காதலியிடம் தோற்றல் இன்பம் – குறள்கதை

“பேசாதிங்க, இதே நான் செஞ்சுருந்தா என்ன பேச்சு பேசி இருப்பிங்க?”

“….”

“ஒருநாள் விடிஞ்சு கொஞ்ச நேரம் ஸீரோ வாட்ஸ் பல்ப ஆஃப் பண்ணாம விட்டதுக்கு என்ன குதிகுதிச்சிங்க?”

“…..”

“கேட்கறேன் இல்லை, பதில் சொல்லுங்க”

“அது அப்படி செஞ்சாதான் அடுத்த முறை மறக்காம இருப்பன்னு…”

“ஓஹோ, அப்ப நீங்க பண்ணது எப்படி? லைட்டா இருந்தாக் கூட பராவாயில்லை, ஃபேன், ஒருநாள் முழுக்க ஓடி இருக்கு”

“அது நாம வீட்ல இருந்திருந்தாலும் ஓடிட்டுதானே இருந்துருக்கும், அப்படி நினைச்சு விடேன்”

“வீட்ல இருந்தா 24 மணி நேரமும் ஓடிட்டா இருந்துருக்கும்? தூங்கறப்ப 8 மணி நேரம் ஓடும், அதுக்கு அப்புறம் எதுக்கு ஓடுது?”

“…..”

“கரண்ட் பில் கூட ஆனாக் கூட பரவாயில்லை. ஓடி ஓடி காயில் போயிருந்தா?”

“போனா நான்தானே போய் மாத்திட்டு வரேன், விடேன்”

“அப்படிலாம் விட முடியாது, விட்டா உங்களுக்கு அடுத்த தடவை எப்படி பொறுப்பு வரும்?”

“இப்படி சொல்லிட்டு கண்டிச்சா பொறுப்பு வராது சிரிப்புதான் வரும், யாராவது பொறுப்பு வரதுக்காகத்தான் திட்டறேன்னு முன்னாடியே சொல்லிட்டு திட்டுவாங்களா? அறிவுக் கொழுந்தே”

“ஆமா, எனக்கு உங்க அளவுக்கு விவரம் பத்தாது, எப்படி திட்டனும் எதுக்கு திட்டனும்னுலாம் கத்துக்காம இருந்தது என் தப்புதான், ஆனா எனக்கும் கோபம் வரும். நீங்க செஞ்சதுக்கு என் கோபம் போற வரைக்கும் உங்க கூட பேச போறதில்லை”

“நிஜமா பேசமாட்டியா?”

“பேச மாட்டேன்”

“இப்ப பேசிட்டியே?”

முறைத்தாள். பேசவில்லை. எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. இந்த நேரத்தில் சிரித்தாள் அவ்வளவுதான் கோபம் அதிகமாகி அழ துவங்கி விடுவாள். சமாதானப்படுத்துவது மிகவும் சிரமம். இதில் என் தவறு எதுவும் இல்லை. ஊருக்கு கிளம்புகையில் எல்லா அறையிலும் லைட்,ஃபேன் அணைத்திருக்கிறதா என பார்க்க நான்தான் சென்றேன். படுக்கை அறையில் மட்டும் சரியாக பார்க்காமல் வந்துவிட்டேன். ஃபேன் ஓடிக் கொண்டே இருந்து இருக்கிறது. அதை பார்க்காமல் அணைக்காமல் வந்தது வேண்டுமென்றால் நானாக இருக்கலாம். ஆனால் போட்டு விட்டு வந்தது அவள்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் வழக்கமாக அறையை விட்டு வெளியேறுகையில் அனைத்தையும் அணைக்கும் பழக்கம் கொண்டவன்.

அதை சொல்லி வாதாடி இருந்தால் பிரச்சனை இதோடு முடியாது. எங்கெங்கோ போகும். என்ன செய்ய? சில நேரங்களில் இல்லை இல்லை பல நேரங்களில் மனைவிகளின் குற்றச்சாட்டுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். இதில் வெற்றி- தோல்வி எல்லாம் பார்க்க கூடாது. குழந்தைகளுடன் விளையாடுகையில் ஜெயிக்க வேண்டும் என்றா விளையாடுகிறோம்? விளையாடுவதே இன்பம் தானே? அப்படித்தான் மனைவியுடனான வாதங்களும். பல நேரங்களில் குழந்தைத்தனமாகத்தான் இருக்கும். இரசிப்பதோடு விட்டுவிட வேண்டும்.

அதற்காக இப்போது பேசமாட்டேன் என்று போனவளை அப்படியே விட முடியுமா? விட்டால் அவ்வளவுதான். “எப்படா பேசாம இருப்பான்னு காத்துட்டு இருந்திங்களா?”ன்னு வேறு விதமாக சண்டை துவங்கும். சமையலறையில் அவள் வேலை செய்கையில் அவள் பார்வையில் படும்படி போய் நின்றேன். வேலையை நிறுத்தி விட்டு “என்ன?” என புருவத்தை உயர்த்திக் கேட்டாள். “ஒன்னுமில்லை, சும்மா” என்று உடல்மொழியில் சொன்னேன். வேலைகளை தொடர்ந்தாள். அங்கு இருக்கும் பீங்கான் ஜாடி ஒன்றினை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பிடிக்க துவங்கினேன்.

கையால் மேடையை தட்டி கோபத்தை காட்டினாள். இம்முறை “என்ன?” என்று நான் புருவத்தை உயர்த்தினேன். அவளால் ஒன்றுமில்லை என்று சொல்ல முடியவில்லை. முறைத்தாள், முனகினாள். சென்று வாஷ்பேஷனில் கைகழுவி விட்டு நீர் சொட்டும் படி வேண்டுமென்றே சரியாக மூடாமல் வந்தேன். கைத்தட்டி அழைத்தாள். திரும்பி மீண்டும் புருவத்தை உயர்த்தினேன். வாஷ்பேஷினை கை காட்டினாள்.

“என்ன?”

மீண்டும் கைகாட்டினாள்.

“வாஷ்பேஷனுக்கு என்ன?”

ஒழுங்காக மூடச்சொல்லி சைகை செய்தாள். நான் வேண்டுமென்றே

“எது பாட்டில் மூடியை திறக்கனுமா? எந்த பாட்டில்? சரக்கா?”

வேகமாக வந்து நெஞ்சிலேயே வலிக்காமல் குத்தினாள். கையை பிடித்து சதைப்பகுதியாய் பார்த்து கடித்தேன். “ஆ” என கத்தவும்

“வலிக்குதா?” என்றேன்.

“வலிக்காதா? எருமை பன்னி”

“அய்யய்யோ, பேசிட்ட, போச்சு போச்சு” என்றேன். என் கன்னங்களை கடிக்க துவங்கி இருந்தாள்.

அதிகாரம்: ஊடல் உவகை குறள் எண்: 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து

உரை:
தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,