நீள்புகழ் – குறள் கதை

அப்பா, அப்பா, மரம் எப்படிப்பா பின்னாடி போகுது?

மரம் பின்னாடி போகலைப்பா, நாமதான் ட்ரெயின்ல முன்னாடி போய்ட்டுருக்கோம்

அப்பா ட்ரெய்ன் ஸ்பீடா? கார் ஸ்பீடாப்பா?

அம்மாகிட்ட கேளுப்பா, அப்பாக்கு தூக்கம் வருது

என்கிட்ட தள்ளிவிடாதிங்க, நான் தூங்குனாதான் நாளைக்கு உங்களுக்கு சமைச்சு போட முடியும்

எனக்கும் டயர்டா இருக்கும்மா, இவன் கேள்விக்கு யார் பதில் சொல்றது?

இப்படி நான் நினைச்சுருந்தா உனக்கு யாருடா பதில் சொல்லிருப்பா, பெத்த பையனுக்கு பதில் சொல்ல கூட வலிக்குதாடா, இங்க வா ராஜா,. தாத்தாகிட்ட கேளு

தாத்தா, எது தாத்தா ஸ்பீட்? காரா? ட்ரெய்னா?

அப்படி சொல்லிட முடியாதுப்பா, இப்பலாம் ட்ரெய்ன் அளவுக்கு ஸ்பீடா போற காரும் வந்துருச்சு, ஆனா புல்லட் ட்ரெய்ன்னு ஒன்னு இருக்கு, இருக்கறதுலயே வேகமா போகும்

அந்த ட்ரெய்ன் என்ன தாத்தா சாப்பிடும்?

ஹா ஹா பார்த்தியாடா? குழந்தைங்களால மட்டும் தான்டா உலகத்துல இருக்க எல்லாத்தையும் தனக்கு சமமா உயிருள்ளதா பார்க்க முடியும், வளர்ந்துட்டா மனுசங்களையே சமமா பார்க்க மாட்டேங்கறோம், முதல்ல ட்ரெய்ன் கரி சாப்பிட்டுச்சு, இப்ப கரென்ட சாப்பிடுதுப்பா

கரண்ட சாப்பிட முடியுமா தாத்தா

அப்பா, பார்த்திங்களா, நீங்க இப்படி சொன்னிங்கன்னா அவன் நாளைக்கு சாப்பிட கரெண்ட் வேணும்பான், அவன் என்ன சிட்டி ரோபோவா? கண்ணா போதும்பா படுத்துக்கோ, லேட்டா முழிச்சுட்டுருந்தா தப்பு, தப்பு பண்ணா என்னாகும் தெரியும்ல?

ம், சாமி கண்ணை குத்தும்

டேய் பசங்களை பயமுறுத்தி வளர்க்க கூடாதுடா, அப்புறம் கேள்வி கேட்கவே தோணாது, நீ கேளு ராஜா

தாத்தா, சாமி இருக்குல்லை, அது என்ன சாப்பிடும்?

சாமிக்குலாம் பசிக்காதுப்பா

ஏன் தாத்தா

நிறைய இடத்துல கோவில்ல சாப்பாடு போட்டுகிட்டே இருக்காங்களா, அதை சாப்பிட்டுகிட்டே இருக்கறதால சாமிக்கு பசி எடுக்காது, சாப்பிடாம இருந்ததானே பசி எடுக்கும்

தாத்தா சாமிங்கலாம் எந்த ஊர்லருந்து வந்தாங்க தாத்தா?

ஏம்பா இப்படி கேட்கற?

நம்ம ஊர்ல வீட்ல இருக்க சாமியும், சென்னைல ஆகாஷ் வீட்ல இருக்க சாமியும் ஒன்னா இருக்கு, சாமிக்கு எது தாத்தா சொந்த ஊர்? சேலமா? சென்னையா?

அப்படில்லாம் இல்லைப்பா, ஒவ்வொரு ஊருலயும் தனித்தனி சாமி இருக்கு, இப்போ நம்ம காட்டுல முனீஸ்வரன் சாமி இருக்குல்லை, அது வேற ஊர்ல இருக்காது

அப்போ அது நம்ம ஊர்ல பொறந்த சாமியா?

ஆமாப்பா, ஆனா பொறக்கும் போதே சாமியா பொறக்க மாட்டாங்க, நம்மளை மாதிரி மனுசங்களா பொறந்துட்டு, அப்புறமா சாமியா மாறுவாங்க

எப்படி தாத்தா சாமியா மாறுவாங்க?

எல்லோருக்கும் நல்லது பன்றவங்களை சாமி மாதிரி மரியாதை கொடுப்பாங்கப்பா, ரொம்ப நல்லது பண்ணா உனக்கு பூஜையே பண்ணுவாங்க

அப்பா, என்னப்பா இது? என்னென்னமோ சொல்லிட்டிருக்கிங்க?

நீ சும்மா இருடா, பசங்களுக்கு இப்படித்தான் நல்லதை விதைக்கனும்

தாத்தா நானும் நல்லது பண்ணா நம்ம ஊர்ல என்னையும் கும்பிடுவாங்களா?

நம்ம ஊர்னு இல்லப்பா, எந்த ஊருக்கு போனாலும் நல்லது பண்ணா மரியாதை கொடுப்பாங்க

அப்போ சேலம் லருந்து சென்னை போய் நல்லது பண்ணாலும் மரியாதை தருவாங்களா?

சேலம்லருந்து சென்னை என்னப்பா? வேற நாட்டுக்கே போய் நல்லது பண்ணாலும் மதிப்பாங்க, யாரை உதாரணம் சொல்றது? ம் போன தடவை மதுரை போனோம்ல, மதுரை, மீனாட்சி கோவிலுக்குலாம் போனோமே

ஆஅ..ன்

அதுக்கு அந்த பக்கம் தேனின்னு ஒரு ஊரு, அங்க ரொம்ப தண்ணி கஷ்டம், அங்கே வேலைக்கு வந்த வெள்ளைக்காரர் ஒருத்தர் ஜனங்க படற கஷ்டத்தை பார்த்துட்டு தன்னோட சொத்துல்லாம் வித்து அவங்களுக்கு ஒரு அணை கட்டி கொடுத்தார், அந்த ஊர்ல இன்னும் அவரை சாமியாதான் கும்பிட்டு இருக்காங்க, அவர் பேர் என்ன தெரியுமா பென்னி குவிக், திரும்ப சொல்லு

பென்ன்னிக்குவிக்

ம், வெரிகுட்

அதிகாரம்:புகழ் குறள் எண்:234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

உரை:
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.