ஊடல் இல்லையேல் கூடல் இல்லை – குறள்கதை

“ஏன்டா கல்யாணம் பன்னோம்னு இருக்கு மீனா”

“டேய் கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை, அதுக்குள்ள என்னடா புலம்ப ஆரம்பிச்சுட்ட?”

“எப்படி நீ இத்தனை வருசம் கல்யாணம் பண்ணிட்டு இருக்க?”

சிரிப்புதான் வந்தது மீனாட்சிக்கு. தன்னை விட ஏழு வயது இளையவன், செல்லத்தம்பி. சில பிள்ளைகள் சிறுவயதில் சூட்டிகையாக இருப்பது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சற்று பெரியவனாக நன்கு படிப்பது பெருமையாக இருக்கும். மற்ற பிள்ளைகள் பார்க்காத கோணத்தில் விஷயங்களை அணுகுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கும். ஆனால் எப்படி வளர்ந்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பெண்களை புரிந்துக் கொள்ள முடியாமல் தவிப்பதை பார்க்கையில் வேடிக்கையாக இருக்கும்.

“என்னடா ஹரி பிரச்சனை?”

“எப்படி சொல்றதுன்னு தெரியலை மீனா, எனக்கு ஏன்கிட்ட பிரச்சனையா, அவகிட்ட பிரச்சனையான்னே தெரியலை, ஆனா ஒரு மாதிரி எரிச்சலாகிட்டே இருக்கு”

“நிறைய சண்டை வருதா?”

“ஆமா, நல்லாதான் போய்கிட்டு இருக்கும், ஒரு செகண்ட்ல சீன் மாறி கத்திகிட்டு இருப்போம், நான் இவ்ளோ சண்டை போடுவன்னு நினைச்சு கூட பார்த்தது இல்லை”

“நீதான் நல்லா பாயிண்ட் பிடிச்சு பேசுவியே, பேசி சமாளிச்சுட வேண்டியதுதானே?”

“பேசி மடக்குனா எதுவும் பேசாம முகத்தை தூக்கி வச்சுக்கறா, அது இன்னும் கடுப்பாகுது”

“டேய் விடுடா, கல்யாண வாழ்க்கைன்னா அப்படித்தான், இப்போ நம்ம ரெண்டு பேர் எதுக்குமே சண்டை போட்டுகிட்டது இல்லையா?”

“நீ அக்கா, உரிமையா திட்டுவ, அது, அவளை அப்படி எடுத்துக்கு முடியுமா?”

“டேய் இங்க பாரு, பொறுமையா சொல்லு, உனக்கு அவளை பிடிச்சுருக்கா? இல்லையா?”

“பிடிக்காமையா கல்யாணம் பன்னேன், அதுவும் ஆரம்பத்துல நல்லாதான் போச்சு, இப்பதான் அடிக்கடி சண்டை போடற மாதிரி தோணுது”

“அதுலாம் இயல்புடா, தாம்பத்யம்னா என்னன்னு நினைக்கற? எப்பப்பாரு கட்டிபிடிச்சு படுத்து கிடக்கறதா? உரிமையா சண்டை போட்டுக்கறதும் தாம்பத்யம் தான், ஒன்னு பண்ணு, நீ அவளை கொண்டு போய் அவங்கம்மா வீட்ல விட்டுடு”

“ஹேய் என்ன சொல்ற”

“பதறாதடா, அவங்க வீட்ல நான் பேசறேன், அவங்களே தீபாக்கு போன் பண்ணி கூப்டுவாங்க, நீ எதுவும் தெரியாதவனாட்டம் கொண்டு போய் விட்டுட்டு வா”

“வந்து”

“வந்து உனக்கு தோணுறதை செய், எப்ப கூட்டி வரனும்னு தோணுதோ அப்ப போய் கூட்டி வா”

“எதுக்கு இது?”

“அது சொன்னா உனக்கு புரியாது, எனக்காக செய்”

அக்கா சொன்னால் மறுபேச்சே கிடையாது என்றெல்லாம் வளரவில்லை, ஏதாவது சொன்னால் ஏன் எதற்கு என வாக்குவாதம் ஆரம்பித்து முட்டி மோதி யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுப்பதுதான் வழக்கம். அதெல்லாம் அக்கா திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு அவள் இல்லாத வீட்டில் உண்டான வெறுமை அக்காவின் அருமையை உணர்த்தி இருந்தது.

அக்கா திருமணத்தின் மூலம் அமைந்த சொந்தத்தில் இருந்துதான் தீபா கிடைத்தாள். ஒருவகையில் இது அக்கா நடத்தி வைத்த திருமணம் தான். ஹரிக்கும் தீபாவை பிடித்து இருந்தது. கருப்பான களையான முகம், குழந்தைத்தனம் என அனைத்தும் ரசிக்கும் படிதான் இருந்தது. தனிப்பட்டு எந்தக் குறையும் சொல்ல முடியாது. நன்றாக சமைப்பாள். திருமணத்திற்கு முன்பு கூட காலை இட்லி அல்லது தோசைதான். தீபா வந்த பின் கட்டாயம் ஏதேனும் இரண்டு வகை இருக்கும். உணவில் இருந்து உடை வரை பல விஷயத்தில் மெருகேற்றி இருந்தாள்.

அதிலும் திருமணமான புதிதில் “ஏன் இத்தனை நாள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தோம்?” என்றெல்லாம் தன்னை நொந்துக் கொண்ட ஹரிக்கு, இப்போதெல்லாம் “ஏன் திருமணம் செய்து கொண்டோம்?” என்று தோன்றுகிறது. எதற்கு சண்டை வருகிறது என்றெல்லாம் கணக்கு கிடையாது, அப்படி ஏதாவது இருந்தால் கூட மாற்றிக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்து எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான்.

“டீ வைக்கட்டுமா மாமா”

“ம்”

டீ குடித்துக் கொண்டிருக்கையில்

“மாமா, என்னை எங்க வீட்டுக்கு கொண்டு போய் விடறிங்களா?”

ஏன் என்பதனை கண்களால் கேட்டான்.

“எங்க அம்மா பேசுனாங்க, என்னை பார்க்கனும் போல இருக்காம், ஒரு 2 நாள் வந்து இருந்துட்டு வர சொன்னாங்க”

“என்னால லீவ் போட முடியாது”

“நீங்க விட்டுட்டு வந்துருங்க, போதும்”

அப்பாடா, ஒரு வழியாக அக்கா சொன்னதை செய்துவிட்டாள் என வந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனைவியை கூட்டிச்சென்று அவள் அம்மா வீட்டில் விட்டு வந்தான். வீட்டில் தனிமை புது உற்சாகத்தினை தந்தது. டீவி போட்டு சத்தமாக பாடல் கேட்டான். சற்று நேரத்தில் பிடித்த ஆங்கிலப் படத்தை தொந்தரவு இல்லாமல் பார்த்தான். நண்பர்களுடன் போனில் அரட்டை அடித்தான். அவ்வளவுதான். அதற்கு மேல் என்ன செய்வது என்று யோசனை இல்லை.

இரவு அவனாக சமைத்து சாப்பிட்டு விட்டு வந்து படுத்தான். உண்மையில் தனிமையில் தூக்கம் வரவில்லை. சண்டை போட்டு பேசாமல் முதுகு காட்டி படுத்து இருந்தாலும் அவளது அருகாமை இருக்கும். இப்போது ஒருவாறு ஏகாந்தம் தாங்க இயலாததாக இருந்தது. எப்படியோ உறங்கினான். காலை நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது. மீண்டும் உறங்கலாம் என்றால் வெறுமையாக இருந்தது. உறக்கம் வரவில்லை. அந்நேரத்திற்கு டீவியிலும் உருப்படியாக ஏதும் இல்லை.

படுக்கையில் புரண்டு கொண்டிருந்து விட்டு, நேரமானதும் குளித்து தயாரானான். தீபா வேகத்தில் அவனால் காலை உணவினை தயாரிக்க இயலவில்லை. பேசாமல் வெளியில் எங்காவது சாப்பிட்டுருக்கலாம். உடல் ஒத்துக் கொள்ளாது. வீடு முழுக்க அமைதியாய் தெரிந்தது. வேலைக்கு சென்ற பின் பெரிதாக தெரிவிக்க வில்லை. மாலை வீட்டிற்கு வர விருப்பமே இல்லை. போய் என்ன செய்வது?

நண்பர்களுடன் சற்று நேரம் செலவிட்டான். முழுவதும் அவர்களுடன் இருக்க முடியாதே? ஒரு கட்டத்திற்கு பின் வீட்டிற்கு வந்துதான் ஆக வேண்டி இருந்தது. டீவி தான். வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. சற்று நேரம் இணையத்திலும் செலவிட்டான். இந்நேரம் தீபா இருந்திருந்தால் என மனம் யோசிக்க துவங்கியது. அந்த யோசனை வந்து அதிகமில்லை, 10 நிமிடத்தில் கிளம்பி விட்டான் மாமனார் வீட்டிற்கு.

ஒரு போன் செய்து விட்டு சென்று இருக்கலாம் என்பது சென்ற பின்தான் தோன்றியது. அவன் போனபின் தான் தீபாவும் வீட்டிற்கு வர கிளம்பி தயாராக இருந்தாள் என தெரிந்தது. இரவு உணவினை மாமனார் வீட்டில் சாப்பிட்டு விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். பேச கூச்சமே படவில்லை.

“சாரிடா, என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியலை, அதான் கூட்டி போலாம்னு சொல்லிக்காம வந்துட்டேன், நீ இன்னும் ஒரு நாள் இருந்துட்டு வரலாம்னு நினைச்சுருப்ப இல்லை, என்னாலதான் கெட்டு போச்சு”

“அப்படித்தான் நினைச்சேன், ஆனா என்னாலயும் முடியலை, அங்கே எனக்கு எந்த குறையும் இல்லை, உங்க நினைப்பாவே இருந்தது, சாப்பிட்டுருப்பிங்களா? என்ன பண்ணிகிட்டு இருப்பிங்கன்னு உங்களை பத்தியேதான் நினைச்சுட்டு இருந்தேன்”

“ரெண்டு பேராலயும் ஒருத்தரை பிரிஞ்சு ஒருத்தர் இருக்க முடியலை, ஆனா அடிக்கடி சண்டை போட்டுக்கறோமே”

“அது தடுக்க முடியாதுன்னு தோணுது”

“அப்படி இல்லைடா, சண்டை போட்டுகிட்டே இருந்தா, சமாதானமா போக யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து போய் பேசனும், அப்படி இருக்கும் போது ஒருத்தரே விட்டு கொடுத்துட்டு இருந்தா அது ரொம்ப நாள் நீடிக்காது, என்னோட பயமே அதான். இப்ப எனக்காக நீ விட்டு கொடுத்துட்டே இருந்தீனா உன்னை ஏறி மிதிக்கத்தான் தோணும், உனக்கும் அப்படித்தான் தோணும், அது நல்லதுக்கில்லை”

“என்ன பண்ணலாம்?”

“நான் சொல்றேன். ஒரு புக்ல படிச்சேன், கணவன்-மனைவி தினசரி கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்னு போட்டுருந்தான். எனக்கு 3தான் ஞாபகம் இருக்கு. அதை செய்வோமா?”

“அதை செஞ்சா சண்டையே வராதா?”

“வரும், ஆனா நீடிக்காது”

“என்னன்னு சொல்லுங்க?”

“முதல்ல என்ன சண்டைனாலும் 2 பேரும் ஒரு தலையனை,போர்வைக்குள்ளதான் படுக்கனும், வேணும்னா கொஞ்சம் பெருசா வச்சுக்கலாம். ரெண்டாவது ஏதாவது ஒரு டைம் வச்சுக்கனும், அந்நேரத்துக்கு கண்டிப்பா 2 பேரும் முத்தம் கொடுத்துக்கனும். அதுக்கு மேலயும் கொடுத்துக்கலாம், ஆனா கண்டிப்பா ஒரு தடவை கொடுக்கனும்.”

“மூனாவது”

“அது கொஞ்சம் கஷ்டம், கணவன் மனைவிய ஹால் டூ பெட் ரூம் கையில தூக்கிட்டு நடக்கனும்”

“ஹேய் இது நல்லாருக்கே”

“ஹேய் சும்மா இரும்மா, என் பலத்தை பத்திதான் உனக்கு தெரியும் இல்லை”

“அதெல்லாம் எனக்கு தெரியாது, ஜிம்முக்கு போய் உடம்பை வேணா ஏத்துங்க, நீங்க தினமும் என்னை தூக்கனும்”

“சரி, அதுக்கு கொஞ்ச நாள் டைம் கொடு”

“ஒகே 3 மாசம், மத்த ரெண்டும்?”

“அது நாம இன்னைக்கே ஆரம்பிச்சுக்கலாம்”

“முதல்ல எது?”

எதுவென்று பார்ப்பதற்கு முன்பு கதவை தாளிட்டுக் கொண்டார்கள். அந்த வார இறுதியில் தன் அக்காவை சந்தித்த பொழுது நடந்ததை மேலோட்டமாக கூறினான். ஆனாலும் அவனுக்கு சந்தேகம் தீரவில்லை. இப்படி மோதிக் கொண்டே இருப்பது எந்த வகையில் நல்லது என்றே புரியவில்லை. அதற்கு அவன் அக்கா விளக்கம் தந்தார்.

“லைஃப் ஆஃப் பை படம் பார்த்துருக்கியா?”

“ம்”

“அதுல அந்த புலி முதல்லயே செத்துருந்தா என்னாகி இருக்கும்?”

“அந்த பையன் பிரச்சனை இல்லாம தனியா கரைக்கு போய் இருப்பான்”

“இல்லை, யாருமில்லாத தனிமை, அவனை தற்கொலைக்கு தூண்டிருக்கும். வாழனும்ங்கற ஆசையை ஆழமா மனசுக்குள்ள தூண்டுனதே அந்த புலிதான். அதுக்கு என்ன செய்யனும், புலிகிட்ட இருந்து எப்படி தப்பிக்கனும்ங்கறதை யோசிச்சுட்டே இருக்கவும் தான் அவனால அந்த பயணத்தை கடக்க முடிஞ்சது. வாழ்க்கைங்கற பயணத்துக்கும் இப்படி ஒரு துணை தேவை. உன்னை உயிர்ப்போட வச்சுக்க உன் மனைவி குழந்தைங்களாலதான் முடியும், அதேதான் தீபாக்கும்”

“அப்ப விட்டா சாகடிச்சுருவாங்கன்னு சொல்றியா?”

“உதாரணம் சொன்னா அதையே பிடிச்சுக்கற பார்த்தியா? இங்கே பாரு, ஒருத்தரோட காதல் கடைசி வரை சாகாம இருக்கனும்னா, அது மனசுக்குள்ள போட்டு அமுங்காம இருக்கனும்னா சண்டை போட்டுகிட்டே இருக்கனும், சமாதானம் ஆகிட்டே இருக்கனும். அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. அதுக்குள்ள ஆடற விளையாட்டு மாதிரி. சண்டையை போடாதவங்களை பார்த்தீன்னா படுக்கைல ஆளுக்கொரு மூலை படுத்து தூங்கறவங்களா இருப்பாங்க. சுருக்கமா சொல்லனும்னா சண்டை இல்லைன்னா காதல் செத்துரும். காதல் செத்தப்புறம் அதுக்கு பேர் என்ன தாம்பத்யம்?”

“ஆனா சண்டை போடறப்ப வர வெறுப்பு? மொத்தமா விட்டுட்டு போக சொல்லுதே?”

“அப்படித்தான் சொல்லும், வேற எதையும் யோசிக்கவோ செய்யவோ விடாது. அதை பெருசா எடுத்துக்காதே, ஆனா அந்த சண்டை இல்லைன்னா உங்களுக்குள்ள எதுவுமே இயல்பா நடக்காது”

அதிகாரம்: ஊடல் உவகை குறள் எண்: 1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை

உரை:
காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.