துறவின்னா காவியேதான் கட்டனுமா? – குறளுரை

யோகிராம் சுரத்குமார், இந்த பெயரை கேள்விப் பட்டதுண்டா? இல்லை என்றால் நீங்கள் பாலகுமாரனை வாசிக்கவில்லை என்று பொருள். கதை சொல்லியாக இல்லாமல் வெறுமனே வாசகர்களுடன் உரையாடும் வகையில் அவர் எழுதும் அனைத்து புத்தகங்களும் அவரது குருவான யோகிராமை பற்றி பேசாமல் இராது. இதில் என்ன சிறப்பு என கேட்கிறீர்களா?

ஆரம்ப காலத்தில் பாலகுமாரன் இரஜினிகாந்தை விட அதிகம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார். அதிகமில்லை. தினசரி 20 பாக்கெட் தான். சினிமாவில் இருந்தவர்களுக்கு இது சாதாரணமாக தெரியும். அப்படி இருந்தவர் ஒருமுறை காஞ்சி பெரியவரை சந்திக்க போகிறார். அனைவரும் தமக்கு வேண்டியதை மனதில் நினைத்து வேண்டிக் கொள்வார்களாம். இவரும் வேண்டி இருக்கிரார், என்ன தெரியுமா?

சிறுவயதில் பெரிதாக தந்தை பாசம் கிடைக்காமல் வளர்ந்தவருக்கு, அனைத்தையும் புரிய வைக்க ஒரு குரு தேவைப்படுகிறார். ஆனால் ஊரில் இருக்கும் குருக்களெல்லாம் ஆச்சாரமானவர்கள். தம் முன் சுத்தபத்தமாக பதிபக்தியோடு சீடர்கள் நின்று பாடம் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். பாலகுமாரன் தன்னைப் போல, தனக்கேற்றார் போல குருவை கேட்கிறார்.

எப்படிப்பட்ட குரு என்றால், குரு-சிஷ்ய பேதம் அதிகம் பாராட்டாமல், தன்னுடன் சிகரெட் பிடித்த வண்ணம் தம்முடன் உலக ஞானங்கள் அனைத்தையும் உரையாடும், ஒரு தோழன் போன்ற குரு தமக்கு வேண்டும் என கேட்டு இருக்கிறார். அந்த வேண்டுதலின் படி பாலகுமாரனுக்கு கிடைத்தவர்தான் யோகிநாத் சுரத்குமார். திருவண்ணாமலையில் அவரை விசிறிச் சாமியார் என்பார்களாம்.

Image result for யோகிராம் சுரத்குமார்

எனக்கு கூட அவரைப் பற்றி பாலகுமாரன் எழுதியதை படிக்கையில் சென்று சந்திக்க வேண்டும் என்ரு தோன்றியது. ஆனால் நான் அவரைப் பற்றி படிக்கும் காலத்திற்கு முன்பாகவே அவர் சமாதி அடைந்து விட்டதாக பின்னர்தான் தெரிந்தது. இதையெல்லாம் படிக்கையில் எனக்கும் ஒரு யோசனை வந்தது. நமக்கு ஒரு குரு வேண்டுமெனில் அவர் எப்படி இருக்க வேண்டும் என முதல் முறையாக யோசிக்க துவங்கினேன்.

“பொன்னியின் செல்வன்” என்ற ஒரு படம். இரவிகிருஷ்ணா நடித்தது. படத்தை பார்க்க சொல்லி கட்டாயம் சொல்ல மாட்டேன். அதில் பிரகாஷ் ராஜ்க்கு ஒரு கதாபாத்திரம் தந்திருப்பார்கள். அதன் பெயரே குருதான். அறிமுகப்படுத்தும் பொழுது “இவர் ஒரு செஸ் போர்டு போல, கருப்பும் வெள்ளையும் சமமாக கலந்த மனிதர்” என அறிமுகப்படுத்துவார்கள். படத்தில் உருப்படியான ஒரு விசயம் அவரது பாத்திரமும் அவர் பேசும் வசனங்களும் தான்.

இராதாமோகன் படத்தில் வசனம் எப்பொழுதுமே நன்றாகத்தான் இருக்கும். அதுபோல இப்படத்தில் பிரகாஷ்ராஜின் வசனங்கள் என்னை அதிகம் கவர்ந்த ஒன்று. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் சொல்வார். “இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் நல்ல பசங்களை எதிர்பார்க்கறாங்க, பசங்க அழகான பொண்ணுங்களை எதிர்பார்க்கறாங்க, அதனால என்ன ஆகிருச்சுனா எல்லா பசங்களும் தன்னை நல்லவனா காட்டிக்க நடிக்க ஆரம்பிச்சுட்டங்க, எல்லா பொண்ணுங்களும் தங்களை அழகா காட்டிக்க மேக் அப் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க” இந்த வசனம் தற்போது சாதாரணமாக இருக்கலாம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது வந்த படம், என்னுள் அது பல யோசனைகளை உண்டாக்கியது.

மகாத்மா காந்தி “அரிச்சந்திரன்” நாடகம் பார்த்து உண்மையை பேச வேண்டும் என முடிவெடுத்தாராம். நான் இப்படத்தை பார்த்து எங்கும் யாரிடமும் என் இயல்பை மறைத்து என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முயல்வதில்லை என முடிவெடுத்தேன். அப்படித்தான் இப்போது வரை இருக்கிறேன். இது போல நம்முள் இருக்கும் மனதின் நிர்வாணத்தை அருவருக்காமல், அப்படியே ஏற்றுக் கொள்ள கூடிய, உள்ளுக்குள் தோன்றும் விசித்திர எண்ணங்களை சொல்கையில் முகம் சுழிக்காமல் அதை புரிய வைக்கும் குரு வேண்டும் என விரும்பினேன்.

அப்படி ஒருவர் கிடைக்கவில்லை என சொல்ல முடியாது. வேலை பார்த்த ஒவ்வொரு இடத்திலும் கிடைத்தார்கள். காமம் முதல் கடவுள் வரை, அறிவியல் முதல் அந்தரங்கம் வரை அனைத்தையும் விவாதிக்க கூடியவர்கள் கிடைத்தார்கள். நிறைய கற்றுத் தந்தார்கள். ஒரே ஒரு குறை என்னவேன்றால் வாசிக்கும் பழக்கம் உள்ள ஒரு நண்பர் கூட வாழ்வில் அமையவில்லை என்பதுதான். முகநூலில் இருக்கிறார்கள். அது போதுமா?

நிஜத்தில் நம்முடன் பழகி, நம் மனதில் தோன்றுவதை அது எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் கேட்க இடம் தரும், புரிய வைக்கும் குரு அமைவது எவ்வளவு அதிர்ஷ்டம்? ஆனாலும் இதை புரிந்துக் கொள்ளாமல் சிலர் குரு என்றாலே காவி கட்டி இருக்க வேண்டும், நீளமான தாடி வைத்திருக்க வேண்டும், இல்லை மொட்டை அடித்திருக்க வேண்டும், அவர் முன் நாம் பவ்யமாகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் திரிகிறார்கள். இது எவ்வளவு பெரிய பேதைமை.

எந்த உயிரினத்திற்கும் தீங்கு நினைக்காமல், யாருடைய நம்பிக்கையையும் பொய்யாக்காமல், தனக்கு தெரிந்ததை இயன்ற வரை மற்றவர்களுக்கு சொல்லித் தருவோரெ குரு/துறவி எல்லாம். சும்மா தாடி வைத்தவன், காவி கட்டியவனெல்லாம் கிடையாது.

அதிகாரம்: கூடாவொழுக்கம்             குறள்: 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்

உரை:

தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது