Everybody Has Secrets (2004) – விமர்சனம்

“ஒரு செடியில் ஒரு பூ உதிர்ந்தாலும் இன்னொரு பூ பூக்கும், ஆனால் உதிர்ந்த பூ மறுபடியும் ஒட்டாது. சிலருக்கும் காதல் பூ போல, சிலருக்கு காதல் செடி போல” பூவே உனக்காக படத்தில் வரும் பிரபலமான வசனம், அதன் தொடர்ச்சியாக ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். “செடிகளில் ஒரே நேரத்தில் பல பூ பூக்கும்”, இப்போதைய இணைய யுகத்தில் பலருக்கு காதல் இப்படித்தான். முதலில் வாழ்வில் காதல் வந்தால் ஒருவர் மீதுதான் ஒரு முறைதான் வரும் என்றார்கள், பின்னர் ஒருவர் போனால் இன்னொருவரை காதலிக்கலாம் என்றார்கள், இப்போது ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலித்துக் கொள்ளலாம், அது அவரவர் திறமையை பொருத்தது என்கிறார்கள்.

சுற்றிலும் யாரும் இல்லை, நீங்கள் மட்டும் தான் இதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களே உங்களை மதிப்பிடுங்கள், எத்தனை சதவீதம் உங்கள் காதலி/லனுக்கோ, வாழ்க்கை துணைக்கோ நேர்மையாக இருக்கிறீர்கள். நான் வெறுமனே அழகாய் இருந்தால் பார்ப்பேன் என்கிறீர்களா? சரி, ஏன் பார்க்கீறீர்கள்? பிடித்திருப்பதால் தானே? ஒருவேளை உங்களுக்கு பிடித்த அந்த பெண்ணை(அ)ஆணை உங்களால் கவர முடியும் என்றாலும் வேண்டாம் என்று விலகி இருப்பீர்களா? அய்யோ என் வாழ்க்கை துணைக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என பதறுகிறீர்களா? சரி இப்படி ஒரு வாய்ப்பு தரப்படுகிறது என வைத்துக் கொள்வோம், நீங்கள் என்ன தவறு செய்தாலும் உங்கள் துணைக்கு தெரியப் போவதுமில்லை, தெரிந்தாலும் கோபப்படமாட்டார் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்?

இல்லை, நான் வேறு யாரையும் மனதால் கூட நினைக்கவோ ஏறெடுத்து பார்க்கவோ மாட்டேன் என்கிறீர்களா? இது வரை படித்ததற்கு நன்றி. இது உங்களுக்கான பதிவு அல்ல. வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்தோ, செய்யமலோ இணைந்து இருக்கும் பொழுது அவர்கள் மனதிற்குள் கண்டிப்பாக ஒரு பிரச்சனை வரும். எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலானோருக்கு வரும் என உறுதியாக சொல்லலாம். ஈரம் படத்தில் சொல்லப்படும் பிரச்சனை தான்.

“என்னடா, புருசனை விட்டுட்டு இவன் கூட சுத்திட்டுருக்கா, இவனைதான் பிடிச்சுருக்குனா, டைவர்ஸ் பண்ணிட்டு இவன் கூடவே வாழ வேண்டியது தானே?”

“இவனை பிடிச்சுருக்கிறது பிரச்சனை இல்லைடா, இவனையும் பிடிச்சுருக்கு, அதான் பிரச்சனை”

வாழ்க்கைத் துணையை பிடித்துருக்கும், அதே நேரத்தில் இன்னொருவரையும் மனம் விரும்பும். சிலருக்கு அது துரோகமாகப் படும், சிலருக்கு அது வேடிக்கையாகத் தெரியும். உண்மை என்னவென்றால் அது இயற்கை. அதனை நமது கலாச்சாரங்கள் கூடாது எனச் சொல்கிறது. சில நாடுகளில் ஆண்கள் மட்டும் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் விரும்பலாம் என அனுமதியளிக்கவும் செய்கிறார்கள். இந்த பிரச்சனையை குறித்து நகைச்சுவையாக அலசும் படம் தான் Everybody Has Secrets.

ஹேன்மீ ஒரு நவயுக மங்கை, போரடிப்பதால் காதலனை கழட்டி விடும் அளவிற்கு புரட்சிகரமானவள். பாடகி. எந்த ஆணையும் எளிதாக தன் பின்னால் வரவழைக்க முடியும் என நம்புகிறவள். அவளுடைய வாழ்வில் ஒருவன் வருகிறான். ச்சொய் – அழகன், வசதியானவன், நாகரிகமானவன். இதை விட வேறென்ன வேண்டும் பெண்களுக்கு. ஹேன்மீ அவன் பின்னால் செல்கிறாள். பழகுகிறாள். ச்சொய் தனது ஒவ்வொரு செய்கையிலும் ஹேன்மீ யின் பெண்மையை கொள்ளையடிக்கிறான். அவன் கேட்டால் தன்னையே தருவதற்கு அவள் தயாராக இருக்கிறாள். ஹேன்மீ யின் குடும்பத்தினருக்கும் அவனை பிடித்திருக்கிறது. ஒரு நாள் குடும்பமாக அனைவரும் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருக்கையில் ஹேன்மீ, ச்சொய்யிடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பகிரங்கமாக மைக்கில் கேட்க, ச்சொய் ஒத்துக் கொள்கிறான்.

குடும்பமே மகிழ்கிறது, ஆனால் ஒருவருடைய கண்கள் மட்டும் கலங்குகிறது.அது ஹேன்மீ யின் அக்காவினுடைய கண்கள், காரணம் அவளும் ச்சொயை விரும்புகிறாள். தங்கையின் காதலனையா என அதிர்ச்சியடைய வேண்டாம், நம் நாட்டில் அடுத்தவரது வாழ்க்கை துணையினையே அபகரித்துக் கொள்கிறார்கள். என்ன நடந்தது என்றால் ச்சொய் ஹேன்மீயுடன் பழக ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அவள் அக்காவிற்கும் அவனை பிடித்திருக்கிறது. அவள் எந்நேரமும் படிப்பு, இலக்கியம் என சுற்றுபவள், 28 வயதிலும் கற்போடு இருப்பவள். அவளுக்கு தெரிந்த, பிடித்தவைகளை குறித்து ச்சொய் பேசுகிறான். அவள் நெருங்குகிறாள். அவனும் விலகாமல் அணைத்துக் கொள்கிறான். இந்த நேரத்தில் தான் ஹேன்மீ யின் திருமண விருப்பத்தை ச்சொய் ஒத்துக் கொள்கிறான். அதனை அவள் அக்காவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளை என்ன சொல்லி சமாளித்து தக்க வைத்துக் கொள்கிறான் என்பதை படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹேன்மீக்கு இன்னொரு அக்காவும் இருக்கிறாள். மருத்துவருடன் திருமணமாகி, குழந்தையுடன் வாழ்பவள். ஆனால் அவளது தாம்பத்ய வாழ்க்கையிலும் திருப்தியில்லை. ச்சொயை பார்க்கையில் இவளுக்கும் பிடிக்கிறது. இவளையும் ச்சொய் விட்டு வைக்கவில்லை. சில விஷயங்களை திரையில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் நான் சொல்லவில்லை. ஒரு காட்சியை மட்டும் சொல்கிறேன். மேற்சொன்ன மூத்த அக்காவை அவளது வீட்டில் விட ச்சோ வந்திருப்பான், அவளது தொலைந்த தோடு ஒன்றினை தான் எடுத்து தருவதாக தேடிக் கொண்டிருப்பான். அவன் பார்க்காத பொழுது அவனை மூத்தவள் அவளுக்கே தெரியாமல் மெய்மறந்து ஏக்கத்துடன் சைட்டடித்துக் கொண்டிருப்பாள். அவன் திரும்பாமல் “இப்போ நான் திரும்புனா என்னை சைட்டடிக்கிறதை நிறுத்திடுவிங்களா?”என கேட்பான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவிப்பாள்.

படத்தில் இரசிக்க கூடிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நான்-லீனியர் முறையில் எடுத்திருப்பர்கள். அதாவது படத்தில் மொத்தம் மூன்று பெண்கள், சகோதரிகள். ஒவ்வொருவரது பார்வையில் அவர்களுக்கும் ச்சொய்யுக்குமான காதல் வாழ்வு சொல்லப் பட்டிருக்கும். உதாரணத்திற்கு ஹேன்மி பார்வையில் அவள் வீட்டிற்கு ச்சொய் வந்த அன்று, அவனை காத்திருக்க சொல்லி விட்டு, உடை மாற்ற சென்றதை கூறினால், அவள் அக்கா பார்வையில் கூறுகையில் தான் அவள் திரும்பி வரும் வரை என்ன நடந்தது என்று கூறுவார்கள். பெரிதாக எங்கும் விரசமாக இல்லாமல் நகைச்சுவையாகத் தான் படம் போகும்.

தனது துணைக்கு துரோகம் இழைக்கிறோமோ என யாராவது குற்ற உணர்வில் வாடினால் கட்டாயம் இந்த படம் பாருங்கள். குடும்பத்துடன் பார்க்க முடியாது.

பின்குறிப்பு:
இந்த படத்தின் லிங்க் என்னிடம் இல்லை.