பல்வால்தேவனின் காதல் – இது பாகுபலி விமர்சனம் அல்ல

இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வால்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் வல்லமை படைத்தவர்கள் என்று முதல் பாகத்திலேயே தெரிந்து விட்டதால் அதை பற்றி பேசுவதும் வீண். திரைக்கதையில் எங்கெங்கே ஓட்டைகள் இருக்கிறது என்று கருந்தேளார் நன்கு அலசி விட்டார். நான் பேச விரும்புவது படத்தில் சரியாக சொல்லப்படாத விசயங்களை. “தாண்டவராயன் கதை” படித்ததில் இருந்து எனக்கு இப்படி ஆகிவிட்டது. புத்தகமோ, சினிமாவோ சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில் தான் கதை இருக்கிறது என ஆழமாக நம்ப துவங்கி விட்டேன்.

பாகுபலி படத்திற்கு கதை விஜேயேந்திர பிரசாத். ராஜ்மவுலியின் தந்தை. சிறந்த கதை எழுத்தாளர். ஆனால் அது அனைத்தும் அவரது சொந்த சரக்காகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை அவரே சொல்லி இருக்கிறார். இவர் எழுதிய கதைதான் “பஜ்ரங் பாய்ஜான்”. சல்மான்கான் நடிப்பில் பெரிதாக வசூலித்த படம். அப்படத்தின் மூலக்கதை பாசில் இயக்கிய “பூவிழி வாசலிலே” படத்திலிருந்து எடுத்ததாக அவரே நாளிதழ் ஒன்றில் கூறியிருக்கிறார். அதே போல் மகாபாரதத்தில் சில பாத்திரங்களை எடுத்து, பெண்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து எழுதியதுதான் பாகுபலி. இதோடு விஜேயேந்திர பிரசாத்திற்கு வேலை முடிந்தது.

ராஜ்மவுலிதான் திரைக்கதை. லாஜிக்கெல்லாம் அவர் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். அதெல்லாம் கேள்வி கேட்பது வீண். இவரது சத்ரபதி படத்தில் இதே பிரபாஸ் கொஞ்சம் எடை குறைச்சலாக இருக்கும் பொழுதே சுறாமீனுடன் சண்டை போட வைத்தவர். பாகுபலியில் வேறு என்ன செய்வார் என எதிர்பார்த்தீர்கள்? ராஜமவுலி படத்தில் வரும் வில்லன்களிடத்தில் ஏதோ ஒரு ஒற்றுமை தென்படுகிறது. கவனித்தீர்களா? இறுதியாக வந்த மூன்று படங்களை எடுத்துக் கொள்வோம்.

மகதீரா – அதில் வரும் வில்லன் தன் முறைப்பெண் காஜலை விரும்புவான். முந்தைய பிறவியிலும் சரி. தற்போதைய பிறவியிலும் சரி. பார்த்த மாத்திரத்திலேயே ஆழமாக காதலிக்க துவங்கி விடுவான். எந்தளவு என்றால் “இவளை நான் உயிரோடு இருக்கும் வரை நீ திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று அவன் தந்தை சொன்னதும் உடனே அவர் நெஞ்சில் கத்தியை இறக்கும் அளவுக்கு காதல். ஆனால் அது காதலாக நம் கண்ணுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் சிரமப்பட்டு ஒருமாதிரி கஞ்சா அடித்த ரியாக்ஷன் கொடுக்க வைத்து காமெடி செய்திருப்பார். இதுவும் காதல்தான்

நான் ஈ – இப்படத்தில் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை? சுதிப் அறிமுகமாகும் பொழுது துப்பாக்கி சுடும் இடத்தில் ஒரு பெண்ணை கரெக்ட் செய்வார். அதன் மூலம் அவள் கணவனிடம் கையெழுத்து வாங்குவதாக காட்டுவார்கள். அடுத்த சில நேரத்தில் இன்னொரு பெண்ணை கவர எத்தனிக்கையில் சுதிப்பின் பார்ட்னர் “உலகத்துல உன்னால கரெக்ட் பண்ண முடியாத பொண்ணுங்களே இல்லை போல?” எனக் கேட்க “ஒருத்தியை மட்டும் என்னால கவர முடியலை. என்னோட மனைவியை. அவளை தவிர யாரை வேணா கவர்வேன்” என்பார். இது ஏதோ சொத்துக்காக காதலிப்பது போல் நடித்து கல்யாணம் செய்து பின் மனைவியை கொலை செய்தது போலத்தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இதை ஏன் ஒரு தோல்வியை போல் சொல்ல வேண்டும்? சொல்லும் பொழுது சுதிப்பினுடைய முகத்தை கவனிக்க வேண்டும். அது ஆயிரம் கதைகள் சொல்லும். அவையும் காதல்தான்.

பாகுபலி – பிறந்தது முதல் உன்னைத்தான் விரும்பினேன் என்று தன் தலைக்கு வந்துவிட்ட மணிமகுடத்திடம் பேசும் பல்வால்தேவன் எதற்காக தேவசேனாவை கொல்லாமல் கட்டி வைக்கிறான்? காதலா? என்ன விதமான காதல்? எங்கே காதல் இருந்தது இருவருக்கும்? பல்வால்தேவனை சந்திப்பதற்கு முன்பாகவே பாகுபலியுடன் டூயட்டே முடிந்து விடுகிறது. அதற்கு முன்பாக சித்திரத்தை பார்த்து பல்வால்தேவன் விரும்பினாலும் அது தேவசேனாவிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. இது சாதாரணமாக கடக்கும் விசயமாக தெரியவில்லை.

எத்தனையோ விதமான, சிக்கலான காதல் கதைகள் உண்டு. பாலச்சந்தர் சொல்லாதவைகளா என்றால் இருக்கிறது. சொல்லாத காதல்களும் இருக்கிறது. இறைவி படத்தில் அஞ்சலி மீது பாபிசிம்ஹாவிற்கு எப்போது காதல் வரும்? அவளை மணமகளாக பார்க்கையில்தான். சேச்சே அதெல்லாம் தவறு, அடுத்தவனை மணமுடிக்க போகும் பெண்ணின் மீது எப்படி காதல் வரலாமா என்றால் “ரப்தே பனாதே ஜோடி”யில் ஷாருக்கானுக்கு வருவது? கொண்டாடினோமா இல்லையா? அதில் திருமணத்திற்கு முன்பு நிச்சயிக்கப்பட்டவன் இறந்து விட்டதால் புனித காதலாகி விடுகிறது. இறைவியில் அப்படி நடக்காததால் வேறு விதமாக பார்க்கப் படுகிறது.

வாழ்க்கை அடிக்கும் மரண அடி எது தெரியுமா? உங்களுக்கானவரை தாமதமாக உங்கள் வாழ்வில் கொண்டு வருவது. Love actually என்றொரு படம். புதிதாய் திருமணமானவர்களில் மனைவி, தங்களது திருமணத்தை கணவனின் நண்பன் எப்படி படம் பிடித்திருக்கிறான் என எடுத்து பார்ப்பாள். முழுக்க முழுக்க அவளையே படம் எடுத்திருப்பான். ஆம். அவன் அவளை விரும்புவான், அவ்வளவு பிடித்திருக்கும். என்ன செய்ய? அவளை முதன்முதலாக அவள் திருமணத்தில் தானே பார்க்க நேரிடுகிறது. அதெப்படி? ஒழுக்க விதிகள் உணர்ச்சிகளை தடுக்க முடியுமா?

http://www.onlookersmedia.in/wp-content/uploads/2015/05/Baahubali-Posters-Images-Stills-Prabhas-Raana-Anushka-Shetty-SS-Rajamouli-Onlookers-Media-5.jpg

பல்வால்தேவனுக்கு அவன் விரும்பிய அரசாட்சி கிடைத்தும் ஏன் நிம்மதியடையவில்லை? பாகுபலிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாலா? அவனை யாரும் அரசனாக அங்கிகரிக்காததாலா? அதற்காகவா அவனது சேனாதிபதி பட்டத்தை பறிக்கிறான்? அப்படி எல்லாம் இருந்திருந்தால் பாகுபலியை கொன்றதுமே நிம்மதி அடைந்திருப்பானே? இல்லை. அவன் காதல் அரசாட்சியில் இல்லை. பாகுபலியை கொல்லுமளாவிற்கு கோபம் வந்தது வெறும் அவனுக்கிருந்த மக்கள் செல்வாக்கின் மீதான பொறாமையினால் இல்லை.

எப்படி தேவசேனாவா? அரசாட்சியா? என்ற கேள்விக்கு தேவசேனாவை பாகுபலி தேர்ந்தெடுத்தானோ, அதே கேள்வி பல்வால்தேவனிடமும் வைக்கப்பட்டு இருந்தால் அவனும் தேவசேனாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் அவளை அவ்வளவு காதலித்தான். பின் ஏன் பாகுபலியை கொன்ற பின் அவளை கட்டி வைத்திருந்தான்? அவளை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே? என்ற கேள்வி வரலாம். அவனும் செய்திருப்பான். தேவசேனா மனம் மாறி இருந்தால் செய்திருப்பான்.

மகாபாரதத்தில ஓரிடத்தில் அனைவரும் யாரிடமும் சொல்லாத ஆழ்மன இரகசியங்களை கூற வேண்டி வரும்பொழுது பாஞ்சாலி கன்னனிடம் என்ன சொல்வாள் தெரியுமில்லையா? “எனக்கு பேசாமல் கர்ணனையே மணம் முடித்திருக்கலாம் என அவ்வபோது தோன்றும்” என்று. அதுபோல் ஏதாவது ஒரு மூலையில் தேவசேனா மனதில் பல்வால்தேவனுக்கு இடம் இருந்திருந்தால் மணமுடித்திருப்பான். அவள் தான் அவனை அடியோடு வெறுக்கிறாளே? கணவனை கொன்றவனை வெறுப்பது இயல்புதான்.

சேச்சே, என்ன இஷ்டத்திற்கு ஏதேதோ சொல்கிறாய் என நீங்கள் கேட்கலாம்? இதை கவனியுங்கள். முதல் பாகத்தில் “சொல் தேவசேனா, இந்த 25 வருடத்தில் அவன் பெயரை எங்கேனும் யாரேனும் எப்போதேனும் உச்சரித்து கேட்டாயா?” என்று மட்டுமா கேட்கிறான் “என்னை வேண்டாமென்று அவனை மணந்தாய்” என்று எதற்கு சொல்ல வேண்டும். ஆற்றாமை. கண்முன்னே இருந்தும் சேர்ந்து வாழமுடியாத ஆற்றாமை. இது முதல் பாகம் பார்க்கும் பொழுது தோன்றாது. இரண்டாம் பாகத்தில் தேவசேனா தப்பிவிட்டாள் என்று தெரிந்த பின், அவளை கட்டி இருந்த சங்கிலியை எடுத்து முகத்தோடு உரசி “அவள் இல்லாமல் எனக்கு எந்த சந்தோசமும் கிடையாது” என்று சொல்லும் போது புரியும்.

பாகுபலியின் மீது அத்தனை வன்மம் என்றால் கோட்டையை விட்டு வெளிவந்தவுடன் அவன் மகனை கொல்லத்தான் சென்றிருக்க வேண்டும். அதை விடுத்து “25 வருடம் என்னுடன் வாழ்ந்து விட்டு இப்போது மகன் வந்தவுடன் போய்விட்டாயே?” என்று ஏன் தேவசேனாவிடம் புலம்ப வேண்டும். வாய்க்கு வந்தபடி திட்டித்தானே இழுத்து செல்ல வேண்டும். புரியவில்லையா? தேவசேனாவை கட்டிவைத்து அவளை பார்த்து கொண்டிருப்பதே அவனுக்கு வாழ்க்கை. நீ என்னை மணக்க வேண்டாம். கண்ணெதிரே இருந்தால் போதும் என கேட்கும் காதல். இது கூட ஒருவித சேடிஸமாக தெரியலாம்.

இறுதியாக எரிந்து சாகப்போகிறோம் என்று தெரிந்த பின் சாவதை பற்றி கவலைப்படாமல்

“என்னுடன் வந்துவிடு தேவசேனா” என்று அழைப்பானே…!

பல்வால்தேவா, காதலனாடா நீ…!

செல்வராகவன் சொன்னது போல சொல்லிய காதல் கதைகள், சொல்லாத காதல் கதைகளுடன் சொல்லி புரிய வைக்க முடியாத காதல் கதைகளும் உண்டு. பல்வால்தேவனின் காதலும் அப்படித்தான்.

அவனும் கடைசி வரை யாரிடமும் சொல்லமாட்டான்.