கிராமசபை கூட்டம்

நாட்டில் எங்கு பார்த்தாலும் அதிருப்தி, அரசினை குறித்து புகார்கள், ஜல்லிக்கட்டிற்கு எதிராக திடிரென வெடித்த புரட்சி, அது முடிக்கப்பட்ட விதம், அனைத்தையும் கடந்து மனதில் சில கேள்விகளை நண்பர்கள் எழுப்பினார்கள். பெருமை பட்டுக் கொள்ளுமளவிற்கு இந்த போராட்டம் தேவையான ஒன்றா? என்று. கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என சொல்லப்பட்டதற்கு முற்றிலும் தலைகீழாய் புரட்சியின் மூலம் ஒன்று சேர்ந்து தடியடி பட்டு கற்றுக் கொள்ள துவங்கியிருக்கிறோம். இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு வந்துவிட்டால் மட்டும் அனைத்தும் சரியாகிவிடுமா என்றும் கேட்கிறார்கள். அப்படி எதை சரி செய்ய சொல்கிறார்கள் என்று புரியவில்லை. சரி நாமே களத்தில் இறங்குவோம் என யோசித்தேன். அரசியல் விழிப்புணர்ச்சி பெறுவதற்காக குடியரசு தினத்தில் கூடும் கிராமசபையில் கலந்துக் கொள்ள முடிவெடுத்து பதிவும் எழுதினேன்.

சொந்த ஊர் பேரூராட்சி என்பதால் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்தின் கிராமசபைக்கு செல்ல முடிவெடுத்தேன். ஒரு மாரியம்மன் கோவிலில் கூட்டினார்கள். சென்றதில் நான் ஒருவன் மட்டும் தான் படித்த இளைஞன். மீதி அனைவரும் 45 வயதிற்கு மேல், முழுக்க பெண்கள், மூன்றே மூன்று ஆண்கள். முதலில் சுகாதாரத்துறையிலிருந்து வந்திருந்த அதிகாரி தொழுநோய் ஒழிப்பதற்கான வழிமுறைகளை சொல்லி, கைகளை நீட்டிய வண்ணம் உறுதிமொழி எடுக்க சொன்னார், அனைவரும் சிரித்த வண்ணம் செய்து முடிக்கவும், இது காந்தி மேல சத்தியம் யாரும் மீறிடக் கூடாது என மிரட்டிவிட்டு சென்றார். அடுத்து அதிகாரிகள் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டதும்தான் தாமதம் ஒவ்வொருவராக போட்டிப்போட்டுக் கொண்டு சொன்னார்கள்.

மொத்தமாக அனைத்தையும் கேட்டபின், அதனை மூன்றிற்குள் பொதுமைப் படுத்தி விட முடிந்தது.
1.குடிநீர் குழாய்
2.தெரு விளக்கு
3.கழிப்பறை

மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டருக்குள் இருக்கும் மக்களுக்கே குடிநீர்க்குழாய் இணைப்புகள் இன்னும் முழுமையாய் கொடுத்து முடிக்கப் படவில்லை என்பது ஆச்சர்யம் என்றால், ஒரு தெரு விளக்காவது போட்டு கொடுங்கள் என கேட்கும் மக்கள் தமிழகத்தில், அதுவும் என் வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பது அதிர்ச்சி.

2015ம் ஆண்டே பொது கழிவறை கட்டுவதை நிறுத்தி விட்டு, தனி கழிப்பறைகளுக்கு 12000 ரூபாய் மானியம் தரும் திட்டத்தினை அரசு அமல்படுத்தி, அதில் ஊழல் நடந்து, அதனை வைத்து “ஜோக்கர்” படம் வந்து ஓடி முடிந்து விட்ட நிலையில் இன்னமும் மக்களுக்கு முழுமையாய் அத்திட்டத்தின் விழிப்புணர்ச்சி போய் சேரவில்லை. இதில் அப்பட விவாதத்தின் போது விமர்சகர் என ஒருவர் தொலைக்காட்சியில் அமர்ந்து இதெல்லாம் கதை, இப்படில்லாம் தமிழ்நாட்டுல எங்க இருக்கு? என்கிறார்.

ஆக மொத்தத்தில் நான் தெரிந்து கொண்டது, ஜல்லிக்கட்டு, விவாசாய, காவிரி பிரச்சனைகளுக்கு தரும் முக்கியத்துவத்தினை விட அதிக கவனம் பெற வேண்டிய விசயமாக நான் பார்ப்பது அரசியல் & சமூக விழிப்புணார்வு. கேள்வி கேட்பதை கற்றுத் தர வேண்டும். ஏனென்றால் இன்று அக்கிராமத்தில் வந்திருந்த பெண்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள், அவர்களை அழைத்து வந்து ரேகை வாங்கி கணக்கு காட்டி விட்டார்கள். இன்னொரு ஊரில் இருக்கும் நண்பரை விசாரித்ததில் அங்கும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என யோசித்தேன், தனியாரில் வெளியூரில் வேலையில் இருப்பவர்களை கழித்தாலும் மாணவர்களும், வியாபாரம் செய்பவர்களும் வீட்டில் தானே இருந்திருப்பார்கள். அவர்களுக்கு தாங்கள் பஞ்சாயத்திற்கு கட்டிய வரி எதற்கு? அது நமக்கு என்ன செய்கிறது என்பதனை தெரிந்து கொள்ள ஆர்வமில்லையா? இல்லை அனைத்து கிராமங்களும் சுபிட்சமாக இருக்கிறதா?

இதெல்லாம் தேவையில்லாத வேலை என்றால் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் என்ன கூந்தலுக்கு கூக்குரல் வேண்டி கிடக்கிறது? கட்டாயம் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று கூடி குழுவாக தத்தம் பஞ்சாயத்துகளை கேள்வி கேட்க துவங்க வேண்டும். அவர்கள் சேர்ந்திருக்கும் குழு சாதி மதங்களை கடந்திருக்க வேண்டும். அப்படி அனைவரும் ஒன்று கூடி அனைத்தையும் கேள்வி கேட்டால் தான் நாடு உருப்படும். நமக்குள் பிரிந்திருந்து வெறுமனே எங்காவது கூட்டமாக இருக்கையில் பேருக்கு கோஷம் போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இம்முறை நான் போனதில்லாமல் என்னை போல் இந்த சிஸ்டத்தில் அதிருப்தியாய் இருக்கும் நண்பர் ஒருவரையும் அவரது கிராமசபைக்கு அனுப்பி இருந்தேன். அடுத்து மே 1 ல் கூடுவதற்குள் இயன்றவரை பல நண்பர்களிடம் பேச வேண்டும்.