ஏனோ, கண்கள் உன் முகமே கேட்கிறதே…! – குறள்கதை

“தீபிகாவா?”

“ஆமா சார்”

“கார்த்திக், வேற யாராவது கேளுங்களேன்”

“இல்லை சார், உங்களுக்கு தெரியும், கம்பெனியோட எல்லா டீடெய்ல்ஸ்ம் தெரிஞ்சவங்கதான் எனக்கு தேவை, மத்தவங்க எல்லாரும் அடுத்தவங்க தலைல பொறுப்ப கட்டறவங்க, நீங்களே சொல்லுங்க? எனக்கு திடிர்னு எதுலயாவது சந்தேகம் வருதுன்னு வைங்க, மத்தவங்க மாதிரி எனக்கு அதை பத்தி தெரியாதுன்னு சொல்லாத ஆளா வேற யாராவது நம்ம ஆஃபிஸ்ல இருக்காங்களா?”

“புரியுதுப்பா, லேடிஸ் ஸ்டாஃப் கிட்ட ஈவ்னிங் கொஞ்ச நேரம் இருந்து வேலையை முடிச்சு கொடுத்துட்டு போக சொன்னாலே குடும்ப பிரச்சனையை புலம்ப ஆரம்பிச்சுருவாங்க”

“அது கல்யாணம் ஆனவங்க சார்”

“அவங்களாவது பரவாயில்லைப்பா, வீட்டு வேலைலருந்து தப்பிக்கவாவது வருவாங்க, தீபிகா பத்தி தெரியும்ல, பர்ஃபெக்ஷனிஸ்ட், அவ வேலையை கரெக்டா செய்வா, வேற வேலை கொடுத்தா கடிச்சு குதறிடுவா, ஹெல்பா வேணா கேட்கலாம்”

“சார் ஞாயமா பார்த்தா நீங்கதான் இருக்கனும், உங்க அளவுக்கு எல்லா டீடெய்ல்ஸ்ம் அவங்களுக்கு தெரியும்ங்கறதாலதான் கேட்கறேன், நீங்க என்ன வேணா செய்யுங்க, நான் கேட்கற ஆளை சப்போர்ட்டுக்கு கொடுத்தா நீங்க மண்டே வரப்ப வேலை முடிஞ்சுருக்கும், இல்லைன்னா என்கிட்ட எதுவும் கேட்காதிங்க”

“ஹேய் ஏம்பா இப்படி பேசற? என்னால முடிஞ்சா வரமாட்டனா? வைஃப் ரொம்ப நாள் கேட்டு நாளைக்குத்தான் அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டி போறதா சொல்லிருக்கேன், இப்ப போய் வேலை இருக்கு வரமுடியாதுன்னு சொன்னேன் மொத்தமா கிளம்பி போயிருவா, உனக்குலாம் கல்யாணம் ஆனாதான் அந்த கஷ்டம் புரியும், எனக்காக செஞ்சு கொடுப்பா பிளிஸ்”

“சார் நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? எனக்கு சப்போர்ட்க்கு ஆள் கேட்கறேன் அவ்ளோதான், புரிஞ்சுக்கோங்க”

“நீ சொல்றதும் கரெக்ட்தான், சரி நீ இப்பவே வேலையை ஆரம்பிச்சுரு, அந்த பொண்ணுகிட்ட நாளைக்கு ஆஃப் டே மட்டுமாவது வர முடியுமான்னு கெஞ்சி கேட்கறேன், வேற யாராவதா இருந்தா கூட மிரட்டலாம், இந்த பொண்ணுகிட்ட ஏதாவது சொன்ன ரெசிக்னஷன் எழுதிட்டு வந்து நீட்டும், அதுக்கு உட்கார வச்சு அரை மணி நேரம் நான் தான் சமாதான படுத்தனும். நீ பாருப்பா, நான் பேசிட்டு வரேன்”

மேலாளர் நகர்ந்ததும் கார்த்திக் தன் இடத்தில் இருந்து எழுந்து தீபிகாவை பார்த்தான். இவன் பார்த்த அடுத்த நொடியே அவள் பார்த்தாள். அமர்ந்து விட்டான். இப்போது மட்டும் அல்ல, கார்த்திக் எப்பொழுது அவளை திருட்டுத்தனமாக பார்க்க நினைத்தாலும் உடனே அவளுக்கு தெரிந்து விடுகிறது. எப்படி என்றுதான் புரியவில்லை. கார்த்திக் இந்த அலுவலகத்தில் 2 வருடங்களாக இருக்கிறான். கணிணி வேலைகளில் மின்னல் வேகம்தான் அவன் பலம். மற்றவர்கள் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து செய்வதை ஒரு மணி நேரத்தில் முடித்து விடுவான். திறமையானவன் என தெரிந்த உடன் அவர்களை எப்படி நடத்தி கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது மேலாளருக்கு நன்றாக தெரியும்.

மற்றவர்களை திட்டுவது போல் திட்டுவது என்ன, கார்த்திக்கிடம் குரலைக் கூட உயர்த்த மாட்டார். அவரது பல வேலைகளையும் சேர்த்து கார்த்திக் தான் பார்க்கிறான். அதை சாக்காக வைத்து எந்த சலுகையும் எதிர்பார்க்க மாட்டான். அவன் உண்டு, அவன் வேலை உண்டு. வேலை இல்லை என்றால் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து வாசிப்பது என்று இருப்பான். கார்த்திக் வந்து ஒரு வருடங்களுக்கு பிறகுதான் தீபிகா அங்கு வேலைக்கு வந்தாள்.

Image result for madras scene  riythvika

தீபிகா, கருப்புதான், அதை மாற்றவோ மறைக்கவோ முயற்சிக்க மாட்டாள். பெரிய வசீகர கண்கள்.சிரித்த முகம் தான். அவள் சிரிக்கையில் கண்களும் சிரிக்கும். ஆனால் ஏதாவது பிரச்சனை என்றால் உயர் அதிகாரி என்று கூட பார்க்க மாட்டாள், கத்தி விடும் குணம். தன் வேலையில் குறை வைக்காதவர்கள் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்ற கொள்கை உடையவள். விடுமுறை எடுத்த ஒருவரது வேலையை ஒருமுறை மேலாளர் அவளை செய்ய சொல்ல, முடியாது என்று முகத்திற்கு நேராக சொல்லி விட்டாள். வேலையை மீதம் வைத்தவருக்கு விடுமுறைக்கு ஒப்புதல் அளித்தது உங்கள் தவறு, நீங்கள் வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாள். மேலும் வாக்குவாதம் தொடர்ந்தால் ராஜினாமா கடிதம் கணிணியில் தேதி போடாமல் தயாராக இருக்கும். எடுத்து தேதியுடன் கையெழுத்து போட்டு நீட்டி விடுவாள். இவளது திறமை குறித்து எம்.டி வரை அனைவருக்கும் தெரியும். வேலையை விட்டு நின்றதற்கு காரணம் மேலாளர்தான் என சேதி போனால் அவ்வளவுதான். அதில் இருந்து ஏதாவது தேவை என்றால் உதவியாகத்தான் கேட்பாரே ஒழிய, அதிகாரம் செய்வதெல்லாம் தீபிகாவிடம் நடக்காது.

திங்கள் அன்று எம்.டி ஆடிட்டிங் என சொல்லி இருக்கிறார். அனைத்தையும் கொட்டி அள்ள போகிறார் என்று அர்த்தம். இடையில் ஒரு நாள் தான் இருக்கிறது. ஒரளவிற்கு அனைத்தும் தயார்தான். கணிணியில் இருக்கிறது. எங்கு எப்படி இருக்கிறது என்பது கார்த்திக்குத்தான் தெரியும். கடைசியாக ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதற்கு துணைக்கு அனைத்து விவரங்களும் தெரிந்த ஆள் தேவை, தீபிகாதான் வேண்டும் என கார்த்திக் கேட்டதில் வேறெந்த காரணமும் இல்லாமல் இல்லை. அவன் வேண்டும் என்றேதான் அவளை வரவழைக்க முயல்கிறான்.

அவனுக்கு தீபிகா அலுவலகத்திற்கு வந்த நாள் முதலே அவளை பிடிக்கும். அவளது கண்களை அவன் மிகவும் இரசிப்பான். கிட்டத்தட்ட அது அவனிடம் பேசும் என்றே சொல்லலாம். அப்படித்தான் அவனுக்கு தோன்றும். அதிகம் வேலை விஷயங்களை தவிர்த்து அவளிடம் எதுவும் பேசியதில்லை. அதற்கு அவனது தயக்கம் தான் காரணம். இத்தனைக்கும் தீபிகா அவனிடம் நன்றாகத்தான் பேசுவாள். இருவரும் பல சமயங்களில் இணைந்து பணியாற்றுகையில் நன்றாக ஒத்துப் போகும். அதை தீபிகாவே பல முறை சொல்லி இருக்கிறாள். மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச்சினை வளர்த்து, கடலையை விதைத்து அறுவடை செய்ய முயற்சித்து இருப்பார்கள். ஆனால் கார்த்திக்கிற்கு அதெல்லாம் தோணவில்லை.

உண்மையாக காதலிக்கும் பெண்ணிடம் அவ்வளவு சீக்கிரம் பேசி விடவே முடியாது தெரியுமா? கழுத்தை தாண்டி வார்த்தைகள் மேலேறாது. தீபிகாவினை காதலிப்பதை புரிந்து கொண்ட பின்பும், அவளை அடைய பெரிதாக எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தான் கார்த்திக். அது அவனது தாழ்வு மனப்பான்மை என வைத்துக் கொண்டால் கூட ஒரு விஷயத்தில் உஷாராக இருந்தான். அது முடிந்த வரை அவளை தன் அருகாமையில் வைத்துக் கொள்வது. மேலாளர் இவன் சொற்படிதான் பல நேரங்களில் மற்றவர்களுக்கு ஆணை வழங்குபவராக இருந்தார். அதிக பட்சம் ஏதேனும் வேலை என வந்தால் தன்னுடன் தீபிகா சேர்ந்து இருக்கும் படி செய்து கொள்வான்.

அவளின் அருகாமையை மிகவும் விரும்பினான். அவளை பார்த்துக் கொண்டிருப்பதே அவனை பறக்க செய்தது. அவள் கண்கள் போதும். அதைத்தான் எப்போதும் பார்ப்பான். இப்போதும் அவளை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ஞாயிறு விடுமுறை நாள் வேலைக்கு வம்படியாக இழுக்கிறான். இந்த வேலையை அவனே முடித்து விடுவான். எதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டும். விடுமுறை நாள் என்பதால் அலுவலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். சுதந்திரமாக அவள் அருகாமையை இரசிக்கலாம் என்றுதான் அவள்தான் கட்டாயம் வேண்டும் எனச் சொல்வது.

மேலாளர் வந்து தீபிகா ஒத்துக் கொண்டதாக சொன்னார். மிகவும் உற்சாகமாக இருந்தது. அன்று இரவு வரை இருந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டுத்தான் கிளம்பினான். அப்போதுதான் அடுத்த நாள் முழு கவனத்தையும் அவள் மீதே குவிக்க முடியும் என்பதற்காக. அவளுடனான தனிமையை நினைத்தே மிகவும் உற்சாகமாக வீட்டில் இருந்து கிளம்பினான். இருப்பதிலேயே சிறந்த உடைகளை அணிந்துக் கொண்டு வந்திருந்தான். தீபிகாவும் நேரத்திற்கு வந்திருந்தாள். வேலையை துவங்கினார்கள். அனைத்து திருத்தங்களையும் முந்தைய தினத்திலேயே முடித்து விட்டிருந்த படியால் சும்மா பேருக்குத்தான் ஒவ்வொரு கோப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இடையே பேச்சு கொடுத்து மதியம் எப்படி வீட்டிற்கு செல்லப்போகிறீர்கள் என்ற கேட்க

“என் லவ்வர் வருவான் சார்” என்று பதிலைக் கேட்டு இடிந்து போனான். அடிக்கடி புடவையில் பார்த்தவளை சுடிதாரில் பார்த்ததற்கே பறந்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ஒரு காதலன் இருப்பான் என்ற ஒரு எண்ணம் இதுவரை வந்ததே இல்லை. யாரிடமும் அவள் அப்படி சொல்லிக் கேட்டதும் இல்லை. அதன் பிறகு அவன் தடுமாறுவதை தீபிகா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். வேலை எல்லாம் முடிந்த பின், சரியாக ஒரு மணி ஆனது.

“சார், என் லவ்வர் வெளியே வெய்ட் பண்ணிட்டு இருக்கான், வாங்க சார் இன்ட்ரோ பண்ணி விடறேன்”

“பரவாயில்லை மேடம், இன்னொரு நாள் பார்த்துக்கலாம்”

“சும்மா வாங்க சார், அதான் எல்லா வேலையும் முடிஞ்சுருச்சுல்ல?”

“சேச்சே, எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு ரீ-செக் பண்ணனும், நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கறேன்”

“ஒகே சார், நாளைக்கு பார்ப்போம்” என்று சொல்லி விட்டு தீபிகா தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறவும் அப்படியே உடைந்து போய் தன் இருக்கையில் அமர்ந்தான். அடுத்து என்ன என்பதே பெரிய சூன்யமாக இருந்தது. இதை இவன் எதிர்பார்க்கவே இல்லை. தீபிகா யாரையும் காதலிக்கவில்லை, ஏன் காதலே பிடிக்காது என்பது போல் தான் அனைவரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கையில் தான் முடிந்த வரை இரசித்து விட்டு, வீட்டில் பேசி திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று இருந்தான். சற்று நேரம் அப்படியே தலை விட்டத்தை பார்க்கும் வண்ணம் பின்பக்கம் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

“எங்கே சார், பிரிண்ட் அவுட் எடுக்கலை?”

விழுக்கென திரும்பினான் தீபிகா

“என்ன மேடம்?”

“பிரிண்ட் அவ்ட் எடுக்கனும்னு சொன்னிங்களே, உட்கார்ந்துட்டு இருக்கிங்க?”

“இல்லை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு செய்யலாம்னு இருந்தேன்”

“ஓஹோ, இன்னும் எத்தனை நாள் இப்படியே புழுகலாம்னு இருக்கிங்க?”

“என்னது?”

“எத்தனை நாள் இப்படியே புழுக போறிங்கன்னு கேட்டேன்”

“என்ன கேட்கறிங்கன்ன் புரியலை?”

“புரியாது, ஏன்டா ஒரு வருசமா எப்ப பாரு என்னையே பார்ப்ப? நான் பார்த்ததும் முகத்தை திருப்பிக்குவ? தேவையே இல்லன்னாலும் உன் கூடதான் நான் வேலை பார்க்கற மாதிரி ஏற்பாடு செய்வ? அங்கேயும் வச்சக் கண்ணு வாங்காம பார்ப்ப? பேசுனாலும் ஒழுங்கா பேச மாட்ட? இதோ, இன்னைக்கு எனக்கு வேலையே இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும், ஆனா மேனெஜர்கிட்ட நான் இருந்தாதான் வேலை நடக்கும்ங்கற மாதிரி பேசுவ? இங்க வந்து என் லவ்வர் வருவான்னு சொன்னதும் உன் கண்ணு இருண்டுரும், கை கால்லாம் உதறும், வாங்க என் லவ்வரை பார்க்கன்னு கூப்டா வேலை இருக்குன்னு வரமாட்ட, இங்கே உட்கார்ந்து விட்டத்தை வெறிச்சு பார்த்துட்டுருப்பா, என்னன்னு கேட்டா, என்ன கேட்கறேன்னு புரியலைம்ப, நான் அதை நம்பனும்”

“இல்லை தீபிகா, அது… வந்து..”

“மரமண்டை, நீயெல்லாம் சொல்லுவன்னு இத்தனை நாள் காத்திருந்தேன் பாரு, என்னை செருப்பால அடிக்கனும், வேலை முடிஞ்சுருஞ்சுல்லை, கிளம்பு?”

“எங்கே?”

“ஏன் சொன்னாதான் வருவியா?”

“இல்லை”

“பேசாம கிளம்புடா”

எதுவும் பேசாமல் கிளம்பினான். உள்ளுக்குள் அவள் அவனை உரிமையாக பேசியதில் அவ்வளவு உற்சாகம். பைக்கில் பின்புறம் அமர்ந்துக் கொண்டு தீபிகா

“ஏன்டா, என்னை உனக்கு பிடிச்சுருக்குன்னு எனக்கே தெரியுது, வந்து சொல்றதுக்கோ, பேசறதுக்கோ என்ன தயக்கம் உனக்கு?”

“அப்படி இல்லை, உன்னை பார்த்தாலே நான் ஆஃப் ஆகிடறேன்”

“தெரியுது, என்னை பார்த்துட்டு இருந்தா மட்டும் போதுமா?”

“போதாதுதான், ஆனா பார்த்துட்டுருக்கறதே என்னை மிதக்க வைக்குது, முடிஞ்சதுன்னா என் ரெண்டு கண்ணோட உள்பக்கமும் உன் கண்ணை படம் எடுத்து ஒட்டி வச்சுக்கற அளவுக்கு உன்னை பார்க்கறது எனக்கு பிடிக்கும்”

“உனக்கு வேணா அது போதும், எனக்கு போதாது”

“சாரி தீபிகா, நான் வந்து பேசிருக்கனும்”

“பரவாயில்லை விடறா, இதுவும் நல்லாதான் இருந்தது, நீ பயந்து பயந்து சைட்டடிக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும்”

“தெரிஞ்சேதான் எதுவும் சொல்லாம இருந்தியா?”

“சொல்றதா? எப்படா வந்து புரபோஸ் பண்ணுவன்னு பார்த்துட்டுருந்தேன், நீ வரவே மாட்டன்னுதான் நானே வந்து பேசுனேன்”

“சாரிடா”

“அதை விடு, இப்பவாவது சொல்லு, என்னை உனக்கு பிடிக்குமா?”

“உன்னை மட்டும் தான் பிடிக்கும், உன்னை பார்க்கறதே அவ்வளவு பிடிக்கும் எனக்கு”

“சரி வண்டியை நிறுத்து, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம், போன்ல வச்சுக்கோ, தோணும் போதெல்லாம் பார்த்துக்கலாம்”

“ம், எடுக்கலாம், ஆனா அது இல்லைன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை, என் கண்ணுக்குள்ள எப்பவும் நீ இருக்க”

“ஓகோ, கண்ணை காட்டு, வேற ஏதோ உருண்டையா இருக்கே”

“நீ வந்து போக டிஸ்டர்பா இருக்குன்னா சொல்லு, இறங்கி போக சொல்லிருவோம்”

“எங்கே சொல்லு?”

அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1123
கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!