அம்மன் – நாஸ்டால்ஜியா

எந்த ஊர் பேருந்து நிறுத்தத்திலும் ஒரு மரம் இருக்கும், அதனை கடந்து தான் அந்த ஊருக்குள்ளேயே நுழையும் வண்ணம் இருக்கும். சினிமா ஊருக்குள்ளும் அது போன்ற சில நுழைவாயிலாக மரங்கள் போன்ற படங்கள் உண்டு, அது எந்த மொழிப் படமாக இருந்தாலும் அனைவரும் அப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாதவாறு பிரபலமானதாய் இருக்கும். அதற்கு பல படங்களை உதாரணமாக கூறலாம். தமிழில் “பாட்ஷா” படத்தை பார்க்காமல் யாராவது இருப்பார்களா? கிட்டத்தட்ட அதே போல அனைவரும் இரசித்த ஒரு படம் தான் “அம்மன்”

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடைய ஜோடி நம்பர் ஒன் ப்ளூப்பர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஜட்ஜ்ஜாக இரம்யா கிருஷ்ணன் ஒருவருடைய பெர்ஃபார்மென்சை குறித்துக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, சிவா இடையில் புகுந்து கலாய்த்ததும் இரம்யா கிருஷ்ணன் “யேய்ய்ய்ய்ய்” என்று கத்துவார். எல்லோரும் ஒரு நிமிடம் பயந்து ஸ்தம்பித்து விடுவார்கள். பாவனா “மேடம், எனக்கு ஒரு நிமிஷம் நீலாம்பரி கேரக்டர்லாம் தெரிஞ்சது” எனச் சொல்ல, சிவா “அட நீ வேற ஏம்மா, எனக்கு அம்மன் பட கிளைமாக்ஸ் லாம் வந்துட்டு போச்சு, அதுல இப்படி கத்திகிட்டு தான் சூலத்தை எடுத்து குத்துவாங்க, மேடம் நீங்க பேசுங்க, சாமி நான் ஒதுங்கியே நிற்கிறேன்” என்பார். எனக்கு சிறுவயதில் பார்த்த அம்மன் படத்தின் நினைவுகள் வந்தது. தரவிறக்கி பார்த்தேன்.

படத்தை பார்த்ததை வைத்தே தனிப் பதிவு எழுதலாம். எங்கள் ஊரில் மொத்தம் அப்பொழுது இரண்டு திரையரங்குகள் தான், இப்பொழுது ஒன்றுதான். தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்து நேரடியாக வெளியான படம். வாசலிலேயே ஒரு டேபிளில் ஒரு அண்டாவை கவிழ்த்துப் போட்டு, மஞ்சள் பூசி, ரெடிமேடாக அம்மனை வைத்திருப்பார்கள். அதற்கு முன் பூஜை செய்து தேங்காய், பழம், குங்குமம் எல்லாம் வைத்து, அரங்கம் முழுக்க சாம்பிராணி மணமணக்க ஏதோ கோவிலுக்குள் செல்வதை போல உணர வைத்தார்கள்.

படம் துவங்குகிறது. ஒரு கிராமம். கொள்ளை நோய் தாக்கத்தால் நிறைய பேர் உயிரிழக்கிறார்கள். மக்கள் அனைவரும் தப்பிப்பதற்காக அம்மனை வழிபடுகிறார்கள். அன்றைய இரவு பூஜையின் போது ஒரு பெண் புதிதாக அந்த ஊருக்குள் வருகிறார். பார்ப்பதற்கே மஞ்சள் பூசிய முகத்துடன் தெய்வ கடாட்சமாக இருக்கிறார். வந்தவர் அம்மனுக்கு பூஜை செய்ய வைத்திருக்கும் நெய்வேத்தியத்தை பசிக்கு உண்ண கேட்கிறார். பூஜை முடிவதற்குள் தர முடியாது எனக் கூற, ஒரு பெண் எடுத்து தருகிறாள். அன்று இரவு ஊரே உறங்கிய பின்னர், புதிதாக வந்த பெண்மணி ஊருக்கு நடுவில் அமர்ந்து வேப்பிலையை அரைத்துக் கொண்டிருக்க, அவருக்கு உணவளித்தப் பெண் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறாள். அழைத்து சென்றவளிடம் ஒரு பானையில் வேப்பிலையை கரைத்துக் கொடுத்து ஊர் முழுக்க தெளித்து விட்டு வரச் சொல்கிறாள். அதுவரை அவள் குடிசைக்கு தான் காவல் இருப்பதாக கூறி சத்தியம் செய்கிறார். வேப்பிலை நீரை தெளிக்க சென்ற பெண், சாப்பிட சொல்லி விட்டு வருவோம் என திரும்பி வந்து பார்க்கையில் தான் தெரிகிறது, வந்திருப்பது அம்மன் என்று. நீல முகத்துடன் உக்கிரமாக அம்மன் மூச்சு விடுவதை பார்க்கவே பயமாக இருக்கும். தான் திரும்பி வந்தால் அம்மன் ஊரை விட்டு சென்று விடுவாள் என்று கிணற்றில் விழுந்து ஊருக்காக உயிரை விடுகிறாள். அவளது தியாகத்தை மதித்து அம்மன் அந்த ஊரின் கிராம தேவதையாக அங்கேயே தங்கி விடுகிறாள். இந்த இடத்தில் எஸ்.பி.பி பாட துவங்குவார். “அம்மா, அங்காள அம்மா” என்று. படத்தில் எழுத்து போட துவங்குவார்கள். அம்மனாக இரம்யா கிருஷ்ணன். வேறு யாரும் கிட்ட நெருங்க முடியாத முக இலட்சணம். கம்பீரம், அதுதான் அன்று அம்மனாக துவங்கி, இன்று பாகுபலியில் சிவகாமி நாச்சியாராக “இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என கர்ஜிக்க வைக்கிறது.

அதன் பிறகு படம் நிகழ்காலத்திற்கு வருகிறது. பவானி, அந்த ஊரில் வாழும் ஏழை அனாதைப்பெண், அவளுக்கு அம்மன் பக்தியை தவிர வேறொன்றும் தெரியாது.அந்த ஊரில் படித்த டாக்டராக சுரேஷ், அவரது தூரத்து உறவுக்கார அக்கா கண்ணம்மாவாக வடிவுக்கரசி மற்றும் அவரது குடும்பம். அவரது மகன் கோபாலகிருஷ்ணன் (அ) கோரக் காக ராமி ரெட்டி. ஒரு படத்தின் நாயகனை பலம் பொருந்தியவனாக காட்ட வேண்டுமா? வில்லனை சக்தி வாய்ந்தவனாக காட்டு என்பதுதான் சினிமாவின் அரிச்சுவடி. நம்பியார் இல்லாமல் போனால் எம்ஜிஆர் யாருடன் கத்தி வீசுவார். அதற்கேற்றார் போல் இந்தப் படத்தின் ஆகச்சிறந்த சிறப்பு என்பது வில்லனாக வரும் கோரக் தான். கொடுரக் குணம் கொண்டு, சாத்தானை வழிபடுபவன். “ஜண்டா” எனும் துர்தேவதை அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணை பலி கொடுத்தால், தங்கப் புதையலை எடுத்து தருவதாக கூற, அந்நேரத்தில் அவனிடம் வசமாக வந்து மாட்டுகிறாள் ஒரு பெண். அடுத்த மாதம் வரக்கூடிய தேர்வின் வினாத்தாளினை மந்திரத்தால் வரவழைத்துத் தர முடியுமா என கேட்டு வந்தவளை ஜண்டாவிற்கு பலியிட திட்டமிடுகிறான் கோரக்.

அவன் திட்டப்படி, நிறைந்த அமாவசையில் அவளை வசியம் செய்து சுடுகாட்டில் உயிருடன் புதைக்கிறான். இதனை பார்த்து விட்ட பவானி காவலர்களுடன் வந்து பூஜையை கெடுக்கிறாள். இறந்த பெண்ணின் உடலைக் கட்டிக் கொண்டு பவானி அழுகையில் கோரக் “யேய், அதான் செத்துட்டால்ல, விடு, 5 நிமிஷம், ஒரு 5 நிமிஷம் கழிச்சு வந்துருந்தா எல்லாம் நல்லபடியா நடந்துருக்கும், ஜண்டா எனக்கு வேணுங்கறதை கொடுத்துருப்பான், கெடுத்துட்டல்லை? உன்னை நாசம் பண்ணுவண்டி” என மிரட்டிவிட்டு செல்வதை பார்க்கையில் இந்த வயதிலும் பயப்படுவேன். சிறுவயதில் கேட்கவா வேண்டும்.

அடுத்து மற்றப் படங்களினை போலவே, நாயகனும் நாயகியும் இணைந்து விடுகிறார்கள். தன் மகளை கட்டிக் கொடுக்கலாம் என காத்திருந்த கண்ணம்மா, திட்டம் போட்டு பவானி சுரேசுசுடன் அமெரிக்கா செல்வதை தடுக்கிறாள். பின் தன் குடும்பத்தாரோடு சேர்ந்து, பவானிக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டுகிறாள். அதனை முறியடிக்க அம்மன் கோவிலில் தீ மிதிக்க செல்லும் பவானிக்கு மயக்க மருந்து கொடுத்து நெருப்பில் விழுந்து சாகடிக்க திட்டமிடுகையில் அம்மன் அருளால் உயிர் பிழைக்கிறாள் பவானி. இனி தாமதிக்க கூடாது என்று கண்ணம்மாவிற்கு கடன் கொடுத்த ஒருவன் பவானியை அடித்தே சாகடிக்கிறான்.

கோவிலுக்கு வந்த ஒரு மூதாட்டியின் மடியில், அம்மனுக்கான தீர்த்தத்தை கடைசியாக குடித்து விட்டு பவானி உயிர் துறக்கிறாள். அந்த மூதாட்டி கதறுகிறாள். கேமிரா கோவிலின் அடிவாரத்தில் இருந்து எஸ் பி பி குரலின் பிண்ணனியோடு ஒவ்வொரு படியாக மேலே ஏறி கோவிலுக்குள் செல்கிறது. கதவினை திறந்துக் கொண்டு சாட்சாத் அந்த அம்மனே வருகிறாள். இந்த இடத்தில் திரையரங்கு முழுவதும் சாம்பிராணி புகை போட, பல பெண்கள் அருள் வந்து ஆடினார்கள். வெளிவந்த அம்மனின் நெற்றியில் இருந்து ஒரு சூலாயுதம் பாய்ந்து வந்து கொலைகாரனை கொல்கிறது. பவானியை உயிர்ப்பித்து விட்டு, அவளுக்கு துணையாக ஒரு சின்னப் பெண் உருவெடுத்து அம்மன் அவள் வீட்டிற்கு செல்கிறாள்.

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க, சிறையில் இருந்து திரும்ப வருகிறான் கோரக். அவனுக்கு வந்திருக்கும் சின்னப் பெண் யார் என தெரிகிறது. அவளை திட்டமிட்டு, பழி போட்டு வெளியே அனுப்புகிறான். அவன் சூழ்ச்சி தெரியாமல் பவானியும் “நானே பொட்டு வச்சு கூப்பிடற வரைக்கும் நீ வரக்கூடாது, வந்தா என் பொணம் ஆத்துல மிதக்கும்” என சத்தியமிட்டு கூறுகிறாள். அம்மன் நகர்ந்த பின், கோரக் காய் நகர்த்த துவங்குகிறான். பவானியின் குழந்தையை அவள் பார்க்க பார்க்க சாகடிக்கிறான். அவள் கணவனை முழுவதும் தன்வசப் படுத்துகிறான். “என்னதான் வேண்டும்?” என கேட்கும் பவானியிடம் “நீதான் வேணும், இன்னைக்கு இராத்திரி அம்மன் சந்நிதானத்துல அவ பார்க்க பார்க்க உன் உடம்பை நான் அனுபவிக்கனும்” என சொல்கிறான்.

அன்று இரவு கோவிலுக்கு வரும் பவானி அவனிடம் இயன்ற வரை கெஞ்சி பார்க்கிறாள். கோரக் அவளை வேட்டையாட துரத்துகிறான். அவனை வெளியே வைத்து சாத்தி விட்டு, கணவனுடன் அம்மனிடம் மன்றாடுகிறாள் பவானி. தனது சக்திகளால் கதவை உடைத்து விட்டு வரும் கோரக் அம்மன் சிலையில் இருக்கும் கண்களை உடைத்து விட்டு “அம்மன் குருடி, குருட்டம்மன், இந்த குருட்டம்மன் என்னை என்ன செய்யும்?” என ஆணவமாக பவானியின் புடவையை உருவ, அவள் கையில் இருந்த இரத்தம் பறந்து சென்று அம்மனுக்கு பொட்டாக விழுகிறது. அம்மனின் கண்கள் திறக்கின்றன. அம்மன் வருகிறாள். ஆவேசத்துடன் வெளிப்பட்டு, தாண்டவமாடி, கோரக்கினை தனது சூலாயுதத்தால் குத்தி வதம் செய்து, சாந்தமடைந்து, பவானியின் குழந்தையை உயிர்ப்பித்து தந்து விட்டு மறைகிறாள். சுபம்.

இயக்கம் கோடி இராமகிருஷ்ணா. 1995ல் கிராஃபிக்ஸ் பெரிதாக வளராத காலத்தில், வெறுமனே கேமரா ட்ரிக்சையும், லைட்டிங்கையும் வைத்தே வித்தை காட்டிருப்பார். சரியான திரைக்கதை, தேவைப்படாத எந்த காட்சிகளையும் வைக்காமல், பெண்களுக்கு என்னவெல்லாம் வைத்தால் பிடிக்கும் என சரியாக அமைத்திருப்பார். அவர் எதிர்பார்த்தது போல் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பெண்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று படத்தினை வெற்றி பெற செய்தனர். அவர் மிகவும் நம்பியது திரைக்கதையை தான். அதனால் தான் இரம்யாகிருஷ்ணனை போலவே கம்பீரமான அனுஷ்கா கிடைத்ததும் 2009ல் “அருந்ததி” போன்ற ஒரு மெகா ஹிட்டை தர முடிந்தது. இரண்டு படத்தையும் ஒப்பிட்டால் பல விஷயங்கள் ஒத்துப் போவதை காணலாம். இரண்டு படங்களிலும் வில்லனை பலம் வாய்ந்தவனாகவும், கொடுரமானவனாகவும் காட்டி இருப்பார். நாயகி தான் படத்தை தாங்கும் வண்ணம் இருக்கும். பெண்களை குறிவைத்து குடும்பமாக அனைவரும் வந்து பார்க்கும் வண்ணம் எடுத்திருப்பார்.

இப்போது பார்க்கையில் இதற்கா பயந்தோம் என யோசித்தாலும், கேஸ்டிங்கில் பின்னி இருப்பார். அப்பாவி பெண்ணாக சௌந்தர்யா, கம்பீரமாக இரம்யா கிருஷ்ணன், கெட்டவளாக வடிவுக்கரசி, கொடுர கோரக்காக ராமிரெட்டி, ஏன் அந்த சின்ன பெண்ணை கூட எங்கிருந்து பிடித்தாரோ, அப்படியே முகத்தில் மஞ்சளை அப்பிக் கொண்டு “ஆதி சக்தியும் நானே, அன்னப்பூரணி நானே, டேய்” என்று ஆடும் பொழுது படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் அருள் வந்து ஆடியது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.

மறக்கு முடியாத படங்களில் இதுவும் ஒன்று.