கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் – குறள்கதை

“சும்மா சும்மா முத்தம் கொடுக்காதடா”

“ஏன்டி, பிடிக்கலையா?”

“பிடிக்காமலா இப்படி வந்து பேசிட்டுருக்கேன்? நீ கடிக்கற மாடு “

“அப்புறம்?”

“நீ இதுக்கா என்னை வரச்சொன்ன? ஏதோ பேசனும் வான்னு சொல்லி கூப்ட்டு என்ன வேலை பார்க்கற நீ?”

“ம், ஒரு காரணமாதான் வர சொன்னேன், அதுக்குன்னு என் ரூம்க்கு வரவளை ஒன்னும் பன்னாம இருக்க முடியுமா?”

“ஏன் நான் இதுக்கு முன்ன வந்தது இல்லையா?”

“அப்ப வெறும் ஃப்ரெண்டா வந்த, இப்ப என் லவ்வர். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம். கல்யாணத்துக்கு முன்ன என் ரூம்ல உன்ன ஒன்னுமே செஞ்சதில்லைன்னு சொன்னா வரலாறு என்னை துப்பாதா?”

“டேய் காஞ்சமாடு, வழியாத, என்ன விசயம்ன்னு சொல்லு?”

“சும்மாதான். லீவ்தானே, என் லைஃப் ஹிஸ்டரியை உன் கூட ஷேர் பண்ணிக்கலாம்னுதான். இதோ என்னோட சின்னவயசு ஆல்பம்ல இருந்து எல்லாத்தையும் வரிசையா எடுத்து வச்சுருக்கேன். ஒவ்வொன்னா காட்டலாம்னுதான்”

“ஏன்டா, எத்தனை நாள் இங்கே வந்துருக்கேன்? ஏன்டா முன்னமே காட்டலை?”

“சில விசயங்கள் வரப்போறவளுக்காகன்னு சேர்த்து வச்சுருப்போம் இல்லையா? இது அது மாதிரி”

நந்தினிக்கு பிரகாஷ் அருகில் அமர்ந்து ஒவ்வொரு வருட ஆல்பமாக காட்ட துவங்கினான். அவளுக்கும் ஆர்வமாகத்தான் இருந்தது. 5 பேர் குழுவாக நண்பர்களாக இருந்ததில் இவர்கள் இருவரும் காதலர்களாகி விட்டார்கள். மற்றவர்களை விட தான் எப்போதும் பிரகாசுக்கு ஸ்பெஷல் என்பதனை ஆரம்பத்தில் இருந்தே நந்தினியால் உணர முடிந்தது. அதுதான் அவளுக்கும் அவனிடம் பிடித்திருந்தது. ஏதாவது சாப்பிட வாங்கி வந்தால் கூட இவளுக்கென்று ஸ்பெசலாக ஏதாவது வாங்கி வருவான்.

மிகவும் மெதுவாகத்தான் இருவரும் நெருங்கினார்கள். இடைப்பட்ட 3 வருடத்தில் மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. காதலிப்பது இன்பம் தான். அதிலும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் காதலித்தல் பேரின்பம். அதிலும் காலவரை ஏதுமின்றி எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்னும் கொடுப்பினை எல்லாம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? இருவரது வீடும் அப்படித்தான். திருமணம் குறித்த முடிவுகளை இவர்கள் வசமே ஒப்படைத்த குடும்பத்தினால் நிதானமாக தங்களுக்கும் “ஐ லவ் யூ” என்றெல்லாம் சொல்லிக் கொள்ளாமலே காதலிக்க முடிந்தது.

மிகவும் இயல்பாக திட்டமிடாமல் ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் காதலை யதார்த்தமாக சொல்லிக் கொண்டார்கள். கட்டிக் கொண்டார்கள். ஆனால் அதன் பின்பு தான் பிரகாஷ் வேகமெடுக்க துவங்கினான். அதுவரை இருந்த காதலெல்லாம் தொட்டுக் கொள்ளாத, உணர்வு ரீதியான காதலாகத்தான் இருந்தது. அதன் பின் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்த துவங்கினான். கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தமிட்டான். நந்தினிக்கும் இவன் சேட்டைகள் அனைத்தும் புதிதாக இருந்தாலும் பிடித்திருந்தது. சுருங்க சொல்ல வேண்டுமென்றால் நண்பனாய் இருந்ததை விடவும் காதலனாக மாறியபின் புகுந்து விளையாடினான்.

வீட்டிற்கு தெரிந்த பின் திருமண பேச்சினை எடுத்தார்கள். இவர்களும் மறுக்கவில்லை. நாள் குறித்த பின் எங்கே திருமணத்திற்கு பின் இப்போது இருக்கும் கிக் குறைந்து விடுமோெ என்று பிரகாஷ் குழம்பினான். காதலியிடம் என்ன செய்தாலும் வெறுமனே பேசிக் கொண்டிருந்தாலும் கூட அலுக்காது. ஆனால் திருமணத்திற்கு பிறகு மனநிலை அப்படியே மாறிவிடும். அதனால் முடிந்தவரை நந்தினியுடன் தனது நேரத்தை செலவளிக்க துவங்கினான். வீட்டின் மாடியில் தனியறை. எப்போதும் யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். இந்த எண்ணம் வந்ததுமே பிரகாஷ் நந்தினியை மிகவும் நெருங்கினான்.

அவனது சிறுவயது படங்களைப் பார்த்து சிலிரென்று சிரித்தவளின் உதடுகளைப் பார்த்தவனுக்கு மனம் டக்கென ஒருநொடி அனைத்தும் மறந்து வெறுமையாகி திரும்பியது. மெதுவாக அவளை சீண்ட துவங்கினான். அவளும் நல்ல உற்சாக மனநிலையில் இருந்ததால் பதிலுக்கு சீண்டினாள். சீண்டலில் துவங்கி தீண்டலுக்கு மாறி மெதுவாக விளையாட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. நிதானமான முத்தம். எப்போதும் பதட்டமான முத்தத்தை விட நிதானமானதே ஆபத்தானது. அதுதான் மனநிலையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லுதலில் முக்கிய பங்கு வகிப்பது. முத்தத்தினை தொடர்ந்து அனைப்பு வரை நந்தினிக்கு பெரிதாக தெரியவில்லை.

அடுத்து அவனது தீண்டல்கள் இதுவரை இல்லாத புதிய இடங்களை நோக்கி செல்கையில் வியந்தாள். அதிர்ந்தாள். அனுமதிப்பதா? வேண்டாமா? என குழம்பினாள். வேண்டாம் என்று உறுதியாக 100 சதவீதம் முடிவெடுக்க முடியாமல் ஒரு சதவீதம் குழம்பினாலும் சறுக்கிவிடும் விசயம் இது. நந்தினிக்கோ 50-50. என்ன நோக்கத்தில் முன்னேறுகிறான் என்றும் தெரியவில்லை. இடையில் அவனது சீண்டலும் அவளை கிளர்ச்சியடைய செய்திருந்தது.

தரையில் பெரிய மெத்தை, தலையனை போட்டு அமர்வதுதான் பிரகாசிற்கு பிடித்தது. அப்படி அமர்ந்துதான் இருவரும் படங்களை பார்க்க துவங்கி இருந்தார்கள். இப்போது படுத்திருந்தார்கள். பிரகாசிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என தெரியவில்லை. நிறுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. அனுபவம் இல்லாததால் இந்த பிரச்சனை. ஏதோ ஒரு வேகத்தில் விமானத்தை கிளப்பி விட்டான். எத்திசையில் பறக்க விடுவது என்றும் தெரியவில்லை. சரி தரையிறங்கலாம் என்றாலும் எப்படி என புரியவில்லை. ஒரு இடத்திலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது விமானம்.

நந்தினிக்கு அவன் நிலை புரிந்தது. சொல்லவில்லை. ஆழ முத்தமிட்டு அவனில் இருந்து விலக முற்பட்டாள். அதை உணர்ந்ததும் இறுக பிடித்துக் கொண்டான். மேற்கொண்டு நந்தினியும் எதற்கும் முயற்சிக்காமல் அவன் போக்கிலேயே விட்டாள். ஒரு தீர்க்கமான முடிவில் இருந்திருந்தான் என்றால் அடுத்தடுத்து முன்னேறுவான், இவனுக்கு என்ன செய்ய என்று தெளிவில்லை. இதே நொடியில் உறைந்து விடலாம் என அவள் நெஞ்சத்திலேயே மயங்கி கிடந்தான். நந்தினிக்கு தானாக ஏதும் செய்யவும் தயக்கமாக இருந்தது. அவன் முன்னெடுத்தால் அனுமதிக்கலாம் என்றுதான் இருந்தாள். அவளும் பெண்தானே…!

கேட்பதற்கும் முன்னெடுப்பதற்கும் தயக்கமாக இருந்தாலும் அதோடு விட்டுவிட மனமில்லை பிரகாசிற்கு. ஒருவிதமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இதுவரை பார்க்காத பிரதேசத்தை காண வித்திட்டான். வெற்றியும் கிடைத்தது. முத்தமிட்டு மீண்டும் முகம் புதைத்தான். அடுத்து நந்தினி வேகமெடுத்தாள். பிரகாசிற்கு மூச்சு முட்டியது. அழுத்தமாக அவள் உதடுகளை தேடிப் பிடித்து முத்தமிட்டான். அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

இருவரும் விலகினார்கள். அவசரமாக உடைகளை சரிசெய்து கொள்ள பிரகாஷ் கதவினை திறந்தான். இருவருக்கும் காஃபியும இனிப்பு & காரமும் வந்திருந்தது. பிரகாசிற்கு மீண்டும் அறைக்கு வந்த பின் வெறுமையானது. நந்தினியை பார்த்து அசடு வழிந்தான். அவள் கை நீட்டி, அவனை பிடித்து இழுத்து முத்தமிட்டாள். அவள் போன் அடித்தது. அவள் வீட்டிற்கு அவளது நெருங்கிய தோழிகள் வந்து காத்திருப்பதாக செய்தி. கிளம்ப வேண்டும். இருவருக்குமே பிரிய மனமில்லை. வாசல் வரை சென்று விட்டு திரும்ப வந்து அவனைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்.

நந்தினி போகவும் உடம்பில் இருந்து ஏதோ பாதி அறுந்துக் கொண்டு போனது போல் இருந்தது பிரகாசிற்கு. அவளுடன் இருந்த அந்த கணங்கள் தான் உயிருடன் இருந்தது போலவும், அவள் போனபின் உயிர் போனதை போலவும் உணர்ந்தான்.

அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து

உரை:
கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள்.
இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.