தோழியா? என் காதலியா? நீ யாரடி கண்ணே? – குறள்கதை

“நான் யார் கூட பேசுனா உனக்கென்னடா?”

“எனக்கென்ன? ஒன்னுமில்லையே”

“அப்புறம் ஏன்டா போய் தினேஷ் கிட்ட போய் என் கூட பேசக்கூடாதுன்னு சொன்னியாம்”

“நான் அப்படிலாம் சொல்லலையே”

“வேறென்ன சொன்ன?”

“ஏன் அவனே சொல்லிருப்பானே?”

“நீ சொல்லு, என்ன சொன்ன?”

“கவிதா கூட க்ளோசா பழகறன்னு கேள்விப்பட்டேன், நல்ல பொண்ணு, ஒழுங்கா லிமிட்டா இருந்துக்கோன்னு சொன்னேன்”

“வேற எதுவும் சொல்லலை?”

“….”

“சொல்லுடா”

“வேற எதும் சொல்லலை”

“அவளை லவ் பன்ற எண்ணம் இருந்தா அப்படியே ஓடிடுன்னு சொன்னியா? இல்லையா?”

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?”

“எதுக்குடா இப்படி சொன்ன? என்கிட்ட யார் பேசுனாலும் இப்படித்தான் செய்வியா?”

“இங்கே பாரு, எனக்கு அவனை பிடிக்கலை. பார்க்கவே ஃபிராடு மாதிரி தெரிஞ்சான், அதான் வார்ன் பன்னேன்”

“லூசு, எருமை, பன்னி, என்னை பத்தி அவன் என்ன நினைப்பான்?”

“ஹேய் எதுக்கு சும்மா அவனை பத்தியே பேசிட்டுருக்க? உனக்கு அவன் முக்கியமா? நான் முக்கியமா?”

“எனக்கு யாரும் முக்கியம் இல்லை. எனக்கு நான் முக்கியம். என் மரியாதை முக்கியம். எனக்கு தெரியாம என் பிரண்ட்கிட்ட நீ அப்படி பேசுனது தப்பு”

“….”

“இனி இப்படி பேசமாட்டேன் சொல்ல வாய் வருதா பாரு?”

“இனிமே அப்படி அவன்கிட்டயும் பேசலை. உன்கிட்டயும் பேசலை. உங்க வேலையை பாருங்க. எதுக்கும் உங்களை தேடிகிட்டு வரமாட்டேன். கிளம்பு”

“ஹேய் என்ன ஏதோ நான் தப்பு பன்ன மாதிரி பேசற?”

“நான்தான் தப்பு பண்ணிட்டேன். நானா என்னென்னவோ நினைச்சுகிட்டு, ஒன்னுமில்லை. நீ கிளம்பு”

வேகமாக எழுந்து கவிதா சென்றாள். பிரவீனுக்கு எரிச்சலாக வந்தது. இந்த பெண்கள் மனதில் என்ன இருக்கிறதென்று எப்படித்தான் தெரிந்துக் கொள்வது? இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள். பிரவீனின் தங்கை சரன்யாவும் கவிதாவும் பள்ளியிலிருந்து ஒன்றாக படிப்பவர்கள். அவர்களது நட்பில்தான் வீடு வரை செல்லுமளவு நெருக்கமானது. அதன் பின்புதான் பிரவீன் – கவிதா இருவரும் பழக துவங்கினார்கள். ஒரு வயதுதான் வித்தியாசம் என்பதாலும், சரன்யாவே “அண்ணா” என கூப்பிடாததாலும் கவிதாவும் ஆரம்பம் முதல் பெயர் சொல்லித்தான் அழைத்தாள்.

மற்றவர்களை விட இவர்கள் இருவருக்கும் நட்பு மிக இயல்பாக நெருக்கத்தை தந்தது. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் எங்கும் செல்லாத அளவு பழகினார்கள். ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். கல்லூரி என வரும் பொழுது பிரிய வேண்டியதானது. கவிதா விரும்பிய ஃபேஷன் டிசைனிங் அவன் கல்லூரியில் இல்லாததால் வேறு கல்லூரியில் சேர்ந்தாள். அதனால் அவர்களுக்குள் எந்த இடைவெளியும் உருவாகவில்லை. சொல்லப் போனால் அதன் பின் தான் நெருங்கி பழகினார்கள். தத்தம் கல்லூரிகளில் நடப்பவற்றை வரிவிடாமல் பேசி பகிர்ந்தார்கள்.

நன்றாகத்தான் போனது. கவிதாவுடன் கல்லூரி பேருந்தில் செல்லும் பக்கத்து தெரு பையனுடன் நட்பு உருவாகும் வரை. கவிதாவிற்கு புதிதாக ஒருவருடன் பேசி பழக எப்போதும் கூச்சம் இருந்ததில்லை. இந்த தினேசுடனும் அப்படித்தான் பழகினாள். ஏதாவது என்றால் அவளை தேடி வீட்டிற்கே அவன் வந்து போகவும் தான் பிரவீனிற்கு சுருக்கென்றானது. அது வரை தன்னுடையதாக இருந்த ஒன்றை வேறொருவன் இரசிப்பதையே ஏற்க முடியாது. எடுத்துக் கொள்ள நினைத்தால்?

பிரவீன் மனதிற்குள் சொல்ல முடியாத காதல் ஒன்று இருந்தது என்றெல்லாம் சொன்னால் அது பொய். எந்த வித்தியாசமான உணர்வும் இல்லாமல் நல்ல நண்பனாகத்தான் இருந்தான். ஆனால் அவனால் இடையில் இன்னொருவன் நண்பன் என்ற பெயரில் வருவதைக் கூட ஏற்க முடியவில்லை. அதிலும் திட்டமிட்டெல்லாம் அவனிடம் பேசவில்லை. எதெச்சையாக அழைத்து பேச, அவன் திமிராக பதில் சொல்ல, ஏதோ மிரட்ட வேண்டுமே என்பதற்காக பேசியதுதான். அப்படியே விட்டிருந்தால் பிரவீனே அடுத்த முறை அவனை பார்க்கையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுருப்பான். அதற்குள் கவிதா வந்து “நீ எப்படி பேசலாம்?” என்ற தொனியில் பேசவும் உடைந்து விட்டது.

இனி எதற்காகவும் அவளிடம் பேசக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் அது அத்தனை சுலபமானதாக இல்லை. அவன் தங்கையை பார்க்க அவன் வீட்டிற்கு அவள் வந்து கொண்டுதான் இருந்தாள். அவளை பார்த்துவிட்டு பேசாமல் இருப்பது கடினமாக இருந்தது. கோபத்தில் வீராப்பாய் ஒரு முடிவெடுக்கலாம். அதன்பின் சீக்கிரமாக கோபம் கரைந்துவிடும். வீராப்பும் தனியாய் நிற்க தயங்கி ஓடிய பின் எடுத்த முடிவை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

அதுவும் இல்லாமல் தினசரி அரை மணி நேரமாவது அவளுடன் கதை பேசி பழகிய பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. இப்படியே ஒரு வாரம் போனது. இப்போதெல்லாம் வேறு வழியில்லாததால் டீவியிடம் சரணடைந்திருந்தான். அவனைத் தேடி கவிதா வந்தாள். கண்டு கொள்ளாமல் டீவியை விட்டு பார்வையை திருப்பாமல் இருந்தான்.

“சரன்யா எங்கடா?”

“எனக்கு தெரியாது”

“ஏன் அதை என்னை பார்த்து சொன்னா கழுத்து சுளுக்கிடுமா?”

“ஆமா, சுளுக்கிக்கும். உனக்கென்ன? நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டன் இல்லை. அப்புறம் என்ன?”

“சும்மா ஒவரா பண்ணாதடா”

“யார் ஒவரா பன்றாங்க? உன் வேலையை பார்த்துட்டு போடி”

பதில் வரவில்லை. மெதுவாக திரும்பி பார்த்தான். உக்கிரமாக நின்று கொண்டிருந்தாள். கோபத்தில் அவள் கண்கள் சிவந்து, அழ தயாராக இருந்தது. இதை எப்படி கையாளுவது என தெரியாமல் மீண்டும் டீவியை பார்க்க துவங்கினான். அருகே வந்தாள். முடியை பிடித்து தலையை ஆட்டினாள்.

“என்னடா, என்ன்ன்னடா, ஓவரா பன்ற? ஒருவாரமா பேசலை. நானா வந்து பேசுனாலும் சீன் போடற?”

“ஹேய் கையை எடு”

“முடியாது”

எதுவும் பேசாமல் இருந்தான்.

“நீ பேசலைன்னா நான் போயிருவேன். திரும்ப உன் முகத்துலயே முழிக்க மாட்டேன்”

சற்று நேரம் விட்டு எழுந்து போனாள். அவள் வாசலை எட்டுவதற்குள்

“ஆமாமா, இனிமே என் முகத்துல எதுக்கு முழிக்கனும்? அந்த தினேஷ் மூஞ்சிலேயே முழி. போ” என்றான். நின்றவள் வேகமாக வந்து இவன் கையை பிடித்து கிள்ளினாள்.

“புத்தி போகுது பாரு. நாய் நாய்”

“ஆமாடி, நான்லாம் உனக்கு இப்ப நாய் மாதிரிதான் தெரிவேன். அவன் தான் மனுசனா தெரிவான்”

“இங்கே பாரு…. என்னை பாருடா” அவள் கண்களை பார்த்தான். ஒரு மாதிரி கோபமும் அழுகையும் கலந்து நடுக்கத்தில் இருந்தன.

“உனக்கு நான் யார் கூடவும் பேச பிடிக்கலைன்னா என்கிட்ட சொல்லு. நான் யார்கிட்டயும் பேசலை. என்கிட்ட பேசாம இருக்காதடா. என்னால தாங்க முடியலை” என்றதும் அழ துவங்கி விட்டாள். இவனுக்கும் அவள் அழுவதை பார்க்கவும் கண்கள் கலங்க துவங்கியது. அவளை அணைத்து சமாதானப் படுத்தினான்.

“சாரிடி, என் தப்புதான். சாரிம்மா. அழாத. பிளிஸ். நான் தான் தப்பு”

“…..”

“இங்கே பாரு. என்னை பாரு” அவள் முகத்தை பிடித்து பார்க்க வைத்தான்.

“எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. நீ என் கூட மட்டும் தான் பழகனும்னு தோணுது. கொஞ்ச நாளாதான். உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமதான் சொல்லாம இருந்தேன். இதுக்கப்புறம் உன் இஷ்டம்”

அவள் அவன் கையை தட்டி விட்டு, அவனை கட்டிக் கொண்டாள்.

“உனக்கு கொஞ்ச நாள்தான். எனக்கு ரொம்ப நாளா அப்படித்தான். நானும் தான் சொல்லலை”

மேலும் இறுக்கி கட்டிக் கொண்டான். கொஞ்சம் கூட வேறுவிதமாக ஏதும் தோணாமல் அணைப்பில் இருந்தார்கள்.

“அந்த தினேசுக்கு போன் பண்ணி கொடு”

“எதுக்கு?”

“கொடு பேசனும்”

“என்ன பேசனும்? வேண்டாம்டா”

“எதும் தப்பா பேசலடா. கொடு ப்ளிஸ்”

அவள் டயல் செய்து தரவும், தான் இன்னார் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு

“தினேஷ் உன்கிட்ட சாரியும் கேட்கனும், தேங்க்ஸ்ம் சொல்லனும். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். கவிதா என்னோட உயிர். அவ இல்லாம எனக்கு ஒன்னுமில்லை. அவ பக்கத்துல இருந்துதான் பேசறேன். இதை உன்கிட்ட எதுக்கு சொல்றேன் புரியும்னு நினைக்கறேன்”

அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1122
உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

உரை:
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.