காதலும் கடந்து போகும் – விமர்சனம்

காதல் கடக்காத வாழ்வு அமைந்திருந்தால் நீங்கள் துரதிர்ஷ்டசாலிகளே. ஒருதலையாகவாவது காதல் உங்களை கடக்கும். காதல் என்றால் திரைப்படங்களில் வருவது போல் கண்டதும் ஒருவருக்கு காதல் பொங்கி, மற்றவரிடம் வரவழைப்பதற்காக போராடுவதை சொல்லவில்லை. இயல்பாக நம் வாழ்வில் ஒருவர் மீது நமக்கே தெரியாமல் வருவது. இருவருக்குமே அது போல் இயல்பாய் காதல் வந்தால் எப்படி இருக்கும்?

இருவருமே சமமாக, அதாவது படிப்பில், அழகில், அந்தஸ்தில் சமமாக இருக்கும் பொழுது வருவதில் சுவாரசியம் என்ன இருந்துவிட போகிறது? ஏற்றத்தாழ்வு இருக்கும் இருவரிடையே வரும் காதலில் தான் சுவாரசியம், மீண்டும் சொல்கிறேன், கண்டதும் வரும் காதலில் என்ன சுவாரசியம்? இப்போது படத்திற்கு வருவோம்.

சாதுவான பெற்றோரால் விழுப்புரத்தை தாண்டி விடக்கூடாது என்பதற்கேற்றவாறு ஊரிலேயே உள்ள டொக்கு பொறியியல் கல்லூரியில் படித்த யாழினி(மடோனா செபாஸ்டியன்)க்கு, தன் திறமை வீணாக கூடாது என்று எப்படியாவது சென்னைக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று விருப்பம். அதன்படி போராடி பெற்றோர் சம்மதத்துடன் சென்னைக்கு செல்கிறார். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே கம்பெனி இழுத்து மூடப்பட, வீட்டிற்கு தெரியாமல் இருப்பதற்காக, வேலை பார்ப்பதாக பொய் சொல்லி வீட்டு, வேலை கிடைக்கும் வரை செலவினை குறைக்க, கொஞ்சம் லோக்கலான இடத்தில் வீடு பார்த்து தங்குகிறார்.

எதிர்வீட்டில், கதிரவன் (விஜய் சேதுபதி). நண்பனுக்காக சிறைக்கு சென்று விட்டு வந்து, அவன் பார் வைத்து நடத்த உதவுவான் என காத்திருக்கும் “சுமார் மூஞ்சி குமாரு”. இருவருக்கும் இடையே காதல் என்ற வார்த்தை பரிமாற்றமே இல்லாமல் வரப்போகும் காதல் தான் படம்.

இங்கு இருக்கும் விஜய் சேதுபதிக்காக, கொரியாவில் இருக்கும் ஒரு இயக்குனரால் எப்படி கதை எழுத முடிகிறது? மனிதன் அப்படியே வாழ்கிறார். போன படத்தில் மீசை முறுக்கி, அசால்டாக வில்லனை 2 அறை விட்டு கைது செய்து செல்பவர், இந்த படத்தில் பாரில் சண்டை போட்டு அடிவாங்கி விட்டு ஸ்டைலாக கூலிங்கிளாஸ் போட்டு, வேடிக்கை பார்ப்பவன் வாயில் இருந்து சிகரெட்டை பிடுங்கி, பிடித்து கொண்டு செல்லும் பொழுது மொத்த அரங்கமும் கை தட்டுகிறது. இவரது உடல்மொழிக்காக இன்னுமும் “இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா” படத்தை வளைத்து வளைத்து பார்க்கும் கும்பலில் நானும் ஒருவன். அது போன்ற லோக்கல் ஆளாக வேறொரு பரிமாணத்தை காட்டி இருக்கிறார். அதிலும் “நீங்க என்ன வேலை பார்க்கறிங்க?” னு மடோனா கேட்கையில் “டிஷ்யும் டிஷ்யும் டிஷ்யும்” என முகத்திற்கு நேராக குத்தி காட்டி விட்டு “அடியாள்” என்று சொல்லி விட்டு மீண்டும் “டிஷ்யும்” என குத்திக் காட்டும் போது “லவ் யூ சேது”… வேறு யாராலும் இந்த பாத்திரத்தை நெருங்க கூட முடியாது.

மடோனா செபாஸ்டியன், படம் துவங்குகையில் “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும்” என்று இவரது குரல் வரும் போது கொஞ்சம் குழம்பினேன். இடைவேளை முடிந்து அடுத்த காட்சியில் புரிந்தது. ஒரே கல்ப் ல் அடித்து விட்டு கூறுவார். “பசங்க எல்லா சினிமாலயும் குடிச்சுட்டுருந்தா, பொன்னுங்க என்னா வாயைவா பார்த்துட்டுருக்கறது?”. ஆணாதிக்க சம்முகமே, விழித்துக்கொள். எனக்கு பிரேமம் படத்திலேயே மூவரில் செலினைத்தான் மிகப் பிடிக்கும். இவரைச் சுற்றித்தான் கதை. எல்லா காட்சிகளிலும் அழகாய் இருக்கிறார். பெரிதாய் நடிக்க வேண்டிய அவசியமில்லை, இயல்பான பாத்திரம் என்பதால் வெறும் அழகாலேயே மனதில் பதிகிறார். சேதுபதி கேள்விக் கேட்டு மடக்கும் பொழுது “அய்யோ எனக்கு மயக்கம் வருது” என பொய்யாக நடிக்கையில் அள்ளுகிறார். ஆனால் பிரேமத்தில் பார்த்த அழகு இதில் குறைவு. அதை சேதுவே பட இறுதியில் சொல்வார் “அழகா இருந்த, இப்ப ஓவரா மேக் அப் போட்டு …. அழகா இருக்க”. பெரிதாய் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.

சமுத்திரக்கனி, ஏன் எல்லா படத்திலும் மற்றவர்களை மிரட்டி பணம் பிடுங்குவதையே செய்கிறார்? இடையில் வந்த விசாரணையில் மட்டும் தான் வேறு பாத்திரம். நல்ல நடிகர், இயக்குனர். இப்படி வீணடிக்க படுவது கஷ்டமாக இருக்கிறது. படத்தில் அதிகம் கதாபாத்திரங்கள் வருவதில்லை. எண்ணிப் பார்த்தால் ஆறு தான். ஆனால் முழுமையான படம். அக்மார்க் என்டர்டெய்னிங் பிலிம். மீண்டும் சொல்கிறேன், இந்த படத்தை விஜய் சேதுபதியை தவிர யாராலும் செய்ய முடியாது

படம் பார்த்த பலருக்கு, திரைக்கதை மெதுவாக செல்வது போல் தோன்றி இருக்கிறதாக சொன்னார்கள். ஆனால் நான் சொல்கிறேன். 2.30 மணி நேரம் போனதே தெரியவில்லை. சேதுபதி வந்த பின் சிரிக்க துவங்கி விட்டேன். பிறகு ரசிப்பதற்குத்தான் நேரம் சரியாக இருந்தது. பாடல்கள் வந்ததே தெரியவில்லை. ஒரு குத்து பாடலில் மட்டும்தான் படத்தில் பாடல் இருப்பதே தெரிந்தது. ஆனால் பின்னனியில் சந்தோஷ் நாராயணன் ஜமாய்த்து விட்டார். சேதுபதி அறிமுகமாகி படிக்கட்டில் இறங்கி போகும் போது வரும் பிண்ணனி மீண்டும் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்.

படத்தில் பல காட்சிகளையும் வசனங்களையும் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் படம் பார்க்கும் போது வரும் சுவாரசியத்தை கெடுத்து விடும். எனக்கு மிகப் பிடித்த இரண்டு இடங்களை கூறுகிறேன்.

மடோனா மயங்கி விழுந்ததை பார்த்து பதறி சேது தூக்கி கொண்டு ஓடுவார். அப்போது ஒருவர் என் பைக்கை எடுத்துட்டு போங்க எனும் போது சொல்வார் பாருங்க “யோவ் எனக்கு வண்டிலாம் ஓட்டத் தெரியாதுய்யா”

மடோனாவின் குடையை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கையில் அவர் பாதி வழியில் வந்து பிடுங்குவார். “அய்யோ நான் நனைஞ்சுருவேன், என்னை வீட்ல டிராப் பண்ணிட்டு போ, ஏ பக்கத்து வீட்டு பொன்னு உன்னத்தான்”

படத்தில் சேதுபதியின் பெயர் “கதிரவன்”. என் பெயரும் அதுதான். முதல் பாதியில் பல இடங்களில் “காலக்கொடுமைடா கதிரவா” என்பார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படத்திம் இறுதிக்காட்சியில் மட்டும் தான் கொரிய வாடை அடிக்கிறது. வேறு எந்த இடத்திலும் கொஞ்சம் கூட தெரியாத வண்ணம் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால் படத்தை பற்றி அதிகம் சொல்லவில்லை. குடும்பத்துடன் கண்டிப்பாக சிரித்துப் பார்க்க வேண்டிய படம். நான் மீண்டும் ஒரு முறை பார்ப்பேன்.

கருந்தேள் ராஜேஸ் பெயரை நண்பர்களுக்கு காட்டி “என் ஃபிரெண்ட்”னு சொல்கையில் பெருமையாக இருந்தது. கலக்குங்க தல.