எனக்கு வாய்த்த அடிமைகள் – விமர்சனம்

நான் பணிபுரிந்த கல்லூரியில் மட்டுமல்ல இப்பொழுது இருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரு சிஸ்டம் உண்டு, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து விடுவார்கள். அவர்கள் படிப்பு, வருகை, கல்லூரி கட்டணம் செலுத்துவது அனைத்திற்கும் அவர்தான் பொறுப்பு. அவரிடம் சொல்லிவிட்டுத்தான் அவன் விடுமுறை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் அழைத்து காரணம் கேட்க வேண்டும். ஒருநாள் எனக்கு ஒருவன் அழைத்தான், “சார் நாளைக்கு நான் காலேஜ் வரமாட்டேன் சார்” என்றான். “ஏம்பா?” என்றேன். “நான் இப்ப தற்கொலை பண்ணிக்க போறேன் சார்” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். திரும்ப அடித்தால் எடுக்கவில்லை. மற்ற மாணவர்களுக்கு அழைத்து அவன் வீடு எங்குள்ளது என விசாரித்து, நண்பர்களை வைத்து சமாதானப்படுத்திய பின்தான் மூச்சு விட முடிந்தது. உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் அழைத்து “சாகப்போறேன்” என சொன்னால் உங்களால் வேறு வேலையை பார்க்க முடியுமா?அவர் இருந்தாலும் செத்தாலும் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கடைசியா நம்மிடம் பேசியதனால் ஏதாவது பிரச்சனை வருமா என்ற பயம் ஏற்படுத்தும் குழப்பத்தை ஒதுக்கி வைப்பது மிகவும் கடினமான ஒன்று. படத்திலும் அப்படித்தான். முழுக்கதையையும் தெரிந்து கொண்டால் என்ன? ஒருமுறை பார்த்துவிட்டுக் கூட மறுமுறை பார்க்கலாம். பெரிதாக எந்த ட்விஸ்ட்டும் இல்லாமல் இருப்பதனால் சொல்கிறேன்.

ஜெய் ஒரு ஐடி ஊழியர். காதலிக்கிறார், ஏமாற்றப்படுகிறார். தற்கொலை செய்து கொள்ள போகிறார். கடைசியாக நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிட்டு போனை அனைத்து விடுகிறார். அதிலிருந்து நண்பர்கள் நாயாய் அவரை தேடி அலைவதுதான் படம். இதை டிரெய்லர் பார்த்தவர்களே கூறிவிடுவார்கள். ஜாலியாக போகும் படம், எந்த இடத்திலும் சிரிப்புத்தான் பிரதானம். பாத்திரத்தேர்வு கன கச்சிதம், சொல்லப்போனால் இதெல்லாம் ஜெய்க்கு மட்டுமே உரித்தான படம். நண்பர்களும் அப்படித்தான், நாயகனை விட நண்பர்களை சுற்றித்தான் கதையே.

முக்கியமாக 4 பேரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். காளி, கருனாகரன், தம்பிராமையா, முக்கியமாக மொட்டை ராஜேந்திரன். நாளுக்கு நாள் இவர்களது நடிப்பில் எதார்த்தம் மெருகேறிக் கொண்டே போகிறது. காளியெல்லாம் இன்னும் பயன்படுத்த பட வேண்டியவர். மொட்டை ராஜேந்திரனுக்கு விரைவில் இரசிகர் மன்றமே வைக்க போகிறார்கள், அவர் வருகையில் அவ்வளவு விசில்.

யாருய்யா வசனம்? சிரிக்காம இருக்க முடியலை. தனியா பார்க்கும் போதே சத்தம் போட்டு சிரிச்சுட்டு இருந்தேன், பசங்களோட பார்த்து இருந்தேன், செமயா இருந்துருக்கும். சில படங்களை தனியா எடுத்து வச்சுருப்போம், போரடிக்கும் போதுல்லாம் போட்டு பார்த்து சிரிக்கறதுக்குன்னு, இது அந்த மாதிரி படம்.

சில இடத்துல ரொம்ப ரசிச்சேன்.

ஜெய்யை தேடி பீச்சுக்கு வந்துட்டு காளி உணர்ச்சி வசப்பட்டு பேசுவார்.
“இந்த இடம் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்டா, இங்கே நாம எல்லாரும் உட்கார்ந்து குடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டான், அவன்ந்தான் இல்லை, நாம உட்கார்ந்து குடிப்போமா?”

அதே காளியிடம் மொட்டை ராஜேந்திரனை பற்றி கேட்பார்கள்.
“அவனை அவங்கம்மாவே நம்ப மாட்டாளே, நீ எப்படிடா நம்புன?”
“அவன் தல ரசிகன்னு சொன்னான்பா”
“பச்சயா புளிகிருக்கான் பாரேன், அவன் மன்சூர் அலிகான் ரசிகன்பா”

முதல்வன் பட அர்ஜீன் மாதிரி “கடைசில என்னை பிரேம்ஜி பாட்டுக்குலாம் ஆட வச்சுட்டிங்களேடா”ன்னு ஒரு பஞ்ச்

கொஞ்ச நாளா அரசியல் நிலவரத்துல ரொம்ப சூடா இருக்கிங்களா? இந்த படம் பாருங்க ரிலாக்சா இருக்கும்.