ஆண்கள் வெட்கப்படும் தருணம் – சிறுகதை

“அழாதடி”

அழுகைக்குரல் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சத்யாதான் என தெரிந்தது. அவள் தாய் தான் சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். என் தங்கையும் சமாதானப் படுத்த துவங்கி இருந்தாள்.

“என்னாச்சு சத்யா, எதுக்கு அழற?”

அவள் மேஜையில் கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தாமல் அழுதுக் கொண்டிருந்தாள். அவள் அம்மா தான் பதில் அளித்தாள்.

“ரிசல்ட்டை பார்த்ததுல இருந்து அழுதுட்டு இருக்காம்மா”

“ஏன், என்னாச்சு?”

“999 மார்க் வாங்கிருக்கா, எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு சொல்லி அழறா”

“ஹேய் சத்யா, இதுக்கா லூசு அழற?”

“போடி, உனக்கென்ன?”

“எனக்கென்னவா? நான் உன்னை விட கம்மிதான், 979, நான் என்னா அழுதுகிட்டா இருக்கேன்?”

“போ, எனக்கும் கம்மியா வந்துருந்தாக் கூட பரவாயில்லை, ஒரு மார்க் வந்துருந்தா 1000 எடுத்துருப்பேன்”

“நீ உட்கார்ந்து அழுதுகிட்டு இரு, நான் கிளம்பறேன்”

“இரும்மா, சாப்பிட்டு போலாம், திவா நீயும் சாப்பிட்டு போப்பா” அவள் அம்மா.

என் பெயரைக் கேட்டதும் திடிரென நிமிர்ந்து பார்த்தாள். அவசர அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். இதனை நேரடியாக கவனிக்கவில்லை என்றாலும் ஓரக்கண்ணில் பார்த்தவாறு அவள் அம்மாவிற்கு பதில் அளித்தேன்.

“இல்லைம்மா, கொஞ்சம் வேலை இருக்கு, இவ நடந்து வந்தா நேரமாகும்னு தான் அம்மா என்னை கூட்டி போய்ட்டு வரச் சொன்னாங்க”

அதுவரை அழுத சுவடே முகத்தில் இல்லாமல், என்னை அவள் பார்த்துக் கொண்டிருந்ததை நான் கவனிக்காதவாறு கிளம்பினேன். கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். சத்யாவின் பார்வையில் ஏதோ ஒன்று வித்தியாசம் தெரிகிறது. என்ன தனியாக வித்தியாசம் வேண்டிக் கிடக்கிறது. என்னை அவள் அடிக்கடி பார்ப்பதே வித்தியாசம் தான்.

சத்யா, என் தங்கையின் தோழி. நான்கு வயது இளையவள். சிறுவயதில் இருந்தே இரண்டு குடும்பத்திற்கும் பழக்கம் இருக்கிறது. என் தங்கை என்னை பெயர் சொல்லி அழைப்பதை பார்த்து, இவளும் சிறு வயதில் இருந்து என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பாள். நான் +1க்கு பிறகு விடுதியில் தங்கி படிக்க சென்ற பின்னர், சத்யாவுடன் அதிகம் பேச இயலவில்லை. கல்லூரிக்கு சென்ற பின்னர் சின்ன பெண்களுடன் என்ன பேசுவது என அவள் வீட்டிற்கு வந்தாலும் அதிகம் கண்டு கொள்ள மாட்டேன்.

ஆனால் கடந்த ஒரு ஆறு மாத காலமாக அவள் என்னை பார்ப்பதனை கவனித்துக்கொண்டுத்தான் இருக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவள் என்னை பார்ப்பதனை கவனிக்க ஆரம்பித்த பின் தான் அவள் வளர்ந்து விட்டாள் என்பதே எனக்கு புரிந்தது. அதன் பின் தான் அவளை முழுதாக பார்த்தேன். முகத்தில் முன்பிருந்த குழந்தைத்தனம் பாதி காணாமல் போயிருந்தது.

முதலில் எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் அவள் என்னை பார்ப்பதுதான். நான் ஆச்சர்யப்படுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவள் அழகி வகை. நான் சுமார் வகை. என் நண்பர்களே பலர் அவள் பின்னால் சுற்றுகிறார்கள். அவள் குடும்பம் எங்களை விட கொஞ்சம் வசதியானதும் கூட. இந்தக் காரணங்களை எல்லாம் வைத்து யோசிக்கும் பொழுது எனக்கே சில நேரங்களில் குழப்பும், உண்மையிலேயே பார்க்கிறாளா? இல்லை நாம் தான் குழப்பிக் கொள்கிறோமோ என்று? ஆனால் அடுத்த முறை அவள் பார்க்கும் பொழுது அந்தக் குழப்பம் போய்விடும்.

சரி, ஒரு அழகான பெண் பார்க்கிறாள் என்று சொல்கிறாயே? நீயும் பார்க்க வேண்டியது தானே என்கிறீர்களா? அவள் என்னை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் நிச்சயம் இரகசியமாக பார்த்திருப்பேன். அவள் பார்க்கிறாள் என்று தெரிந்த பின் தயக்கமும் பயமும் தான் முதலில் வந்தது. அவள் வெறுமனே பார்ப்பதில் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என காத்திருந்தேன்.

அதுவும் நடந்தது. ஒருமுறை என் தங்கையை அவள் வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல சென்றிருந்தேன். நான் வருவதற்கு முன்பே அவள் கிளம்பி இருந்தாள். அவர்கள் வீட்டிலும் சத்யாவை தவிர்த்து யாருமில்லை. சரி கிளம்பலாம் என திரும்பியதும் சத்யா ஒரு பாக்சை கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்னது இது?” என்றவாறே திறந்து பார்த்தேன். ஸ்வீட் பாக்ஸ். உள்ளே நிறைய ஜிலேபி இருந்தது.

உனக்குத்தான், எனக்கு ஜிலேபின்னா ரொம்ப பிடிக்கும், நீ சாப்பிடு” என்றாள்.

“இவ்ளோ எப்படி சாப்பிட முடியும்?”

“எடுத்துட்டு போய் சாப்பிடு, முழுசா உனக்குத்தான்

சரி என்று ஒரு வித பதட்டத்துடன் விட்டால் போதும் என்று கிளம்பி வந்து விட்டேன். அங்கிருந்து கிளம்பிய பின்னர் தான் அவள் கூறிய சொற்களை மீண்டும் ஒருமுறை சொல்லி பார்த்ததில் எனக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

“எனக்கு ரொம்பப் பிடிக்கும் நீ சாப்பிடு” அவளுக்கு பிடிச்சதுனா அவதானே சாப்பிடனும், நான் ஏன் சாப்பிடனும்?

கடைசியாக ஏதோ சொன்னாளே “முழுசா உனக்குத்தான்”. “ச்சே, எனக்கு ஏன் எல்லாமே தப்பு தப்பா தெரியுது. அவ ஏதோ நட்பா கொடுத்துருக்கானு நினைச்சுக்க வேண்டியதுதான்” பச்சை கோழைத்தனம். என்ன செய்ய?

அடுத்து அவள் வீட்டிற்கு போக வேண்டியதை தவிர்த்தேன். நீங்கள் கேட்கலாம், என்னடா இவன் இப்படி இருக்கிறான் என, உங்களுக்கு தெரியாது, அவள் கண்களை பற்றி? சாதாரணமாகவே அழகாக இருக்கும். என்னை பார்க்கையில் அது ஏதோ சொல்கிறது, என்ன சொல்கிறது என நான் புரிந்துக் கொண்டதை பார்த்தால் கண்கள் மட்டும் தனியாக சிரிக்கிறது, அவள் இயல்பாக பேசுகிறாள். என்னால் தான் முடியவில்லை.

கிட்டத்தட்ட புலம்ப ஆரம்பித்து விட்டேன், யாரிடம் சென்று புலம்புவது? வழக்கம் போல என் டைரியிடம் தான் புலம்பிக் கொள்கிறேன். என்ன புலம்புகிறேன் என்று கேட்கிறீர்களா? அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றுதான். புரியவில்லையா? எனக்கும் தான், அவளை பார்க்கவும் முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

அவளே என்னைத்தேடி வந்தாள். என் வீட்டிற்கு, என் தங்கையை பார்க்கத்தான் வந்தாள், என்னை பார்க்கத்தானே வந்திருப்பாள். அவளுக்கு மட்டும் எப்படித்தான் வாய்ப்பு அமைகிறதோ தெரியவில்லை. சரியாக என் தங்கையை ஏதோ சொல்லி வெளியே அனுப்பி விட்டு, என்னிடம் வந்து ஒரு டிபன் பாக்சை கொடுத்தாள்.

“என்னது இது?”

உனக்குத்தான், நானே செஞ்சது”

கொடுத்து விட்டு கிளம்பி விட்டாள். என் அறைக்கு சென்று திறந்து பார்த்தேன். கேசரி. முழுதாக நான் ஒருவனே சாப்பிட்டேன். நன்றாகத்தான் இருந்தது. உண்மையில் அவள் அருகாமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையெல்லாம் அவள் காதலுடன் செய்திருந்தால் என்னைப் போல் சந்தோஷப்படுபவன் யாருமில்லை. ஆனால் அப்படி எதுவுமில்லை, வெறும் நட்பு தான் என்றால் தாங்கிக் கொள்ள எனக்கு சக்தி இல்லை. அந்த எதிர்மறை முடிவினை நினைத்து பயந்துதான் அவளை நெருங்க தயங்குகிறேன். இல்லை என்றால் இப்படி ஒரு தேவதையை வேண்டாம் எனக் கூற நான் என்ன மாங்காவா?

அடுத்த முறையும் அவள் தான் என்னை நெருங்கினாள். கொஞ்சம் அதிகமாகவே. நான் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தாள். நான் இறுதி ஆண்டு, அவள் முதல் ஆண்டு. அவள் வீட்டினர் என்னை அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறினார்கள். ஆனால் கல்லூரிக்கு வந்த பின்னர் அவள் தான் என்னை பார்த்துக் கொண்டாள்.

ஒருமுறை வகுப்பு நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, பேராசிரியரிடம் அனுமதிக் கேட்டு, என்னை வெளியே அழைத்தாள். நான் என்னவோ ஏதோ என வெளியே வந்துக் கேட்டால், ஒரு டெய்ரி மில்க் சாக்லெட்டை தந்து விட்டு “உனக்குத்தான், சாப்பிடு” என்று கொடுத்து விட்டு ஓடிவிட்டாள். வகுப்பின் உள்ளே இருந்த அனைத்து மாணவர்களும் என்னையும் அவளையும் தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இடைவேளையில் அவர்களின் கேள்விக்கு என்னால் பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை.

கல்லூரிப் பேருந்தில் என்னுடன் தான் வருவாள், நான் பின்னாடியும் அவள் முன்னாடியுமாக கொஞ்ச நாட்கள் போனது. பின் அவளாக பின்னாடி வந்து விட்டாள். எனக்கு அவள் அருகே அமர்வது மிகுந்த கூச்சத்தை தந்தது. நான் என்ன செய்கிறேன் என என் நண்பர்கள் பார்த்துக் கொண்டே வருகையில் எனக்கு எப்படி இருக்கும். அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே வருவாள். நான் ஒரிரு வார்த்தைகளில் பதிலளிப்பேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அவள் கண்களை தயக்கமில்லாமல் பார்க்கத் துவங்கி விட்டேன். அந்த கண்களும் சில நேரங்களில் என்னிடம் பேசும். அது பேசும் போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு அது எப்பொழுதும் முத்தமிடச் சொல்லிக் கேட்பதாகவே தெரியும்.

கல்லூரியில் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான ஜோடிகளில் நாங்களும் ஒரு ஜோடி. ஒன்றாக கல்லூரிப் பேருந்தில் வருவோம், ஒன்றாகத் தான் செல்வோம். இடையே வகுப்பு நேரங்களில் மட்டும் தான் பிரிந்திருந்தோம். உணவு இடைவேளையில் ஒன்றாக சாப்பிடத் துவங்கினோம். நான் கொண்டு வருவதை அவள் வாங்கிக் கொள்வாள். அவள் சமைத்து எடுத்து வருவதைத் தான் நான் சாப்பிட வேண்டும் என்பாள். அடுத்த நாள் என்ன செய்து எடுத்து வரட்டும் என இரண்டு ஆப்ஷன் கொடுப்பாள், ஒழுங்காக சொல்ல வேண்டும். இல்லை என்றால் முறைப்பாள். அழகாக இருக்கும்.

எனக்காக ஏன் இப்படி செய்கிறாள் என்றெல்லாம் கேட்க மாட்டேன். கேட்டு “வெறும் நட்பு” என்று சொல்லி விட்டால் என்ன செய்ய? என் வாழ்வில் இப்படி ஒரு தேவதையின் அருகாமை கிடைக்கும் என நான் நினைத்தது கூட கிடையாது. அதுவும் திருமணத்திற்கு முன்பு சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எந்த பெண்ணிடமும் போய் பேசவே தைரியமில்லாதவன் நான், எங்கிருந்து காதலிக்க என்று இருந்தவன் வாழ்வில் இப்படி ஒருத்தி? நினைத்து பார்க்கையில் பறப்பது போல் இருக்கும்.

இறுதி வரை நேரான பாதைகள் எங்கும் கிடையாது, அப்படி இருந்தாலும் என்ன சுவாரசியம் இருக்க போகிறது. எங்கள் இருவரது பழக்கத்திற்கும் ஒரு முடிவு வந்தது. என் கல்லூரி படிப்பு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதன் பின்னர் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. வேலைக்கு செல்வதை பற்றி சொல்லவில்லை. அவளை எப்படி பிரிந்து இருக்க போகிறேன் என்று தெரியவில்லை.

வீடு பக்கம் தான், தினமும் கூட பார்க்கலாம், ஆனால் என்ன முறையில் செல்வது? நண்பனாகவா? எனக்கே அது அசிங்கமாக இருந்தது. அவள் என் கனவுகளில் தினமும் வரத்துவங்கி பல நாட்களாகி விட்ட நிலையில் இன்னமும் கோழைத்தனமாக இருக்க நான் தயாராக இல்லை. அவளிடம் என் காதலைச் சொல்ல முடிவெடுத்தேன்.

கல்லுரியில் ஆண்டு விழா நடந்துக் கொண்டிருந்தது. அழகான பெண் என்பதால் இவளை புடவை அணிந்து வரச் சொல்லி இருந்தார்கள். நிகழ்ச்சி எல்லாம் முடிந்து கல்லூரி பேருந்து கிளம்ப 7 மணி ஆகிவிட்டது. வழக்கம் போல என் அருகில் தான் அமர்ந்து வந்தாள். இந்நேரத்திலும் அவள் பொலிவு குறைந்தது போல் தெரியவில்லை. மிகவும் உற்சாகமாக பேசிக் கொண்டு வந்தாள். நான் பார்த்துக் கொண்டே வந்தேன். பேருந்து நெடுஞ்சாலையில் நுழைந்ததும் அவள் கைகளை பிடித்தேன். அவள் கண்கள் “என்ன?” என்று கேட்டது.

பிடித்த கையை விட்டு விட்டேன். இத்தனை நாட்கள் பழக்கத்தில் எதெச்சையாக தொட்டுக் கொள்வதுண்டு. கையை பிடிப்பது இதுவே முதல் முறை. நான் விட்ட கையை அவள் பிடித்துக் கொண்டாள்.

“சொல்லு”

“ஒன்னுமில்லை”

“டேய்”

“டேயா?”

“ஆமாடா, இன்னைக்காவது சொல்லித் தொலையேன்டா?”

“என்ன சொல்லனும்?”

“இப்ப நீ சொல்லப் போறியா? இல்லையா?” முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“சத்யா….”

“ம், சொல்லு?”

“ஐ லவ் யூ”

“ஹப்பாடா, இன்னைக்காவது சொன்னியே”

இப்போது என் முகத்தை நீங்கள் பார்க்க வேண்டும், அனைத்து பற்களும் சிரித்துக் கொண்டிருந்தன.

“சரி நீ எதுவுமே சொல்லலை?”

“நான் என்ன சொல்லனும்?”

“நான் சொன்னதுக்கு பதில் சொல்லு, யெஸ் ஆர் நோ?”

“நான் பதில் சொல்லனும்னா ஒரு கண்டிஷன்?”

“என்ன?”

“எனக்கொரு சத்தியம் பண்ணித் தரனும்”

“என்னன்னு?”

நீ முதல்ல பண்ணு, சொல்றேன்”

“என்னன்னே தெரியாமா எப்படி பன்றது?”

“பண்ணலைன்னா போ”

“சரி சரி பன்றேன், நீ சொல்ற கண்டிஷன் எதுவா இருந்தாலும் அதுக்கு ஒத்துக்கறேன், சத்தியம்”

“குட்”

“என்ன கண்டிஷன்னு சொல்லு?”

“நான் எங்கே, எப்ப கேட்டாலும், சுத்தி முத்தி பார்க்காம, பக்கத்துல யார் இருந்தாலும், கேள்வி கேட்காம முத்தம் கொடுக்கனும்”

“என்னது?”

“சத்தியம் பண்ணிருக்க?”

“சத்யா?”

“சரி வேண்டாம்னா போ”

“சரி ஒத்துக்கறேன், பதிலை சொல்லு”

“மரமண்டை, இந்த கண்டிஷனை கேட்டதுக்கப்புறம் தனியா பதில் வேற சொல்லனுமா?”

ச்சே, அசடு வழிய சிரித்து சமாளித்தேன். பேருந்து விளக்கை அணைத்திருந்தார்கள்.

“சரி இப்ப ஒரு முத்தம் கொடு”

“இப்பவா?”

“சத்தியம் பண்ணிருக்க?”

“சரி எங்க கொடுக்கனும்?”

“அது உன் இஷ்டம்”

“சரி கண்ணை மூடிக்கோ”

என்னிடம் நீண்ட நாட்கள் கேட்டுக் கொண்டிருந்த, அவள் கண்களுக்கு முத்தமிட்டேன். கண்களை திறந்த அவள் என் நெற்றியில் முத்தமிட்டாள். உண்மையில் அந்த தருணத்தில் எனக்குள் அதிக கூச்சமும் வெட்கமும் வந்ததை என்னால் உணர முடிந்தது.

இது முதல் நாள்.

பிறகு அவள் தோணும் போதெல்லாம் கேட்பாள். கூட்டம் இருக்கையில் அவள் கைகளில் முத்தமிட்டு சமாளிப்பேன். ஆனால் அவள் நான் எங்கு முத்தமிட்டாலும் உடனே நெற்றியில் திருப்பி தந்து விடுவாள். நான் எனது படிப்பு முடிந்ததும் அதே கல்லூரியில் MBA படிக்க சேர்ந்துக் கொண்டு, தொடர்ந்து இரண்டு வருடம் அவளுடன் கல்லூரிக்கு சென்று வந்தேன்.

எங்கள் திருமணம்?

அது தனிக்கதை, தனியாக சொல்கிறேன்.