எனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை

சூர்யாவிற்கு இவளை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்துதான் அந்த விளம்பரத்தை இந்தியாவில் எந்த நாளிதழுக்கும் தராமல் தன் நண்பர்கள் மூலமாக இங்கிலாந்தில் இருக்கும் “இலண்டம் டைமஸ்” இதழுக்கு தந்திருந்தான். ஆனால் அந்த விளம்பரத்தை எப்படியோ பார்த்து விட்ட யாரோ ஒரு இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர், அது குறித்த செய்தியை இந்திய நாளிதழில் வெளியிட மானமே போய் விட்டது. கிட்டத்தட்ட ‘பணக்கார கிறுக்கன்’ என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்கள். அதில் இருந்து பலர் துக்கம் விசாரிப்பது போல் அவனிடம் விசாரிக்க துவங்கினார்கள். சிலர் தெரிந்த மனநல மருத்துவர்களை பரிந்துரைக்கவும் செய்தனர்.

இத்தனைக்கும் சூர்யாவிற்கு மும்பையில் நண்பர்கள் மிகக் குறைவு. தன் பெற்றோர் இறந்த பின் தமிழ்நாட்டில் வசிக்க பிடிக்காமல் மும்பைக்கு வந்து ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுகிறான். சுதந்திரத்திற்கு பிறகான இந்த 32 வருடங்களில் மாறாத விசயங்களில் இந்த ஏற்றுமதி தொழிலும் ஒன்று. இந்திய பொருட்களின் தேவை உலகம் முழுவதும் இருந்தாலும், சூர்யாவின் நண்பர்கள் இருப்பது இலண்டனில் என்பதால் இங்கிலாந்திற்கு மட்டும் தான் ஏற்றுமதி செய்கிறான்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் தந்த விளம்பரத்திற்கு பிறகு பல பத்திரிக்கையில் இருந்து அவனை பேட்டி எடுக்க வந்தார்கள். முதலில் பொறுமையாகத்தான் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் கேள்வி அனைத்தும் அவனை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் சித்தரிக்க முயலவும், பேட்டி, கேள்வி என யார் வந்தாலும் விரட்ட துவங்கினான்.

இந்த பெண் முதலில் இவன் வீட்டிற்கு வருகையிலேயே சூர்யாவை ஈர்த்து விட்டாள். என்ன ஏதென விசாரித்தால் இவளும் சில கேள்விகள் கேட்க வேண்டும் என துவங்கவும் சிடுசிடுவென விரட்டி விட்டான். அதோடு விடாமல் அவ்வபோது வந்து அவனை பார்க்க முயற்சித்துக் கொண்டுதான் இருந்தாள்.

பெண்ணை பிடித்திருக்கிறது, எதற்காக விரட்டிக் கொண்டே இருக்க வேண்டும். பேசித்தான் பார்க்கலாமே என ஒருநாள் பார்க்க வந்த பொழுது அழைத்து முகத்தில் வேண்டுமென்றே எந்த உணர்ச்சியும் காட்டாமல் பேசினான்.

“வாட் யூ வாண்ட்?”

“சார் எனக்கு தமிழ் தெரியும், நானும் தமிழ் தான்”

“ஓ இங்க்லீஸ் தெரியாதா?”

“தெரியும், நானும் தமிழ்னு சொல்ல வந்தேன்”

“நீ தமிழ்ங்கறதால என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கற?”

“ஏற்கனவே சொன்னனே சார், எனக்கு சில கேள்விகள் கேட்கனும்னு”

“இங்கே பாரு, உன் பேர் என்ன?”

“செண்பா சார்”

“வாட்டெவர், உனக்கு என்ன வேணும்னாலும் கேளு. நீ தமிழ்ங்கறதாலோயோ, பொண்ணுங்கறதாலோயோ இல்லை, தேவை இருக்கவங்க கேட்டா கொடுக்கறதுல எனக்கு எப்பவும் பிரச்சனை இருந்தது இல்லை. ஆனா அதை பத்தி நான் பேச விரும்பலை”

“இல்லை சார், நீங்க நினைக்கற மாதிரி இல்லை…”

“இங்க பாரு செண்பா, நான் அந்த விஷயத்துல நிறைய காயப்பட்டுட்டேன். நல்லவேளை என் போட்டோ போடாம விட்டதால என்னால நடமாட முடியுது. வேற எதுவும் இல்லைன்னா நீ கிளம்பு”

“வேற இருக்கு”

“என்ன?”

“எனக்கு உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கனும்”

“என்ன தெரிஞ்சுக்கனும்?”

“எல்லாமே தெரிஞ்சுக்கனும்”

“எதுக்கு?”

“நீங்கதானே சொன்னிங்க, அந்த ஒரு விசயத்தை பத்தி மட்டும் பேச வேண்டாம். மத்தபடி எது கேட்டாலும் பரவாயில்லைன்னு”

சூர்யாவிற்கு சிரிப்பு வந்தது. இனி இவளிடம் கடுகடுக்க தேவையில்லை என புரிந்ததும் பொறுமையாக அவளை கவனித்தான். எப்படி கார்பன் டேட்டிங் செய்தாலும் வயது 21 க்கு மேல் சொல்ல முடியாது. உடையிலேயே படித்தவள் என தெரிகிறது. நல்ல அழகிதான். இந்தியா வந்த இந்த 5 வருடங்களில் ஏன் நமக்கு எந்த பெண் மீதும் ஈர்ப்பு வரவில்லை என்ற யோசனைக்கு சென்றவனை செண்பா அழைத்தாள்.

“சார்…? கோச்சிகிட்டிங்களா?”

“ம்… இல்லை….சரி கேளு, என்ன தெரிஞ்சுக்கனும்?”

“சார் நீங்க என்ன படிச்சுருக்கிங்க?”

“முழுசா முடிக்கலை, இலண்டன்ல அட்டாமிக் பிசிக்ஸ்ல ரிசர்ச் பண்ணிட்டுருந்தேன், பாதில விட வேண்டியதாகிருச்சு”

“ஓ, உங்க குடும்பம்?”

“இல்லை”

“இல்லைன்னா?”

“இப்ப வரை யாரும் இல்லை”

“நான் நிறைய கேட்கனும் சார். அப்பப்ப வந்து பார்க்க உங்க அனுமதி வேணும்”

“நான் அவ்ளோ பிசியான ஆள் கிடையாதும்மா, எப்ப வேணா வா, பட் ஒன் கண்டிஷன், அதை பத்தி கேள்வி கேட்டா அடுத்து நீ எப்பவும் என்னை பார்க்க வரக்கூடாது”

“ம்… சரி சார். நீங்க எப்படியும் அலவ் பண்ண மாட்டிங்கன்னு நினைச்சுட்டு வேற வேலைக்கு ஒத்துகிட்டு வந்தேன். நீங்க அதிசியமா உள்ளே கூப்டிங்க. எனக்கு இப்ப கிளம்பனும். தப்பா நினைக்காதிங்க”

“சரி, கிளம்பறதுக்கு முன்னாடி நீ எந்த பத்திரிக்கைன்னு சொல்லிட்டு போ”

“நான் எந்த பத்திரிக்கையும் இல்லை சார்”

“அப்புறம் எதுக்கு பேட்டி எடுக்க வந்த?”

“நான் உங்களை பேட்டி எடுக்க வரலையே”

“குழப்பற, சரி நீ கிளம்பு. அடுத்த முறை வரும் போது பேசிக்கலாம். வரதுக்கு முன்ன போன் பண்ணிட்டு வா. இந்த கார்டுல என் ஆஃபிஸ் நம்பரும் இருக்கு. வீட்டு நம்பரும் இருக்கு”

“ஓகே சார். ரொம்ப சந்தோசம் உங்க கூட பேசுனதுல”

செண்பா கிளம்பியதும் சூர்யாவிற்கு தன் மீதுதான் ஆத்திரமாக வந்தது. இவள் முதல் முதலாக வீட்டிற்கு வரும் பொழுது பேட்டி எடுக்க வந்துள்ளதாக நினைத்துக் கொண்டது அவன்தான். தொடர்ந்து தினமும் ஒவ்வொரு பத்திரிக்கையில் இருந்து வந்து கொடுத்த தொல்லையினால் விசாரிக்காமல் கோபப்பட்டதும் அவன்தான். அன்றே பேட்டிக்காக வரவில்லை என தெரிந்திருந்தால்? தெரிந்திருந்தால் என்ன செய்திருப்போம். அமர வைத்து அவளிடம் விலாவரியாக பேசி அனுப்பி இருப்போம். அத்துடன் அனைத்தும் முடிந்திருக்கும். முடிந்தால் என்ன? ஒன்றுமில்லை. அவள் அழகாக இருக்கிறாள். இருந்து விட்டு போகட்டும். மனம் தனக்குள்ளேயே குழம்ப துவங்கியது. பெண்கள் மீது கவனம் செல்லும் வரை ஒழுங்காகத்தான் இருக்கும். அதன் பின் இப்படித்தான் ஆகும்.

அடுத்து வந்த நாட்களில் வேலைகள் இல்லாத பொழுது, புத்தகங்கள் சலிப்பூட்டும் பொழுது, சூர்யாவின் மனம் செண்பாவினை எதிர்பார்க்க துவங்கியது. இரண்டு நாட்களுக்குப் பின் வந்தாள். இருவரும் அமர்ந்து பேசினார்கள். ஒருவரை பற்றி ஒருவர் கேட்டு தெரிந்துக் கொண்டார்கள். படிப்பு முடிந்து விட்டதாகவும், தமிழகத்திற்கு செல்ல விருப்பமில்லாமல் இங்கேயே இருந்த பொழுதுதான் சூர்யாவினை பற்றிய செய்தியை படித்ததாகவும், அது தந்த சுவாரசியத்தால் அவனைத் தேடி வந்ததாகவும் கூறினாள்.

தன் சிந்தனைகளை கேலி செய்யாமல் பொறுமையாக கேட்கும் நபர்களுக்காகத்தான் ஒவ்வொருவரும் காத்திருக்கிறோம். சூர்யாவிற்கு அப்படி செண்பா அமைந்தாள். அவளும் அவனைப்போல இயற்பியல் படித்தவள் என்பதால் அவன் சொல்வதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளுக்கு புதுமையாய் இருந்தது எதுவெனில் அவனது சிந்தனைகள், அவை சாத்தியமா என ஒவ்வொரு முறையும் கேட்டாள். இப்போது இருவரும் நெருங்கி பழகி விட்டதால் தயக்கமின்றி முன்பு பேசக்கூடாது என்று சொல்லியிருந்ததையும் விவாதிக்க துவங்கி இருந்தார்கள்.

“உங்களுக்கு எப்படி அப்படி ஒரு விளம்பரம் கொடுக்கனும்னு தோணுச்சு?”

“அது சாத்தியம்னு நம்பும் போது, எதுக்காக சும்மா இருக்கனும்?”

“சரி சொல்லுங்க, அந்த விளம்பரத்துல என்னன்னு கொடுத்து இருந்திங்க?”

“ஏன் நீ படிக்கலையா?”

“இல்லை, இங்கே இந்தியால வந்த பேப்பர்ல அதை பத்தி மேம்போக்காதான் நியுஸ் வந்துருந்தது. இலண்டன் டைம்ஸ்ல வந்த உங்களோட வரிகளை தெரிஞ்சுக்க விரும்பறேன்”

“ஜூலை 8, 1978 அன்று இந்த முகவரியில் ஒரு விருந்து உண்டு. அதில் கலந்துக் கொள்பவர்களுக்கு கேட்கும் பரிசு கிடைக்கும். வர விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் பிறந்த தேதி ஜூலை 9, 1978க்கு முன்பாக இருக்க கூடாது. அதற்கான சான்றிதழுடன் வரவேண்டும்”

“சோ, நீங்க நேரடியா எதிர்காலத்துல இருக்கவங்க காலப்பயணம் செஞ்சு உங்க விருந்துக்கு வரனும்னு எதிர்பார்த்திங்க”

“கிட்டத்தட்ட”

“அப்படின்னா?”

“பாரு, கண்டிப்பா எதிர்காலத்துல காலப்பயணம் குறித்த ஆராய்ச்சிகள் நடக்கும். அது வெற்றியும் அடையும். அப்போ அவங்க கடந்த காலத்துக்கு வருவாங்க. அப்படி வரவங்க என்னை சந்திக்க வரனும்னுதான் எதிர்பார்த்தேன். எனக்காக வரனும்னு எதிர்பார்க்கலை”

“கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”

“உனக்கு புரியும்னு நம்பறேன். காலப்பயணம் சாத்தியம்னா நம்மளால கடந்தகாலத்தை மாத்த முடியும். ஒத்துக்கறியா?”

“ம், ஆனா எதுக்காக?”

“நிகழ்காலத்தை மாத்தனும்னா அதுக்கு அதுதான் சரியான வழி”

“எப்படின்னு புரியலை”

“ஒரு தியரி சொல்றேன் புரிஞ்சுக்க முடியுதா பாரு. இரண்டாம் உலகப்போர் நடந்தது இல்லையா? ஹிட்லர் சோவியத் மேல போர் அறிவிச்சு போகும் போது, தோல்வியை சந்திக்காம இருந்துருந்தா என்ன நடந்துருக்கும்?”

“மை காட், ஹிட்லர் உலகம் முழுக்க ஜெயிச்சுருப்பார்”

“என்னோட தியரி என்னன்னா ஹிட்லர் உலகம் முழுக்க ஜெயிச்சுட்டார், ஒரு 200 வருசம் கழிச்சு காலப்பயணம் சாத்தியமான பின், அது மூலமா அவரை எப்படி தோற்கடிக்கறதுன்னு சோவியத்துக்கு எதிர்காலத்துல இருந்து வந்து சொல்லி தந்துருக்காங்க.”

“நிஜமாலுமா?”

“ஹேய் சும்மா சொல்றேன், அப்படியும் இருக்கலாம். இந்த உலகப்போர் எல்லாமே எதிர்காலத்தவர்கள் திட்டப்படி நடந்துருக்கலாம். ஏன்னா அப்பதான் நிறைய கண்டுபிடிப்புகள் நடந்துருக்கு. சோனார், கம்ப்யுட்டர் பத்துன ஆராய்ச்சிகள் ஏன் சரியா அப்ப ஆரம்பிக்கனும்”

“ஒருவகைல பார்த்தா நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம் தான்”

“நிச்சயமா இருக்கலாம். ஏற்கனவே இதை பத்தின ஆராய்ச்சிகள் நிறைய நடந்துருக்கு.ஐன்ஸ்டின் இதை பத்தின ஆராய்ச்சில ரெண்டு விசயம் சொல்லிருக்கார். ஒன்னு ஈர்ப்புவிசைக்கும் காலத்துக்கும் இருக்க தொடர்பு. இன்னொன்னு ஒளியோட வேகத்துக்கும் காலத்துக்கும் இருக்க தொடர்பு”

“ஒளியோட வேகத்தை தாண்டும் போது காலப்பயணம் சாத்தியம்னு நானும் படிச்சுருக்கேன். ஈர்ப்புவிசைக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித்தனி ஈர்ப்புவிசை, சுழற்சிகாலம் இருக்கு. ரெண்டும் ஒன்னோட ஒன்னு சம்பந்தப்பட்டது. ஒரு கிரகத்தோட சுழற்சிய பொறுத்துதான் அதோட இரவு/பகல், நேரம் எல்லாம். இப்ப புரியுதா எப்படி காலத்தோட சம்பந்தப்படுதுன்னு”

“உங்களுக்கு இதுல ஆர்வம் இருந்தா நீங்க ஏன் இந்த ஆராய்ச்சில ஈடுபடக்கூடாது?”

“ம், அப்படி ஒரு யோசனை இருக்கு, பார்க்கலாம்”

உற்சாகமூட்டுவது ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஆணால் இயலாத காரியம் என்பதே இல்லை. சூர்யாவிற்கு நாளாக நாளாக செண்பாவின் மீதான ஈர்ப்பு கூடிக் கொண்டே போனது. சில வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இலண்டன் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என வைத்திருந்த திட்டத்தினை மாற்றிக் கொண்டு, இந்தியாவிலேயே அவனது ஆராய்ச்சியை துவங்கினான். அவன் விருப்பப்படி செண்பாவும் அவன் உதவியாளராக இருக்க சம்மதித்தாள். இருவரும் 24 மணிநேரமும் ஒன்றாக இருக்க வேண்டி இருந்தது. ஆராய்ச்சியில் இருந்து சூர்யாவின் மனம் சற்று விலகினாலும் அது நேராக செண்பாவிடம் தான் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை காதலிக்க துவங்கி இருந்தான்.

அவன் எண்ணம் புரிந்ததும் செண்பா அவனை மேற்கொண்டு எதுவும் அவனை அது குறித்து பேசவிடாமல் பார்த்துக் கொண்டாள். என்ன சொல்ல? இவர்கள் ஈடுபட்டிருக்கும் காலப்பயணம் குறித்த ஆராய்ச்சி அவ்வளவு சுலபமான ஒன்றாய் இருக்கவில்லை. அது குறித்து படித்து தெரிந்துக் கொள்ளவே பலநாட்கள் ஆனது. ஈர்ப்புவிசை மற்றும் ஒளியின் திசைவேகத்தில் பயணம் என மிகப்பெரும் விசயத்தை சாதிக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள். சூர்யா மட்டும் இருந்திருந்தால் இரண்டாவது நாளே போதும் என ஊத்தி மூடியிருப்பான். செண்பாவின் ஈடுபாடு அவனை தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடவைத்தது. பல நேரங்களில் ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த தேவைப்படும் யோசனைகளை சூர்யாவிடமிருந்து வரவழைப்பது அவள் வேலையாக இருந்தது. சொல்லப்போனால் சூர்யாவை விட அவளுக்கு நிறைய தெரிந்திருந்தது.

செண்பாவை விட தனக்கு பொருத்தமாக வேறு ஒரு பெண் கிடைக்கவே மாட்டாள், அதுவும் இந்தியாவில் வாய்ப்பேயில்லை எனும் முடிவுக்கு வந்த பின் இனி காத்திருப்பது முட்டாள்தனம் என முடிவெடுத்து ஒருநாள் தயங்காமல் அவளிடம் காதலைச் சொன்னான். அவளுக்கும் தன் மேல் விருப்பம் இருக்கும் என முழுமையாக நம்பியிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த பதில் அவளிடம் இருந்து வரவில்லை. ஏன் அவள் சம்மதிக்கவில்லை என அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

பலமுறை கேட்டான். அவளிடம் இருந்து சரியான பதில் இல்லை. அதன்பின் சூர்யாவிற்கு ஆராய்ச்சியில் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. ஏதோ கடனுக்கென்று செய்தான். முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை. அதன் காரணம் புரிந்துக் கொண்டு செண்பா அவனிடம் தான் காதலை மறுப்பதற்கான காரணத்தை கூறத் துவங்கினாள்.

“நமக்குள்ள ஒத்து வராது சூர்யா”

“ஏன்?”

“வயசு பிரச்சனை”

“ஏன் வயசுக்கென்ன? எனக்கு 27. உனக்கு?”

“-76”

“மைனஸ் 76 ஆ?”

“ஆமா, இந்த வருசத்துல இருந்து நான் பிறந்த வருசத்தை கழிச்சா மைனஸ் 76 தான் வரும்”

“….”

“இன்னும் புரியலையா? நான் எதிர்காலத்தை சேர்ந்தவ. காலப்பயணம் பண்ணி இங்கே வந்துருக்கேன்”

“விளையாடாத செண்பா”

“விளையாடலை சூர்யா. இப்ப நான் சொல்றதை நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க. எப்படி உங்க பேப்பர் அட்வர்டைஸ்மென்ட்ட பார்த்து பைத்தியக்காரன்னு சொன்னாங்களோ அதான் நடக்கும். சோ ப்ளிஸ். நான் சொல்றதை கேளுங்க.நான் பிறந்தது 2054 ல. அப்ப காலப்பயணம் அனைத்து நாட்டுனாலயும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசயம்”

“…….” எதுவும் பேச வாய் வரவில்லை.

“உங்களோட சிந்தனைகள் எல்லாமே நிஜம் தான். காலப்பயணம் சாத்தியமான பின்பு, ஓவ்வொரு அரசாங்கமும் தங்களோட கடந்தகாலங்களை மாத்தியமைக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்புறம் சர்வதேச நாடுகள் ஒரு அமைப்பை உருவாக்கி சில சட்டதிட்டங்களை உருவாக்குனாங்க. அதன்படி எந்த நாடும் காலப்பயணம் செஞ்சு சர்வதேச விவகாரங்களை மாத்தியமைக்க கூடாது. தேவைப்பட்டா தங்கள் நாட்டு வரலாறுல இருக்க பேரிடர் சம்பவங்களால் மட்டும் இழப்பு அதிகம் நடக்காம பார்த்துக்கலாம்னு. அதுக்கும் அனைத்து நாடுகளோட சம்மதம் வேணும்”

“ம்”

“இதுக்காக ஒவ்வொரு நாட்டுலயும் ஒரு அமைப்பு இருக்கும். கிட்டத்தட்டி இப்ப இருக்க சிபிஐ,ரா மாதிரி. சின்னவயசுல இருந்தே காலப்பயணத்துக்கு ஏத்த மாதிரி பயிற்சி கொடுப்பாங்க. விண்வெளிப்பயணம் மாதிரி இதுவும் உடலை அதிகம் பாதிக்கும். நான் அந்த அமைப்பை சேர்ந்தவதான். ஒரு பேரிடருக்காகத்தான் ஒரு டீமா வந்தோம். வந்த கொஞ்ச நாள்ல திரும்ப வரச்சொல்லி கட்டளை வரவும் எல்லோரும் திரும்பிட்டாங்க. என்னோட டைம் மிஷன் பிரச்சனைன்னால நான் போக முடியாம சிக்கிட்டேன்”

“இரு இரு என்ன சொல்ற? உன்கிட்ட டைம் மிஷன் இருக்கா? எங்கே இருக்கு?”

தான் அணிந்திருந்த பெல்ட்டை காட்டினாள்.

“இதுவா?”

“ஆமா, நானோ டெக்னாலஜி. இதை பத்தி அதிக விபரங்கள் எனக்கு சொல்லித்தரப்படலை. எங்களோட விருப்பப்படி, சர்வதேச சட்டத்துக்கு புறம்பா இதை இயக்கிடக்கூடாதுங்கறதுக்காக. இதை எனக்கு சரி செய்யவும் தெரியலை. நான் மாட்டிகிட்டேன். திரும்பி என் காலத்துக்கு எப்படி போறதுன்னு தவிக்கும் போதுதான் உங்களோட காலப்பயணம் பத்தின விளம்பரம் பார்த்தேன்”

“ஓகோ, அப்ப என் மூலமா காலப்பயணம் செஞ்சு உன் காலத்துக்கு போறதுதான் உன் திட்டம் இல்லையா?”

“ஆமா சூர்யா, என்னை மன்னிச்சுருங்க”

“சரி நீ ஒரு பேரிடர் விசயமா வந்தேன்னு சொன்னியே. அது என்னன்னு சொல்ல முடியுமா?”

“அது நான் சொல்லக் கூடாது”

“நீ சொல்லாம நான் எப்படி உன்னை நம்பறது? இதுவரை நீ சொன்னதுலாம் என் காதலை மறுக்கறதுக்கு விட்ட கதையா கூட இருக்கலாம்ல?”

“சரி சொல்றேன். முழு விவரங்களும் சொல்லமுடியாது. இப்போலருந்து 6 வருசம் கழிச்சு மத்தியபிரதேசத்துல ஒரு விஷவாயு விபத்து நடக்க போகுது. அதை தடுக்கத்தான் நாங்க வந்தோம்”

“6 வருசத்துக்கு முன்னமே எதுக்கு வந்திங்க?”

“இதை திட்டமிடறவங்க நாங்க இல்லை. அது மேல்மட்டக்குழு முடிவெடுக்கும். 10 வருசத்துக்கு முன்னமே கூட அனுப்பிடுவாங்க. மொத்தம் எத்தனை பேர் வருவோம்னு எங்களுக்கே தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை. என்னோட வேலை, ஒரு அமைச்சரோட பெண்ணுக்கு தோழியாகி, அவ வீடு வரை போய் பழக்கப்படுத்திகிட்டு, ஒரு குறிப்பிட்ட தேதில அவரை கொலை செஞ்சுட்டு திரும்பிடனும்”

“எதுக்கு?”

“எனக்கும் தெரியாது. ஆனா அவர்தான் அந்த விபத்து ஏற்பட போற கம்பெனிக்கு பல விதத்துல உதவறவரா இருப்பார்”

“சரி திரும்ப வர சொல்லி கட்டளை வந்ததுன்னு சொன்னியே? அது எப்படி வரும்”

“டைம் கேப்சியுள்னு ஒரு விசயம் இருக்கு. என்னோட காலத்துல எத்தனை வருடம் ஆனாலும் மட்காத 20 பொருள் இருக்கு. பிளாஸ்டிக், தெர்மோகோல், சூயிங்கம்னு. அந்த மாதிரி பொருட்களால செஞ்ச கேப்சியுள் மாதிரி பெட்டில எங்களுக்கான கட்டளைகளை சங்கேத மொழிகள்ல வச்சு குறிப்பிட்ட இடத்துல புதைச்சுடுவாங்க”

“ஏன் அப்படி?”

“எப்படி சொல்றது? இங்கே அரசாங்கத்துல பாதுகாக்கப்படற புராதான கோவில்கள் தான் நான் சொன்ன குறிப்பிட்ட இடங்கள். அங்கேதான் ஒவ்வொருத்துருக்கான டைம் கேப்சியுள் இருக்கும்”

“ஏன் ஒருத்தரை அனுப்பி சொல்லலாமே?”

“அது சாத்தியமில்லை. எங்களுக்கான திட்டம் எதுன்னு சொல்லி அனுப்புன பிறகு நாங்க முழுமையா சுதந்திரமா செயல்படுவோம். எப்போ எங்கே இருப்போம்னு உறுதியா சொல்ல முடியாது. எதிரி நாட்ல இருக்க அண்டர்கவர் உளவாளிங்க மாதிரிதான். அதே மாதிரி காலப்பயணத்துக்குனு தயாரானவங்களை இந்த மாதிரி சாதாரண தகவல் சொல்ல அனுப்ப மாட்டாங்க. குறிப்பிட்ட கால இடைவெளிக்கு போய் டைம் கேப்சியுளை புதைக்கற வேலை செய்ய ஒரு டீம் இருக்கு”

“எனக்கு உங்க சிஸ்டமே புரியலை. சரி எதுக்காக பேரிடரை நிறுத்தாம திரும்ப வர சொல்லிட்டாங்க?”

“டைம் பேரடாக்ஸ்”

“புரியலை”

“இதை நிறுத்துனா இதை விட மோசமான விசயங்கள் ஏற்படற சூழ்நிலை வரும் பொழுது இதை வாபஸ் வாங்கிடுவாங்க”

“அதெப்படி தெரியும் இதை விட மோசமாகும்னு?”

“இப்போ மாற்றப்படற இடத்துல இருந்து தொடர்ந்து போகற காலத்துல வாழ்ந்தவங்களுக்கு தெரியும். அவங்க டைம் கேப்சியுள் மூலமா இதை தடுப்பாங்க”

“எனக்கு இப்ப நிறைய கேள்வி வருது”

“வேண்டாம் சூர்யா, இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காத. அது கால நீரோட்டத்தை மாசாக்கற செயல்”

“சரி நான் என்ன செய்யனும்ங்கற?”

“நான் திரும்ப என் காலத்துக்கு போகனும். அதுக்கு உன்னோட உதவி வேணும்”

சூர்யாவிற்கு அவள் நிலைமை நன்றாக புரிந்தது. அவளுக்கு காதலெல்லாம் இல்லை. தன் உதவி தேவைப்பட்டு இருப்பதால் தன்னருகே இருக்கிறாள். இல்லையென்றால் அவளை பொறுத்த வரை 100 வயது கிழவனான, ஒரு நூற்றாண்டுக்கு முந்தையவனான தன்னிடம் எதற்கு இழையப் போகிறாள்? என்னவோ, அவள் மீது தன்னுள் வந்த ஈர்ப்பினை எதற்கு வீணாக்க வேண்டும், அவளுக்கு உதவுவது வீணாக போவதில்லை. எப்படியும் தன் ஆராய்ச்சிக்கும் நல்லதுதான் என முடிவெடுத்தான்.

அவளிடம் இருந்த காலக்கருவியினை ஆராய்ந்ததன் மூலம் அவனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. அதே முறையில் தயாரிக்க தேவையான உபகரணங்கள் இன்னும் தயாரிக்கப்படாமல் இருப்பதால் வேறு முறையில் காலக்கருவியை தயாரிக்க முற்பட்டான். அதுவும் எளிமையானதாக இல்லை. இரு வருடத்திற்கு மேல் இழுத்து விட்டது. இடைப்பட்ட காலத்தில் இருவரும் நன்கு நெருங்கி இருந்தார்கள்.

காதலித்த பெண் தன் காதலை ஏற்காத பட்சத்திலும் அவளிடம் தோழமையாக இருக்க பழகினால் போதும். அதை விட அந்த பெண்ணை ஈர்க்க தனியாக ஏதும் செய்ய தேவையில்லை. செண்பாவிற்கும் சூர்யாவை பிடித்திருந்தது. அவன் அறிவிற்கு இந்த நூற்றாண்டு அவனுக்கான காலமல்ல என்றும் தன்னுடன் தன் காலகட்டத்திற்கு வந்துவிடும்படியும் அவ்வபோது அழைப்பாள். பதிலுக்கு அவனும் அவளை இங்கேயே தங்கி விடும்படியும் சொல்வான். ஆனால் இருவருக்குமே தத்தம் காலகட்டத்தை பிரிய மனமில்லை. சூர்யா அவள் காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தால் கூட அவளுடன் கிளம்பி இருப்பான். அது பற்றி ஏதும் சொல்லாமல் வெறுமனே நட்பாக அழைத்தால் எப்படி செல்வது என்று சூர்யாவிற்கு தயக்கம்.

ஒருவழியாக கருவி தயாரானபின், ஒருநாள் இரவு நேரத்தில் அதனுள் சென்று தன் காலத்திற்கு செல்வதற்கு முன்பு செண்பா, சூர்யாவை கட்டியணைத்து நன்றிக் கூறினாள். அவள் விட்டு விலகி செல்லும் பொழுது அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டு “என் கூடவே இருந்துடேன்” என்றான். அவளுக்கும் அழுகை வந்தது. மீண்டும் ஒருமுறை அணைத்து விட்டு அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டாள்.

ஏற்கனவே பரிசோதித்த கருவிதான். நிச்சயம் செண்பா தன் காலத்திற்கு சென்று இருப்பாள். பேசாமல் தானும் கிளம்பி அவளுடன் சென்று இருக்கலாம் என்று அவள் சென்ற பின்புதான் சூர்யாவிற்கு தோன்றியது. போய் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். மீண்டும் ஒரு காலக்கருவி செய்து செண்பா சென்ற நேரத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக செல்வது என்று. அவள் இல்லாத காலத்தில் எனக்கென்ன வாழ்வு என்ற உறுதியுடன் படுத்தான்.

காலை 6 மணிக்கெல்லாம் அழைப்பு மணியை யாரோ விடாமல் அழுத்தி அவன் தூக்கத்தை கெடுத்தார்கள். எழுந்து சென்று பார்த்தால் செண்பா. இவனை பார்த்ததும் கட்டிக் கொண்டாள்.

“நீ இல்லாம என்னால அங்கே இருக்க முடியலை சூர்யா. 6 மாசம் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”

“6 மாசமா? நைட்டுதானே போன?”

“கிளம்புனது நேத்து நைட்டுதான். அதுக்கு அப்புறம் என் காலத்துல 6 மாசம் இருந்தேன். உன்னை என்னால மறக்க முடியலை. அதான் திரும்ப வந்துட்டேன்”

“என்னாலயும் இருக்க முடியலை. புதுசா ஒருக் காலக்கருவி உருவாக்கி உன்னை தேடி வரலாம்னுட்டு இருந்தேன்”

“ஐ லவ் யூ சூர்யா”

“ஐ லவ் யூ செண்பா”

“சூர்யா, நான் வந்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு”

“என்ன?”

“எங்களை முன்ன அனுப்புனாங்களே, அது வெறும் பேரிடருக்காக மட்டும் இல்லை”

“அப்புறம்?”

“1984ல ஏதோ ஒரு பெரிய தலைவரை கொல்றதுக்கான திட்டம் நடக்குது. அந்த வருசத்துல நடக்கற பேரிடரை காட்டி அனுமதி வாங்கி 10 பேரை அனுப்பிருக்காங்க. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்துக்கு வந்தோம். எங்கள்ல யாரோ ஒருத்தர்தான் அந்த கொலையை செய்ய போறாங்க”

“அப்படியா, அதை எப்படி தடுக்கறது?”

“வேண்டாம். நாம தடுக்க வேண்டாம். அதெல்லாம் அரசியல் பிரச்சனை. நாம ஏதாவது செய்யப்போய் நம்ம உயிருக்கு பிரச்சனை வந்துரும்”

“என்ன பண்ணலாம்ங்கற?”

“நாம இந்த பிரச்சனை ஏதும் இல்லாத காலத்துக்கு போய் வாழ்வோம். யாரும் வேண்டாம் நமக்கு. நம்ம 2 பேர் போதும். உனக்கு நீ. எனக்கு நான்”

உற்சாகமாக ஏற்றுக் கொண்டான். இதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டும்? இருவரும் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழகத்தினை நோக்கி பயணித்தனர். அங்கே தேசாந்திரிகளை போல வேடமணிந்து ஒரு நாட்டில் தங்கள் வாழ்க்கையை துவங்கினார்கள். அரசிடம் இருந்து கோவில் நிலத்தினை குத்தகை எடுத்து விவசாயம் செய்து தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். வாழ்க்கை சிறப்பாக போய் கொண்டிருந்தது. இரண்டு குழந்தைகளும் வந்து வாழ்க்கை மேலும் அழகானது.

குடும்பத்துடன் வருடத்திற்கு ஒருமுறை திருத்தலங்களுக்கு செல்வது வழக்கமானது. அப்படி சென்ற பொழுது ஓர் இரவு கோவில் மண்டபத்திலேயே தங்கினார்கள். அனைவரும் உறங்கிய பின் யாருமறியாமல் எழுந்த செண்பா ஒர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று குழி தோண்டி தன் வசம் இருந்த மாத்திரை போன்ற குமிழை புதைத்தாள். அதனுள் சங்கேத மொழியில் இப்படி எழுதி இருந்தது.

“வருடம் கிபி 8.
நம் திட்டப்படி காலக்கருவி உருவாவதை தடுக்க அதனை உருவாக்குபவர்கள் யாரென கண்டுபிடித்து பலமுறை கொலை செய்தோம். ஆனால் நம்மால் காலக்கருவியில் உருவாக்கத்தை தடுக்க முடியவில்லை. இதோ என்னுடைய 18 வது முயற்சியாக அதனை உருவாக்கும் திறன் படைத்தவனை கொல்லாமல், கடந்தகாலத்தில் சிறை வைக்கிறேன். வழக்கம் போல காதலை சொல்லித்தான் நம்ப வைத்தேன். எடுத்ததும் முழுமையாக என்னை நம்ப மாட்டான் என்பதற்காக நிறைய பொய்கள் சொல்லி ஏமாற்றியுள்ளேன். என்னை மீறி இவன் அவனது காலத்திற்கு மீண்டும் போக மாட்டான். அதை பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு. இவனை தவிர்த்து வேறு யாரேனும் காலக்கருவியினை உருவாக்கினால் மீதமிருக்கும் நம் நண்பர்களை கொண்டு அதனை முறியடிக்க வேண்டியது உன் பொறுப்பு. என்ன ஆனாலும் நீ பயணத்தில் ஈடுபட வேண்டாம். வழமை போல் அரசுக்கு, அதிகாரத்திற்கு எதிராக படைகளில் கலந்திருக்கும் ஸ்லிப்பர் செல்களிலிருக்கும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து காலப்பயணத்தில் ஈடுபடுத்து. என்ன விலை கொடுத்தாவது காலப்பயணங்கள் சாத்தியமில்லை என்ற நிலையை உலகம் மீறாமல் பார்த்துக் கொள். இல்லையென்றால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது ஆயுதமாக மாறும். அதன் விளைவுகளால் நாம் இழந்தவைகள் போதும். அமெரிக்காவிற்கு எதிராக சில தீவிரவாதிகள் காலப்பயணம் செய்து கிறிஸ்துவ மதம் தோன்றாமல் இருக்க, சிலுவையில் அறைவதற்கு முன்பே இயேசு கிறிஸ்துவை  கொல்லக்கூடிய முயற்சிகளும் நடக்கும். ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு முதலில் இயற்கை வளங்களை சுரண்டினார்கள். காலக்கருவியினால் காலத்தையும் வளைக்க துவங்கி விட்டார்கள். உன்னை நம்பித்தான் இந்த காலத்தில் இவனுக்கு காவலாய் இருக்கிறேன். இவன் இயற்கையாக மரணமடைந்ததும் நம் காலத்தில் உன்னை சந்திக்கிறேன். – இப்படிக்கு ஸாரா”