Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்

ஆண்களிடம் ஒரு கேள்வி. உங்கள் வீட்டினருகே ஒரு குடும்பம் குடியிருக்கிறது. ஒரு கணவன் – மனைவி. கணவன் ஒரு விபத்தில் கழுத்துக்கு கீழ் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி இழந்து, எந்நேரமும் படுக்கையில் கிடப்பவர். இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து எந்த சேர்க்கையும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த பெண் திருமணத்திற்கு பின்பும் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளை எப்படி பார்ப்பீர்கள்? பெண்கள் சொல்லுங்கள், இந்த பெண்ணின் தியாகத்தை எங்ஙனம் போற்றி புகழ்வீர்கள்?

சரி அடுத்த கேள்வி. இதே பெண் உங்கள் குடும்பத்தை சார்ந்தவளாக இருந்தால்? காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா? கணவன் இல்லையென்றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம்? விவாகரத்து செய்து வைத்து வேறு ஒருவருக்கு மணம் செய்து வைக்கலாம் என்பவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். இல்லை ஒருவரை மணந்து கொண்டு விட்டால் இறுதி வரை எந்த சூழலிலும் பிரியக் கூடாது என்பவர்கள் படிக்க வேண்டாம்.

ஒரு பெண்ணால் எல்லா சுகமும் கிடைத்து, குழந்தையும் பெற்றுக் கொண்டு, ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்தவர்களை பார்த்திருக்கிறேன். இதே காரணம் வேண்டாம், வெறும் குழந்தை இல்லை என்பதற்காக இரண்டாவது திருமணம் வேண்டாம், விவாகரத்து கோரும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டா? சிலர் கேட்க துவங்கி இருக்கிறார்கள். மகிழ்ச்சி. சரி அதிகமாக அளக்கிறேன். படத்திற்கு வருவோம்.

ஒரு குடும்பம். அண்ணன், தம்பி, தங்கை, அப்பா. இதில் அண்ணன், தம்பி இருவருக்கும் அத்தை பெண் மீது விருப்பம். அண்ணன் அவளை மணந்து கொள்கிறான். ஆனால் இருவரும் கூடுவதற்கு முன்பாகவே ஒரு விபத்தில் அண்ணனுக்கு கழுத்துக்கு கீழ் எந்த உறுப்பும் செயல்படாத நிலை ஏற்படுகிறது. காவல்துறையில் பணியாற்றியவனால் இப்படி ஜடம் போல் வாழ பிடிக்கவில்லை. மனைவி தேற்றுகிறாள். 6 வருடம் அப்படியே ஓடுகிறது. எந்த பிரச்சனையும் இல்லை. தம்பி அமெரிக்காவில் இருந்து வரும் வரையில்….!

தம்பி மிகவும் பிராக்டிக்கலான ஒருவன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவன். அவனுக்கு அண்ணனின் மனைவி, தம் உடல் இச்சைகளை அடக்கிக் கொண்டு, தினசரி மாத்திரைகளின் உதவியுடன், உணர்ச்சியற்ற அண்ணனின் உடலைக் கட்டிக் கொண்டு உறங்குவதில் உடன்பாடு இல்லை. முதலில் ஜாடையாக அவள் வாழ்வு பரிதாபமானதை உணர்த்துகிறான். நடுநிசியில் உறக்கம் வராமல் உலாவும் அண்ணியுடன் பேசுகிறான்.

எங்கே தனது உணர்வுகளை உளறி விடுவோமோ என்று அண்ணியும் அவனை தவிர்க்கிறாள். அவளுக்கு புதிதாய் ஒரு தலைவலி வருகிறது. மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியவில்லை. வெளியூர் மருத்துவரை பார்க்க அழைத்து செல்லும் தம்பி, அண்ணியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்கிறான். அன்றில் இருந்து அவளுக்கு தலைவலி வருவது நின்று போகிறது. பிரச்சனை இனிதான் துவங்குகிறது.

அண்ணி கர்ப்பமாகிறாள். அனைவருக்கும் தெரியும், அண்ணன் இதற்கு காரணமில்லை என்று. குலவிளக்காக இருந்த மருமகளை நேருக்கு நேராக கேட்க யாருக்கும் துணிவில்லை. இதுவரை கதையை சொன்னதே தவறு. படத்தின் இணைப்பை கிழே தந்திருக்கிறேன்,  பார்த்துக் கொள்ளுங்கள். இதுவரை கதையை சொன்னது விவாதிக்க.

lakshmana rekha malayalam க்கான பட முடிவு

படம் வந்தது 1984ல். அண்ணன் மம்முட்டி. தம்பி மோகன்லால். அண்ணியாக சீமா. அனைவரும் மிக இளமையாக இருக்கிறார்கள். அதற்காகவே படத்தை பார்க்கலாம். 30 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வந்த இது போன்ற ஒரு படத்தினை, தமிழில் இப்போது கூட எடுக்க ஆளில்லை என்பதே உண்மை. பாலச்சந்தர் களத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தீர்வு சொல்லாமல் குழப்பி விடுவார். மோகன்லால் கேட்பது போல் நேரடியாக சமூகத்தை கேள்வி கேட்க இங்கு யாருக்கும் துணிச்சல் இல்லை.

எந்த விசயமாவது கட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்புகிறாயா? அதனை புனிதப்படுத்தி விடு. இதுதான் சமூகத்தின் புத்தி. பெண்கள் என்றால் புனிதமானவர்கள், அவர்கள் தவறிழைக்க கூடாது. அம்மா என்பது எவ்வளவு உயரிய ஸ்தானம். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று முதல் இடத்தில் வைத்துள்ளோம். அதனால் அப்பா இறந்தாலும் அம்மா இன்னொரு திருமணம் செய்யக் கூடாது. ஆனால் அப்பா, அம்மா இருக்கையிலே கூட செய்யலாம் தவறில்லை. அம்மா புனிதம், செய்யக்கூடாது.

அண்ணி என்பவர் அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர், அவருக்கு உணர்ச்சிகள் இருக்கலாமா? தப்பு, தப்பு, தப்பு. இப்படித்தான் கட்டிப்போடும் இந்த சமூகம். அம்மா, அண்ணி, அக்கா என்பதெல்லாம் உறவுமுறையின் பெயர்கள் அவ்வளவுதான். அவர்களும் மனிதர்கள் தான். ஆண்களுக்கு இருக்கும் அனைத்து உணர்ச்சிகளும் அவர்களுக்கும் இருக்கும். அது சரி, இங்கு தான் விரும்புகையில் கணவனை படுக்கைக்கு அழைக்கும் அதிகாரமே மனைவிகளுக்கு முழுதாய் கிடைக்கவில்லை. இதில் எங்கிருந்து?

Labor Day படத்திற்கு பின் பெண்களுக்கும் உடல்பசி என்று ஒரு விசயம் உள்ளது. அதை புரிந்து கொள்ளுங்கள் என சொல்லும் படமாக நான் பார்த்தது இதைத்தான். கொஞ்சம் கூட விரசமில்லாமல் எடுத்து இருக்கிறார்கள். 30 வருடத்திற்கு முன்பே போலி புனிதங்களை கேள்வி கேட்டதற்காகவே பாராட்ட வேண்டும். இன்று மலையாள சினிமாக்கள் தனி பாதையில் பயணிப்பதற்கு இது போன்ற முன்னோடி படங்களும் ஒரு காரணம்.

படத்தை பார்க்க