திட்டு ஸ்ரீ திட்டு – சிறுகதை

என்னடா?

ம்

ஏன் ஒரு மாதிரி இருக்க?

அது…

சொல்லுடா

ஸ்ரீமதி இருக்கா இல்லை?

யாரு, உன் லவ்வரோட இருக்குமே அந்த பொண்ணா?

ஆமா

அவளுக்கென்ன?

அவ என்னை லவ் பன்றாளாம்

காதல் போல ஒரு சுவாரசியமான விளையாட்டு வேறு எதுவும் கிடையாது. விளையாடுவதற்கு சொல்லவில்லை. வேடிக்கை பார்க்க சுவாரசியமானது. சில நேரங்களில் பொறாமையை தூண்டினாலும் அருகில் இருந்து பார்ப்பது தனி சுகம். கல்லூரி காலங்களில் காதலே அமையாதவர்களுக்கு இதை விட்டால் வேறு வேலையும் இல்லை. ஆண்கள் தம் நண்பர்களுடன் காதல் பற்றி முழுவதையும் பகிர்ந்துக் கொள்ள தயங்குவதில்லை. ஏனெனில் அவர்களது காதலுக்கு நண்பர்களின் உதவி கட்டாயம் தேவை. என்னுடைய வேலையும் நண்பனது காதலில் நடக்கும் விஷயங்களை கேட்பதுதான். இருந்தாலும் என்னைப்போல் ஒருவன் ஒண்டிக்கட்டையாக சுற்றும் பொழுது, ஒருவனையே இரு பெண்கள், அதுவும் தன் தோழியின் காதலனுக்கே ஒருத்தி புரப்போஸ் செய்திருக்கிறாள் என்றால் எனக்கு வயிறு எப்படி எரிந்திருக்கும்?

அருண் என்னை விட ரொம்ப பெரிய அழகன் இல்லை. இருந்தும் அழகாக பேசுவான், எனக்கு அது வரவே வராது. சரி நம் விதி அப்படி என இருக்கலாம் தான், ஏற்கனவே பூஜா போன்ற ஒரு அழகான பெண் நண்பனுக்கு காதலியாய் அமைந்ததே பொறாமையை தூண்டியது. இதில் ஸ்ரீமதி போல் இன்னொருத்தி வேறு? வயித்தெரிச்சலை வெளிக்காட்டாமல் பேசினேன்.

என்னடா சொல்ற? உன் காதலியோட தோழி உன்னை காதலிக்கிறாளாமா?

ஆமா

ஏன்? உனக்கும் பூஜாக்கும் ஏதாவது பிரச்சனையா? நேத்துக் கூட விடிய விடிய போன் பேசிட்டு இருந்தியே?

எங்களுக்குள்ள ஏதும் பிரச்சனை இல்லைடா, இவதான் புதுசா குட்டையை குழப்பறா?

இப்ப என்ன செய்ய போற?

எனக்கு தெரியலைடா

ஒரே நேரத்துல ரெண்டு பேரையும் ஓட்டாதடா, அது இன்னோருத்தனோட இட்லி

பூஜாகிட்ட சொல்லிட போறேன்

அவசரப்படாதடா

ஏன்?

இப்ப பிரிட்ஜ் கோர்ஸ் தான், 2 மாசம் முடியும் போதுதான் யார் இதே காலேஜ்ல படிக்க போறாங்கன்னு தெரியும், நீ பூஜாக்கு உண்மையா இருந்து, அவ வேற காலேஜ் போய்ட்டா?

டேய் அதனால என்னடா? எங்கே இருந்தாலும் காதல் மாறாதுடா, பூஜாக்கு என்னால துரோகம் பண்ண முடியாது

நல்லவங்க பேச்சு என்னைக்கு ரீச் ஆகிருக்குன்னு நானும் என் வேலையை பார்க்க போய்ட்டேன். ஒரு வாரம் போனதும் பையன் புலம்ப ஆரம்பிச்சுட்டான். எப்ப பாரு ஒரே சண்டையாம், இவன் எதுவும் பண்ணாம ஸ்ரீமதி எப்படி புரப்போஸ் பண்ணிருப்பான்னு கேட்கறாளாம், இவனால நல்ல ஃபிரண்டை இழந்துட்டாளாம், அழுதுகிட்டே திட்றதால சண்டை போடவும் முடியலை. எல்லாத்தையும் கொண்டு வந்து என்கிட்ட புலம்பி தீர்த்தான்.

எனக்கு உள்ளுக்குள்ள ஒரே சந்தோசம், என் வயித்தெரிச்சல் சும்மா விடுமா? காட்டிக்கலை. நானாவது 2 மாசம் பொறுன்னு சொன்னேன். ஒரு மாசம் கூட தாங்கலை. பூஜா காலேஜ்க்கு வரதில்லை. நின்னுட்டா. எனக்கு பயங்கர சந்தோஷம்.

“விடு அருண், இந்த பொண்ணுங்களே இப்படித்தான்”ன்னு சமாதானபடுத்தினேன்.

இப்பவாவது என் பேச்சை கேட்டுட்டு அமைதியா இருந்துருக்கனும். ஒரு தடவை காதலிச்சு பழகனவனால அது இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. அதான் அதேதான். அடுத்து ஸ்ரீமதி பக்கம் திரும்புனான். இவனை நேசிச்சு காதலை சொன்ன தேவதை, இவன் ஓட்ட வாய்னால பேர் கெட்டு, பொண்ணுங்க கூட அதிகம் பழக முடியாம பார்க்கறப்பலாம் அருணையும் கூட இருந்த பாவத்துக்கு என்னையும் முறைச்சுட்டு இருந்தா.

பூஜா போன ஒரு வாரத்துக்கு மேல பையனால தாங்க முடியலை

“மச்சு, நான் ஸ்ரீ கிட்ட புரபோஸ் பண்ண போறன்டா”

“பண்ணு மச்சி” (எனக்கும் போரடிக்குதுல்லை)

இவனுக்கு காதலும் தைரியமும் வந்த பொழுது அவள் ஊரில் இல்லை. சொந்த ஊரில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக் இருந்தாள். அவள் தேறி வரும் வரை கூட காத்திருக்க முடியவில்லை. எப்படியோ அலைந்து அவளது போன் நம்பர் வாங்கி அழைத்து பேசினான். நான் அருகில் தான் இருந்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.

இவன் முதலில் பதமாக உடல்நலத்தை விசாரித்து விட்டு படிப்படியாக காதல் குறித்து பேச துவங்கியதும் அவள் அழ துவங்கினாள்.

“அழாத ஸ்ரீ”

“போடா, எருமை மாடு, பன்னி, பிசாசு, உன்னால என்னை எல்லோரும் எப்படி கேவலமா பேசுனாங்க தெரியுமா?”

“திட்டு ஸ்ரீ திட்டு”

“போடா”

“திட்டு ஸ்ரீ திட்டு, உன்னோட உண்மையான காதலை புரிஞ்சுக்காத எனக்கு இதெல்லாம் தேவைதான்” நிஜமாலும் ஃபீல் பண்ணி அழற மாதிரி பேசிட்டு இருந்தான். எனக்கு சிரிப்பை அடக்க முடியலை. நல்லா யோசிங்க இதே மாடுலேஷன்ல வேற ஒரு வசனம் ஞாபகம் வரும். “குத்துங்க எஜமான் குத்துங்க”

“திட்டு ஸ்ரீ திட்டு”

இவன் விடாம அதையே சொல்ல, எனக்கு சிரிப்பை அடக்கி அடக்கி வயிறு வலிக்க ஆரம்பிச்சுருச்சு. திரும்பி மறைத்து கொண்டு சிரித்தேன். இவன் பேசியதும் நன்றாக வேலை செய்தது. போனை வைக்கும் பொழுது இரண்டு பேரும் “லவ் யூ” சொல்லிகிட்டுதான் வச்சாங்க. அது மட்டும்தான் வயித்தெரிச்சலா இருந்தது.

அடுத்து 2 பேரும் பயங்கர காதல், ஒட்டுமொத்த காலேஜே திரும்பி பார்க்கற மாதிரி காதலிச்சாங்க. நான் தினமும் ஜெலுசில் குடிச்சுட்டு தான் படுத்தேன்.

அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை. பிரிட்ஜ் கோர்ஸ் முடியும் போது அருணுக்கு வேற நல்ல காலேஜ் கிடைக்கவும் போய்ட்டான். நானும் ஸ்ரீமதியும் தான் 4 வருசம் ஒண்ணா படிச்சோம். அவளோட 1.5 மாத காதல் கதையை நான் அதிகம் யார்கிட்டவும் பகிர்ந்துக்கலை. ஆனா அவளை பார்க்கும் போது சிரிப்பா வரும்.

4 வருசம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் அடடா, பேசாமா நாம பேசி பழக ஆரம்பிச்சுருந்தா நமக்கு செட்டாகிருக்குமேன்னு தோணுச்சு. இப்படி இருக்க டியுப்லைட்டுக்கு வாழ்க்கைல ஏதாவது நல்லது நடக்கும்?