Sex, Lies, and Videotape – விமர்சனம்

சில கேள்விகள்

“காமம் கலவி குறித்து உங்கள் அபிப்பிராயம்?”

“முதன் முதலில் யாருடன் உடலுறவு கொண்டீர்கள்?”

“திருமணமாகி விட்டதா? உங்கள் வாழ்க்கை துணைக்கு துரோகம் இழைத்ததுண்டா?”

“உங்கள் வாழ்க்கை துணவரை தவிர்த்து வேறு யாருடனாவது உறவு கொள்ள நினைத்ததுண்டா? யாருடன்? ஏன்?”

“சுயமைதூனம் குறித்து உங்கள் அபிப்பிராயம்?”

மேற்கண்ட கேள்விகளை உங்கள் ஆண்கள் ஆண் நண்பர்களிடம் கேட்டு விடலாம், பெண்கள் தங்கள் தோழிகளிடம் கேட்டு விடலாம். எவ்வளவு நெருக்கம் என்றாலும் ஒரு ஆண் தன் தோழியிடமோ, ஒரு பெண் தனது தோழனிடமோ கேட்க இயலுமா? நம் நாட்டு கலாச்சரப்படி வளர்ந்தோரை பொறுத்த மட்டில், இதை குறித்து பேசுபவர்கள் வேறு எதற்கோ அடி போடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் ஒருவரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரிடமிருந்து மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்தால் போதும். எதற்கு இதை கூறுகிறேன் என்றால் இதனை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் Sex, Lies, and Videotape.

ஆன் பிஷப் ஒரு நல்ல குடும்ப மனைவி, கணவனுடன் பொறுப்பாக குடும்பம் நடத்தி வருகிறாள். அவளுக்கு ஒரு பிரச்சனை. இது வரை அவள் உடலுறவில் முழு திருப்தி அடைந்ததில்லை. அவள் கணவன் ஜான் ஒரு வழக்கறிஞர். நன்றாக சம்பாதிப்பவன். ஜானுக்கும் ஆன் பிஷப்பின் தங்கை சிந்தியாவிற்கும் கள்ள தொடர்பு இருக்கிறது. சிந்தியா ஒரு பாரில் வேலை பார்ப்பவள். நவயுக மங்கை. தனக்கு விரும்புவதை செய்பவள். ஒரு சீரியல் கதை போல வருகிறதா? பொறுப்பான மனைவி, துரோகமிழைக்கும் கணவன், புரட்சிகரமான தங்கை என்று.

புதிதாக ஒரு கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது.கிரஹாம் – ஜானின் கல்லூரி கால நண்பன். காதல் தோல்வியினால் 9 வருடங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பவன். ஜான் இருக்கும் ஊருக்கு வருபவன் தனக்கென ஒரு வீடு பார்க்கும் வரையில் ஜான் வீட்டில் தங்கிக் கொள்கிறான். ஆன் பிஷப்புடன் வீடு பார்க்க சென்ற பொழுது கிரஹாம் தன்னை பற்றி ஒரு உண்மையை கூறுகிறான். அவனால் உடலுறவு கொள்ள இயலாது என்று. வேறொருவர் அருகாமையின் போது அவனுக்கு எழுச்சி இருக்காது என்கிறான். ஆனால் ஏனோ ஆன் பிஷப்பிற்கு அவனை பிடித்திருக்கிறது. அன்று இரவு படுக்கையில் உடன் படுத்திருக்கும் கணவனை விட்டு எழுந்து அவன் இருக்கும் அறைக்கு சென்று விட்டு, ஏதும் செய்யாமல் திரும்ப வருகிறாள்.

கிரஹாம் புது வீட்டிற்கு சென்ற பின்னர் அவனை பார்க்க செல்லும் ஆன் பிஷப்பிற்கு அவன் வைத்திருக்கும் வீடியோ டேப் கலெக்சன் வித்தியாசமாக தெரிய, என்னவென்று கேட்கிறாள். தான் சந்தித்த பெண்களிடம் இந்த பதிவின் மேலே கேட்டிருக்கும் கேள்விகளை கேட்டு அவர்களது பதில்களை வீடியோவாக பதிந்து, தனியாக இருக்கும் பொழுது பார்க்கும் பழக்கத்தை கூறுகிறான். ஒரு சைக்கோ போல அவனை பார்த்து விட்டு, ஆன் பிஷப் அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.

கிராஹம் குறித்து விசாரித்துக் கொண்டே இருக்கும் தங்கை சிந்தியாவிடம் அவனை பற்றி எதிர்மறையாக கூற, அதனாலேயே ஈர்க்கப்படும் சிந்தியா தன்னிச்சையாக அவனை பார்க்க செல்கிறாள். சென்றவளிடமும் மேற்சொன்ன கேள்விகளை கேட்டு வீடியோ எடுத்து முடிக்கிறான் கிரஹாம். அந்த சந்திப்பு முடிந்து வெளியேறும் சிந்தியா உச்ச பட்ச காமத்தில் ஜானை அழைக்கிறாள். நடக்கிறது. ஆனால் அதோடு சிந்தியாவிற்கு ஜான் வெறுத்து விடுகிறான். கிட்டத்தட்ட மனதில் இருக்கும் அழுக்கினை அந்த வீடியோ டேப்பில் பதிந்து விட்டு, சுத்தமானவளாகி விடுகிறாள் சிந்தியா.

இறுதியாக தன் தங்கையை வைத்தும் கிரஹாம் வீடியோடேப் எடுத்ததும் ஆன் பிஷப்பினால் தாங்க முடியவில்லை. விஷயம் தெரிந்த ஜானும் அதிர்ச்சி அடைகிறான். சிந்தியாவின் வாக்குமூலத்தின் தனது கள்ள தொடர்பும் இருப்பதால் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்த நேரத்தில் தன் கணவன் தனக்கு இழைக்கும் துரோகம் ஆன்பிஷப்பிற்கு தெரிய வருகிறது. அதுவும் தன் தங்கையுடன் என்பது அவளை மேலும் காயப்படுத்துகிறது. என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சயனம் நாவலின் முகப்புரையில் வா.மு.கோமு ஒரு வரி எழுதி இருப்பார் “சாதி, மதம், இனம், பணம் அனைத்தையும் கடந்து தன்னை நீக்கமற நிறைத்து கொள்ளும் ஒரே விஷயம் பாலியல் மட்டும் தான்” என்று. ஆண் – பெண் உறவுகளிடையே எத்தனை வெற்றி, தோல்வி, ஒளிவு மறைவு துரோகங்கள். இதனை பற்றி கூற எனக்கு வயது போதாது. ஆனால் உறவுகள் குறித்து 1989 களிலேயே பல குழப்பங்களுக்கு தெளிவு காண எடுத்திருக்கும் படம். சொல்லப்போனால் என்னை பொருத்த வரை இது ஒரு ஃபீல் குட் பட வகை தான். பெரிதாக எங்கும் விரசமாக இல்லை.

கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தின் Online Link கொடுக்கப்பட்டுள்ளது.