முதல் முத்தம் – சிறுகதை

“என்னம்மா சொல்ற? ஹனிமூன் போரடிக்குதா?” உண்மையில் அதிர்ந்துவிட்டான் அருண். பின் யாரால் தான் அதிராமல் இருக்க முடியும்? திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். தூரத்து உறவு என சொன்னார்கள். இருவருக்கும் சரியான வயது, சரியான வேலை, கைநிறைய சம்பளம், திருமண பேச்சை எடுத்து 2 மாதங்களுக்குள் தாலியே கட்டி முடிந்தாகி விட்டது. அவ்வளவு விரைவாக அனைத்தும் முடிந்திருந்தது. பார்த்த முதல் பெண்ணே அமையும் கொடுப்பினை அனைவருக்கும் அமையாது. அருணுக்கு அமைந்தது. உண்மையில் அருணுக்கு ஸ்ரீமதியிடம் பிடித்தது அவளது குழந்தைத்தனமான முகம் தான். பெண் பார்த்த அடுத்த நாளே நிச்சயம், 45 நாளில் திருமணம். அதிகம் சுற்ற முடியவில்லை என்றாலும் இருவரும் இடைப்பட்ட காலத்தில் பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்.

திருமணம் முடிந்து தேனிலவு என்ற பேச்சு வரும் பொழுது, யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த கலாச்சாரம் இன்னும் அவர்கள் குடும்பத்திற்குள் நுழையாமல் இருந்தது. தனியாய் அனுப்பவும் தயங்கினார்கள். அதனால் தொலைவாக வேண்டாமென்று பக்கத்தில் சொந்தபந்தங்கள் இருக்கும் ஊரான ஊட்டிக்கு அனுப்பினார்கள். முதல் இரண்டு நாள் சுற்றவும் கொண்டாடவும் நன்றாகத்தான் போனது. மூன்றாவது நாள்தான் ஸ்ரீமதி முகம் வாடிப்போய் இருந்தது. ஏன் இப்படி இருக்க என கேட்டதற்குத்தான் இந்த பதில். ஹனிமூன் போரடிக்கிறது என்றால் அவன் எப்படி எடுத்துக் கொள்வான், பாவம்.

Image result for pizza film

“எதுல போரடிக்குது? தெளிவா சொல்லும்மா?”

“ச்சீ, அதே நினைப்பு போடா”

“அதுல எதுவும் குறை இல்லைதானே? ஹப்பாடா”

“ஏன் அதுல குறைன்னு சொன்ன என்ன செய்வ?”

“தெரியலை, நீ பேச்சை மாத்தாத, உனக்கென்ன குழப்பம்? எதை போரடிக்குதுன்னு சொன்ன?”

“இங்கேதான் போரடிக்குது, நீதான் போரடிக்குற, பேசலாம்னு சொல்ற, ஆனா சுவாரசியமா பேசாம மொக்கை போடற”

“என்னை பேச சொன்னா அப்படித்தான் இருக்கும், நீ கேளு நான் பதில் சொல்றேன்”

“ம், சொல்லு, இதுவரைக்கு எத்தனை லவ் பண்ணிருக்க, உண்மையை சொல்லு”

“எத்தனை, ஒரு 20 இருக்கும், முதல் லவ், நான் 10 வது படிக்கும் போது…”

“அய்யோ, பார்த்தியா? மறுபடியும் மொக்கை போடற, சினிமா பார்த்து பார்த்து ரொம்ப கெட்டு போயிருக்க, பிடிச்ச பொண்ணை, அழகான பொண்ணை ஃபாலோ பன்றதைல்லாம் லவ் ப்ண்ணேனு சொல்லிட்டுருப்ப, உன்னை வேற மாதிரி கேட்கறேன்”

“என்னடாம்மு பொசுக்குன்னு என் லவ்வை அசிங்க படுத்திட்ட?”

“நீ ஆரம்பிச்சது அப்படி மாமு, 10வது படிக்கும் போது என்ன பெருசா லவ் பண்ணிருக்க போற?”

“அது.. சரி வேண்டம் விடு, எதுக்கு சொல்லி அசிங்க படனும், நீ கேளு”

“நான் கேட்பேன், நீ முழுசா உண்மையைதான் சொல்லனும், எதையும் மறைக்க கூடாது, என் மேல சத்தியம் பண்ணு”

“சத்தியம்லாம் தேவை இல்லைடா, உன்கிட்ட உண்மையதான் சொல்லுவேன் நீ நம்பி கேளு”

“முதல் முதலா நீ யாருக்கு முத்தம் கொடுத்த? ஐ மீன் எந்த பொண்ணுக்கு? தைரியமா சொல்லு நான் கோச்சுக்க மாட்டேன்”

அருணின் முகம் குறும்பாக சிரித்தது

“இப்ப எதுக்கு அம்மு இதெல்லாம்?”

“ஹேய் நீ அசடு வழியறதை பார்க்க நல்லாருக்கு மாமு, சொல்லேன், யாருக்கு கொடுத்த?”

“என்னடா இது? வழக்கமா பொண்ணுங்களுக்கு அவங்க ஆளுங்களோட பழைய ரிலேஷன்ஷிப் பத்தி பேசுனாலே கடுப்பாகும், நீ என்ன இவ்வளவு ஆர்வமா கேட்கற?”

“பின்னே? நான் தெரிஞ்சுக்காம வேற யார் தெரிஞ்சுப்பா? நீ சமாளிக்காம சொல்லு? யார் அவங்க? பேர் என்ன?”

“சொன்னா நம்புவியா? எனக்கு அந்த பொண்ணோட பேரே தெரியாது”

“பேரே தெரியாதா? டேய் மாமு, எங்கேயாவது போகக்கூடாத இடத்துக்கலாம் போய்ட்டு வந்துட்டியா? அய்யய்யோ கல்யாணாத்துக்கு முந்தியே பிளட் டெஸ்ட் பண்ணாம விட்டுட்டனே”

அவள் தலையில் தட்டிய அருண்
“பிச்சுருவேன், அந்த மாதிரிலாம் இல்லை”

“அப்புறம்”

“சரி ஆரம்பத்துல இருந்து தெளிவா சொல்றேன், கேட்டுக்கோ, நான் காலேஜ் முடிச்சதும் என்ன பன்றதுன்னு தெரியாம இருந்தேன், கிளாஸ்மெட் ஒருத்தன் டவர் புரோஜக்ட் காண்டிராக்ட் எடுத்து பண்ணிகிட்டு இருந்தான். அப்போ எனக்கும் அப்பாக்கும் சண்டை வந்ததா? அவன் கூட போய் இருக்கலாம்னு போய் அந்த சைட்ல தங்குனேன்”

“ம்” ஸ்ரீமதிக்கு இப்போது பேச்சே வரவில்லை

“அது ஒரு கிராமம்பா, நாங்க இருந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு வீடு இருந்தது, அங்கே..”

“டேய் கேப் விடாம சொல்லுடா”

“ம்” இழுத்தான்

“சொல்லுஉஉஉ” அவன் முடியை பிடித்து ஆட்டினாள்

“விடு சொல்றேன், அங்கே ஒரு பொண்ணு இருந்தது, வயசு 15, 16 இருக்கும். வாசப்படில உட்கார்ந்து தலை சீவும், ரேடியோல பாட்டு கேட்கும்”

“ம்”

“நான் பார்ப்பேன், அதும் பார்க்கும்”

“ம்”

“நான் மெதுவா பார்க்கும் போது சிரிப்பேன், அதுவும் சிரிக்கும், புருவத்தை தூக்கி சிக்னல் கொடுப்பேன், அதுவும் கொடுக்கும்”

“ம்”

“என் ஃபிரண்ட் கூட கவனிச்சுட்டு வேண்டாம்டா ஊர் விட்டு ஊர் வந்து பிரச்சனைல சிக்க வேண்டாம், கட்டி வச்சு அடிபின்னிடுவாங்கன்னு சொன்னான்”

“ம்”

“நானும் அதோட நிறுத்துகிட்டேன், ஆனா அந்த பொண்ணு பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஜாடைல பேசும், அதிகம் புருவத்தை தூக்கி என்னங்கறது, கண்ணடிக்கறது இப்படி”

“ம், பார்க்க எப்படி இருப்பா?”

“ம், ஒல்லியாதான் இருப்பா, நல்ல உயரம், உயரமா இல்லைன்னா பெரிய பொண்ணுன்னே சொல்ல முடியாது”

“புரியுது சொல்லு”

“அப்படியே போய்ட்டு இருந்ததா, அங்கே அவ வீட்டுக்கு பக்கத்துல ஒரு ரெண்டு புளிய மரம் பக்கத்து பக்கத்துல இருக்கும், அவங்க வீட்ல காட்டு வேலைக்கு போய்டுவாங்க போல, ஸ்கூல் விட்டு வந்தப்புறம் சாயந்திரம் வரைக்கும் அவ மட்டும்தான் இருப்பா”

“ம்”

“சரியா நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி நாள் தைரியத்தை வரவழைச்சுகிட்டு இன்னைக்கு விட்டா இனிமேல் முடியாதுன்னுட்டு அவ வீட்டு பக்கத்துல போனேன்”

“டேய் நீ என்ன பிளான்ல போன, அதை முதல்ல சொல்லு?”

“பேர் கேட்டுட்டு, என் போன் நம்பர் கொடுக்கதான் போனேன்”

“ம்”

“வீட்டுக்கு பக்கத்துல இருந்த புளியமர சந்துல அவ பார்க்கற மாதிரி போய் நின்னுகிட்டு, இங்கே வான்னு கை ஜாடைல கூப்பிட்டேன்”

“ம்”

“சுத்தி முத்தி பார்த்தா, யாரும் இல்லை, அவ எழுந்து வரவும் நான் நல்லா உள்ளே மறைப்பா போய் நின்னுகிட்டேன்”

“ம்”

“எனக்கு பயங்கர பதட்டம், உண்மையை சொல்லனும்னா ஏதோவொரு குருட்டு தைரியத்துல கூப்பிட்டேன், உள்ளுக்குள்ள பயம் அதிகமாகிட்டே போச்சு”

“ம்”

“டென்சனை குறைக்க, கண்ணை மூடி, மூச்சை நல்லா இழுத்து வெளியே விட்டுகிட்டு இருந்தேன்”

“ம்”

“வந்தவ திடிர்னு என் உதட்டுல பஜக்னு முத்தம் கொடுத்துட்டு ஓடிட்டா”

“அப்புறம்?”

“அவ்வளவுதான், ஓடிப்போய் வீட்டுக்குள்ள போய்ட்டா, எனக்கும் பயமா இருந்தது, சைட்டுக்கு போய்ட்டேன், அடுத்த நாள் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்”

“ஹேய் நிஜமா அவ்வளவுதானா?”

“சத்தியமா அவ்வளவுதான்”

“ஏன்டா திரும்ப போய் அவளை பார்க்கவே இல்லையா?”

“எங்கே அடுத்த நாள் நாங்க சைட்டுக்கு போற நேரத்துல அவ ஸ்கூலுக்கு போய்ட்டா, அன்னைக்கு மதியத்தோட எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊருக்கு வந்துட்டோம்”

“என்ன மாமு, அசால்டா சொல்ற? திரும்ப அவளை போய் பார்க்கனும்னு தோணலையா?”

“தோணுச்சு, ஆனா தனியா அந்த ஊருக்கு போக தைரியம் வரலை, தவிர நான் ஒன்னும் அவளை லவ் பண்ணலையேம்மா, ஸ்கூலுக்கு போற பொண்ணு, எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்”

“போடா, அந்த பொண்ணு மனசுல எவ்வளவு ஆசை இருந்துருக்கும்? உனக்கு கொஞ்சம் கூட ஃபீலிங்கே இல்லையா?”

“இருந்தது”

“என்ன இருந்தது?”

“கடைசி நாள் போகாம கொஞ்ச முன்னாடியே போயிருந்தா இன்னும் நிறைய கிடைச்சுருக்குமோ, மிஸ் பண்ணிட்டமேன்னு ஃபீலிங்கா இருந்தது”

அவன் காதை பிடித்து திருகிய ஸ்ரீமதி
“அவளை அடுத்து பார்க்கனும்னு ஆசையே வரலையா மாமு உனக்கு?”

“ஆரம்பத்துல இருந்ததுடா, அப்புறம் நாளாக நாளாக குறைஞ்சுருச்சு, உண்மைய சொல்லனும்னா அவ முகமே எனக்கு மறந்துருச்சு, இப்ப அவ நேர்ல வந்தா கூட எனக்கு அடையாளம் தெரியாது”

“ஆனா செம லக்கு மாமு உனக்கு, பேர் தெரியாமயே ஒரு பொண்ணு உனக்கு முத்தம் கொடுத்துருக்கு”

“அட ஏம்மா நீ வேற? எங்க பசங்களாம் காலேஜ்லயே ஜோடியா சுத்தி எல்லாத்தையும் பார்த்தவனுங்க, அவங்ககிட்ட இதைலாம் பெருமையா சொல்ல முடியுமா? உன்கிட்டதான் சொல்றேன்”

“ஹேய் என்ன சொல்ற? நிஜமா இதை நீ யார் கிட்ட்யும் சொன்னதில்லையா?”

“இல்லைடா, உன்கிட்டதான் முதல்ல சொல்றேன், நீ தான் கேட்ட”

“அப்பாடா, முதல் முத்தம் எனக்கு கொடுக்கலைன்னாலும், இதை சொல்றதலயாவது என்கிட்ட முதல்ல சொன்னியே”

“ச்சீ, என்ன இப்படி பேசற? இப்படி சலிச்சுக்குவன்னா எதுக்கே கேட்ட?”

“தெரியலை மாமு எதுக்கு கேட்டன்னு, போதும், வேற எதுவும் சொல்லாத, எனக்கு வயிறு எரியுது”

சிரித்தான்

“சிரிக்காதடா”

நன்றாக சிரித்தான்

“உன்னை….”

கட்டி உருள துவங்கி இருந்தார்கள்