ஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை

“முத்தம் கொடுப்பது எப்படி?” என்று சொல்லித்தர ஏதேனும் புத்தகம் உள்ளதா? எனக்கு இப்போது அவசியம் தேவை. என்ன விலை சொன்னாலும் வாங்க தயாராய் இருக்கிறேன். உடனடியாக சொல்லித்தர எனக்கு யாருமில்லை. முன் அனுபவமும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இன்று வாய்ப்பு அமைந்துள்ளது. சொதப்பிவிடுவோமோ என்று பயமும் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் தர்மசங்கடம் வருமென்று தெரிந்திருந்தால் முன் அனுபவமுள்ள நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்திருப்பேன்.

நான் காதலிக்கும் விஷயமே யாருக்கும் தெரியாது. என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. ஒவ்வொரு நண்பர்கள் கூட்டத்திலும் என்னைப்போல் ஒருவனை நீங்கள் பார்க்கலாம். மிகவும் நல்லவனாக, அதுக்கு சரிபட்டு வரமாட்டான் என ஒதுக்கி வைப்பவனாக இருந்து, திடிரென மற்றவர்கள் பொறாமை படும்படியான பெண்ணை கவர்ந்து, பலரின் வயித்தெரிச்சலுக்கு ஆளாகுபவர்களில் நானும் ஒருவன்.

எனக்கே இப்படி ஒரு பெண் எனக்கு அமைவாள் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பி இருந்திருக்கவே மாட்டேன். முதலில் அவளைப் பற்றி சொல்கிறேன். அவள் பெயர் வந்தனா. கருப்பு நிறம். பெரிய கண்கள். சரியான அளவில் உடல். சாதாரணமாக இது போல நிறைய பெண்கள் இருப்பார்களே, இவளிடம் என்ன சிறப்பு என்கிறீர்களா? இவளது நடனம். வெளுத்து கட்டுவாள். கல்லூரியில் முதலாமாண்டு வந்ததில் இருந்து இவள்தான் எப்போதும் முதல் பரிசு வாங்குவாள். இவளுக்கென்று ஒரு இரசிகர் கூட்டமே இருக்கிறது. அதில் நானும் ஒருவன்.

நான் அவளுக்கு ஒருவருடம் சீனியர். சுத்தமாக பழக வாய்ப்பே கிடையாது. அவ்வளவு போட்டி இருக்கும். எந்நேரமும் இவளுடன் பெண்கள் கூட்டம் வேறு. நடக்கும் போதே விளையாடிக் கொண்டே ஒடும் கூட்டம். சுருக்கமாக சொல்வதென்றால் இவளை இரசித்துக் கொண்டே இருக்கலாம். எனக்கு இது மாதிரி பெண்ணுடன் நட்பாக பழக வேண்டுமென்று ஆசையெல்லாம் உண்டு. ஆனால் நிரம்ப பயமும் இருப்பதால் வெறுமனே வேடிக்கைதான்.

கல்லூரியில் ஸ்டேசனரி கடை வைத்திருக்கும் அண்ணனுடன் நல்ல பழக்கம் என்பதால் அங்கே அதிக நேரம் இருப்பேன். கிட்டத்தட்ட போரடிக்கையில் எல்லாம் அவர் கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்ளுமளவிற்கு பழக்கம். அங்குதான் அவள் அறிமுகமானாள். ஒருநாள் என்னை அங்கே பார்த்து விட்டு, மறுநாள் டிபார்ட்மெண்டில் பார்த்துவிட்டு, மீண்டும் கடையில் பார்க்கும் பொழுது அவளாக என்னைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள். அவளை பற்றி சொல்லாமலே எனக்கு தெரியும் என்று சொன்னேன்.

அவளும் தினசரி அங்கே வர துவங்க, எங்களுக்குள் நட்பானது. முதலில் “அண்ணா” என்றுதான் சொல்லி பேசினாள். ஒரு வாரத்திலேயே கிண்டலும் கேலியுமாய் பேச அது தடையாய் இருந்ததால் நிறுத்திக் கொண்டாள். அந்த கடையில்தான் அவள் ரீசார்ஜ்ஜும் செய்ய வேண்டி இருந்ததால் அவள் எண் எனக்கு எளிதாக கிடைத்தது. அவசரத்திற்கு அழைத்து ரீசார்ஜ் செய்து விடுவதற்காக என் நம்பரை வாங்கிக் கொண்டாள். அதற்காக அவள் வெறுமனே ரீசார்ஜ்ஜிக்காக என்னுடன் பழகினாள் என நினைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வபோது பாக்கி வைக்காமல் பணம் தந்து விடுவாள்.

அப்படியே ஃபார்வேர்ட் மெசேஜில் துவங்கி, சேட்டிங்கில் சென்று போன் பேச துவங்கினோம். அவளுக்கு நிறைய நண்பர்கள் பள்ளியில் இருந்தே இருந்தார்கள். ஆனால் யாரையும் காதலித்ததில்லை என்றாள். நம்ப முடியவில்லை என்றேன். அவள் இரசனைகளை விளக்கினாள். எனக்கு ஏன் அவளை யாரும் காதலிக்கவில்லை என புரிந்தது. அவள் ஒரு புயல். அவளுடன் பயணிப்பதற்கு இணையான வேகம் ஆண்களுக்கு இயற்கையாக இருக்காது. இரண்டாவது அவளுடன் பழகிய ஒரு வாரத்தில் அனைவரும் ரோஜாவை நீட்டுவதால் அவளுக்கு காதல் சலிப்பூட்டுவதாகி விட்டு இருந்தது.

இப்படி இருக்கும் பெண்ணுக்கு காதல் வருவது கடினம் தான் என்று நினைத்துக் கொண்டேன். நான் அவளை காதலிக்கவில்லை. ஏனென்றால் எனக்கெல்லாம் அவள் கிடைப்பாளா என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே மனதில் ஆழமாக பதிந்து இருந்தது. அதனால் எதற்கு காதல் என்று சொல்லி, அமைந்த நட்பை கெடுத்துக் கொள்வானேன் என ஒரு எல்லையில் நின்று கொண்டேன். ஆனால் அதுதான் அவளுக்கு பிடித்திருந்தது. காதல் என்ற பெயரில் உரிமை எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என “அதை செய்யாதே, இதை செய்யாதே” என்றவர்களை கண்டு வெறுத்திருந்தவளுக்கு என் குணம் பிடித்திருந்தது. என்னுடன் அதிகம் நெருங்கினாள். என்னால் அதை உணர முடிந்தது. அப்போது கூட எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் எல்லையிலேயே நின்றேன்.

என்னை அவளுக்கு முழுதாக பிடித்திருக்கிறது என்று அவளே நேரடியாக சொன்னாள். கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எப்படி சொன்னாள் என்று எனக்கு பயங்கர ஆச்சர்யம். மிக இயல்பாக சொன்னாள். முதலில் எனக்கு அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வதென குழப்பமாகத்தான் இருந்தது. அவளே அடுத்த சில நாட்களில் “என்னை பிடிக்கலையா?” என கேட்கவும் தெளிவாக புரிந்துக் கொண்டேன். இதன் பின்பும் எல்லையிலேயே நிற்பேனா? உரிமை எடுத்துக் கொண்டேன், ஆனால் கட்டுப்படுத்தவில்லை. கைகோர்த்து நடப்பதற்கும், நான் சொல்லும் வழியில் தான் செல்ல வேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பெண்களுக்கு அது நன்றாகவே தெரியும். நான் முதல் வகை.

காதலிக்க ஆரம்பித்த பின் எல்லாம் நன்றாகத்தான் போனது. கொஞ்சி பேசுவதும், போனில் முத்தம் கொடுப்பதும் புதிதாக சுகமாகத்தான் இருந்தது. ஆனால் நேரடியாக முத்தமிட வேண்டும் என்னும் நிலை வரும்போது என்ன செய்வதென்று புரியவில்லை. எதெச்சையாக மதியம் சாப்பிடலாம் என வெளியே சென்றோம். திடிரென படத்திற்கு போகலாம் என முடிவானது. வெறுமனே படம் பார்ப்பதென்றால் பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் முன்புதான் இரவில் போனில் பேசுகையில் அவள் ஏதோ சீண்ட, நான் ஆளில்லாத இடத்தில், தனியாக மட்டும் பொழுது நான் யார் என்று காட்டுகிறேன் என சவால் விட்டிருந்தேன். அதற்காகவே இப்படி அழைத்து வந்திருக்கிறாள். அவளுக்கு தெரியும் என்னைப் பற்றி.

அவள்தான் டிக்கெட் வாங்கினாள். மூலையில் யார் கண்ணிற்கும் படாமல் தான் வாங்கி இருப்பாள். அவள்தான் கேடியாயிற்றே. அதற்காக “அச்சச்சோ, இதெல்லாம் தப்பு, கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று சொல்பவனல்ல நான். எனக்கென்னவென்றால் ஆரம்பிக்க கொஞ்சம் கூச்சம், அவ்வளவுதான். சேரன் படம். கூட்டமேயில்லை. ஒரமாக இடம். சத்தியமாக என்னால் படம் பார்க்க முடியவில்லை. ஆனால் எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. மெதுவாக அவள் கைகளை தடவி, கோர்த்துக் கொண்டேன். பின் சற்று நேரத்தில் தோளைச் சுற்றி கை போட்டுக் கொண்டேன். இதுவரை செய்ததெல்லாம் சரி. இதற்கடுத்து செய்வது தானே பிரச்சனை. என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? அவள் கண்களை பார்க்க வேண்டுமே? ஆசையும் நக்கலும் கலந்து ஒரு பார்வை பார்ப்பாள், பாருங்கள். செத்தே விடுவேன்.

கொஞ்சம் இறங்கி அமர்ந்து கொண்டு, அவளையும் அது போல் செய்ய வைத்தேன். என் வரிசையில் முகம் தெரியும் தூரத்திற்கு யாருமில்லை. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, தைரியத்தை வரவழைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். என்னை பார்த்து சிரித்தாள். கொஞ்சம் வெட்கமும் பட்டாள். தெரிந்தது. ஆனால் அவளை விட எனக்கு அதிகமாக கூச்சமாக இருந்தது. அதுதான் பிரச்சனை. அடுத்து அவளும் என் கன்னத்தில் முத்தமிட்டாள். சற்று நேரம் என் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். ஒருமாதிரி பரவசமாக இருந்தது.

இப்படியே இருந்து விட முடியுமா? அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டுமே? அவளை பார்த்தேன். என்னை பார்த்தாள். மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேகமாக அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டேன். எனக்கே மோதியதில் உதடு மெலிதாக வலித்தது. அவளுக்கும் வலித்திருக்கும். அவள் முகம் சுருங்கி இருந்தது. “சாரிடா” என்றேன். தோளில் குத்தினாள். அடுத்து என்ன செய்ய என குழம்பினேன்.

Related image

 

அவள் என் முகத்தை திருப்பினாள். பார்த்தேன்.

“ஃபிரெஞ்ச் கிஸ் எப்படின்னு தெரியுமா?” என்றாள்.

“ம்கூம்” தலையாட்டினேன்.

“நான் சொல்லித் தர்ரேன். நானும் வீடியோலதான் பார்த்தேன்” என்றாள். என் உடலில் ஏதோ மாறுவதை என்னால் உணர முடிந்தது.

“சுருக்கமா முதல்ல சொல்றேன், கவனி, முதல்ல 2 பேரும் பார்த்துக்கனும். அப்புறம் மேலுதடு கீழுதடு தனித்தனியா கிஸ் பண்ணிக்கனும். அப்புறம் பொறுமையா நாக்கை சுவைக்கனும். அப்புறம் கைகள் தழுவிக்கனும்” என்றாள். எனக்கு அவள் சொல்லித்தந்த விதம் சிரிப்பை வரவழைத்தது. சிரித்து விட்டேன். முறைத்தாள். தொடையில் குத்தினாள். மேலும் சிரிப்பு வந்தது. அடக்க முடியாமல் சிரித்தேன். மீண்டும் குத்திவிட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

“சாரிடா” என சமாதானப்படுத்தினேன். என் பக்கம் திரும்ப மறுத்தாள். நான் அவள் முகத்தை பிடித்து திருப்பி, அவள் கண்களை பார்த்தேன். அதிகபட்சம் 4 நொடிகள் தான். அடுத்தது என் பார்வை அவள் இதழ்கள் பக்கம் சென்றது. மெதுவாக அதனருகே என் உதடுகளை கொண்டு சென்றேன். முதலில் கீழுதடை ருசி பார்த்தேன். பின் மேலுதடு. மீண்டும் கீழுதடு. மேலுதடு. அப்படியே என் உதடுகளை அவள் இதழோடு பொருத்தி இரண்டையும் சேர்த்து சுவைத்தேன்.

சற்று பின்வாங்கி, அவள் உதடுகள் மெதுவாக பிரியும் தருணத்தில் என் நாக்கினைக் கொண்டு, அவள் நாக்கை தடவினேன். என்னுடையது வெளிவரவும் அதன் பின்னேயே அவள் நாக்கும் உதடுகள் தாண்டி வெளிவர, என் உதடுகளான் அதனை சிறை பிடித்து சுவைத்தேன். அவளும் சுவைக்க, அதில் ஒரு போட்டியே நடக்க துவங்கி இருந்தது. இடையில் என்னை அறியாமல் என் கைகள் அவளை தழுவியிருந்தது. அவளுடையதும் தான். 3 நொடிகள் இடைவெளி விட்டு மீண்டும் ருசித்துக் கொண்டோம். தொடர்ந்தார் போல் எத்தனை முறை என்று எண்ணவில்லை. இடைவேளை விடவும் விலகி கொண்டோம்.

“ஏதாவது சாப்பிட வாங்கி வரவா? என்றேன். மறுப்பாய் தலையாட்டிவிட்டு என் கைகளை பிடித்துக் கொண்டாள். “உனக்கு?” என்றாள். “எனக்கு வேண்டாம்பா. இந்த டேஸ்ட் போயிடும்” என்றேன். வலிக்காமல் குத்திவிட்டு “எப்படி இருக்கு டேஸ்ட்?” என்றாள்.

அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

உரை:
காதலியின் தூய்மையான எயிற்றில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது என்கிறது இக்குறள். எயிற்று நீர் இயல்பாக வெறுக்கப்படுவது. எச்சில்பண்டத்தை எவரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்களுக்கு அந்த எச்சிலே சுவைமிகு நீர் ஆகிவிடுகிறது.
காம இன்பத் தூண்டுதலை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது வாய்ப்பகுதி. இங்கு சொல்லப்பட்ட முத்தம் உதட்டுடன் உதடு பொருத்தும் காதலர்களுக்கான முத்தம் ஆகும். இது உதடுகளின் உரசல் மட்டும் அல்ல; இன்று மேற்குநாட்டவர்களால் ஃபிரெஞ்ச் முத்தம் (French Kiss) என்று அழைக்கப்படுகிறதே அந்த வகையைச் சார்ந்தது. இந்த முத்தம் உதடு, நாக்கு, பற்கள், எயிறு என்ற வாயின் உறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்கி இன்பம் அளிப்பது. உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களையும் எயிற்றையும் நாக்கால் துழாவி நீர் சுரக்க வைக்கும் நீண்ட ஆழமான முத்தம். இவ்விதம் சுரந்த நீரே ‘வால் எயிறு ஊறிய நீர்’ ஆகும்.