காமம் உழந்து வருந்தினார்க்கு – குறள்கதை

“வேற வழியே இல்லையா கார்த்திக்?”

“இல்லை ஜோதி, எனக்கு வேற எதுவும் தோணலை, எனக்கு உங்க அப்பா பேசுனதை விட எங்க அப்பா பேசுன வார்த்தை ஒவ்வொன்னும் செருப்புல அடிச்ச மாதிரி இருந்தது. அவரை தப்பு சொல்ல முடியாது, என் தப்புதான், அவர் காலடிலயே கிடந்தது என் தப்புதான்”

“கேட்கறேன்னு தப்பா நினைக்காதடா, உன்னால முடியும்னு நம்பறியா?”

“ஹிம், நம்பிக்கை இருக்குன்னுலாம் பொய் சொல்ல விரும்பலை, ஆனா செஞ்சே ஆகனும், ஏதாவது ஒரு வழியில, நீ கவலைப்படாதே, என்னை நம்பு, நாம ஆசைப்பட்ட மாதிரி வாழ்வோம்”

“கண்டிப்பா, நீ போய்ட்டு போன் பண்ணு, செலவுக்கு பணம் வேணுமா?”

“இல்லை ஜோதி, எனக்கு இனிமேல் தேவைப்பட்டாலும் நான் வேலைக்கு போற வரைக்கும் உன்கிட்ட பணம் வாங்க மாட்டேன், என்னை தப்பா நினைக்காதே, நான் போய் சேர்ந்துட்டு உனக்கு போன் பன்றேன்.”

காதல், அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதை விட எல்லோர்க்கும் வரும் என்று சொல்லலாம். ஆனால் அதன் சிறப்பு குணமே ஒரு வேகமான புயல் காற்றை போல வந்தவுடன் இருக்கும் அமைப்பை மாற்றாமல் செல்லாது. உறுதியாக சொல்லலாம், ஏன் பந்தயமே கட்டலாம், முன்பின் தெரியாத ஒருவரை கூப்பிட்டு அவர் காதலிப்பதற்கு முன்பும் பின்பும் வாழ்வில் அவர்க்கு ஏற்பட்ட மாற்றங்களை கேளுங்கள், ஏதேனும் ஒன்று மாறியிருக்கும்.

நன்றாக இருந்தால் உடைக்கும், உடைந்து இருந்தால் சேர்க்கும். காதல் ஒரு பைத்தியம் பிடித்த குழந்தை. நொந்துக் கொள்ளவும் முடியாது. கார்த்திக் அனைத்தையும் இழந்து தனியாய் ஊரை விட்டு போவதற்கும் காதல் தான் காரணம். கார்த்திக்கின் காதலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அவனை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். நல்ல பையன் தான். 28 வயதாகிறது. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அதை பழகுவதற்கு கூட லாயக்கில்லை என்று சொல்வார்கள்.

முன்பு போல் இல்லை தற்போது, முன்பெல்லாம் ஒரு வீட்டில் தறுதலையாக சுற்றுபவர்களின் எதிர்காலத்தை எண்ணித்தான் வீட்டினர் பயந்துக் கொண்டிருந்தனர். இப்போது அப்படி அல்ல, அது போல இருப்பவர்கள் அரசியலிலோ அல்லது ஏதேனும் தொழிலிலோ யார் காலையாவது பிடித்தோ வாரியோ பிழைத்துக் கொள்வார்கள் என நம்புகிறார்கள். அம்மாஞ்சியாய் பெரிய சிந்தனை இல்லாமல், எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் தேமே என்று இருப்பவர்களை கண்டுதான் பயப்படுகிறார்கள்.

கார்த்திக் அந்த ரகம் தான். பெரிதாய் படிப்பு ஏறவில்லை. பேருக்கு ஒரு டிகிரி படித்தான். பார்டரில் பாஸ் ஆனான். அதனால் அவனுக்கு சிபாரிசில் கூட வேலை வாங்கித்தர யாரும் தயாராய் இல்லை. அப்பாவிற்கு உதவியாய் அவரது பாத்திரக்கடையில் அமர துவங்கினான். அப்பாக்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களில் அனைவருக்கும் இந்த குணம் உண்டு, ஒருவன் தன் காலடியில் சரணடைந்து விட்டால் இஷ்டத்திற்கு மிதிப்பது. கார்த்திக்கை மிதிக்கவுமில்லை, மதிக்கவுமில்லை. கடையிலும் அவன் ஒரு சம்பளமில்லா வேலைக்காரன் தான், நம்பி எந்த பொறுப்பையும் தரவில்லை. அவனும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு, துணிமணி, வீடு, கடை, அப்பா, அம்மா, தங்கை. நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவன் காதலில் பிரச்சனை வரும் வரை.

ஜோதியும் கார்த்திக்கும் பள்ளியில் இருந்து சினேகம், அது கல்லூரிக்கு போனபின்பு காதலாக பரிணமித்தது. ஜோதி நன்றாக படிப்பவள். ஆனால் வீட்டில் வெளியூருக்கு அனுப்பி படிக்கவைக்க விரும்பாததால் உள்ளூர் கல்லூரியில் படித்தாள். தற்போது ஒரு தனியார் ஆரம்ப பள்ளியில் பணிபுரிகிறாள். அவள் வீட்டில் வரன் பார்க்கும் பொழுதுதான் பிரச்சனை துவங்கியது.

வெவ்வேறு ஜாதி என்றாலும் வெட்டிக் கொள்ளுமளவிற்கு விரோதம் இல்லை. ஆனால் விருப்பமில்லை. அதையும் மீறி என் பெண்ணை கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் உன் அப்பாவை என் வீட்டிற்கு வந்து பெண் கேட்க சொல் என்று பாலை அவன் அப்பா கோர்ட்டிற்கு தட்டி விட்டார் ஜோதியின் அப்பா.

எதிர்த்து பேசும் பிள்ளையாய் இருந்தால் காதலியை கூட்டிச் சென்று கோவிலில் வைத்து தாலி கட்டி கூட்டி வந்திருப்பான். இந்த வயசிலும் அப்பா வீட்டினுள் நுழைந்தால் கதவிடுக்கில் ஒளிபவனால் என்ன செய்ய முடியும்? தங்கை மூலமாக அம்மாவிடம் சொல்லி அப்பா காதில் ஓத வைத்தான். அவன் அப்பா பொறுமையாக வீட்டில் சொந்தபந்தங்கள் அனைவரையும் வரவழைத்து நடுகூடத்தில் நிற்க வைத்து அவனை நிர்வாணமாய் நிற்க வைக்காததுதான் குறை, அசிங்கப்படுத்தி விட்டார். தன் உழைப்பில் உண்டது போல் ஜோதி உழைப்பில் பிழைக்க போகிறாயா? என்ற கேள்வி அவனை முழுதாக கொன்றுவிட்டது.

குடும்பத்திற்குள் நடந்திருந்தால் வேறு, சொந்தபந்தம் மூலம் அவன் நிலை ஊர் முழுக்க பரவியது, ஜோதி வரை சென்ற பின்னர் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. மற்றவர்களாய் இருந்திருந்தால் ஜோதியுடன் ஊரை விட்டு ஓடி இருப்பார்கள். இவனுக்கு அந்த புத்தி இல்லை என நன்கு தெரிந்ததால் தான் இருவரின் அப்பாவும் தயங்காமல் அவன் சுயமரியாதையை காலில் நசுக்கினார்கள்.

ஒரு ஆண் மற்ற நேரத்தில் இருப்பது போல் தான் காதலிலும் இருப்பான் என நினைப்பதை விட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை போல ஒருத்தனுக்காக வீட்டை விட்டு வர தயாரான ஜோதி போன்ற ஒருத்திக்காக எதையும் செய்யலாம் என்றுணர்ந்த கார்த்திக் ஆற அமர யோசித்து ஒரு முடிவெடுத்து சென்னை கிளம்பினான்.

ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்தான். மீதி நேரத்தில் மனித நேயம் அறக்கட்டளையில் சேர்ந்து படித்தான். எடுத்தவுடன் அனைத்தும் கிடைத்து விடாது என்பதனை விட மறுக்க முடியாத உண்மை விடாமுயற்சி என்றும் பலன் தரும் என்பது. ஒவ்வொரு தேர்வாக தேர்ச்சி பெற்று அவன் Group 1ல் தேர்ச்சி பெற்று DSP ஆக 4 வருடம் ஆகியிருந்தது.

அதுவரை எதற்காகவும் ஊர் பக்கம் செல்லாமல் இருந்தான் கார்த்திக். அவன் அப்பாவே அவனை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முதல் வருடத்திற்கு பின் வந்திருந்தார். சமாதானமாக பேசினானே தவிர வர மறுத்து விட்டான். எப்படி அவன் ஊரார் முகத்தில் முழிக்க முடியும் என்று யோசித்த வண்ணம் அவன் உழைத்த உழைப்பு வீண் போகவில்லை. அவன் திரும்ப ஊருக்குள் வரும் போது அடியோடு மாறியிருந்தான். தனக்காக அனைத்தையும் துறந்து ஊரை விட்டு சென்ற கார்த்திக் நிச்சயம் வருவான் என நம்பிக்கையுடன் காத்திருந்தாள் ஜோதி. அவளும் இடையில் படித்து அரசு பள்ளியில் வேலை வாங்கி இருந்தாள்.

கார்த்திக்கோ அவன் குடும்பமோ போய் பெண் கேட்கவில்லை. அவனுக்காக, அவன் பட்ட கஷ்டத்திற்காக அந்த ஊர் முழுக்க அவன் சார்பாக சென்று பெண் கேட்டது. மறுக்க முடியுமா? பெரும் விமரிசையாக திருமணம் நடந்தது. இந்தக் கதையை ஒரு மேடையில் கார்த்திக் சொல்லி நான் கேட்டேன். யார் முழுவதும் இறங்கி உழைத்து படித்தாலும் வேலை கிடைக்கும் என சொல்வதற்காக இதை சொல்லி இருந்தார்.

ஆனால் எனக்கு இன்னொரு விஷயம் பெரிதாக பட்டது, ஊர் கூடி சென்று பெண் கேட்டது. எவ்வளவு பெரிய கௌரவம் அது. ஒரு பெண்ணிற்காக அனைத்தையும் துறந்து, உடல் வருத்தி உழைப்பவனுக்கு காதல் கைகூட சுற்றமும் உற்றமும் உதவ முன்வரும்.

அந்தக் காலத்தில் காதலை நிருபிக்க “மடலேறுதல்” என்றொரு விஷயம் இருந்திருக்கிறது. பெண் காதலிப்பது அறிந்து அது பிடிக்காமல் அவளை வீட்டிற்குள் சிறைப்படுத்தி இருந்தால், அவள் தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தன் காதலின் உறுதியை தெரிவிக்க காதலன், பனைமர கருக்குகளினால் குதிரை உருவம் செய்து, அதன் மீதேறி பனைகருக்கு குத்த குத்த இரத்தம் சொட்ட சொட்ட கருப்பு துணியில் காதலியின் படம் வரைந்த கொடியை கையில் பிடித்த படி ஊரை வலம் வருவானாம். அதை காணும் ஊரார், அவன் படும் கஷ்டம் பொறுக்காமல் காதலியின் தந்தையிடம் பேசி சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்களாம்.

இக்காலத்தில் அப்படி செய்வதை விட, யாருக்கும் தெரியாமல் ஓடுவதை விட, காதலிக்காக உழைத்து உயர்நிலையை அடைந்தால் போதும், தானாக காதல் கைக்கூடும்.

அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி

உரை:
காதல் கொண்டு முயன்று துன்புற்றவர்க்கு உறுதியான வலிமை மடல்ஊர்தலேயல்லது பிறிது இல்லை