உறங்கா விழிகள் -குறள் கதை

“சத்தியம் பண்ணு நம்பறேன்”

“ஏன் திவ்யா? என் மேல நம்பிக்கை இல்லையா?”

“உன் மேல நம்பிக்கை இல்லாமலா உன்னை காதலிக்கிறேன்? எனக்கு உன் மேல சந்தேகம் இல்லை, உன் பயத்து மேலதான் சந்தேகம்”

“நான் பயப்படுவேன், இல்லேன்னு சொல்லலை, ஆனா நம்பு, நான் வருவேன்”

“என் மேல சத்தியம் பண்ணு”

“இது என்னை காயப்படுத்துது, நான் நாளைக்கு வரலைன்னா இனி எப்பவும் உன் முகத்துலயே முழிக்க மாட்டேன், உன் மேல மட்டும் இல்லை, நான் நேசிக்கற யார் மேலயும் சத்தியம் பண்ண மாட்டேன்னு உனக்கே தெரியும்”

“உண்மையை சொல்லனும்னா எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராகவ், அதான் இப்படி உன்னை கேட்டு என்னை திடப்படுத்திக்கறேன்”

“எல்லா பாரத்தையும் தூக்கி என் மேல போட்டுட்டு நீ போய் தூங்கு. நாளைக்கு சந்திப்போம்”

ஒரு நிமிடம் கண்களை மூடி, இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு வருவீர்கள் என்று ஏற்கனவே எதிர்பார்த்து, திட்டமிட்டுத்தான் வந்தீர்களா என்று யோசியுங்கள். 95 சதவீதம் பேர் இதற்கு இல்லை என்று பதில் அளிப்பார்கள். இதுதான் வாழ்க்கையின் சுவாரசியமே. வாழ்வின் ஒவ்வொரு படிநிலைக்கும் நாம் திட்டமிடுவது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். இதே அளவு சுவாரசியமான இன்னொரு விஷயம் காதல். யாரை காதலிப்போம், எப்படி அது துவங்கும், எங்கே சென்று முடியும் என்று எதையுமே நம்மாள் திட்டமிட இயலாது.

பின் இல்லாமலா ராகவனுக்கும் திவ்யாவிற்கும் காதல் வந்திருக்கும்? தமிழகத்தில் ஒரு மூலையில் பிறந்து வளர்ந்து ஏதேதோ ஆகவேண்டுமென விரும்பி, வாழ்க்கையால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு சென்னையில் ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்ட்டரானதும் ஒரு பிடி கிடைத்து விட்டது என ஆசுவாசப்படுத்திக் கொண்ட ராகவிற்கு, அதே ஊடகத்திற்காக ஒரு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த சென்ற பொழுது அங்கு பொறுப்புகளை நிர்வகிக்கும் மாணவிகளில் ஒருத்தியாய் திவ்யாவின் அறிமுகம் கிடைத்தது.

அந்நிகழ்ச்சிக்காக 5 நாட்கள் முன்னேற்பாடு வேலைகள் நடந்தது. அந்த பத்திரிக்கையின் சார்பாக பொறுப்புகளை கவனித்துக் கொள்ள பணிக்கப் பட்டு இருந்த ராகவிற்கும், திவ்யாவிற்கும் தொடர்ந்து ஒரு வாரம் இணைந்து பணியாற்றும் படி நேர்ந்தது. ஒருவரின் குணநலன்கள் மற்றொருவருக்கு பிடிக்க போய், ஆரோக்கியமான நட்பாகத்தான் அங்கு விதை விழுந்தது. அது முளைத்து, வளர்ந்து, மொட்டு விட்டு, காதலாக பூப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆனது. அனைத்து தருணங்களிலும் உடன் இருக்கும் உறவை, நாளை வாழ்வில் எங்கிருந்தோ வருபவருக்கு விட்டுத்தர இருவருக்கும் விருப்பமில்லை. இவள்/ன் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று ஒரு பொறாமை எட்டி பார்க்க துவங்குகையில் அங்கு காதல் பூக்கிறது.

வெறும் நண்பர்களாய் இருக்கும் வரை திவ்யாவின் குடும்பம் பற்றி பெரிதாய் தெரிந்துக் கொள்ள ராகவ் விரும்பியதில்லை. இயல்பாக எளிமையாக இருப்பவளை பார்த்து நடுத்தர வர்க்கத்துப் பெண் தான் என அவனாக யூகித்து இருந்தான். ஆனால் உண்மை அதுவல்ல. அவள் தந்தை நகரில் பெரும் துணிக்கடை அதிபர். அவர் கடை விளம்பரங்களுக்காக ஏங்கும் பல பத்திரிக்கைகளில் ஒன்றில் மாத சம்பளத்திற்கு பணி புரிபவன் தான் ராகவ். இது தெரிந்திருந்தால் அவளைக் காதலித்திருப்போமா என்ற சந்தேகம் அவ்வபோது அவனுக்கு வருவதுண்டு. அது அவன் மீதான தவறு கிடையாது. அவனுக்கு இருந்த ஒரு வித தாழ்வு மனப்பான்மை. சென்னைக்கு வந்த பின் 25% குறைந்ததென்றால், திவ்யாவால் இன்னும் ஒரு 50% குறைக்கப்பட்டது. மிச்சம் சற்று ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

விஷயம் தெரிந்த பின், காதலின் எதிர்காலம் குறித்து ஏகத்திற்கும் குழப்பத்துடனே இருந்தான். அதை முடிந்த வரை அவனுக்குள்ளாகத்தான் வைத்திருந்தான். அதிகம் திவ்யாவுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை. அவள் பிண்ணனி தெரிந்திருந்தால் காதலித்திருப்போமா என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால் காதலிக்கையில் பின்வாங்க நினைப்பது எத்தகைய கோழைத்தனம் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அவனுக்குள் இருந்த சுயமரியாதை போராடாமல் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இப்படி இருக்கையில் ஒரு சுபயோக சுப தினத்தில் திவ்யாவின் அப்பாவிற்கு இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்தது. அவர் பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. திவ்யாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அடுத்து இருவரும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை கவனிக்க துவங்கினார். தனக்கு இந்த விஷயம் தெரியும் என்பதனை மட்டும் இருவருக்கும் தெரியும்படி செய்து விட்டு, அமைதியாய் காத்திருப்பவரின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் காதலர்கள் இருவரும் குழம்பியும் பயந்து கொண்டும் இருந்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

ராகவ் நேரடியாக சென்று திவ்யாவின் அப்பாவை சந்திப்பது என்று. அவருக்கு அனைத்தும் தெரியும், நேருக்கு நேர் சென்று கேட்டு பார்ப்பது, அவர் நாகரீகமாக மறுத்தால் என்ன செய்யலாம்? தன் பலத்தை செல்வாக்கை பயன் படுத்தினால் என்ன செய்யலாம்? என தீர யோசித்து, அனைத்திற்கும் தயாராக இருக்கும் வண்ணம் முன்னேற்பாடுகளை, தம் ஊடக நண்பர்களை வைத்து செய்து விட்டான். ஏன், எதற்கும் முன்னெச்சரிக்கையாக பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூட யோசனை நண்பர்களிடம் இருந்து வந்தது.

திவ்யா அதனை மறுத்து விட்டாள். அது தேவையற்றது, தன் அப்பா தனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றாள். அவர் மறுக்கும் பட்சத்தில் வீட்டை விட்டு வெளியே வருவது முழுக்க என் பொறுப்பு என்று நம்பிக்கை அளித்திருந்தாள்.

ராகவ் நாளை தான் தன் வருங்கால மாமனாரை சென்று சந்திக்க இருக்கிறான். திவ்யாவுடன் பேசிவிட்டு வந்து படுத்தவன் நீண்ட நேரமாக உறங்காமல் கால்களை ஆட்டிக் கொண்டிருப்பதை கவனித்த அவன் அறைத்தோழன் கேட்டான்.

“ஏன் மச்சி, தூங்கலை?”

“நாளைக்கு என்ன நடக்கும்ங்கற நினைப்பு என்னை தூங்க விடமாட்டேங்குதுடா, எனக்கு வாழ்க்கைல நடந்த ஒரே நல்ல விஷயம் திவ்யா தான். அவ பணக்காரின்னு தெரியறதுக்கு முன்னமே அவ கிடைச்சதுக்காக தினமும் சாமி கும்பிடும் போது நன்றி சொல்வேன்டா, இப்ப ஒரு பெரிய சோதனை, எப்படி அத்தனையும் கடந்து அவளை கைப்பிடிக்க போறேன்னு தெரியலை. ஆனா ஒன்னுடா, என்ன நடந்தாலும் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அவளை விட்டுக் கொடுக்கறதில்லைன்னு தெளிவா இருக்கேன்டா, பார்த்துடறேன், என்ன வேணா நடக்கட்டும்”

“டேய், அப்படிலாம் விட்றுவோமா? நாங்க இருக்கோம், குழப்பிக்காம தூங்குடா”

“என்னதான் முழுக்க தைரியமா இருந்தாலும் தூங்கற அளவுக்கு தேவையான அமைதி மனசுல இல்லைடா, நீ லைட் ஆஃப் பண்ணிட்டு படு, நான் தூக்கம் வரப்ப தூங்கிக்கறேன்”

அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1136
மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்

உரை:
காதல் நிறைவேறுவதில் நிறைய இடர்கள் உண்டாயின. இறுதியில் மடலேறுவது ஒன்றே வழி என்று தெளிவுறுகிறான் காதலன். தனது நாணையும் நல்லாண்மையையும் இழந்துதான் மடல் ஊர்தல் மேற்கொள்ள இயலும். அவற்றையும் துறக்கத் துணிந்துவிட்டான். அவளை எப்படியும் அடைந்தே தீர்வது என்று உறுதி கொண்டுவிட்டான். மடலூர்தல் எந்த நேரமும் அவன் சிந்தனையில் உறைந்து நிற்கின்றது. ஊர் உறங்கும் வேளையில் கூட அது பற்றிய நினைப்புத்தான். இதனால் தூக்கமும் தொலைந்தது. ‘இவளுக்காக எதையும் செய்வேன். மடல்ஊர்தலின் இழிவையும் ஏற்றுக்கொள்ளத் துணிந்தபின் இரவு பகல் எந்த நேரமும் சிந்தனை எல்லாம் அதுபற்றித்தான். இவளுக்காக என் கண்கள் உறங்குதலும் போயிற்று’ என்று வருந்தியுரைக்கிறான்.

மடல் ஊர்தல்-மடலேறுதல்
அந்தக் காலத்தில் காதலை நிருபிக்க “மடலேறுதல்” என்றொரு விஷயம் இருந்திருக்கிறது. பெண் காதலிப்பது அறிந்து அது பிடிக்காமல் அவளை வீட்டிற்குள் சிறைப்படுத்தி இருந்தால், அவள் தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தன் காதலின் உறுதியை தெரிவிக்க காதலன், பனைமர கருக்குகளினால் குதிரை உருவம் செய்து, அதன் மீதேறி பனைகருக்கு குத்த குத்த இரத்தம் சொட்ட சொட்ட கருப்பு துணியில் காதலியின் படம் வரைந்த கொடியை கையில் பிடித்த படி ஊரை வலம் வருவானாம். அதை காணும் ஊரார், அவன் படும் கஷ்டம் பொறுக்காமல் காதலியின் தந்தையிடம் பேசி சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்களாம்.