நாட்டின் மீது அவ்வளவு அக்கறையா?

கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு மனதில் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்திருக்கும். சிலருக்கு பல வருடங்களாக மனதினுள் இருக்கும் அந்த விஷயம் என்னவென்றால் “இங்கே ஏதோ தப்பா இருக்கே, ஏதோ ஒவ்வொன்னா நம்மகிட்ட இருந்து போற மாதிரியே இருக்கே, இந்த அரசாங்கம்ங்கற விஷயம் உருவானதுல இருந்து இப்படித்தானா? நம்மாள எதுவுமே செய்ய முடியாதா?” என்று. அதிர்ஷ்டவசமாக நமக்கு ஒரு போராட்டம் ஜல்லிக்கட்டு வாயிலாக அமைந்தது. நம் ஆற்றாமைகளை எல்லாம் கொண்டு சென்று கொட்டி விட்டோம். மீண்டும் சொல்கிறேன் அதிர்ஷ்டவசமாகத்தான் இப்போராட்டம் நமக்கு அமைந்தது. ஏன் அப்படி சொல்கிறேன் என யோசிப்பவர்கள், அதிகம் வேண்டாம், தாமிரபரணி, பரமக்குடி, இடிந்தக்கரை போராட்டத்தில் அரசின் சுயமுகத்தை விசாரித்து பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அரசு, இந்த சிஸ்டம் இப்படித்தானா? என்றால் ஆம், இப்படித்தான். பில்கேட்ஸ் சொன்னதாக ஒரு பொன்மொழி “நீ இருக்கும் ஒரு நிர்வாகத்தில் ஒரு குறிப்பிட்ட விதியை பிடிக்காமல், அதனை மாற்ற விரும்பினால், நீ முழு மனதோடு அந்த விதியை பின்பற்று. கடினமாக உழை, முன்னேறு, அந்த விதியை மாற்றும் அதிகாரத்தில் சென்று உட்கார், பின் உன் விருப்பப்படி மாற்று, போராட்டம் அனைத்து நேரத்திலும் தீர்வை தருவதில்லை” இதிலிருந்தே நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆம், அரசியலுக்கு அழைக்கப் போகிறேன்.

உடனே ஒரு கட்சியில் சேர்ந்து MLA சீட் வாங்குவது குறித்து யோசிக்க வேண்டாம். அரசியல் என்பது அது அல்ல, கட்சி அமைப்புக்குள் போக சொல்ல நான் முட்டாளும் அல்ல. நான் சொல்ல வருவது முதலில் அரசியல் என்றால் அரசு என்றால் என்னவென்று கற்போம் என்றுதான். இதில் கற்க என்ன இருக்கிறது. உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அனைத்தையும் தினமும் கவனித்து வருகிறேன் என்று சொல்லாதீர்கள். எங்கே சட்டென்று நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

1.நீங்கள் இருக்கும் வார்டு மெம்பரின் பெயர்?
2.உங்கள் ஊரிலுள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை?
3.உங்கள் பஞ்சாயத்திற்கு கடந்த 5 வருடத்தில் அரசு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது?
4.ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்த நிதியாக எவ்வளவு ஒதுக்கப்படும்? கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்த சமஉ அதனை வைத்து என்ன செய்தார்?
5.உங்கள் ஊரில் என்னென்ன வளார்ச்சிப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது?

ஒரு அமைப்பின் குறைகளை பேசவேண்டுமென்றால், குறைந்தபட்சம் அதனை பற்றிய அடிப்படை அறிவாவது நமக்கு வேண்டாமா? முழு சட்டப்புத்தகத்தினை கரைத்து குடிக்க வேண்டாம், அரசு நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்றாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? குறைந்த பட்சம் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் என்னென்ன அதிகாரம் தரப்பட்டுள்ளாது என்பதை தெரியாமல் நாம் எதை மாற்ற முடியும்?

ஒரு நிதர்சனத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்து முதல்வர் பன்னீர் செல்வத்தையும், பிரதமர் மோடியையும் கேள்விகளால் கிழிக்க முடிந்த நம்மால், நம் பஞ்சாயத்து தலைவரை நேருக்கு நேர் சென்று கேட்க தைரியம் கிடையாது. காரணம் வீட்டுக்கு வரும் நீர் இணைப்பு துண்டிக்கப்படும், அவர்கள் ஆட்டோவில் வந்து அடிப்பார்கள் என்ற பயம் மட்டுமல்ல, அவர்கள் செய்யும் ஊழலுக்கு ஏதேனும் ஒரு விதத்திம் நாமும் பங்காளிகளாக இருப்போம். அட, குறைந்தது அவர் முகத்திற்கு நேராக வாக்குக்கு பணமாவது வாங்கி இருப்போம். அவரும் தான் செய்யும் தவறுகளை யாரிடமும் மறைக்காமல், சக மக்களிடம் தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்தேன் என்று பிரதாபித்தாலும் நாம் மூடிக் கொண்டுதான் நிற்க வேண்டியதாய் இருக்கும்.

அரசியல் குறித்து பேசிக் கொண்டே போகலாம், இன்று நான் சொல்ல வரும் முக்கியமான விஷயம் கிராமசபை குறித்து. ஒவ்வொரு ஊர் பஞ்சாயத்து சார்பாக கிராம/நகர சபை கூட்டம் வரும் குடியரசு தினத்தன்று நிகழவிருக்கிறது. வழக்கமாக அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவும், குறைகளை கேட்கவும், வரிவசூல் குறித்தும், என்னென்ன நலத்திட்டங்கள் போய் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு விளக்கவும் தான் இந்த கிராம/நகர சபைக்கூட்டம் கூடும். ஜனவரி 26 அன்று கூடும் சபைக்கு செல்ல முடியுமா? சென்று என்ன செய்ய என்றால் வெறுமனே செல்லுங்கள், வேடிக்கை பாருங்கள், உங்கள் பஞ்சாயத்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். கூச்சமில்லாமல் கேள்வி கேட்கும் தைரியம் கொண்டவர் என்றால் குறைந்தபட்சம் வரும் கோடையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பஞ்சாயத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று கேளுங்கள். முடியவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை, வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அவசரம் வேண்டாம், நிதானமாக சுற்றி நடப்பவைகளை பார்ப்போம், என்னென்னவென்று விவாதிப்போம், இருக்கும் ஒவ்வொரு ஓட்டைகளாக கணக்கெடுப்போம். மற்றவர்களுடன் பேசி அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இப்போது அனைவருக்கும் தேவை விழிப்புணர்ச்சிதான், அது அனைவரையும் சென்றடையும் பொழுது போராட்டத்திற்கெல்லாம் அவசியமே இருக்காது.

நான் பிரபலமான பதிவர் கிடையாது. வழக்கமாக நான் எழுதினால் ஒரு 30 பேர் படிப்பார்கள், நீண்ட பதிவென்றால் ஒரு 10 பேர், அதிலும் பலர் வெளியூரில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். அதனால் இந்த பதிவு ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்றெல்லாம் நம்பாமல்தான் எழுதுகிறேன். இதனை எழுதுவதால் ஒரே ஒரு நன்மை, டபாய்க்காமல் நான் செல்வேன். நான் செல்லவில்லை என்றால் என்னை கேள்வி கேளுங்கள் நண்பர்களே.