தீண்ட தீண்ட – சிறுகதை

மெதுவாக கை விரல்களை அவள் காதோரம் கொண்டு சென்று முடிகளை ஒதுக்கி விட்டு கோதி விட்டேன். இந்த கற்றைக் கூந்தல் தான் இவளை திரும்பி பார்க்க வைத்தது.

சில காரணிகள் பெண்களை இரண்டாம் முறை திரும்பி பார்க்க வைக்கும். கண்கள், நிறம், உடை நேர்த்தி என பல உண்டு. எனக்கு முக்கிய காரணி கூந்தல். அடர்த்தியான கூந்தல் உடையவர்களை திரும்பி பார்க்காமல் வர இயலாது.முதலில் வேலைக்கு சேர்ந்த பொழுது எனக்கு சமமான வயதில், படிப்பில், அனுபவத்தில் இருந்த பெண்களை விட மூத்தவளான இவளைத்தான் திரும்பி பார்த்தேன். இவளது கூந்தலடர்த்தி பிடித்திருந்தது. அடிக்கடி பார்ப்பேன். ரசிப்பேன்.

என் கைகள் அவள் கூந்தலை வருடி, கோதி, பின்கழுத்தினை அடைந்த பொழுது அவள் முகத்தை கவனித்தேன். அவள் கணகள் மூடிக் கொண்டிருந்தாள். உதடுகள் மெலிதாக, மிக மெலிதாக நடுக்கமுறுவதை என்னால் உணர முடிந்தது.

அவளை ஊடுருவும் என் பார்வைகளை அவள் உணரத் தொடங்கினாள். ஒருமுறை மானிட்டரை கவனித்து விட்டு, திரும்பி புருவத்தை மட்டும் உயர்த்தி “என்ன?” என்றாள்.

நான் தோள்களை குலுக்கி “ம்ப்ச், ஒண்ணுமில்லை” என்றேன். முறைக்காமல் திரும்பிக் கொண்டாள். பின்பக்கம் இருந்து அவள் கூந்தலை மட்டும்தான் பார்த்தேன் என்றால் யார் நம்புவார்கள்?

பெரும்பாலும் அவளை பார்க்கும் போதெல்லாம் கூந்தலையே கவனித்து கொண்டிருந்தவன் வேலை நிமித்தமாக அவளுடன் பேசுகையில் முழுதாக கவனிக்கத் துவங்கினேன். என்னை விட ஒரு இஞ்ச் உயரம். நிறம் என் நிறம் தான். அவள் உடல்வாகு புடவையில் கச்சிதமாக பொருந்துவதால் அதிக நாட்கள் புடவைதான். சரளமான ஆங்கிலப் புலமை. ஆனால் சிறிய உதடுகள். பேசாதபொழுது இருப்பதே தெரியாத அளவு சிறிய உதடுகள்.

அதிகம் வெளிப்படாத ஒன்றினையே மனம் ஆவலாக தேடும். அவள் பேசுகையில் உதடுகளையே உற்று கவனிக்கத் துவங்கினேன். என் பார்வை அவளை எரிச்சலூட்டுவது புரிந்தாலும் அவள் தடுக்கும் வரை தொடரலாம் என்று தொடர்ந்தேன். அவளால் என்னை ஒதுக்க இயலவில்லை.

அவளுக்கு வேலையில் திறமையும் அனுபவமும் அதிகம். ஆனால் துணிச்சல் என்னில் பாதி கூட இல்லை. மேலிடத்தில் கேட்காமல் எதையும் முடிவெடுக்க தைரியம் அறவேயில்லை. எனக்கு அது அதிகம். அதை ஆரம்பத்தில் அவளே திமிர் என்று சொன்னாள். ஆனால் பல விஷயங்களில் நான் எடுத்த துணிச்சலான முடிவுகளின் பலன்கள் சாதகமாக இருந்ததை கண்டு, போகப்போக முக்கிய முடிவுகளை எடுக்க என்னை அணுகத் துவங்கினாள்.

இருவரும் நெருங்கினோம். எந்த வேலையையும் ஒருவர் இல்லாமல் மற்றவர் செய்ய மாட்டோம் என சொல்லுமளவிற்கு நெருங்கினோம்.

அவள் உதடுகள் நடுங்குவதை கவனித்த எனக்கு, இந்த தருணத்தில் அவள் கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. பார்த்தேன். கண்களை போலவே கைவிரல்களையும் இறுக்கமாக மூடி எதற்கோ தயாராக விறைப்பாக வைத்து கொண்டிருந்தாள்.

அவளுடன் நெருங்கி பழக துவங்கிய பின்னர் என்னால் கூந்தல் அடர்த்தியையும், உதடுகளையும் கவனிப்பதோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. முழுமையாக ரசிக்கத் துவங்கினேன். அவள் அதை கவனித்துக் கேட்கும் பொழுது “போரடிக்குது, சைட் அடிச்சுக்கறேன்” என்பேன்.

அவளுக்கென்று நெருக்கமான நட்பு வட்டம் அமையவில்லை. அதற்கு அவளை மிகைப்படுத்திக் காட்டும் அவளது தோற்றமும் ஒரு காரணம். அதிகம் சிரிக்காதவளிடம் நெருங்க பெரிதாய் யாரும் விரும்பவில்லை. “புடவையும் கண்ணாடியும் ஏதோ டீச்சர் மாதிரி” என்பார்கள். நான் அவள் கண்களை அதிகம் பார்த்துப் பேசாததால் எனக்கு அவள் கண்ணாடி பிரச்சனையாக படவில்லை.

இவளை பற்றிய கிசுகிசு ஒன்று உண்டு. இரண்டு வருடத்திற்கு முன் இதே அலுவலகத்தில் ஒருவன் அவளிடம் காதலை சொன்னதாகவும், இருவரும் காதலித்ததாகவும், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் நினைத்திருக்கும்பொழுது பிரிந்து விட்டதாகவும், அவன் மாற்றலில் சென்று விட்டதாகவும் கூறினார்கள். இது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் எனக்கு உபயோகப்படப் போவதில்லை என்று விட்டு விட்டேன். தேவைப்பட்டால் அவளிடமே கேட்டுக் கொள்வேன்.

எனக்குத் தேவையில்லாமல் சொந்த விவரங்களை பற்றிக் கேட்பது பிடிக்காது ஒன்று. அவள் கொண்டு வந்த உணவினை சாப்பிட்டு விட்டு, அம்மா சமையலா என கேட்டதற்கு அவள்தான் சமைத்ததாகவும் அம்மாவும் தம்பியும் தாத்தா வீட்டில் இருப்பதாகவும் கூறினாள். அவள் தந்தை பற்றி அவளும் கூறவில்லை. எனக்கும் கேட்கத் தோன்றவில்லை. எனக்கு தேவைப்பட்ட தகவலான அவள் தன் தோழியுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததை மட்டும் தெரிந்து கொண்டேன்.

அவள் கண்களும் விரல்களும் இறுக்கமாக மூடி இருந்ததை பார்க்கவும் எனக்கு சீண்ட வேண்டும் போல் இருந்தது. ஆசிரியரிடம் அடி வாங்குவதற்கு முன் உடலை விறைப்பாக்குவதைப் போல் இறுக்கமாக நின்றிருந்தாள். எனக்கு இறுக்கம் பிடிக்காது. அவளை தளர்த்த மெதுவாக எனது மற்றொரு கையினால் அவள் மணிக்கட்டின் அருகேயுள்ள சதையை கிள்ளினேன். “ஸ்……ஆ” என்றவாறு கண் திறந்தாள்.

எனக்கு இப்படி கிள்ள பழக்கியது இவள்தான். கணிணியில் எனக்கு அவளை விட வேகம் வரும். அவள் கணிணியில் வேலை பார்க்கத் துவங்கிவிட்டால் எனக்கு போரடிக்கும். ஆதலால் அவளுடைய கணிணி வேலைகளையும் நானே செய்ய துவங்கினேன்.

அவள் அருகில் என் வேலையை கவனித்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பாள். எங்கேனும் நான் தவறு செய்யும் பொழுது என் வலது கையைக் கிள்ளுவாள். தீண்டுதல் அங்குதான் எங்களுக்குள் துவங்கியது. வலித்தாலும் நான் வேண்டுமென்றே கண்டு கொள்ளமாட்டேன். அப்பொழுதுதான் அவள் மீண்டும் கிள்ளுவாள் என்பதற்காக. போகப்போக தவறிழைக்கையில் ஒருவரை மற்றவர் கிள்ளுவது எங்களுக்குள் வழக்கமானது. தொடுதல் இயல்பானது.

கண் திறந்தவள் என்னை பார்த்தாள். அவள் பார்த்ததும் இதழோடு இதழ் பதித்தேன். என் கைகள் அவள் தலை என்னிலிருந்து விலகிச் செல்லாமல் பிடித்திருந்தது. அவள் கைகள் என் தோள்களில் இருந்தது. முதலில் தள்ள முயற்சித்த இரண்டும் பிறகு அமைதியானது.

எனக்கு அலுவலகத்தில் மற்ற பெண்களுடனும் பழக்கம் உண்டு. அவர்களை டார்லிங், டியர் என்றழைத்து மற்ற நண்பர்களை வெறுப்பேற்றி விளையாடுவது போல் இவளிடம் செய்ய மாட்டேன். இவள் வேறு. என் நாட்களின் அதிகபட்ச நேரங்கள் அவளுடன் தான் செலவானது. வேலை இருக்கிறதோ இல்லையோ இருவரது அருகாமை இருவருக்கும் பிடித்திருந்தது. வெளியே சுற்றத் துவங்கினோம் அவள் காரில். எப்பொழுதும் அவள்தான் ஓட்டுவாள்.

அவளுடைய கலைப்பொருட்கள் தேடலுக்கு என்னை தவிர்த்து துணை யாருமில்லை. அதிகம் சுற்றியது அவள் வேலைக்காகத்தான். நான் படத்திற்கு மட்டும்தான் அழைத்தேன். பார்க்கும் பழக்கமில்லை என்று சொல்லி விட்டாள். ஒரு முறை மாடர்ன் ஆர்ட் கேலரிக்கு இவளை அழைத்தேன். சர்வீசுக்கு சென்ற கார் வந்ததும் நாளை போகலாம் என்றாள். இன்று கடைசி நாள் என்று வம்படியாக என் பைக்கில் அழைத்து சென்றேன். யாருடனும் புடவை கட்டி ஒரு பக்கமாக அமர்ந்து சென்று பழக்கமில்லை என்பதால் போய் சேரும் வரை என் தோள்களை இறுகப் பிடித்திருந்தாள்.

என் தோள்களை பிடித்திருந்த அவளது கைகள் மெதுவாக என் பின்னங்கழுத்தை தேடிப் பிடித்தது. என் தலைமுடியை கோதியது. என் கைகளை அதன் போக்கில் விட்டுவிட்டேன். என் கவனம் இதழ்களில் தான் இருந்தது.

துவக்கத்தில் என் பார்வைகளால் எரிச்சலடைந்தவள் இப்போது “எப்படி? நல்லாருக்கா?” என்று என்னிடம் ஒப்புதல் கேட்டு விட்டுதான் துணிகளை வாங்குகிறாள். இருவருக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. அவளுக்கு தெரியும் என் பார்வைகளை குறித்து. இருந்தும் என்னை சரியாக கையாண்டாள். இயல்பாய் நெருங்கிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் அவள் எல்லை வகுத்து தடை போடுவது புரிந்ததும் அதை தாண்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதுவரை எதையும் திட்டமிட்டு பழக்கமில்லாத நான் சில திட்டங்களை வகுத்தேன். அவளை அடைய வேண்டும் என எண்ணத் துவங்கினேன்.

என் நடவடிக்கைகளில் தெரியும் சிற்சில மாற்றங்களை அவள் கவனித்தாள். மெதுவாக என் பேச்சு எதை நோக்கி அழைத்து செல்கிறது என்று அவளுக்கு புரிந்தது. எனக்கு மூன்று வயது மூத்தவள். எவ்வளவு சந்தித்திருப்பாள். எனது பேச்சுக்களில் சரியான இடத்தில் கத்தரி போட்டாள். ஆனால் என்னிலிருந்து கொஞ்சம் கூட விலக முயற்சிக்கவில்லை. அவள் என்னை இப்படியே நெருக்கமான தோழனாக வைத்திருக்க விரும்பினாள். ஆனால் என்னால் அது முடியவில்லை. அவளை வேறு கோணத்தில் பார்க்க துவங்கி விட்டேன், யோசிக்கத் துவங்கி விட்டேன். ஆனால் அவள் அதையெல்லாம் விரும்பாத போது என்னால் முன்பு போல் அவளைத் தீண்டி இயல்பாய் விளையாட இயலவில்லை. நான் சற்று விலகியதால் அவளாலும் உரிமை எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அவள் பாவம். என்னுடைய தவறுதான். எனக்குத்தான் வேறு மாதிரியான எண்ணங்கள் வந்தது. என்னுடைய தவறினால் அவளுடைய நெருங்கிய நண்பனை அவள் இழக்கத் துவங்கினாள். இருவருக்குமிடையே உருவான இடைவெளி என்னை விட அவளை மிகவும் பாதித்தது. பல முறை “உனக்கு என்னதான்டா பிரச்சனை?” என்று பதில் தெரிந்து கொண்டே கேட்பாள்.

ஒருமுறை தாங்காமல் “நீதான் பிரச்சனை” என்று சொல்லிவிட்டு கோபத்தில் அவள் கையைக் கிள்ளினேன். “டேய் வலிக்குது விடுறா” என்ற பிறகுதான் விட்டேன்.

“எனக்கும் வலிக்குது” என்று சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.

இரவு தொலைபேசியில் அழைத்து பேசினாள்.

“டேய், ப்ளீஸ் டா, இதெல்லாம் இல்லாம முன்ன மாதிரி என் கூட பழகேன்”

“முயற்சி பண்ணேன்…என்னால் முடியலை”

“எனக்கு பிடிக்கலைடா.. உன் கூடனு இல்லை..பொதுவா அதை யோசிச்சாலே உமட்டுது.. எனக்கு அது வேண்டாம் புரிஞ்சுக்கோ”

“நான் என்ன பண்ணனும்?”

“என் கூட முன்ன மாதிரி இரு, இந்த நினைப்பு வேண்டாம்”

அவள் வேண்டாம் வேண்டாம் எனும் போது தான் எனக்குள் தீ அதிகமாக எரிந்தது. எப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. எனக்கு வேண்டும் என்று மட்டும் தான் தோன்றியது. அடுத்த நாள் அவளிடம் போய் இயல்பாய் பேச முடியும் என்று தோன்றவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டேன். அதற்கடுத்த நாளும் செல்லவில்லை. அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுக்கவில்லை. அதற்கடுத்த நாளும் செல்லவில்லை. மூன்றாம் நாள் மாலை அவளிடம் இருந்து குறுந்தகவல் வந்தது.

“Come to my home”

எந்த அர்த்தத்தில் அனுப்பினாள் என்று புரியாமல் யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அவளுக்கு அழைத்துக் கேட்கவும் தயக்கமாய் இருந்தது. அடுத்த குறுந்தகவல்

“Am alone, come to my home”

எனக்கு புரிந்தது. ஒரு மாதிரியான பதட்டத்துடன் கிளம்பினேன். அவள் முறைத்துக் கொண்டே வரவேற்றாள். சோபாவில் அமரச் செய்தாள். அருகே அமர்ந்தாள். என் கையை பிடித்து கிள்ளினாள். அவளே போதுமென நினைத்து நிறுத்தும் வரை நான் எதுவும் பேசவில்லை.

“என்னடா உன் பிரச்சனை?”

அமைதியாக இருந்தேன்.

“உனக்கு அது மட்டும் தான் முக்கியம். இல்லை?”

நிமிர்ந்து அவளை பார்த்தேன். அவள் முகத்தில் முறைப்பு மாறியது. இருவரும் எதுவும் பேசாமல் இருந்தோம்.

மெதுவாக கை விரல்களை அவள் காதோரம் கொண்டு சென்று முடிகளை ஒதுக்கி விட்டு கோதி விட்டேன்.

என் கைகள் அவள் கூந்தலை வருடி, கோதி அவள் பின்கழுத்தினை அடைந்த பொழுது அவள் முகத்தை கவனித்தேன். அவள் கண்கள் மூடிக் கொண்டிருந்தாள். உதடுகள் மெலிதாக, மிக மெலிதாக நடுக்கமுறுவதை என்னால் உணர முடிந்தது.

அவள் உதடுகள் நடுங்குவதை கவனித்த எனக்கு இந்த தருணத்தில் அவள் கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. பார்த்தேன். கண்களை போலவே கைவிரல்களையும் இறுக்கமாக மூடி எதற்கோ தயாராக விறைப்பாக வைத்து கொண்டிருந்தாள்.

அவள் கண்களும் விரல்களும் இறுக்கமாக மூடி இருந்ததை பார்க்கவும் எனக்கு சீண்ட வேண்டும் போல் இருந்தது. ஆசிரியரிடம் அடி வாங்குவதற்கு முன் உடலை விறைப்பாக்குவது போல் இறுக்கமாக நின்றிருந்தாள். எனக்கு இறுக்கம் பிடிக்காது. அவளை தளர்த்த மெதுவாக எனது மற்றொரு கையினால் அவள் மணிக்கட்டின் அருகேயுள்ள சதையை கிள்ளினேன். “ஸ்……ஆ” என்றவாறு கண் திறந்தாள்.

image

கண் திறந்தவள் என்னை பார்த்தாள். அவள் பார்த்ததும் இதழோடு இதழ் பதித்தேன். என் கைகள் அவள் தலை என்னிலிருந்து விலகிச் செல்லாமல் பிடித்திருந்தது. அவள் கைகள் என் தோள்களில் இருந்தது. முதலில் தள்ள முயற்சித்த இரண்டும் பிறகு அமைதியானது.

என் தோள்களைப் பிடித்திருந்த அவளது கைகள் மெதுவாக என் பின்னங்கழுத்தை தேடிப் பிடித்தது. என் தலைமுடியை கோதியது. என் கைகளை அதன் போக்கில் விட்டுவிட்டேன். என் கவனம் இதழ்களில் தான் இருந்தது.

இருவருக்கும் விட்டு விலகி ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள கூச்சமாய் இருந்தது. அவளை விலக்காமலேயே படுக்கையறைக்கு அழைத்துச் சென்றேன். படிப்படியாக துவங்கினேன். என் விரல்கள் அவள் இடையை தாண்டியதும் அவளிடம் ஏதோ மாறியது தெரிந்து கண்கள் திறந்து பார்த்தேன்.

அவள் என்னை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பெயர் சொல்லி அழைத்தேன். பதிலில்லை. எந்த அசைவும் இல்லை. எனக்குள் சர்வமும் வடிந்து போனது. அவள் கன்னத்தை மெதுவாக தட்டினேன். திடீரென அவள் கண்களில் பொலபொலவென நீர் கொட்டியது. பெருங்குரலில் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு என்னை அணைத்துக் கொண்டாள். என்ன நடந்தது.. என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன்.

வெகுநேரம் அவள் என் அணைப்பில் இருந்தாள். அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அப்படியே படுக்க வைத்தேன். உறங்கி விட்டாளா இல்லை மயங்கி விட்டாளா என தெரியவில்லை. விலகி அமர்ந்து யோசிக்கத் துவங்கினேன். தனியாக விட்டுச் செல்லவும் மனமில்லை. அவளை எழுப்பவும் மனமில்லை. குழப்பமாய் இருந்தது.

நேரம் கடந்து நடுநிசியை நெருங்கியது. கிளம்பி விடலாம் என்று முடிவெடுத்தேன். அவளை திரும்பி பார்த்தேன். அவள் உதடுகள் அசைவது போல் இருந்தது. காதை அவள் உதட்டருகே கொண்டு சென்று கேட்டேன்.

“அப்பா, வேண்டாம்பா, வலிக்குதுப்பா, வேண்டாம்ப்பா”

மீண்டும் மீண்டும் அதையேதான் சொல்லிக் கொண்டிருந்தாள். யோசித்தேன். எனக்குள் ஏதோ புரிந்தது போல் இருந்தது. வாசல் வரை சென்று. கதவு அடைத்திருக்கிறதா என்று பார்த்து விட்டு மற்ற அறைகளில் எரியும் விளக்குகளை அணைத்துவிட்டு வந்து அவளருகே படுத்தேன். அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் தலையை மெதுவாக எடுத்து என் நெஞ்சில் வைத்துக் கொண்டு அவளுடன் சேர்ந்திருக்க துவங்கினேன்.

நன்றி: அகம் இணைய இதழ்