ஊடுதல் காமத்திற்கு இன்பம் – குறள்கதை

“ஆமா, கீதாகிட்டதான் பேசுனேன். அதுக்கு என்ன இப்ப?”

“என்ன சிரிச்சு சிரிச்சு பேசறிங்க?”

“ஏன் நான் சிரிச்சு பேசுனா உனக்கென்ன?”

“என் பிரண்ட்கிட்ட உங்களுக்கென்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?”

“ஹேய் இதுல என்ன இருக்கு? ஜாலியா பேசுனா, சிரிச்சேன்”

“அவ பேசுவா, அவளுக்கு கல்யாணம் ஆகலை. உங்களுக்கு ஆகிருச்சு இல்லை. அப்புறம்?”

“இது என்னடி வம்பா போச்சு? கல்யாணம் ஆனா ஆம்பளைங்க யாரும் சிரிச்சு பேசக் கூடாதா?”

“பேசலாம், கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கூட இப்படி வழிஞ்சு பேசக் கூடாது”

“கல்யாணம் ஆன பொண்ணுங்க கூட பேசலாமா?”

“அய்யோ பொறுக்கி பொறுக்கி. உன்னையல்லாம் ஒன்னும் பண்ண முடியாது”

“ஹேய் யாரை பொறுக்கிங்கற? நான் என்ன பொறுக்கித்தனம் செஞ்சேன் அப்படி?”

“எப்ப பாரு பொண்ணுங்களை பத்தி பேசறது பொறுக்கித்தனம் இல்லையா?”

“பொண்ணுங்க கூட பேசறது பொறுக்கித்தனம் கிடையாது. பொண்ணுங்களை தொந்தரவு பன்றது தான் பொறுக்கித்தனம்”

“ஆமா, என்னை இப்ப தொந்தரவு பண்ணிங்கள்ல”

“என்ன செஞ்சேன்?”

“என் பிரண்ட்கிட்ட பேசி வெறுப்பேத்தினங்கள்ல, அதுக்கு பொறுக்கித்தனம் இல்லையா?”

“இங்கே பாரு இன்னொரு தடவை இந்த வார்த்தைய சொல்லாத, எனக்கு பிடிக்கலை”

“ஓ அப்படியா அப்ப சொல்லுவேன் பொறுக்கி”

“இன்னொரு தடவை சொன்ன…”

“சொன்னா என்ன செய்வ பொறுக்கி?”

உண்மையிலேயே சிவாவிற்கு கோபம் வந்து விட்டது. அது முகம் சிவக்கையில் நன்றாகவே தெரிந்தது. சடாரென அருகில் கைக்கு சிக்கிய தினசரி நாளிதழை எடுத்து விசிறியடித்தான். அவனுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் எதையாவது எடுத்து விசிறியடிப்பான். ஆனால் அதிகம் கோபம் வராது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் பெரிய பெரிய தவறுகளைக் கூட மன்னித்து விடுவான். இது போன்ற சிறு விஷயத்திற்கு வெடித்து விடுவான்.

அவன் இந்த வார்த்தைக்கு இப்படி கோபமடைவான் என சவிதா எதிர்பார்க்கவில்லை. அவள் முகம் சுருங்கி விட்டது.

“சிவா சாரிம்மா”

“…..”

“பிளிஸ்டா மன்னிச்சுக்கோ, இனி எப்பவும் அந்த வார்த்தையை சொல்ல மாட்டேன்”

உண்மையில் சிவாவிற்கு கோபம் வந்த கணத்தில் இறங்கி விட்டது. இப்போது இவள் பணியவும் உடனடியாக சமாதானமாக பேச மனம் வரவில்லை. எதுவும் பேசாமல் இருந்தான். ஏதோ கத்தாமல் இருக்கிறான் என உள்ளுக்குள் மகிழ்ந்த சவிதா “சரி வா சாப்பிடலாம்” என்றாள்.

விடுவிடுவென்று பொய் கோபத்துடன் சாப்பிடாமலேயே பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டான். பின்னாலேயே “சிவா சிவா” என அழைத்துக் கொண்டு வந்த சவிதாவை அவன் கண்டு கொள்ளவில்லை. படிக்கட்டு வரை வந்தால் திரும்பி செல்லலாம் என நினைத்தான். ஆனால் அவள் வாசம் தாண்டி வரவில்லை. இப்போது மீண்டும் கோபம் வர வேகமாக கிளம்பி விட்டான்.

வெளியில் எங்கும் சாப்பிட மனம் வரவில்லை. போன் செய்வாள் என எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. இரண்டாவது முறை அழைக்கையில் எடுக்கலாம் என நினைத்தான். ஆனால் இரண்டாம் முறை வரவில்லை. திரும்ப அழைத்து பேச ஈகோ விடவில்லை. அரை மணி நேரத்தில் மனம் முழுமையாக சமாதனமாகி இருந்தது. போன் எடுத்து சவிதாவிற்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. திரும்ப அவள் அழைக்கையில் எடுத்தான். எடுத்தவன் பேசவில்லை.

“….”

“சாப்பிட்டியா சிவா?”

“ம்”

“….”

“நீ சாப்பிட்டியா?”

“இல்லை”

“ஏன்? போய் சாப்பிடு”

“முடியாது”

“ஏன் முடியாது?”

“முடியாதுன்னா முடியாது”

“சரி சாப்பிடாத”

“சரி”

“என்ன சரி ஒழுங்கா சாப்பிடு”

“நீ நேர்ல வந்து சொல்லு சாப்பிடறேன்”

“நான் ஈவ்னிங் தான் வர முடியும்”

“நீ வர வரைக்கும் செத்துட மாட்டேன், பொறுமையா வா”

“விளையாடத லூசு. நீ முதல்ல சாப்பிடு”

“முடியாது” என்று போனை வைத்து விட்டாள். எப்போதும் இப்படித்தான். ஏதாவது ஒன்றிற்கு முதலில் சிவா கோபித்துக் கொள்வான். அவன் சமாதானம் ஆகையில் சவிதா உச்சியில் ஏறிக்கொண்டு அடம் பிடிப்பாள். ஒரு மாதிரி ஒருவரை ஒருவர் குழந்தையை சமாதானப்படுத்துவது போல் கொஞ்சி சமாதானப்படுத்தியாக வேண்டும். சில விஷயங்களை தள்ளிப் போட்டால் அதற்கான விளைவு இன்னும் பெரிதாகும் என்பது தெரிந்ததால் என்ன செய்வது என யோசித்தான். வயிற்று வலி என பொய் சொல்லி விடுப்பு எழுதிக் கொடுத்தான்.

பேசாமல் அவள் கூப்பிடும் போதே திரும்பி சென்று சாப்பிட்டுருக்கலாம் என நொந்துக் கொண்டான். மனைவியை சமாதானப் படுத்த அவளுக்கு பிடித்த சாக்லெட்டும் ஐஸ்கிரிமும் வாங்கி சென்றான். அது என்னவோ சவிதாவிற்கு ஐஸ்கிரிம் வாங்கி கொடுத்தாள் போதும். பெரிய தவறையும் மன்னித்து விடுவாள். இது ஒன்னும் பெரிய சண்டை இல்லைதான். ஆனால் என்னவோ வாங்கித் தர வேண்டும் என விரும்பினான்.

வீட்டிற்கு சென்று பார்த்தால் படுக்கையில் படுத்துக் கொண்டு இருந்தாள். அருகே போய் அமர்ந்தான்.

“சவிம்மா”

“ம்”

“எழு”

“எதுக்கு?”

“நீ சாப்பிட வேண்டாமா?”

“நான் சாப்பிட்டனே”

“அடிப்பாவி அப்புறம் எதுக்கு சாப்பிடலைன்னு சொல்லி வர சொன்ன”

“நீ சாப்பிடத்தான்”

“நானா?”

“ஆமா, நீ என்னைக்கு தனியா போய் ஹோட்டல்ல சாப்பிட்டுருக்க, கஞ்சனாச்சே நீ”

“ஹேய் நான் கஞ்சனா? இங்கே பாரு. கஞ்சன் தான் இப்படி வாங்கிட்டு வருவானா?”

“ஹை ஐஸ்கிரிம்….!”

“உனக்கு கிடையாது”

“ஏன்?”

“நீதான் என்னை கஞ்சன்னு சொல்றியே?”

“ஹேய் அது உன் விஷயத்துல. உண்மையை சொல்லு நீ இன்னும் சாப்பிடலைதானே?”

“ம்”

“அப்படியே குத்துனனா? உனக்கென்ன கோபம் அப்படி சாப்பிடாம ஓடற?”

“அதென்னமோ தெரியலைடா. உன்கிட்ட தானே உரிமையா கோபப்பட முடியும்?”

“கோபப்படு, கோபப்பட்டு நின்னு சண்டை போடு. ஏன் ஓடற?” பேசிக் கொண்டே அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

“இருந்து உன்னை எதும் திட்டிட்டனா? அப்புறம் உட்கார்ந்து அழுவன்னுதான்”

“நீ திட்டு மாமா. இப்படி போகாத. நீ சாப்பிடலைன்னா எனக்கு இங்கே எப்படி இருக்கும்?”

“சரி, இனி நின்னு சண்டை போட்டுட்டு பொறுமையா சாப்பிட்டு போறேன்” மடியில் கிடந்தவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

“நம்மளை பார்த்தா 1 மணி நேரம் முந்தி சண்டை போட்டவங்க மாதிரியா இருக்கு”

“ஏன் வேற எப்படி இருக்கு?”

“வேற என்னவோ செஞ்சவங்க மாதிரி இருக்கு”

“அப்படியா?”

“ஆமா”

“எனக்கு அப்படி தெரியலையே”

“அப்புறம்?”

“செஞ்சவங்க மாதிரி தெரியலை, செய்ய போறவங்க மாதிரி தெரியுது”

“ஹேய், மாமா நீ இன்னும் சாப்பிடலை”

“ஆமா பசிக்குது”

“ஹேய் என்ன டபுள் மீனிங் ஆ?”

“இல்லையே”

“நடிக்காதடா. ஏன் மாமா இவ்வளவு ஆசையா இருக்க இல்லை, அப்புறம் ஏன் ஆ ஊ ன்னா சண்டை போடற?”

“ஹேய் அது இல்லாம எப்படி? கல்யாணமே ஆனாலும் காதலர்களுக்குள்ள அது ரொம்ப முக்கியம். அதான் சந்தோஷம்”

“சண்டை போட்டுக்கறதுல என்ன சந்தோசம்?”

“சண்டை போடும் போது நல்லாருக்காதுதான். சமாதான படுத்தும் போது?”

“அது நல்லாருக்கும்”

“அதையும் சேர்த்து தான். சண்டை போட்டு சமாதானமாகறதுதான் ஊடல். இருக்கறதுலயே அதுதான் காதல்ல ரொம்ப இன்பம் தரக்கூடியதாம்”

“அப்படியா?”

“ஆமா. ஆனா அதை விட இன்பம் தரது இன்னொன்னு இருக்கு”

“என்ன அது?”

“அது….”

“ஹேய் என்ன பன்ற?”

“சொல்றத விட செஞ்சு காட்டலாம்னுதான். கதவு சாத்திதானே இருக்கு?”

அதிகாரம்:ஊடல் உவகை குறள் எண்:1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின்

உரை:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.