பசியாற்றல் – குறள் கதை

அது ஒரு சிறிய பள்ளி. கிராமத்தில் துவங்கப்பட்ட சிபிஎஸ்சி பள்ளி. அது ஆரம்பித்த பின் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்ததோ இல்லையோ, அக்கம்பக்கம் இருந்த பெண்களுக்கு தரமான வேலை கிடைத்தது. சம்பளம் குறைவுதான். ஆனால் பெண்கள் வேலைக்கு செல்வது சம்பளத்திற்காக மட்டும் தானா? வேலை என்ற ஒன்று இல்லாவிட்டால் நாட்டில் பல பெண்களுக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சுத்தமாய் அறுபட்டு விடும். குடும்பத்தினருக்காக மட்டும் தினசரி 24 மணி நேரம் செலவளித்து தனக்கென நேரத்தை ஒதுக்காத பெண்களின் மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

இதே வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் அனைத்தையும் மறந்து மனம் கொஞ்சம் காற்று வாங்குவதற்கு பெண்களுக்கு  உதவும் பல வேலை தரும் இடங்களில் இப்பள்ளியும் ஒன்று. அங்கும் சமமில்லாத வயதுடைய தோழிகளுடன் அரட்டை அடிப்பதை விட வேறு என்ன சுவாரசியம் கிடைத்துவிடும் இப்பள்ளியில்?

“என்ன மேடம் இது?”

“எது?”

“உங்க பாட்டில்ல இருக்க தண்ணீர் ஒரு மாதிரி இருக்கு?”

“அது தண்ணீர் இல்லை, ஜீஸ், லெமன் ஜீஸ்”

“ஜீசா, எதுக்கு?”

“இன்னைக்கு சனிக்கிழமை, நான் விரதம்?”

“எதுவும் சாப்பிடமாட்டிங்களா?”

“ஈவ்னிங் கோவிலுக்கு போயிட்டு, நைட் மட்டும்தான் சாப்பிடுவேன்.”

“எதுக்கு இந்த விரதம்?”

“எதுக்கு இருப்பாங்க? நான் நல்லாருக்கனும், என் குடும்பம் நல்லாருக்கனும்னுதான்”

“அப்ப இப்ப நீங்க நல்லா இல்லைங்கறிங்களா?”

“மேடம், ஏற்கனவே நான் விரதம் இருந்து டயர்டா இருக்கேன், நீங்க பேசவச்சு டயர்டாக்குறிங்க, நான் அதிகம் பேசக்கூடாதுன்னுதான் என்னோட பீரியட்ஸ்லாம் வேற டீச்சர்ஸ்க்கு மாத்தி விட்டுட்டு உட்கார்ந்துட்டுருக்கேன். உங்களுக்கு வேணும்னா அதோ ஜீவா மேடம் இருக்காங்க. அவங்ககிட்ட கதை அடிங்க, நான் அதை வேடிக்கை பார்க்கறேன்.”

ஜீவா “என்ன, என்னோட பேர் அடிபடுது”

“என்னை பிரியாகிட்ட இருந்து காப்பாத்தேன், பேச வச்சே டயர்டாக்குறா?”

“என்ன பிரியா? கிளாஸ் இல்லை?”

“இருந்தது, மேத்ஸ் சார் அடம்பிடிச்சு வாங்கிட்டு போய்ட்டார்”

“சரி, வா அரட்டை அடிப்போம், எனக்கும் போரடிக்குது”

“உங்ககிட்ட அரட்டைலாம் அடிக்க முடியாது, ஏதாவதுன்னா எனக்கு பாடம் நடத்த ஆரம்பிச்சுருவிங்க”

“ஏய், அறுவை னு சொல்லாம சொல்றியா? அப்ப நீ கேளு அதுக்கு மட்டும் பதில் சொல்றேன்”

“அது இன்னும் போரடிக்குமே, ஹா..ன் நான் கேட்கனும்னுட்டே இருந்தேன், உங்க வீட்ல எத்தனை பேர்?”

“தெரியாத மாதிரி கேட்கற? நான் வீட்டுக்கார், பொண்ணு அவ்ளோதான்”

“அப்பப்போ உங்களை பார்க்க ஒருத்தர் பைக்ல வராரே, நீங்க கூட ஏதோ பார்சல் கொடுத்து அனுப்பறிங்களே, அது யாரு?”

“அது அவரோட தம்பி, ஹேய், எதுக்கு விமல் பத்தி கேட்கற?”

“ஓ பேர் விமலா? ஆள் நல்லாருக்கான்னுதான், அதென்னா வாரத்துக்கு 2,3 தடவை பார்சல்?”

“விமல் கொஞ்சம் வித்தியாசமான டைப், வாழ்க்கையை அவனை மாதிரி பார்க்க நம்மாள முடியாது, சொந்தமா தொழில் பன்றான், கூட அவன் நண்பர்களோட சேர்ந்து ஒரு டீம் ஃபார்ம் பண்ணி நல்ல விஷயம் பண்ணிட்டுருக்கான்”

“எது இந்த மரம் நடறது, சுத்தம் பன்றது அது மாதிரியா?”

“அதுவும் தான், ஆனா முக்கியமா தினசரி ஒரு வேலை பன்றாங்க, நம்ம ஏரியால எத்தனை பேர் சாப்பிட வழியில்லாம இருக்காங்க தெரியுமா?”

“சாப்பிட வழியில்லாமனா? பிச்சைகாரங்களை கேட்கறிங்களா?”

“அவங்களையும் சேர்த்துதான், இவங்க குரூப்போட வேலை ஒரு பக்கம் நன்கொடை வசூலிக்கறது, உணவு மீதமான இடத்துல போய் அதை வாங்கறது, அது மாதிரி எதுவும் கிடைக்காதப்ப இருக்கற பணத்தை வச்சு சாப்பாடு தயாரிச்சு, தனித்தனி பார்சலாக்கி ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சி போய் சாலையோரமா இருக்கவங்களுக்கு விநியோகம் பன்றது, 3 வேளை லாம் முடியாது, கண்டிப்பா ஒரு வேளை கொடுத்துருவாங்க”

“எத்தனை பேருக்கு கொடுப்பாங்க? எவ்வளவு செலவாகும்?”

“அந்த கணக்குலாம் கிடையாது, எவ்வளவு இருக்கோ அதை வச்சு செய்யறதை பிரிச்சு கொடுத்துருவாங்க”

“சம்பாதிக்கற பணத்தைலாம் இப்படி செலவளிச்சுட்டா என்னாகறது?”

“எல்லாத்தையும் எப்படி இதுக்கு தர முடியும்? ஆனா கண்டிப்பா ஒரு பங்கு ஒதுக்க முடியும், என் வீட்டுக்காரர்க்குலாம் விருப்பம் இல்லை, நான் முடிஞ்சா பணமா தருவேன், இல்லை சமைச்சு தந்துருவேன்”

“செம, மனசு திருப்தியா இருக்கும்ல, நானும் முடிஞ்சதை தரேன், உங்ககிட்டயே கொடுத்தா போதுமா?”

“விமலை இன்ட்ரோ கொடுக்க சொல்றனு புரியுதுடி”

“நானும் தரேன்”

பிரியா “ஹலோ விரதம் மேடம், என்ன பேசறிங்க? டயர்டாக போகுது?”

“சும்மா இரு, ஜீவா நான் இப்படிலாம் யோசிச்சே பார்த்ததே இல்லை, நான், என் குடும்பம்னு மட்டும்தான் யோசிக்கறேன், இத்தனைக்கும் 2 பேரும் நல்லா சம்பாதிக்கறோம், நான் எல்லா கோவிலுக்கும் போறனே ஒழிய இப்படி இருக்கவங்களை பத்தி யோசிச்சதே இல்லை, சுயநலமாவே வாழ்ந்துருக்கன்னு கில்டியா இருக்கு”

“அப்படிலாம் இல்லை, இதை நீங்க பாவபுண்ணியம்னு யோசிக்காதிங்க, பொதுவா ஒருத்தருக்கு யார் உதவி செய்வா? நல்ல நிலைமைல இருக்கவங்க, இது மாதிரி செய்ய முடியுதுன்னா நாம நல்லா இருக்கோம்னு மனசுல ஆழமா நம்புவோம், அந்த எண்ணமே நம்மளை நல்லா வச்சுக்கும்”

“கரெக்ட், காரணமே இல்லாம நல்லா இருந்தாலும் இன்னும் நல்லா இருக்கனும்னு சாப்பிடமா விரதம் இருக்கறதை விட, அடுத்தவங்களை சாப்பிட வைக்கறது மூலமா மனசுக்கு உண்மைலயே ஒரு தெம்பு கிடைக்கும்”

 

அதிகாரம்:ஈகை குறள் எண்:225
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

உரை:
தவம் செய்வோரின் ஆற்றல் தமது பசியைப் பொறுத்துக் கொள்வதில் இருக்கிறது. இந்த ஆற்றல் பசித் துன்பத்தை ஈகையால் மாற்றுவார் ஆற்றலின் பின்னே வைத்து எண்ணப்படும். அதாவது பசியைப் பொறுத்தலிலும் பசியை மாற்றுவார் ஆற்றல் சிறப்புடையது. பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் என்பது பழக்கத்தினால் கூட எளிதாக அமையும். ஆனால் அறிவறிந்த ஆள்வினையால் பொருளீட்டி அப்பொருளின் மீது பற்று இல்லாமல் பசியால் வருந்துவோருக்கு வழங்கிப் பசியை மாற்றுவது என்பது எளிதில் வரக்கூடிய பண்பன்று. பசியைப் பொறுப்பாரிடம் விஞ்சியிருப்பது ஆற்றும் பண்பே. பசியை மாற்றுவோரிடம் ஆள்வினை பொருள் பற்றின்மை ஈகை ஆகிய முத்திறப் பண்புகள் சிறந்து விளங்குதல் அறிக.