Love Actually (2003) – குறளும் படமும்

வாழ்வில் நமக்கான இணையை காதல் எப்போது நம் கண்ணில் காட்டும் என்பதனை சொல்வது மிகக் கடினம். என் பெயர் டேவிட். என் வயது, அது எதற்கு? அதற்கும் காதலுக்கு சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் வேலையை தெரிந்து கொள்வது என் கதையை தெரிந்துக் கொள்ள அவசியம் என நம்புகிறேன். நான் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என் நாட்டின் பிரதமர். இந்தியாவை போல பிரதமர் என்றதும் 60க்கு மேல் தான் என நினைத்து விடாதீர்கள். குத்து மதிப்பாக 30-40க்குள் என் வயதை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வித சித்தாந்த பிடியில் சிக்கி, சிறுவயது முதல் வாழ்க்கையே போராட்டமாகவும் அரசியல் களமாகவுமே கழிந்தது எனக்கு. என் அக்கா கூட பேசும் பொழுது என் திருமணத்தை பற்றி நச்சரிப்பது உண்டு. எனக்கு காதலிலோ திருமணத்திலோ விருப்பம் இல்லாமல் இல்லை. நேரம் இல்லை என்பது ஒரு காரணம், இன்னொன்று அனைத்தையும் தாண்டி என்னை இதுவரை யாரும் ஈர்க்கவில்லை. அது நான் பிரதமராகும் வரைதான்.

பிரதமராக பதவி ஏற்று மக்களை பார்த்து கைகாட்டி விட்டு, எனக்கான அரசு மாளிகைக்குள் நுழைந்த பொழுதுதான் அவளை கண்டேன். மாளிகையில் பணிபுரியும் 10 பெண்களில் அவளும் ஒருத்தி, ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தும் பொழுது அவள் பெயரை கேட்க ஆவலுடன் காத்திருந்தேன். “நடாலி”. எனக்கு அவளையும் பிடித்திருந்தது, பெயரையும் பிடித்திருந்தது. அவளுக்கும் என்னை பிடித்திருந்ததை அவள் கண்களில் தெரிந்தது அல்லது என் பதவிக்கான மரியாதையா என தெரியவில்லை.

உண்மையில் நேற்று அவளை சந்தித்திருந்தால் அவள் பின்னால் சென்று, வழிமறித்து மண்டியிட்டு காதலை சொல்லியிருப்பேன். இன்று என் பதவி தடுக்கிறது, இன்று கூட அவள் எனக்கு கீழ் பணிபுரிபவளாக இல்லை என்றால் தயங்காமல் காதலை சொல்லி இருப்பேன். இன்று என் பதவி, அதன் மாண்பு அவளை நெருங்க விடாமல் தடுக்கிறது. ஆனால் அதிலும் ஒரு வசதி இருந்தது, அவளை என் அருகிலேயே வைத்துக் கொள்ள முடிந்தது.

அவளுக்கும் என் மீது ஒரு தனிப்பட்ட அன்பு இருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதனை அவள் பார்வையிலும் செய்கையிலும் உணர முடிந்தது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அவள் எனக்கு ஒரு குட்டி பொம்மை போல் இருந்தாள். உண்மையில் அவள் அருகாமையில் நிறைய தடுமாறினேன். சரி எனக்காக ஒரு தருணம் வராமலா போய்விடும், என் காதலை கட்டாயம் சொல்வேன் என்று இருக்கும் பொழுதுதான் அது நிகழ்ந்தது.

என் நாட்டிற்கு வந்திருந்த வேறு ஒரு நாட்டின் அதிபர் அவளை பார்த்த விதம், அவள் உடலை பற்றி வர்ணித்த விதம், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சரி வந்து போகிறவர்களை எதற்கு நொந்து கொள்ள என விட்டு விட்டேன். இது போல வரும் மாண்பு மிக்க விருந்தினர்களை உபசரிப்பது நடாலியின் பொறுப்பு. அவள் தான் அவருக்கும் சிற்றுண்டி கொண்டு சென்று கொடுத்தாள். நான் வேறு அறையில் இருந்து வரும் பொழுது அவர்கள் இருவரும் டக்கென விலகியதை பார்த்தேன். மனம் உடைந்தது.

என்னால் என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியவில்லை. அந்த அதிபர் குதர்க்கமாக சிரித்தது என்னை மேலும் வெறுப்பேற்றியது. நடாலி எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டாள். இரு நாடுகளின் உறவு குறித்து மேடையில் பேச நேர்ந்த பொழுது என் கோபத்தை காட்டமாக உரையில் காட்டினேன் இல்லை கொட்டினேன்.

அதற்கு பின்பு நடாலியை பார்க்க என்னால் முடியவில்லை. நான் விரும்பவில்லை. அவளை நானாகத்தான் என்னுடன் இருக்கும் வண்ணம் சிபாரிசு செய்து இருந்தேன். இப்போது நானாகத்தான் அவள் என்னை நெருங்காமல் பார்த்துக் கொண்டேன். ஆனால் நான் நிம்மதியாக இல்லை என்பது தான் உண்மை. ஏன் நடாலி ஏன்?

கிறிஸ்துமஸ் இரவு, எனக்கான பாதுகாவலர்கள் தவிர்த்து அனைவரும் குடும்பத்தினருடன் கொண்டாட சென்று விட்டார்கள். எனக்கு குடும்பம் என்றால் அக்கா குடும்பம் தான், அவள் பிள்ளைகளும் பள்ளி கலைநிகழ்ச்சியின் கலந்து கொள்வதாகவும் நான் கட்டாயம் வர வேண்டும் என்று விரும்பி அழைத்தார்கள். எனக்கு எதிலும் பெரிதாய் விருப்பமில்லை.

தனிமையில் அவள் நினைவுகள் தான். ஏன் நடாலி ஏன்? நீ என்னை நேசிக்கவில்லையா? நீ எனக்கானவள் இல்லையா? மனம் புலம்ப துவங்கியது. ஒரே கேள்விதான் உள்ளுக்குள் “நீ எனக்கானவள் இல்லையா?”. அலுவலகத்தில் அமர்ந்து எந்த வேலையும் ஓடவில்லை. எனக்கு வந்த வாழ்த்து மடல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். எதெச்சையாக அதில் நடாலியின் கையெழுத்து கண்ணில் பட்டது. வேகமாக எடுத்து பார்த்தேன்.

“சந்தேகம் வேண்டாம், நான் உன்னுடையவள் தான்”

ஓ நடாலி, என் மனதின் குரல் அவளுக்கு கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் என் கேள்விக்கு நேரடியான பதிலை எழுதி இருக்க முடியுமா? எனக்கு உடனே அவளை பார்க்க வேண்டும். இதற்கு மேலும் நான் பிரதமர் என்ற வேலிக்குள் நிற்க முடியாது. எனக்கு வலி, அச்சம், பயம், கூச்சம் எதுவும் தெரியவில்லை. எனக்கு அவளை, என் நடாலியை பார்க்க வேண்டும்.

என் உதவியாளரை அழைத்து அவள் வீட்டு முகவரியை கேட்டேன். அவருக்கு அவள் தெரு பெயர் மட்டும் தான் தெரிந்திருந்தது. கிளம்பினேன். நான் தடுத்தும் என் பாதுகாவலர்கள் உடன் வந்தார்கள். அந்த தெருவில் சென்று ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டினேன். திறந்தவர்களிடம் அவள் பெயர் சொல்லி கேட்டேன், உடன் நிற்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை கண்டு மிரண்ட வண்ணம் தெரியாது என்றார்கள். “Happy Christmas” என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டை தட்டினேன்.

ஒவ்வொருவரும் பிரதமர் தன் வீட்டு கதவை தட்டி வாழ்த்து சொன்னதற்கு பெரிதும் உற்சாகமடைந்தனர். எனக்கு அவளை பார்க்கையில் தான் அனைத்தும். 5 வது வீடாக அவள் வீடு அமைந்தது. ஆனால் மொத்த குடும்பமும் எங்கோ கிளம்பி கொண்டிருந்தார்கள். அவள் உட்பட, எனக்கு அவளை தனிமையில் சந்திக்க வேண்டுமே. பிரதமர் தான். அவள் குடும்பத்தினரிடம் அதிகாரத்தை காட்ட முடியுமா? ஒரு முக்கியமான விஷயமாக பேச வேண்டும் என அழைத்தேன். யோசனை பலிக்கவில்லை.

குடும்பமே அவள் வீட்டு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிக்காக கிளம்பிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி அவர்களுடன் நானும் சென்றேன். அனைவரும் உள்ளே சென்ற பின் அவள் என்னை தனியாக அழைத்து சென்றாள். இது அவள் படித்த பள்ளி. இரக்சியமாக மேடைக்கு பின்புறம் அழைத்து செல்கையில் என் அக்கா குடும்பத்தை சந்தித்தேன். அவர்களுக்காக நான் வந்ததாக நினைத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.

நிகழ்ச்சி துவங்கிய பின் மேடைக்கு பின் ஒளிந்தோம். அதன் பின் பேச உதடுகளை பயன் படுத்தவில்லை.

மேலே சொன்னது Love Actually படத்தில் வரும் 7 காதல்களில் ஒன்று. இதில் ஒரு விஷயம் கவனித்தீர்களா? பசிக்கு அடுத்து உங்களின் வலி, அச்சம், கூச்சம் அனைத்தையும் கடக்க செய்வது காதல் தான்.

அந்தக் காலத்தில் காதலை நிருபிக்க “மடலேறுதல்” என்றொரு விஷயம் இருந்திருக்கிறது. பெண் காதலிப்பது அறிந்து அது பிடிக்காமல் அவளை வீட்டிற்குள் சிறைப்படுத்தி இருந்தால், அவள் தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தன் காதலின் உறுதியை தெரிவிக்க காதலன், பனைமர கருக்குகளினால் குதிரை உருவம் செய்து, அதன் மீதேறி பனைகருக்கு குத்த குத்த இரத்தம் சொட்ட சொட்ட கருப்பு துணியில் காதலியின் படம் வரைந்த கொடியை கையில் பிடித்த படி ஊரை வலம் வருவானாம். அதை காணும் ஊரார், அவன் படும் கஷ்டம் பொறுக்காமல் காதலியின் தந்தையிடம் பேசி சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்களாம்.

இதில் அனைவர் முன்பாகவும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் காதலுக்காக மடலேறுகையில் கூச்சம், தயக்கத்தையும், வெற்று உடம்புடன் பனைகருக்கை அணைத்து வரும் போது வலியையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டுதானே செய்கிறார்கள். இதில்தான் காதலின் மகத்துவம் இருக்கிறது.

அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1132
நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து

உரை:
தலைமகளைக் காணப் பெறாமையால் வந்த வருத்தத்தைத் தாங்க முடியாத உடம்பும் உயிரும், வெட்கத்தை விலக்கித் தூர நிறுத்திவிட்டு மடற் குதிரையை ஏறத் துணிகின்றன.