500 ரூபாயில் மின்சாரமில்லா AC

கண்டுபிடிப்புகள் குறித்து இரண்டு விஷயங்கள் சமீபத்தில் யோசிக்க வைத்தது. ஒன்று மகளீர் தினத்தன்று படித்தது, கிரைண்டரோ, வாஷிங்மிசினோ, மிக்சியோ அனைத்தும் எப்பொழுது கண்டுபிடிக்க பட்டது என்று யோசியுங்கள். தொழிற்புரட்சி ஏற்பட்டு பெண்களும் வேலைக்கு செல்ல துவங்கிய பின், அதாவது வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவ துவங்கிய பொழுது கடினமான வேலைகளை செய்கையில் இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்க வேண்டுமே என்ற தேடலின் விளைவாக கிடைத்தவைதான் வீட்டு உபயோக பொருட்கள். இது முதல் விஷயம்.

இரண்டாவது இதே காரணத்தினால் தான், படித்த அல்லது நன்கு சிந்திக்க தெரிந்தவர்களை செய்ய வைக்கும் வரை மலம் அள்ளவோ, சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்யவோ எளிதான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்படாது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரச்சனை. அதற்கு எதற்கு மூளையை செலவளிக்க வேண்டும் என அறிஞர்கள் ஒதுங்கி உள்ளார்கள் போல. ஆனால் இனி அப்படி அல்ல, சாமானியனும் அவன் தேவைக்கேற்ப இயந்திரங்களை உருவாக்க துவங்கிவிட்டான். உதாரணம் இந்த Eco cooler.

தென்னிந்தியாவை விட வடக்கே குளிரும் வெயிலும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இரண்டுக்கும் பொதுவான ஒரு விஷயம் வறுமை. இங்கே குடிசைகள் நிறைந்த சேரிகளை போல், அங்கு வெறும் தகர கொட்டகைகளால் வீடு அமைத்து பல நூறு மக்கள் தங்கி இருக்கும் இடங்கள் உண்டு. குளிரை கூட குப்பைகளை கொளுத்தி சமாளித்து விடுவார்கள். கோடையில் வெயிலை சமாளிப்பது மிக கடினம். சாதாரணமாக 45-50 டிகிரி வெப்பநிலை இருக்கும். தெருவில் இறங்கி நடக்க வேண்டாம். வீட்டுக்குள் இருந்தாலே வேக துவங்கி விடும். அதுவும் தகர கொட்டகையில் இருப்பவர்களை நினைத்து பாருங்கள்.

ஆஷிஸ் பால் என்ற ஒரு பங்களாதேஷி. பள்ளிக்கு செல்லாதவர். மகன் அறிவியல் பாடம் படிக்கும் பொழுது வாயுக்களில் அழுத்தம் பாடங்களை சொல்லி பார்த்து படிக்கிறான். அதை மறக்காமல் இருக்க அவனுக்கு வகுப்பில் சொல்லி கொடுத்த எளிய உதாரணம் தான் வாய் திறந்து ஊதுவது. வாயை அகலமாக வைத்து ஊதினால் சூடாக வரும் காற்று, சுருக்கி ஊதுகையில் சில்லென்று வருவதற்கு காரணம் வாயு மூலக்கூறுகளில் அழுத்தம் ஏற்படும் பொழுது ஏற்படும் வெப்பநிலை மாற்றம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்கிறார். அப்படியென்றால் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும் காற்றை சுருக்கி வரவழைக்க முயன்றால் குளிராக வருமா என யோசித்திருக்கிறார். விளைவு Eco cooler.

எத்தனையோ பேர் மரத்தடியில் படுத்து உறங்கி இருக்கின்றனர். எவ்வளவோ பேர் தலையில் ஆப்பிள் மட்டுமா பல காய்கள்/பழங்கள் விழுந்துள்ளன. இருந்தும் நியுட்டனால் மட்டும் தானே புவிஈர்ப்பு விசையை கண்டறிய முடிந்தது. காரணம் அவருக்குள் இருந்த தேடல். அதே போல் தனக்கு இருந்த தேவை ஆஷிஸை புதுவித ஏர் கூலரை உருவாக்க வைத்தது. அதுவும் மின்சாரம் தேவைப்படாத, அதிகபட்சம் 500 ரூபாய் கூட செலவாகாத, 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைக்கும் Eco cooler.

வீட்டு ஜன்னல் அளவுக்கேற்றார் போல் ஒரு அட்டை அல்லது தெர்மோகோல், அதில் சீரான இடைவெளி விட்டு, காலியான குளிர்பான பாட்டில்களை சொருகி, ஜன்னலில் மாட்டினால் போதும். Eco cooler தயார்.

தென்னிந்திய மக்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக இந்த கோடையில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மேலும் என்னதால் வீட்டில் AC போட்டிருந்தாலும் மின்சாரம் வேண்டுமே? அது சும்மாவா வருகிறது? இப்போது அரசு விற்கும் விலைக்கு கட்டுப்படியாகுமா? இன்னும் நாம் சோலாருக்கு மாறவில்லையே? அது மட்டும் இல்லாமல் உண்மையான AC மூலம் தான் உலக வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனைவரும் அறிந்தது. மாற்று வழிக்கு போயாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் வெப்பம் குறைந்து இருப்பதுதான் நலம், அதற்கு இந்த Eco cooler உதவும் என நம்புகிறேன்.

வழக்கமாக சிறுவர்களுக்கு பட்டம் செய்து தருபவர்கள் வித்தியாசமாக இதை முயற்சிக்கலாம். கோடை விடுமுறையில் சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு இதனை ஒரு புராஜக்டாக கொடுத்து செய்ய சொல்லலாம். இது அனைவருக்கும் சென்று சேர வேண்டிய தகவல். நிச்சயம் பணப்பற்றாக்குறையால் புழுக்கத்தில் வெந்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும்.

முடிந்த வரை இந்த தகவலை பகிரலாம். மேற்படி தகவலுக்கு இந்த வீடியோ உதவும்.