ஊடலின் துன்பம் கூடலுக்குதவும் – குறள்கதை

“தீபா, டேபிள் மேல வச்சுருந்த பேப்பர் எங்க?”

“எந்த பேப்பர்ங்க?”

“இன்னைத்து நியுஸ் பேப்பர்”

“அதான் படிச்சுட்டிங்களே”

“ஆமா, படிச்சுட்டேன். எங்க அது?”

“இப்பதான் எடைக்கு போட்டு பக்கெட் ஒண்ணு எடுத்தேன்”

“எடைக்கு போட்டியா? இப்பதானே வச்சுட்டு குளிக்க போனேன்”

“நீங்க போனதும் வண்டில தள்ளிட்டு வந்து பழைய பேப்பர்காரன் கேட்டான்னு போட்டேன், என்னாச்சுங்க?”

“ஏன்டி, உனக்கு ஏதும் அறிவிருக்கா? போடறவ ஒன்னு கேட்டு போட்ருக்கனும், இல்லை இன்னைக்கு பேப்பரை மட்டுமாவது விட்டுட்டு போட்டுருக்கனும். எனக்குன்னு வந்து வாய்ச்சியே?”

“ஏங்க, கோபப்படறிங்க? காலைலயே படிச்சுட்டிங்கன்னு தான் போட்டேன், இப்ப என்ன ஆகிருச்சுன்னு கத்தறிங்க?”

“கத்தறனா? ஏன்டி பன்றதுலாம் நீ பண்ணிட்டு என்னை கத்தறங்கறியா?”

“இப்ப என்ன உங்களுக்கு அந்த பேப்பர் வேணும், அவ்வளவு தானே? நான் போய் வாங்கிட்டு வரேன், 5 ரூவா பேப்பருக்கு இந்த ஆட்டம்”

“என்னடி சொன்ன? 5 ரூவா பேப்பரா? இப்ப நான் 5 ரூபாய்க்குதான் கத்தறனா? நான் என்ன அதுக்கு கூட வக்கில்லாதவங்கறியா?”

“ஸ்ஸ்ஸ்சப்பா, உங்களை மாதிரி வார்த்தையை பிடிச்சுகிட்டு வம்பளக்கற வித்தை எனக்கு வராது, என்னை விடுங்க, டைமாச்சு நான் வேலைக்கு போகனும்”

கனேசனுக்கு சுர்ரென்று வந்தது. இவ்வளவு நேரமும் பொறுமையாகத்தான் இருந்தான். வேலை என்ற வார்த்தையை கேட்டவுடன் அவனால் தாங்க முடியவில்லை. கோபத்தில் என்ன செய்கிறோம் என புரியாமல் அருகில் இருந்த டேபிள் மேல் இருந்த பொருட்களை கீழே வேகமாக தள்ளி விட்டான். அதில் சில கண்ணாடி டம்ளர்களும் அடக்கம். அதில் ஒன்று கீழே விழுந்த வேகத்தில் உடைந்து தெறிக்க, ஒரு கண்ணாடி சில்லு தீபாவின் உதட்டருகே சென்று பட்டு கிழித்தது. “அம்மா” என அதிர்ச்சியில் அவள் கத்திய பிறகுதான் கனேசனுக்கு நிதானம் திரும்பியது. எதிரில் மனைவியின் முகத்தில் இரத்தம். குற்ற உணர்ச்சிக்கு ஆளானான். அடிபட்ட இடத்தை பிடித்துக் கொண்டே தீபா சென்று முகத்தை நன்கு கழுவினாள். அவள் தேம்பும் சத்தம் அழத் துவங்கி விட்டாள் என்பதை உணர்த்தியது.

கனேசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேலையை பற்றி பேசினால் தன்னிலை மறந்து விடுகிறான். நல்ல வேலையில் இருந்தவன் தான். சில பிரச்சனைகளில் வேலையை விட்டு வந்தவன் இனி ஏதாவது தொழில் செய்து கொள்ள முடிவு எடுத்த பொழுது முழுவதும் பக்க பலமாக இருந்தது தீபாதான். அவள் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சொந்தம் தான். இருந்தும் இருவர் வீட்டு சம்மதமின்றி நடந்த திருமணம். உறவென்று யாரும் வீட்டுப்பக்கம் வராத சூழ்நிலையில் மனைவியை இராணியை போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு எப்போதும் கனேசனுக்கு உண்டு. ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்த தொழில் ஆரம்பித்தாலும் நஷ்டம், ஏதேனும் பிரச்சனை என்று ஒரு நிலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறான். பேசாமல் திரும்பவும் எங்காவது வேலைக்கு சென்று விடலாமா என்று கூட யோசிக்க துவங்கி விட்டான்.

சுற்றமும் நட்பும் அவனை அந்த அளவு மூளைச்சலவை செய்திருந்தது. பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் “எத்தனை நாள் மனைவி சம்பாத்தியத்தில் சாப்பிடுவாய்?” என சுற்றி வளைத்து கேட்பார்கள். அவர்களிடம் எதுவும் காட்டிக் கொள்ள மாட்டான். தீபாவும் அவனை காயப்படுத்தும் படி எதுவும் பேசுபவள் அல்ல. இன்று வாய் தவறி வந்த வார்த்தை அவனை தூண்டி விடவும் இப்படி நடந்து விட்டது.

தீபாவால் வலியை கூட தாங்கிக் கொள்ள முடிந்தது. அவன் கோபப்பட்டதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட அவளை அவன் புரிந்துக் கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். அந்த விஷயம் அவளை அழ வைத்தது, கட்டுப்படுத்த முயலவும் ஒரு மாதிரி தேம்பும் படி செய்தது. தீபாவின் அழுகைக் குரலை கனேசனால் தாங்க முடியவில்லை.அவள் அருகே சென்றான். முகத்தை கழுவி இருந்தாள். மெலிதாக இரத்தம் வந்துக் கொண்டிருந்தது. சின்னக் காயம் தான். துடைக்க துண்டு எடுத்துக் கொடுத்து விட்டு, கைப்பிடித்து அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்தான்.

அலமாரியில் இருந்து பேண்ட்ஏய்ட் எடுத்து, கத்தரித்து ஒட்டினான். அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் தாடையை ஏந்தி முகத்தை தூக்கி, அவள் கண்களை பார்த்து “சாரி அம்மு” என்றான். அவள் அவன் கையை “ப்போ” என தட்டி விட்டாள். அதை பொருட்படுத்தாமல் இரண்டு கைகளாலும் அவள் முகத்தை பிடித்தான். அவள் பார்க்க, மெதுவாய் நெருங்கி காயத்தின் அருகே வருடுவது போல் முத்தமிட்டான். முத்தமிட்டு விட்டு அவளை பார்த்தான். அவள் கண்கள் பெரிதாகி இருந்தன. அதை மூட செய்து, அதற்கும் முத்தமிட்டான். அடுத்தபடியாக உதடுகளை கவனித்தான்.

“ம், போதும், டைமாச்சு”

“ஆகட்டும், நீ உட்காரு” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்று ஒரு தட்டில் ஏற்கனவே சுட்டு வைத்திருந்த இட்லியை போட்டுக் கொண்டு வந்தான். அவள் தட்டை வாங்க கை நீட்டவும்

“நீ சும்மா உட்காரு” என்று சொல்லிவிட்டு இட்லியை புட்டு, சட்னி, சாம்பாரில் தோய்த்து ஊட்டுவதற்கு நீட்டினான். “ஆ காட்டு” என்ற வண்ணம் அவன் ஊட்டவும் வாயில் வாங்கிக் கொண்டு சாப்பிட்ட்டுக் கொண்டே பேசினாள்.

“எவ்ளோ நாளாச்சு மாமா, நீ எனக்கு ஊட்டி?”

“ம், நீயும் எவ்ளோ நாள் கழிச்சு மாமான்னு கூப்பிடற?”

“ஆமாவா?”

“ம், ரெண்டு பேருக்கும் நிறைய டென்ஷன் இல்லையா, அதான், நீ ஆ காட்டு”

“இன்னைக்கு மட்டும் ஏன் மாமா?”

“அது ஒன்னுமில்லைம்மா, நீ ஏதோ சொல்லவும் டக்குன்னு கோபப்பட்டுட்டேன் இல்லை, அதை தப்புன்னு புரிஞ்சுகிட்டேன்னு உனக்கு புரிய வைக்கறதுக்காகன்னு வையேன்”

“அப்ப என்னை சமாதான படுத்த மட்டும் தானா? கிட்டதட்ட நீ செஞ்ச தப்புக்கு தண்டனை மாதிரியா?”

“சேச்செ, அப்படி இல்லை மயிலு, என்னை அறியாம கோச்சுகிட்டேன், அது சும்மா வந்து போற கண நேர உணர்ச்சி, அது நான் இல்லை, இதான் நான்னு காட்டறேன், இது தண்டனை மாதிரி இல்லைடா, என் காதலை காட்டறதுக்கான வழின்னு வச்சுக்கோயேன்”

“ம்”

“அடிபட்டது வலிக்குதா அம்மு?”

“இல்லை மாமா”

சாப்பிட்டு விட்டு, பேக்கை மாட்டிக் கொண்டு கிளம்பி வாசல் வரைக்கும் போனவள் திரும்பி
“மாமா, நான் இன்னைக்கு லீவ் போட்டுகிட்டா?” என கேட்கவும் புரிந்துக் கொண்டு சிரித்தான்.

அதிகாரம்:ஊடல் உவகை        குறள் எண்:1322
ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வாடினும் பாடு பெறும்.

உரை: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.