நிலம் என்னுள் கலந்த நீர் அவள் – குறள் கதை

குழந்தை அழும் சத்தம் முதலில் கேட்கையிலேயே சேதுவிற்கு காதிற்குள் ஹாரன் அடிப்பதனை போல் இருந்தது. உலகில் சில ஓசைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். கடல் அலை, மழை பெய்யும் ஓசை, புல்லாங்குழல், மெலிதான குயில் கூவல் இப்படி பல உண்டு. சில நொடிகள் கூட கேட்க, தாங்க முடியாத ஓசைகளில் முதல் இடம் குழந்தையின் அழுகுரல் தான். அதை கேட்டுக் கொண்டு வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது.

சேதுவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

“ரம்யா, ரம்யா, என்ன பண்ணிட்டு இருக்க?”

“……”

குழந்தையில் அழுகுரல் அதிகமாக அதிகமாக பொறுக்க முடியவில்லை. சென்று எடுத்து சமாதான படுத்தினான். தோள் மீது போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மெதுவாக அழுகை அடங்க துவங்கியது. நீண்ட நேரமாகியும் மனைவி வராததால் குழந்தையை எடுத்துக் கொண்டே வீட்டினுள் நடந்தான். சமையலறையிலும் இல்லை. பின்கட்டு வழியாக சென்று பார்த்தால் காம்பவுண்ட் அருகே நின்று கொண்டு பக்கத்து வீட்டுக்காரம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் ரம்யா.

இவன் வருவதை பக்கத்து வீட்டுக்காரம்மா கவனிப்பதை உணர்ந்து, திரும்பி பார்த்தாள். முகத்தில் கோபத்தை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.

“வரட்டும், என்ன நினைச்சுட்டு இருக்கா மனசுல? குழந்தையை என் பக்கத்துல போட்டுட்டு அப்படி என்ன முக்கியமான விஷயமா பேசிட்டிருப்பா? என்ன இருக்கு முக்கியமா? எதும் புடவை, இல்லை சீரியல் பத்தி பேசிட்டிருப்பா, மத்த நாளா இருந்தா பராவாயில்லை, நாளைக்கு ஷேல்ஸ் ரிபோர்ட் சப்மிட் பண்ணியாகனும், டேலி ஆகாமா நான் தலையை பிச்சுட்டுருப்பேன்னு தெரிஞ்சே இப்படி பன்றாளே, இவளை…. வரட்டும் பேசிக்கறேன்”

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு பிறகுதான் வந்தாள். அதற்குள் கோபம் பல மடங்கு ஏறியிருந்த சேது கத்த துவங்கினான்.

“என்னடி நினைச்சுட்டு இருக்க மனசுல? குழந்தையை விட அரட்டை முக்கியமா போயிடுச்சா உனக்கு?”

“ஏங்க? என்ன ஆச்சு?”

“என்ன ஆச்சா? குழந்தையை தூக்கிட்டு வந்து நின்னதை பார்த்த இல்லை, உடனே என்னன்னு வந்து கேட்டா என்ன குறைஞ்சு போயிரும் உனக்கு?”

“ஏங்க நீங்க கூப்ட வேண்டியது தானே? நான் நீங்க சும்மா குழந்தையை தூக்கிட்டு உலாத்திட்டு இருக்கிங்கன்னு நினைச்சேன்”

“உலாத்தறனா? ஏன்டி, எனக்கு என்ன வேலை இல்லையா? சேல்ஸ் ரிபோர்ட் முடிக்க உட்கார்ந்ததை பார்த்துட்டுத்தானே போன?”

“முடிச்சுருப்பிங்கன்னு நினைச்சேன்”

“என்னடி கூட கூட பேசிகிட்டு இருக்க?”

“என்னங்க பிரச்சனை இப்ப உங்களுக்கு?”

“ஒழுங்கா குழந்தையை பார்த்துக்கு முடியுமா முடியாதான்னு கேட்கறேன்”

“நான் தானே பார்த்துக்கறேன், என்ன குறை அதுல?”

“முதல்ல இப்படி பேசறதுல நிறுத்துடி, எரிச்சலாகுது”

“ஏன்?”

“சொன்னா கேளு, பேசாத”

“அதான் ஏன் பேச கூடாது?”

“சனியனே, ஒரு தடவை சொன்னா ஏறாது?”

“சனியன்னு சொன்னிங்கன்னா நல்லாருக்காது சொல்லிட்டேன்”

“என்னடி பன்னுவ சனியனே சனியனே”

கோபத்தில் கையில் வைத்திருந்த குழந்தையில் பால் புட்டியை சுவற்றில் விட்டெறிந்தாள். கோபத்தில் கை ஓங்கியவாறு ரம்யாவை நெருங்கிய சேதுவை, சத்தம் கேட்டு விழித்த குழந்தையின் அழுகுரல் நிறுத்தியது. செய்யவிருந்த முட்டாள்தனத்தை புரிந்துக் கொண்டு, பின் வாங்கினான். என்ன செய்வதென்று தெரியவில்லை. பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.

இரண்டு மணி நேரம் எங்கெங்கோ சுற்றினான். பிடித்த கடைக்கு சென்று பிடித்த ஐஸ்கிரிமை வாங்கி சாப்பிட்டான். நண்பனை பார்க்க சென்றான். அவனது பெண் குழந்தை எப்போதும் இவனுக்கு செல்லம். அவளுடன் விளையாண்டு விட்டு நண்பனுடன் பேசினான். வீட்டில் நடந்த சண்டையை கூறினான். சேதுவிற்கு 3 வருடங்கள் முன்பே திருமணம் முடித்திருந்த நண்பன் அறிவுரை கூறினான். ஒருவாறு மனம் அமைதியானது.

எதற்காக இல்லை என்றாலும் ரிப்போர்ட்டை முடிக்காவாவது வீட்டிற்கு சென்றுதான் ஆக வேண்டும். எப்படி ரம்யா முகத்தில் விழிப்பது என்றே தெரியவில்லை. காதலிக்கையில் பல உறுதிமொழிகளை தந்துதான் காதலித்தான், அதில் எந்த சூழ்நிலையிலும் ஆண் என்பதற்காக கை ஓங்கும் முட்டால் தனத்தை செய்ய்மாட்டேன் என்பதும் ஒன்று.

என்ன ஆனாலும் சரி, எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். வீட்டிற்கு செல்லாமலே இருக்க முடியாது. சென்றான். எதுவும் பேசாமல் சென்று தன் வேலையை கவனித்தான். வேலை முடிந்த பிறகு எப்படியும் சாப்பிட ரம்யாவிடம் பேசாமல் இருக்க முடியாது என்பதை யோசித்துக் கொண்டேதான் ரிப்போர்ட்டை முடிக்கையில், இடையிலேயே ரம்யா வந்து பேசினாள்.

“சாப்பிடறிங்களா? எடுத்து வைக்கவா?”

“நான் சாப்பிட்டுக்கறேன், நீ போ”

அவளாக முதலில் வந்து பேசியது பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. விட்டிருந்தால் தானாக போய் பேசும் தைரியமெல்லாம் சேதுவிற்கு கிடையாது. அவனே எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டு படுக்கையறைக்கு சென்றான். முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தாள். குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தான்.

சத்தமிடாமல் பக்கத்தில் சென்று படுத்தான். என்ன செய்ய, உறங்கி இருப்பாளா? பேசலாமா? மன்னிப்பு கேட்கலாமா? இறங்கி போனால் ஏறி போவாளே? அவளாகத்தான் வந்து பேசி விட்டாளே, எதற்கு பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும், அப்படியே விடுவோம். நாளை பார்த்துக் கொள்ளலாம். அப்படியே கண்ணை மூடினான். ஏதோ சத்தம் கேட்டது.

ரம்யா தேம்புவது போல் சத்தம். அழுகிறாளா? அவ்வளவுதான், எந்த யோசனையும் இல்லை, பிடித்து திருப்பினான். திரும்பவும் கையை வைத்து முகத்தை மூடிக் கொண்டாள்.

:ஹேய் ரம்யா, அழாத, சாரிடா”

“…”

“என் செல்லம்ல, சாரிடா, பிளிஸ், மன்னிச்சுருடா”

“ப்போ, எங்கிட்ட பேசாத”

“பிளிஸ்டா அம்மு, மன்னிச்சுருடா, அழாத, என் தப்புதான்”

“பேசாத போடா”

“என்ன வேணா சொல்லு, திட்டு, அடி, அழாத”

ஒரு கையை மட்டும் எடுத்து அடித்தாள், அது எங்கோ பேருக்கு பட்டது.

“நான் தான் சொல்றேன்ல்லை, என் தப்புதான், நீ என்ன சொன்னாலும் கேட்கறேன், அழாத”

வலுக்கட்டாயமாக கையை முகத்தில் இருந்து எடுத்தான். கண்களை மூடிக் கொண்டிருந்தாள். கன்னத்தை பிடித்து

“சாரிடா அம்மு”

கண்களை திறந்தாள்.

“நீ என்ன சொன்னாலும் கேட்கறேன், அழாத”

“என்ன சொன்னாலும் கேட்கறியா? சரி முதல்ல என் காலை பிடிச்சு விடு”

“அவ்வளவுதானா? சரி பிடிச்சு விடறேன்”

அவள் எழுந்த சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள். காலை மெதுவாக பிடித்து விட்டான். இது ஒன்றும் புதிதில்லை என்பதால் பெரிதாய் தோன்றவில்லை.

“பிடிச்சு விட்டுகிட்டே வீட்டை விட்டு கிளம்பி எங்கெல்லாம் போனன்னு சொல்லு”

பொறுமையாக சென்ற இடங்களை சொன்னான். ஐஸ்கிரிம் சாப்பிட்டதை சொன்னதும் அடிவிழ ஆரம்பித்தது.

“கெட்ட பையன்டா நீ, என்னை விட்டுட்டு போய் ஐஸ்கிரிம் சாப்பிட்டியா நீ?”

“சாரிடா, நாளைக்கு வாங்கிட்டு வரேன்”

“அதெல்லாம் முடியாது, எனக்கு இப்ப வேணும்”

“ஐஸ்கிரிமா?”

“ஆமா, போய் வாங்கிட்டு வா”

“ஹேய் மணி என்னன்னு பார்த்தியா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது, எழுந்திரு, போய் வாங்கிட்டு வா, போ”

அதிகம் முரண்டு பிடிக்காமல் எழுந்து விட்டான். தெருமுனையில் இருக்கும் பேக்கரியில் எந்நேரம் சென்றாலும் கிடைக்கும் என தெரியும். போய் வாங்கி வந்தான். பெரிய ஃபேமிலி பேக் கசாடா. ரம்யாவிற்கு பிடித்தது. அவளுக்கு கொடுத்த பின் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டவள் மூன்றாவது ஸ்பூனை இவனுக்கு ஊட்டி விட்டாள். இவனும் பதிலுக்கு ஊட்டி விட்டான். அடுத்த சில நேரங்களில் அந்த ஐஸ்கிரிம் அவர்களுக்கு பல விதங்களில் உபயோகமானது.

ஆண்-பெண் இருவரும் நிலமும் நீரும் போன்றவர்கள். சில நேரங்களில் தனித்தனியாக இருப்பார்கள். சில நேரங்களில் செம்புலநீர் போல் பிரிக்க முடியாதவர்களாய் இருப்பார்கள். எப்படித்தான் அடித்துக் கொண்டாலும் மனையாள் இருக்கும் இடத்தில் கிடைக்கும் மகிழச்சி, சொர்க்கத்திலும் கிடைக்காது என்கிறர் வள்ளுவர்.

அதிகாரம்: ஊடல் உவகை குறள் எண்: 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

உரை:
நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?