இப்படித்தான் இருக்கோம்

“ஜெமினி” படத்துல ஜெயில்ல மாட்டுனதும் விக்ரம் கலாபவன்மணியிடம் இங்கிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் திருந்துவது போல நடிக்க வேண்டும் என சொல்ல அதற்கு கலாபவன்மணி அதிர்ந்து “திருந்தனுமா? நாம என்ன தப்பு பண்ணோம், திருந்தறதுக்கு?” என்பார். அதாவது தான் செய்த கொலைகளோ, கடத்தல்களோ தவறு என்பதையே அவர் மனம் ஒப்புக் கொள்ளாது.

நாம் அனைவருமே கலாபவன் மணி போலத்தான், ஞாயப்படியும் சட்டப்படியும் தவறு என்பதை விடவும், நடைமுறையில் அதிகம் பேர் செய்வதால் சில விஷயங்களை தவறே இல்லை என சொல்ல துவங்கி விட்டோம். ஓட்டுக்கு பணம் வாங்குவது, காரியங்களை வேகமாக முடிக்க இலஞ்சம் தருவதெல்லாம் தவறென யாரும் சொல்வதில்லை. அதை விடக் கொடுமை அது போன்ற் விஷயங்களை பொதுவெளியலே பேச துவ்ஙகிவிட்டோம் என்பதுதான்.

தேமுதிகவில் இருந்து வெளிவந்த சந்திரக்குமார் சொல்கிறார், “இப்போதிருக்கும் நிலையில் தேமுதிக வேட்பாளர்கள் நின்றால் தொகுதிக்கு 10000 வாக்குகள்தான் கிடைக்கும், அதற்காக ஒவ்வொருவரும் 25 இலட்சம் செலவு செய்ய முடியுமா? இதே கூட்டணியில் நின்றால் உள்ளாட்சி தேர்தலிலும் எந்த பதவிக்கும் வர இயலாது, இதற்காக நாங்கள் கடன் வாங்கி செலவு செய்வதா?”

அரசியல் கட்சிகள் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆட்சிக்கு வர விரும்ப வேண்டும், இயலவில்லை என்றாலும் ஆளுங்கட்சி ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இப்போது கட்சி துவங்குபவர்கள் பணத்தை முதலீடு செய்து, ஆட்சிக்கு வந்த பின் அதிகமாக பணம் சம்பாதிக்கும் வியாபாரமாகவே அரசியலை நினைக்கிறார்கள். இது இப்படித்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான் என்றாலும் இந்த உண்மையை கொஞ்சம் கூட மறைக்காமல் ஊடகத்தில் அவர்கள் சொல்லுமளவிற்கு நாம் சொரனை கெட்டு இடம் கொடுத்திருக்கிறோம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த தேர்தல், இந்த கட்சி என்று மட்டும் சொல்லவில்லை, பொதுவாக அரசியல் குறித்து ஏதோ ஒன்றை நாம் கட்டாயம் செய்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் எனபதையாவது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.