ஏழை கர்ப்பிணிகள் அடிவாங்கவா அரசு மருத்துவமனை?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உள்ளூர் நண்பர் ஒருத்தர் கையில் தமிழில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் வைத்துக் கொண்டு வந்து பார்த்துப் பேசினார். எதற்காக அத்தனை நாளிதழ்கள் என்று கேட்டதும் ஆர்வமாகப் பிரித்து அவரது புகைப்படம் வந்துள்ளதாக பெருமை பொங்கக் காட்டினார். சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் 900 ரூபாய் கேட்டு, தராததால் திட்டியதுடன், இரும்புக் கம்பியால் தாக்கிய செவிலியரை எதிர்த்து பெண்ணின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக வந்த செய்தி அது. அதில் மருத்துவமனைக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகவும், பின் மருத்துவமனை டீன் அவர்களை சமாதான படுத்தியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 

எனக்கு இந்தச் செய்தியில் இரும்புக் கம்பி என்று குறிப்பிட்டிருப்பது விநோதமாக இருந்தது. இரும்பு கம்பியால் தாக்குவார்களா என்ன? குளுக்கோஸ் பாட்டில் மாட்ட பயன்படும் கம்பியை எடுத்து அடித்தார்கள் என்று சொன்னார். அதை விட மோசம் என்னவென்றால், வலியால் துடிக்கையில் ‘இப்போது மட்டும் வலிக்கிறதா? அப்போது வலிக்கவில்லையா?’ என தகாத வார்த்தையால் திட்டியதையும் கூறி விட்டு, தன் படம் நாளிதழில் வந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளச் சென்று விட்டார். யோசித்துப் பார்த்தால் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கென அனுமதிக்கப்பட்டால் இப்படித்தான் நடக்கும் என அனைவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. பல இடங்களில் சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். ஏனென்றால் தனியார் மருத்துவமனைகளைப் போல அங்கு எளிதாக சிசேரியன் செய்ய வாய்ப்பில்லை. தாமதமானாலும், வலியில் போராடினாலும், வேறு வழியே இல்லை என்னும் நிலை வரும் வரை சுகப் பிரசவத்திற்குத்தான் முன்னுரிமை தருவார்கள்.

அப்படி வலியில் துடிப்பவர்களை அதட்டுவது அங்கிருக்கும் செவிலியர்களைப் பொறுத்தவரை மாமுலான மற்றும் வாடிக்கையான நடவடிக்கைதான். ஆனால் அதட்டுவது என்பதைத் தாண்டி அவதூறாகத் திட்டுவதும் அடிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட செவிலியர் அளித்த பேட்டியில் பகிரங்க மன்னிப்பு கேட்டு, வேலை  அழுத்தத்தால் அப்படி நடந்துக் கொண்டதாகவும், 8 வார்டுகளுக்கு தான் ஒருவர் மட்டும் தான் இருப்பதாகவும் சொல்லி இருந்தார். இது போன்ற சம்பவங்கள் புதிது இல்லை என்றாலும் இதற்கான அடிப்படை காரணம் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கையில் அவர் பல தகவல்கள் கூறினார்.

அரசு மருத்துவமனையில் பணியாளர்களின் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவரும், நான்கு செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவரும், அதற்கடுத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்கள் முதல் துப்புரவாளார்கள் வரை எல்லா மட்டங்களிலும் பணியாளர் பற்றாக்குறை இருக்கிறது. சமீபத்தில் கூட நாமக்கல் அருகே துப்புரவுத் தொழிலாளரைப் பணியமர்த்தக் கோரி அரசு மருத்துவர் ஒருவர் தான் பணியாற்றும் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி இருந்தார். இரண்டு பேர் இருக்கும் இடத்தில் ஒருத்தர் இருப்பதை விட கொடுமை, அந்த ஒருத்தர் கூட இல்லாத நிலைமை. அரசு மருத்துவமனைகளில் கடைநிலை பணியாளர்களுக்கு எப்போதும் பற்றாக்குறைதான்.

மருத்துவர்களுக்கு எந்த அளவு வேலைப்பளுவோ, மன அழுத்தமோ அதற்கும் எந்த வகையிலும் குறையாத, இன்னும் சொல்லப்போனால் அதிக அளவு பாதிப்பு செவிலியர்களுக்கு உண்டு. மருத்துவர்களாவது வெளியே தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தோ, சொந்தமாக கிளினிக் நடத்தியோ ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். செவிலியர்களுக்கு அப்படியான வாய்ப்புகள் கூட இல்லை. இது வரும் நோயாளிகளிடம் வருமானத்தை எதிர்பார்க்க வைக்கிறது. பல இடங்களிலும் கூச்சமில்லாமல் கையேந்தவும் வைக்கிறது.

பணம், லஞ்சம் என்பதைத் தாண்டி வேறு வகையான மன அழுத்தங்களிலும் அவர்கள் உழல்கிறார்கள் என்பதைத்தான் அந்தச் செய்தியும் உணர்த்துகிறது. எந்தெந்த வழிகளில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுமோ அத்தனையும் தாங்கிக் கொண்டு அத்தனையையும் வரும் நோயாளிகளிடம் காட்டுகிறார்கள். பொதுவாக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஏழைகளே. அவர்களைப் பொறுத்தவரை மருத்துவர்கள் கடவுள். மருத்துவமனைகள் கோவில். அப்படி நினைப்பவர்களிடம் கோபத்தை காட்டினால், பெரிதாக எந்த எதிர்வினையும் இருக்காது. சாமிதானே அடிக்குது என்கிற ரீதியில் எடுத்துக் கொள்ளப் பழகிப் பழகி இன்று கம்பியால் அடி வாங்கும் நிலை வந்துவிட்டது.

இது அரசு மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கான பிரச்சனைதானே, நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கி விட முடியாது. கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த அரசின் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவுகள் தான் இவை. 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 9,36,488 மருத்துவர்கள் பணிபுரிந்தார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு புள்ளி விபரமொன்றில் தெரிவிக்கிறது. அதில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவது 2 லட்சம் பேர்தான். மொத்த மக்கள் தொகையுடன் கணக்கிட்டால் தற்போது 10000 பேருக்கு 6 மருத்துவர்கள் என்கிற நிலைதான் இருக்கிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பு 10000 பேருக்கு 25 முதல் 50 மருத்துவர்கள் தேவை என்கிறது. அதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுப்பப்பட்ட பொழுது மருத்துவக் கல்லூரி சீட்களின் எண்ணிக்கையை அதிகரித்து இந்த பற்றாக்குறையை போக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவர்கள் சரி, செவிலியர்கள்?

எப்படி விவசாயம் செய்து கஷ்டப்படுபவர்கள் தங்கள் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்துவதில்லையோ, அதேபோல் எந்த செவிலியரும் தங்கள் பிள்ளைகளை செவிலியராக்க விரும்புவதில்லை. சிலர் மருத்துவர்களாக்குகிறார்கள் என்றாலும் அவர்கள் செவிலியராகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் வேலைப்பளு, மன அழுத்தம், முக்கியமாய் போதிய வருவாய் இல்லாத நிலை. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், ஜூனியர்களாக இருக்கும் போது 20000 சம்பளம் வாங்குகிறார்கள், ஆனால் அதே வேலையை ஆரம்ப சுகாதார மையங்களில் செய்பவர்களுக்கு சம்பளம் 10000 கூட கிடையாது. அவ்வளவு ஏன்? இன்னமும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர்கள் நிரப்பப்படவே இல்லை.

மற்றவர்களை விட செவிலியர்களுக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை இருக்கிறது. 4 வருடங்களுக்கு முன்பு 20 இலட்சம் செவிலியர்கள் தேவை இருந்ததாகாச் சொல்லப்பட்டது. ஆனால் 10 இலட்சம் செவிலியர்கள்தான் இருந்தார்கள். இப்போதும் அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதற்கு நல்ல சம்பளத்திற்காக செவிலியர்கள் வெளிநாடு செல்வதும் ஒரு காரணம்தான். இருப்பினும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடுகையில் செவிலியர்கள் குறித்தும் யோசிக்க வேண்டாமா? அனைத்து நேரங்களிலும் மருத்துவர்கள் மட்டும் உயிர் காப்பவர்களாக இருப்பதில்லையே? தீக்காயத்தால் அவதிப்படும் நோயாளிகளில் 50 சதவீதம் பேரும் அறுவை சிகிச்சைக்குப்பின் 30 சதவீதம் நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு முறையான மருத்துவ உதவிகள் செய்ய செவிலியர்கள் இல்லாததால் இறந்துவிடுகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

கல்வியும் சுகாதாரமும் கடைக்கோடியில் இருப்பவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக வருடா வருடம் ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் என்ன நடக்கிறது என்பதை அரசியல் சார்ந்தோர் அன்றி மற்றோர் யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தனது ஜீடிபியில் 18% மருத்துவத்திற்காக ஒதுக்கும் போது நாம் இன்னும் 5% தான் ஒதுக்குகிறோம். சுகாதாரம் தொடர்பான வளர்ச்சியில் 188 நாடுகளில் 143வது இடத்தில் தான் இந்தியா இருக்கிறது. இந்த விஷயத்தில் கியூபாவைப் பார்த்தால் எப்போதும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. 10000 பேருக்கு 50 மருத்துவர்கள் என்ற இலக்கை ஏற்கனவே அடைந்ததுடன், நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவத்தை கொண்டு சேர்த்ததிலும் வெற்றி பெற்ற நாடு அது.

இவ்வளவு பற்றாக்குறை நிலையில் மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவ பணியாளர்களையும் வைத்துக் கொண்டு இருக்கும் போதே, இந்தியா மெல்ல மெல்ல மெடிக்கல் டூரிஸம் என்று சொல்லப்படும் மருத்துவ சுற்றாலாத் துறையில் முன்னேற துவங்கியுள்ள நிலையில், சரியானபடி இதற்கென ஒரு மேம்பாட்டு துறை அமைக்கப்பட்டு இந்த எண்ணிக்கை பற்றாக்குறை நீக்கப்படும் பட்சத்தில் நாட்டிற்கு பல கோடி வருமானத்தை ஈட்டித் தர பெரிதும் உதவியாக இருக்குமே?

நாளுக்கு நாள் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு அதிகரிப்பதன் காரணமாக, பட்ஜெட்டில் மருத்துவத்திற்காக ஒதுக்கப்படும் நிதிக்கான சதவீதங்கள் அதிகரிக்கப்பட்டாலும், அந்நிதி புதிதாய் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்களுக்கும், மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்கும், உள்நாட்டு மருந்து தயாரிப்புகளுக்கும், மருத்துவ சாதனங்கள் தயாரிப்பதற்கும் மட்டும் முடங்கி விடாமல் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். கூடவே அவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுக்கு போதுமான ஊதியங்கள் வழங்கப்படுவதற்கும் அந்நிதியில் ஒரு பங்கு பயன்பட்டால் நோயாளிகளுக்கு அது பயனுள்ளதாக அமையும். எங்கேயும் போக முடியாததால்தான் ஏழைகள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருகிறார்கள். அவர்கள் வந்தது நோய் தீர்ப்பதற்காக. குளுக்கோஸ் மாட்டுகிற கம்பியால் அடிவாங்குவதற்காக அல்ல.