அழிபசி தீர்த்தல் – குறள் கதை

“அம்மு, ஏதாவது வேணுமா? எல்லாம் இருக்குல்லை? என்று கொஞ்சம் அக்கறையாக கேட்ட கார்த்திக்கை முறைத்தாள் சக்தி, “இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை? எத்தனை தடவை கேட்பிங்க? உங்க ஃபிரன்ட் குடும்பத்தோட வருவார், டின்னர் முடிச்சுட்டு போகப்போறாங்க, அவ்ளோதானே? எனக்கு தெரிஞ்சு எதுவும் வாங்க தேவையில்லை, ஏன் பதறறிங்க?”

“அப்படி இல்லடா, அவர் வெறும் ஃப்ரெண்ட் மட்டும் கிடையாது, சீனியர், நிறைய விஷயம் அவர்கிட்ட கத்துப்பேன், என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையா விளக்கி சொல்லுவார், கொஞ்சம் மரியாதையும் வச்சுருக்கேன் அதான்”

“என்ன கேள்வி கேட்டாலும்னா? அப்படி என்ன வில்லங்கமா கேட்ப?”

“அவர் வந்துட்டு போனப்புறம் சொல்றேன்”

“முடியாது இப்பவே சொல்லுங்க”

“கட்டாயம் சொல்லனுமா?”

“ஆமா”

என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தவனை காலிங்பெல் காப்பாற்றியது.

“அவங்க வந்துட்டாங்க அம்மு, அப்புறம் சொல்றேன்” என்றவாறு அவர்களை வரவேற்க சென்றான் கார்த்திக்.

பொதுவாக ஆண்களுக்கு இயல்பான விருந்தொம்பல் அமையாது. அதாவது பெண்கள் யாராக இருந்தாலும் தெரிந்தவரோ தெரியாதவரோ வரவேற்க வேண்டும் என நினைத்தால் உடனே அவர்கள் முகம் மலர்ந்து விடும். சிரித்த முகமாய் வரவேற்பார்கள். ஆண்களுக்கு இந்த நாசூக்குத்தனம் கைவரப்படுவதில்லை. அதனால்தான் மனைவி வீட்டு உறவினர்கள் வருகையில் நடிக்க தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள்.

கார்த்திக்கின் வரவேற்பில் தெளிவாக தெரிந்தது. வருபவர் அவனுக்கு மிகவும் முக்கியமானவர் என்று. அவன் மனைவியும் நிறைவாக அவர்களை கவனித்தாள். சாப்பாடு முடிந்து பெண்கள் ஒருபக்கம் ஒதுங்கவும் ஆண்கள் நிதானமாக அமர்ந்து பேசத் துவங்கினார்கள்.

“கார்த்திக், சாப்படுலாம் அருமையா இருக்குப்பா, உன் வைஃப் சமையல்ல பின்றாங்க”

இரகசியமால “சார், போதும், அதான் நம்ம ரெண்டு பேரோட வீட்டம்மாவும் இங்க இல்லையே, எதுக்கு புளுகுறிங்க? நான் உங்க வீட்டுக்கு பல தடவை வந்துருக்கேன், சாப்பிட்டுருக்கேன், மேடம் சமையல்க்கு பக்கத்துல கூட நிக்க முடியாது”

“அதெல்லாம் போக போக எல்லாருக்கும் அந்த பக்குவம் வந்துரும்”

“அதென்ன சார் கவர்ல?”

“இதுவா உண்டியல்பா, பசங்களுக்கு”

“எதுக்கு சார்?”

“எதுக்கா? ஏன்பா சின்ன வயசுல இதெல்லாம் நீ வாங்குனதே இல்லையா?”

“வாங்கிருக்கேன் சார், பொம்மையோட பொம்மையா, நாய் வீட்டுக்கள்ள இருந்து வந்து காசு எடுக்கற மாதிரி ஒரு உண்டியல், எனக்கு ரொம்ப பிடிச்சது அப்போ, ஆனா இப்போ நிறைய டாய்ஸ் வந்தாச்சு, இப்ப இருக்க பசங்க பழைய மாதிரி உண்டியல்ல பணம் சேர்க்கறதுல்லாம் செய்வாங்களா?”

“நாம செய்ய வைக்கனும், இங்க பாரு உனக்கு இன்னும் குழந்தைங்க வரலை, அதனால இதெல்லாம் யோசிக்காம இருக்க, பசங்களுக்கு நாமதான் நல்லது சொல்லி தரனும், சேமிப்பு அவசியம்னு பசங்களுக்கு கத்து தரனும், அது நிறைய விஷயத்தை கத்து தரும், முக்கியமா பொறுமை, இப்ப என் பையன் 100ரூபாய் விலைல ஏதாவது ஒன்னு கேட்டான்னா உடனே வாங்கி தராம தினமும் 5 ரூபாய் தரேன், நீ சேமிச்சு வாங்கிக்கோன்னு சொல்லிருவேன், அதனால கேட்டதை உடனே வாங்கி தரனும்ங்கற கெட்ட பழக்கம் வராது. பசங்களுக்கு பணத்தோட அருமை தெரியும்”

“சார், சேமிப்புன்னதும் தான் ஞாபகம் வருது, நானே உங்ககிட்ட கேட்கனும்னு இருந்தேன், ஃப்ரெண்ட் ஒரு ஃபிளாட் காட்டுனான், லோன் போட்டு வாங்கி போட்டா மாசமாசம் கொஞ்ச கொஞ்சமா அடைக்கறதுக்குள்ள லேண்ட் வேல்யூ எகிறிடும், கையில பணம் இருந்தா எப்படி போகுதுன்னு தெரியாமயே போகிரும்னு பயமுறுத்தி நிலம் வாங்க சொன்னான், என்ன சார் செய்ய?”

“கார்த்திக், உனக்கு சொந்த வீடு இருக்கு, 2 பேர் சம்பாதிக்கறிங்க, இப்ப வரைக்கும் பிக்கல் பிடுங்கல் இல்லை, நீயே ஏன் உருவாக்கிக்கற? இப்ப லோன் வாங்கற, கட்டிருவ, குழந்தை பிறந்தப்புறம் செலவு அதிகமாகும், அப்ப என்ன பன்னுவ?”

“இருந்தாலும் பசங்களுக்கு ஏதாவது சேர்த்து வைக்கனுமில்லை சார்?”

“கண்டிப்பா, அதுக்குன்னு ஒரே வழில கொண்டு போய் போடாத, ஒரு பாலிசி எடு, அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா நகை வாங்கு, சொந்தத்துல ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல் கஷ்டத்துல இருக்கவங்களுக்கு கொடுத்து வாங்கு, வட்டியில்லாம வாங்கனும், அப்புறமும் மீதி இருந்தா நிலம் வாங்கு, எல்லாத்தை விட முக்கியம் பசங்க கடைசி வரைக்கும் நிம்மதியா இருக்கனும்னா பசியோட இருக்கவங்களுக்கு சாப்பாடு போடு”

“இதென்ன சார் கடைசில, புண்ணியத்துக்கா?”

“புண்ணியம்ங்கறது வேற டிபார்ட்மென்ட்ப்பா, எங்கம்மா சொல்லுவாங்க, எங்க தாத்தா அந்த காலத்துல தர்மசத்திரம் நடத்துனாராம், பசின்னு யார் வந்தாலும் சாப்பிட்டு போகலாம், அந்த புண்ணியத்துனால எங்கம்மாக்கு எவ்வளவோ பண்க்கஷ்டம் வந்த காலத்துலயும் சாப்பாட்டுக்கு கஷ்டம் வந்ததில்லைன்னு சொல்லுவாங்க, எங்கப்பா வியாபாரம் பண்ணி நஷ்டபட்டு அம்மா தாலிக்கொடி வரைக்கும் அடகு வச்ச காலத்துலயும், வீட்ல சாப்பாட்டு பாத்திரம் காலைல கழுவும்போது மீதியானதை நாய்க்கு போடற அளாவுக்குத்தான் இருந்துருக்கு. அதனால உன் பசங்களுக்காகன்னு கேட்கறதால சொல்றேன், அப்பப்போ முடியும் போது பசின்னு வரவங்களுக்கு சாப்பாடு போடு”

“சார், நம்ம லைஃப்ஸ்டைல்ல எப்படி சார்? சமைச்சு கொண்டு போய் போடறதுலாம்? பிறந்தநாளப்ப ஆசிரமம் போவோம், அன்னைக்கு சாப்பாடு போடுவோம், அவ்ளோதான்”

“நீ போகனும்னு இல்லைப்பா, எவ்வளவோ பேர் டிரஸ்ட் மாதிரி வச்சு சாப்பாடு போட்டுட்டுருக்காங்க, உட்கார்ந்து நெட்லயே தேடி எடுக்கலாம், எத்தனை கோவில்ல அன்னசத்திரம் நடத்தி மதியம் சாப்பாடு போடறாங்க? எல்லா பணமும் அரசாங்கம் கொடுக்க முடியுமா? நம்மளை மாதிரி இருக்கவங்கதான் கொடுக்கனும், என்ன யோசிக்கற? நிலம்னா விலையேறும், இதுல என்ன வரும்னா?”

“அப்படியில்லை சார்…?”

“இதுவும் ஒரு வகை பேங்க் தான், நாம எத்தனை பேருக்கு எத்தனை வேளை பசியாத்தனோம்னுதான் கணக்கு, அதை விட 100 மடங்கு நம்ம பசங்க நிம்மதியா சாப்பிடுவாங்க, இதை என் மனசுல அம்மா ஆழமா விதைச்சது, எங்க ஏரியா அம்மன் கோவில்ல அப்பப்போ 2500 கொடுத்துருவேன், நேரம் இருந்தா அரிசி, பருப்புன்னு மொத்தமா ஆர்டர் பண்ணி ஆசிரமத்துல இறக்க சொல்லிருவேன், ஒரு அலைச்சலும் கிடையாது, நம்ம பசங்க நல்லதுக்கு சொல்றேன், முழு மனசோட ப்ண்ணு”

“நீங்க சொல்லி நான் செய்யாம இருப்பனா சார்”

“இதை நான் மட்டும் சொல்லலைப்பா, 2000 வருசத்துக்கு முந்தி வள்ளுவரும் சொல்லி இருக்கார்”

அதிகாரம்:ஈகை குறள் எண்:226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

உரை:
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.