காமக் கடும்புனல் – குறள் கதை

தினசரி செய்யும் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, வீட்டிற்க்கு வந்த பின், சட்டையை கழட்டும் போது, கண்ணாடியை பார்த்த வண்ணம் உங்கள் காதலை நினைத்து, உங்களையே அறியாமல் முகம் சிரிப்புக்கு போவதை பார்த்த அனுபவம் உண்டா? கொஞ்ச நாட்களாக நான் அப்படித்தான் தனியாக இருக்கும் பொழுது சிரித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு மாதிரி புது சந்தோஷமாக இருக்கிறது. என்ன சொல்ல? தனியாக இருக்க சொன்னால் போன், டீவி இல்லையென்றால் செத்து விடுவேன். ஆனா இப்போது அப்படி இல்லை, மனம் தனிமையைத்தான் தேடுகிறது. எதையோ யோசித்து சிரிக்க தோணுகிறது. குறிப்பாக அவள் ஞாபகம்தான் அதிகம். அவளை நினைப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

தினமும் தான் பார்க்கிறேன், இருந்தும் வீட்டிற்கு வந்தவுடன் அவள் ஞாபகம்தான். யாழினி, அழகான பெயர். அவளும் தான். ஆனால் எனக்கு ஆரம்பத்தில் அவள் மேல் பெரிதாக எந்த ஈடுபாடும் வரவில்லை. சொல்லப்போனால் அப்போது அவள் அழகு என்பதையே என் கண்கள் கவனிக்கவில்லை. ஏன் என தெரியவில்லை. அவளுக்கு நான் சீனியர். ஒரு படி மேலதிகாரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அவள் வேலைக்கு சேர்கையில் பல பெண்கள் உடன் சேர்ந்தார்கள். அதனாலோ என்னவோ பெரிதாக கவனம் அவள் பக்கம் போகவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போதுதான் ஒரு பத்து நாளாக என்னைப் போட்டு என்னவோ செய்கிறாள், எடுத்ததும் ஒரு நாளில் இப்படி ஆகவில்லை.

பத்து நாளைக்கு முன்பு ஓய்வு நேரத்தில் அனைவரும் பேசிக் கொண்டு இருந்தோம். பேச்சு அப்படியே ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை வேண்டும் என ஆரம்பித்து, எப்படி இருந்தால் பிடிக்கும் என்பது வரை போனது. நான் என் மனதில் தோன்றியதை சொன்னேன். பார்க்க எப்படி இருக்க வேண்டும், குணத்தில் எப்படி இருக்க வேண்டும் அப்படி இப்படி என, அதில் புடவை நிறம், ஃப்ரி ஹேர் என என்னென்னவோ சொன்னேன். ஒரு இரண்டு நாளைக்கு பிறகு நான் சொன்னது போலவே வந்து நின்றாள், எனக்கு நீண்ட நாளாக மனதினுள் இருந்த ஆசையெல்லாம் இல்லை. அப்போதைக்கு பேசும் போது தோன்றியதைத்தான் சொன்னேன். இருந்தாலும் எதெச்சையாகவோ, விருப்பப்பட்டோ அதே மாதிரி வரும் பொழுது எப்படி உணர்வேன்?

அவளுக்கு மேல வேலை பார்ப்பதால் சகஜமாக போய் வழிந்துக் கொண்டு தேவையில்லாமல் பேச முடியாது. அது நட்பென்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதனால நானும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நொடியில் இருந்து என் கவனம் முழுக்க அவள் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. என் கேபினை அவள் தாண்டினால் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய இயலாது. திருட்டுத்தனமாக பார்க்க துவங்கினேன். யாருக்கும் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு சென்றால் அவளைத்தான் முதலில் கண்கள் தேடத் துவங்கியது. என் பார்வையில் அவள் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றது.

எத்தனை நாள் ஒரு பெண்ணை திருட்டுத்தனமாக இரசிக்க முடியும்? என் கவனம் அவள் பக்கம் குவிவதை அவளால் உணர முடிந்தது. அது தவறான எண்ணத்துடன் பார்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதால் குறைத்துக் கொள்ள துவங்கினேன். மிக கடினமாக இருந்தது. அவள் வேலையிலும் குறை சொல்ல முடியாது, திறமைசாலி. ஆனால் ஒரு முறை அவளது அஜாக்கிரதையால் செய்த பிழையினை, அவள் திறமையின் மீதிருந்த நம்பிக்கையில் சரிபார்க்காமல் விட்டு, மேலிடத்தில் வசமாக சிக்கினேன். இத்தனை வருடங்களாக எடுத்த நல்ல பெயர் அனைத்தும் சரிந்து போனது. அனைவரின் முன்பாக பேச்சும் ஏச்சும் கிடைக்க குறுகி நின்றேன். அவளும் அங்குதான் நின்று கொண்டிருந்தாள். அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. எனக்கு ஒரு மாதிரி கண் கலங்கியது போல் ஆகி விட்டது.

புயல் அடித்து ஓய்ந்த பின் என் இடத்திற்கு வந்தாள். நான் முகம் கழுவி துடைத்துக் கொண்டிருந்தேன். மன்னிப்பு கேட்கத்தான் வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. உடன் அவள் தோழியும் வந்திருந்தாள்.

“சாரி அருண்”

“பரவாயில்லை விடுங்க”

“இல்லை என்னால தானெ..”

“சேச்சே, இது முழுக்க என் தப்புதான், நான் உங்க மேல வச்ச நம்பிக்கைல முழுக்க கண்ணை மூடிட்டு இருந்துட்டேன். ஒழுங்கா செக் பண்ணிருந்துருக்கனும்”

“சாரி”

“விடுங்க”

எனக்கு திட்டு வாங்கியதை விட, யாழினி முன் அவமான பட்டதுதான் வலித்தது. இப்போதுதான் எனக்குள் புதிதாய் செடி முளைத்திருக்கிறது, மொட்டு விட்டு அது பூப்பதற்குள் இது நடந்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால் நான் நினைத்தது தவறு. அன்று மாலைக்கு மேல் என்னை யாழினி போனில் அழைத்தாள். நான் ஒரு மாதிரி வாடிப்போய் அலுவலகத்தில் இருந்து வெளியேறியது அவளை பாதித்திருக்கிறது.

அவளுக்கு தெரியவில்லை, என் முகம் வாடியதற்கான உண்மையான காரணத்தை. “என்னை சமாதான படுத்துவதற்காகத்தானே அழைத்திருக்கிறாய்?” என்பது போல் நான் பேசவும் “ஏன் சும்மா பேசக்கூடாதா?” என கேட்க, வசமாக சிக்கிக் கொண்டாள் என்று

“என்ன தினமும் கூப்பிட்டு பேசற மாதிரி, தினமும் கூட வேண்டாம், எனக்கு எத்தனை தடவை இதுக்கு முன்னே வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் கூப்டு பேசி இருக்கிங்க? இது வரைக்கும் கூட வேண்டாம், இனி எத்தனை நாள் கூப்ட போறிங்க? நான் நல்லாதான் இருக்கேன், நீங்க குழப்பிக்காம உங்க வேலையை பாருங்க” என்றேன்

“ஹலோ, எங்களுக்குல்லாம் தினமும் பேச எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்குத்தான் ஜீனியர் கூட லாம் பேச கௌரவ குறைச்சல்னு சொல்லுங்க”

“எனக்கு அப்படின்னு யார் சொன்னது?”

“எல்லோர்க்கும் தெரியும்”

“என்ன தெரியும்?”

“உங்க ஃப்ரெண்ட்சிப்பெல்லாம் உங்க டீம் கூடத்தான், புதுசா வந்த யார் கூட நல்லா பழகுறிங்க, சொல்லுங்க?”

“நீங்க எல்லோரும் ஒரு கேங்கா இருக்கிங்க, கேப் விட்டாத்தானே நான் உள்ள வர முடியும்”

“சமாளிக்காதிங்க, பார்க்கறேன், எப்படி பழகுறிங்கன்னு”

பேச்சு அதோடு முடியவில்லை. எதை எதையோ பேசி 1 மணி நேரம் ஆன பின்புதான் வைத்தோம். நான் என் அறையில் பறந்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பு எந்த பெண்ணையும் கடக்காமல் இவளை பார்த்ததாக சொன்னால் அது பொய். சில காதல்களையும் கடந்துதான் வந்திருக்கிறேன். அதெல்லாம் படிக்கும் பொழுது. ஒரு கட்டத்திற்கு மேல், வேலைக்கு வந்த பின், அங்கு நம்மை மற்றவர்கள் மதிக்க துவங்கிய பின், என்னை அறியாமலேயே என் குணநலன்கள் மாறியிருந்தன. ஒரு மாதிரி கொண்டாட்ட வயதை கடந்து விட்டதனை போல் நினைத்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் இளமையாக உணர துவங்கியது இவளை இரசிக்க துவங்கிய பின் தான்.

அடுத்த நாள் நான் அழைப்பதற்கு முன்பு அவளே அழைத்தாள், இம்முறை மணி 11 ஆன பின்புதான் விருப்பமின்றி பேசி முடித்தோம். எனக்கு எப்பொழுது பொழுது விடியும் என்று இருந்தது. அவளுக்கு பிடிக்குமென்று நெடுநாளைக்கு பின் மீசை வைத்தேன். அவளுக்கென செய்யும் பொழுது மனதிற்குள் அவ்வளவு குதுகலம். நெருங்கி பேசினாலும் வாங்க போங்க தான் இருவரும். அது ஏனோ அவளுக்கு நான் அப்படி பேசுவதுதான் பிடித்திருந்தது, ஆனால் அவள் இடைஇடையே நீ, வா, போ சொல்லுவாள். இரகசியமாக இரசித்துக் கொள்வேன்.

நாளுக்கு நாள் என்னுள் அவள் நிறைந்ததை போல, அவளுக்குள்ளும் சில மாற்றங்கள் நிகழாமல் இல்லை. என்னால் அதை உணர முடிந்தது. அதுவும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதெல்லாம் அலுவலகத்திற்கு வெளியேதான். வேறு யாருக்கும் தெரியாத ஒருவித திருட்டுத்தனமான நட்பு என்று சொல்லலாம். என் பக்கம் நட்பெல்லாம் கிடையாது, காதல் தான் என்பது எனக்கு தெரியும், அவள் பக்கம் தெரியவில்லை. நிஜமாக தெரியவில்லை. என்னுடன் பேசுகையில் மிகவும் உற்சாகமாக பேசுகிறாள். வெறும் நட்பில் அவ்வளவு உற்சாகம் கிடைக்குமா என்று புரியவில்லை.

இப்பொழுதெல்லாம் என் இரவுகளின் நேரம் குறைவுதான். பேசி முடித்து படுக்கவே 12 ஆகி விடுகிறது. இத்தனை வருட வாழ்க்கையை இருவரும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாமா? இன்னொன்று சொல்கிறேன். இருவரும் அனைவருக்கும் தெரிந்து காதலித்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருப்பேனோ தெரியவில்லை. யாருக்கும் தெரியாமல் இரகசியமாக நட்பாக பழகுவது கூட தனிருசியை தருகிறது. இப்படி போய் கொண்டிருக்கையில் அவள் பிறந்த நாள் வந்தது.

இரவு 12 மணிக்கு பலர் அழைத்து வாழ்த்துவார்கள் என்று தெரியும், பத்தோடு பதினொன்றாக வாழ்த்த விரும்பவில்லை. அதனால் அன்று இரவு சீக்கிரமாக பேசி வைத்து விட்டேன். அடுத்தநாள் அலுவலகத்தில் அனைவரும் வாழ்த்திய பின்பு, மாலை அனைவரும் கிளம்பிய பின்பு நான் என் கேபினில் காத்திருந்தேன். நிச்சயம் அவள் எனக்காக வருவாள் என்று தெரியும். வந்தாள். எனக்காக தனியாக கேக்கும் சாக்லெட்டும் எடுத்து வந்திருந்தாள்.

நான் முதலில் அவளுக்காக 23 பரிசுகளை வாங்கி வைத்திருந்தேன். அதை அனைத்தையும் ஒன்றாக கிஃப்ட் பாக்ஸ் செய்து வைத்து தந்தேன். இந்நேரத்திற்கு மேல் யாரும் என் இடத்திற்கு, கேபினுக்குள் வர மாட்டார்கள் என்று இருவருக்கும் தெரியும். அங்கேயே பிரித்து பார்க்க சொன்னேன். அனைத்தும் அவளுக்கு பிடித்ததாக, பார்த்து பார்த்து வாங்கியது. அவள் ஒவ்வொன்றாக பார்த்து வியப்பதை அருகில் நின்று இரசித்துக் கொண்டிருந்தேன். மிகவும் மகிழ்ந்தாள். கேக், சாக்லெட்டை தந்தாள்.

“வேண்டாம்” என்றேன். “வேறென்ன வேண்டும்?” என்றாள்.

அவள் கண்ணை பார்த்தேன். முகத்தை பார்த்தேன். இறுதியாக அவள் இதழில் வந்து நின்றது என் பார்வை. என் எண்ணம் எனக்கே தவறாக பட்டது. என்ன இருந்தாலும் நான் அவளுக்கு மேலதிகாரி. இன்னும் நட்பென்றுதான் பழகிக் கொண்டிருக்கிறோம். என் ஆசையை சொல்ல மனம் வரவில்லை.

திடிரென என் முகம் ஒரு மாதிரி ஆகியதை கண்டவள் “என்னாச்சு?” என்றாள்.

“ஒன்னுமில்லை”

“உண்மையை சொல்லுங்க, என்னாச்சு?”

“உண்மையை சொல்லட்டும்மா, உன்கிட்ட ஏதாவது தப்பா கேட்டுருவனோனு பயமா இருக்கு”

சற்று நேரம் என்னை பார்த்தாள்.
“நானும் ஓரு உண்மையை சொல்லவா, நீ ஏதாவது தப்பா கேட்டா, கொடுத்துருவனோன்னு எனக்கும் பயமா இருக்கு” என்றாள்.

அவளை பார்த்தேன். அவள் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். நெருங்கினேன். என்னுள் அந்த நொடி எப்படி அனைத்தையும் கடந்து அப்படி தோன்றியதோ தெரியவில்லை. என்னை அறியாமல் அவளை அனைத்து இதழில் இதழ் பதித்தேன். பின் விலகும் பொழுது “ஐ லவ் யூ” என சொல்லி முடித்த பின்னர் தான் சுயநினைவே வந்தது போல் இருந்தது.

அவள் விலகவில்லை. என் மார்பிள் முகம் புதைத்துக் கொண்டாள். எப்படி என் பதவி எனும் மாயையை தாண்டினேன். அவளும் நாணத்தை கடந்தாள் என்று எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆம், அன்றுதான் எங்கள் காதலுக்கும் பிறந்த நாள்.

அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1134
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

உரை:
நாணத்தையும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம்(காதல்) என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.