கேட்பார்கள். அவர்களெல்லாம் தப்பித்தவறி பெண்கள் டாஸ்மாக்கை மூட போராட வந்தால் கூட “உனக்கெதுக்கும்மா இந்த வேலை? குடிக்கறவன் நாசமா போகட்டும், நீ வீட்டுக்கு போம்மா” என்பவர்கள். அதாவது ஆண்கள் பிரச்சனையில் பெண்கள் தலையிடக் கூடாது. ஆனால் பெண் என்ன யோசிக்க வேண்டும் என்பதைக் கூட ஆண்தான் முடிவு செய்வான். ஏனென்றால் பெண் புனிதமானவள் இல்லையா?