மசாவ்க்கு எப்படி கிடைச்சது?

ஷின்ஷேன், கசாமா, மசாவ், போ, நேனி ஐவரும் நண்பர்கள். 8 வயது பிள்ளைகள். சிறுவயதில் இருந்தே ஒன்றாக படிப்பவர்கள். என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசியம்.
 
உதாரணத்திற்கு ஷின்ஷேன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன். கசாமாவைப் போல் ஒருவனை கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் சொல்லும் பாடங்களை சரியாக படிப்பான். வீட்டில் அனைவரும் தன்னை நல்ல பையன் என சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பான்.

Continue reading “மசாவ்க்கு எப்படி கிடைச்சது?”

கற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை

2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.

எங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார்? வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா? என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.

தமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குரல். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.

10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.

“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.

அதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.

சோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.

“ஏன் ரெகார்ட் எழுதலை?”

“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”

இப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.

அதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்

“போய் பார்க்க யாருமில்லை

வந்து பார்க்கவும் யாருமில்லை

வழிபோக்கன் போவான் வருவான்

வழிகள் எங்கும் போகாது”

அந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா?

“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.

எழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.

திருடி

அவளை முதலில் பார்க்கையிலேயே சந்தேகம் வந்தது.
நிச்சயம் இவளும் அந்த கும்பலை சேர்ந்தவளாய்த்தான் இருப்பாள் என…
இது போன்ற பெண்களை பற்றி நண்பர்கள் என்னை எச்சரித்ததுண்டு
நான் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கலாம்.
என் வயது கொடுத்த தைரியம், அங்கேயே நின்றிருந்தேன்.
நான் பார்த்ததை அவள் கவனிக்கவில்லை.
என்னை மட்டுமல்ல, அவள் யாரையும் கவனிக்கவில்லை.
நானும் யாரும் கவனிக்காத வண்ணம் அவளை பார்த்து கொண்டிருந்தேன்.
நேரமும் பேருந்தும் கடந்து கொண்டே இருந்தன…
எதிர்பாராத கணத்தில், செல்போனை நோண்டி கொண்டிருந்தவள் நிமிர்ந்து, கூந்தலை ஒதுக்கியவாறே என்னை பார்த்தாள்…

vlcsnap-2015-03-20-00h04m16s240என் சந்தேகம் ஊர்ஜிதமானது…
அவள் என் இதயத்தை திருடிவிட்டாள்…
அதே கும்பல் தான் –  “தேவதைகள்”
#அவளதிகாரம்

தோட்டவேலையும் எடைகுறைப்பும்

எப்பவுமே வருடத்தின் இரண்டாம் பாதியான ஜூலையில் இருந்து எனது மொத்த நடவடிக்கைகளையுமே மாற்றிக் கொள்வது வழக்கம், காரணம் அக்டோபர் 5ல் நடக்கும் மாரத்தான், இதுவரை ஒருமுறைதான் கலந்திருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு வருடமும் ஜூலையில் இருந்து பயிற்சி எடுக்க ஆரம்பித்து விடுவேன்.

எனவே இரண்டு நாட்களாக விடியற்காலையில் எழுந்து நடக்க துவங்கியுள்ளேன். நான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் புதிதாய் உடற்பயிற்சி செய்பவர்கள் நடப்பதெற்கென ஒரு தளம் அமைத்திருக்கிறார்கள். அந்த பக்கம் சென்று பார்ப்போம் என போய் கொண்டிருக்கிறேன், வழக்கமாய் போகும் இடத்தை விட அதிக வண்ணங்கள் தென்படுகின்றன, அதனால் களைப்பு தெரியாமல் போய் கொண்டிருக்கிறது.

அங்கே இருவர் வருவார்கள், பார்க்க டீசர்ட்டும் லோயருமாய் கனவான்களாய்த்தான் தெரிவார்கள், கைக்கு நீண்ட க்ளவுஸ் அணிந்து கொண்டு, கொண்டு வந்திருக்கும் பையிலிருந்து கட்டிங் பிளேடு போன்ற ஒன்றை எடுப்பார்கள், சாலைக்கு நடுவில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளை அளவாய் அழகாய் தெரியும்படி வெட்டுவார்கள், அடுத்த நாள் வருவார்கள் இன்னொரு பக்கம் தேவையில்லாமல் முளைத்திருக்கும் செடிகளை, புற்களை செதுக்கி எடுப்பார்கள்.

எனக்கு முதலில் புரியவில்லை, யார் இவர்கள், இவர்களுக்கு இதுதான் வேலையா? முனிசிபாலிட்டியில் வேலை செய்பவர்கள் போல் தெரியவில்லையே என குழம்பி கொண்டிருந்தேன். இதில் வந்ததும் ஓட துவங்குகிறவர்களை போல் உடலை தளர்த்தி கொள்ளும் பயிற்சிகளை செய்து விட்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள். எதற்கு குழம்பிக் கொண்டு என இணையத்தில் தேடி பார்த்தேன்.அதற்கு பெயர் கார்டனிங் எக்சர்சைஸ் என குறிப்பிட பட்டுள்ளது.

கார்டனிங் எக்சர்சைசெக்கென தனியாய் ஒரு தினமே(ஜூன் 6) இருக்கிறதாம், பல பல்கலைகழகங்களில் இதை பாடமாய் சொல்லி தருகிறார்களாம். வெறுமனே ஓடுவதையும் குதிப்பதையும் விளையாடுவதையும் உடற்பயிற்சியாய் செய்வதால் என்ன பலன்? இதுவே தோட்ட வேலை செய்வதால் இடம் அழகாவதோடு தாவரங்கள் வளர்வதால் ஆக்சிஜன் கிடைப்பதிலிருந்து காய்கறிகள கிடைப்பது வரை பல நன்மைகள் இருக்கின்றன.

தினமும் 30-45 நிமிடங்கள் தோட்ட வேலை செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

குழி தோண்டும் வேலை – ஆண்: 197 கலோரி, பெண்: 150 கலோரி
செடி நடும் வேலை – ஆண்: 177 கலோரி, பெண்: 135 கலோரி
களை எடுக்கும் வேலை – ஆண்: 157 கலோரி, பெண்: 156 கலோரி

உங்கள் உடலில் இருந்து எரிக்கப்படுகிறது, இது 4 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதாலும் அல்லது 3 கிலோமீட்டர் நடப்பதாலும் கிடைக்கும் நன்மைக்கு சமமானது.

உடல் எடை குறைப்பது மட்டும் இதில் கிடைக்கும் நன்மை என நினைத்து விட வேண்டாம்.

உடலை நன்கு தளர்வடைய செய்யும்
உடலின் ஒவ்வொரு மூட்டுகளையும் பலப்படுத்தும்
உடலின் இரத்த அழுத்தம் மட்டுப்படும்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
எலும்புகளின் எடைகுறைதலை சமப்படுத்தும்.

இதையெல்லாம் கூறுவது Iowa State University, அமெரிக்கா. யோசித்து பாருங்கள். வெறுமனே எடை குறைத்தலை மட்டும் செய்யும் நடை,ஓட்டத்தை விட இது எவ்வளவோ பயனுள்ளது தானே? இதில் முக்கியமான சிறப்பம்சம் இதை அனைவரும் செய்வதால் கொஞ்சம் கூட அறிமுகமில்லாத விசயமாக விவசாயத்தை சொல்ல முடியாது, யோசித்து பாருங்கள், தினமும் வீட்டருகே இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி களை எடுத்து, குழி பறித்து, செடி நட்டு அதற்கு நீர் ஊற்ற துவங்கினால் அது காய்கறி தோட்டம் அமைப்பதில்தான் போய் முடியும், அது போதாதா? அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்திற்கு ஒரு வேகத்தடையாக இந்த முயற்சி இருக்கும் அல்லவா?

என்னால் முடிந்த வரை அனைவரிடமும் இதை பற்றி பரப்ப முயலலாம் என்றிருக்கிறேன், எந்த ஒரு விசயத்தையும் நாம் செய்யாமல் அடுத்தவரை செய்ய சொன்னால் யார் செய்வார்கள்? அதனால் மாரத்தான் முடித்த பின் நானும் தோட்டவேலை செய்ய போகிறேன்.

ஒரு கைதியின் டைரி

எனக்கு தெரிந்து யாரிடமும் இந்த பழக்கம் இல்லை, யாரை பார்த்து ஆவல் கொண்டேன் என்றும் தெரியவில்லை, எட்டாம் வகுப்பில் இருந்தே எனக்கு டைரி எழுதும் ஆவல் இருந்தது. ஒன்பதாவது படிக்கையில் என் தந்தைக்கு LICல் கொடுத்த டைரியை வைத்து நான்கு நாட்கள் எழுதி இருப்பேன், படிக்காமல் காதல் கவிதை எழுதுகிறான் என புகார் போனது. நான் அதற்கென தனியாக ஒரு குயர் நோட்டு வாங்கி வைத்து எழுதி கொண்டிருப்பது வீட்டிற்கு தெரியாது, ஆனால் பாவம் கவிதை நோட்டை காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாமல் டைரியை அப்பாவிடம் பழி கொடுத்தேன், அவர் அதை எரித்து விட்டு படிப்பை கவனிக்க சொன்னார், நான் நல்ல பிள்ளையாக கவிதைகளில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தேன்…

பின்னர் 2005ம் வருடம் கல்லூரி விடுதியில் நிறைய நேரமும் தனிமையும் கிடைக்க முழுமையாய் டைரி எழுத துவங்கினேன். அதுவும் ஆங்கிலத்தில். ஏனேனில் நான் +2 வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவன். பொறியியல் படிப்பினை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள சிரம்ப்பட்டேன். டைரியை ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தால் நண்பர்கள் உதவியுடன் அம்மொழியினில் தேறலாம் என முயன்றேன், நல்ல பலனும் கிடைத்து. அடுத்த வருடம் முதல் தமிழில் எழுதினேன்.

டைரி எழுதுவதா? யாரேனும் படித்து விட்டால் என்ன ஆவது? என்ற அச்சம் வருவது இயல்புதான், எனக்கும் வந்தது, அந்த அச்சம் விலகியதற்கு ஒரு சுவாரசியமான சம்பவம்தான் காரணம்…

என் அறைத்தோழன் ஒருவன் தனது பிறந்தநாளன்று எங்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி கொடுத்து விட்டு, அவனது தோழிக்கு 60₹க்கு பெரிய சாக்லேட் வாங்கி கொடுக்க என்னையும் உடன் அழைத்து சென்றிருந்தான். இச்சம்பவத்தை நான் எனது டைரியில் எழுதி வைக்க, சில நாட்கள் கழித்து எங்களது மற்றொரு நண்பன் பொழுது போகாமல் எனது டைரியை எடுத்து படித்து சாக்லேட் விஷயத்தை அறிந்து கொண்டான். மெதுவாய் அவனிடம் இதைப்பற்றி பேச்சை எடுத்து பெரிய தகராறில் முடிந்தது. சமாதானப்படுத்திய நண்பர்கள் கடைசியாக சொன்ன தீர்ப்பு “யாரும் கதிரவன் டைரியை படிக்க கூடாது” என்பது தான்.

2005 டைரி மட்டும் தான் நானாக வாங்கினேன். அதன் பின்னர் வருட கடைசியில் நண்பன் ஒருவனுடன் கடை கடையாய் அலைந்து தேர்ந்தெடுப்போம், போம் என சொல்லக்கூடாது, அவன்தான் தேர்ந்தெடுப்பான். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஏதேனும் வேலையாக வேறு மாவட்டங்களுக்கு செல்கையில் அங்கிருந்து டைரி வாங்குவதை வாடிக்கையானது.

கல்லூரி முடிந்த பின்னர் அவன் வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல துவங்கினான். ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு மாநிலம். சிவில் படித்தவர்களின் தலைவிதி அப்படி. நான் தமிழ்நாட்டை பார்ததுக்கொள்ள ஆள் வேண்டுமென்று இங்கேயே இருந்துவிட்டேன். அவனும் விடாமல் வருடாவருடம் தவறாமல் டைரி வாங்கி அனுப்புவான்.

கோவை வந்த பின்னர் டைரி எழுத சரியான சூழல் அமையவில்லை. அதிக நேரம் இணையத்தில் செலவிடுவது முக்கிய காரணம். இந்த வருட துவக்கம் முதல் வாழ்வில் பல புது பிரச்சனைகள்(யாரும் எனக்கு திருமணமானதை யோசிக்க வேண்டாம்). இன்று காலை வேறு எதையோ தேடப்போக நண்பன் அனுப்பிய 2015க்கான டைரி கிடைத்தது.

ஒன்னே முக்கால் வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அமர்ந்து டைரி எழுதினேன். கொஞ்சம் தளர்வாய் உணர்ந்தேன்.எனது பல எண்ணங்களுக்கு வடிகாலாய் விளங்கும் எனது 10 வருட டைரி எனும் நண்பனுடன் இனி தினமும் உரையாடலாம் என்றிருக்கிறேன்.

அட, அதென்ன கைதியின் டைரி என யோசிக்கிறீர்களா? எனது டைரியில் பல வாக்குமூலங்கள் இருக்கின்றன. மாட்டினால் என்னுடன் எனது பல நண்பர்கள் அவர்களது பெற்றோர் & மனைவி வாயிலாக மரணதண்டனை பெறுவார்கள். அதை குறிக்கவே “கைதியின் டைரி” எனும் தலைப்பு.

என் மனைவியிடம் சிக்க வைக்கலாம் என யோசிக்கும் நண்பர்களின் கவனத்திற்கு..

“ஏற்கனவே தண்டனை நிறைவேற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறது”

மாமனாரிடம் ஒரு கேள்வி

4 நாள் முன்னாடி மாமனார் போன் பண்ணி யுகாதிக்கு உங்களை அழைச்சுட்டு போகனும், 2 நாள் லீவ் போட்டு வரமுடியுமா? ன்னு கேட்டார்

நானும் பார்த்துட்டு சொல்றேன்னுட்டு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டா எல்லோரும் என்னை பார்த்து கேட்கறாங்க “மீரு தெலுகா?”னு

ஒரு மஞ்சள் சாரி பச்சை தமிழனுக்கு வந்த சோதனையை பார்த்திங்களா? 

சுத்தி வளைக்காம நேரடியா மாமனார்கிட்டயே “எதுக்கு மாமா நமக்கு யுகாதிலாம்? வேண்டாம் விடுங்க”னு சொல்லிட்டேன்.

எதுக்குப்பா விசாரிப்போம்னு மனைவிகிட்ட “உனக்கு தெலுங்கு தெரியுமா? உங்க வீட்ல யாருக்காவது தெலுங்கு தெரியுமா?”னு கேட்டுட்டேன்

“அதெப்படி எங்க வீட்டை இழுக்கலாம்?”னு ஆரம்பிக்கவும்

ஆஹா மெயின்சுவிட்ச்ல கைய வச்சுட்டமேனு சுதாரித்து

“இல்லம்மா, சும்மா விசாரிச்சேன்”ன்னு சமாளிச்சேன்.

அடுத்து தான் ஆரம்பிச்சது பிரச்சனை, முதல் நாள் அக்கா போன் பண்ணாங்க “ஏண்டா, உங்க மாமனார் தங்கமான மனுசன்டா, அவரை ஏண்டா எதிர்த்து பேசற?”னாங்க

அடுத்த நாள் அண்ணன் போன் பண்ணி “எங்க மாமனார் வீட்லதான் இதெல்லாம் செய்யலை, உன்னை கூப்பிட்டா பேசாம லீவ் போட்டு போக வேண்டியது தானே?” ங்கறார்.

என் மனைவியோட தோழி போன் பண்ணி புடவை கடைல எங்க சித்தி அவங்க குரூப்கிட்ட பேசிட்டுருந்தத கேட்டாளாம் “கதிரு சின்னதுல இருந்தே இப்படித்தான், ஏன் எதுக்குனு ஏடாகூடமா ஏதாவது கேட்டுகிட்டே இருப்பான்”னு யுகாதி பிரச்சனையை சொல்லிட்டு இருந்தாங்களாம்..

அந்த தோழி “உங்க வீட்டுக்கார் நாம் தமிழர் கட்சில இருக்காரா?”னு வேற கேட்டாளாம்.

எல்லாருக்கும் மேல் கடைசியா 10 நாளா சின்ன மனஸ்தாபத்துல பேசாம இருந்த எங்கப்பா போன் பண்ணி “டேய் மதியம் லீவ் போட்டு வந்துரு, எப்ப வருவனு உன் மாமனாருக்கு தகவல் கொடுத்துரு”ன்னார்

இதுக்கு மேல் கேள்வி கேட்டா குடும்பத்தை விட்டு தள்ளி வச்சுருவாங்கனு லீவ் வாங்க பிரின்சிபல்கிட்ட போனா அவர் மேலும் கீழும் பார்த்தார்.

வருச கடைசில அதிலும் வாரக்கடைசில லீவ் போடறவங்க அடுத்த காலேஜ்க்கு இண்டர்வியுக்கு போறாங்கனுதான் அர்த்தம், சந்தேகத்தோடவே கையெழுத்து போட்டார்…

கிளம்பி ஊருக்கு போய்கிட்டே இருக்கேன்…

பேக்கை மாட்டிகிட்டு வடிவேல் புலம்பிகிட்டே போவாரே “சொல்லுங்கடா, எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன்”னு அதே மாதிரி குழப்பத்தோட போய்கிட்டே இருக்கேன்

“எதுக்குப்பா தமிழனுக்கு யுகாதி?” 

சிலோன் மாப்ளே

“அந்த ருசி என் நாக்கில் இப்பவும் அப்படியே இருக்கு” இந்த வார்த்தைகளை சொல்ல வைக்கும் படியான உணவுகளை சாப்பிட்டுருக்கிங்களா? ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் அவர்களது மூளையில் பதியுமளவுக்கான ருசியான உணவை சுவைத்திருப்பார்கள், அது எதுவென்று இப்போது யோசித்தாலும் எச்சில் ஊறும்…

கல்லூரியில் படிக்கையில் உடன் படித்த நண்பனின் பூர்வீகம் இலங்கை. அவர்களது தாத்தா காலத்திலேயே தமிழகம் வந்து விட்டார்கள், இரண்டு தலைமுறை கடந்ததால் அவன் பேசும் தமிழில் பெரிய வித்தியாசம் தெரியாது, ஆனால் சமையல் அதே தித்திக்கும் சிலோன் சமையல்…

ஒரு நாள் எதெச்சையாக அவ்ன் கொண்டு வந்திருந்த மதிய உணவை ருசித்து, பிடித்து போய் தினமும் அவன் கேட்கும் உணவை ஹோட்டலில் வாங்கி கொடுத்து விட்டு அவனது உணவை நான் ருசிக்க துவங்கினேன்…

சமைப்பவர்களிடம் எத்தனை நாள் இப்படி ஏமாற்ற முடியும்? அரசல்புரசலாக அவன் வீட்டிற்கு என் சங்கதி தெரிந்தது, பிறகு அவனுக்கும் சேர்த்து(எனக்குதான் முதல் மரியாதை) கொடுத்து விட துவங்கினர், உடன் அவர்கள் வீட்டிற்கு மாதம் இரண்டு முறை விருந்து உண்ணவும் செல்ல துவங்கினேன்.

சமைக்க தெரிந்தவர்கள், சமைப்பவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது அவர்களது சமையலை ரசித்து, ருசித்து சாப்பிடும் ஒருவரை…

என் நண்பன் வீட்டிற்கு அந்த ஒருவனாக நான் இருந்தேன், ஒவ்வொரு முறை உண்ணும் போதும் புத்தகம் படிப்பது போல, பிடித்த இயக்குனரின் படம் பார்ப்பது போல ரசித்து, ருசித்து உண்பேன், கூச்சபடாமல் சிலாகித்து புகழ்வேன்.

வாழ்நாள் முழுவதும் அந்த தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்படும் தித்திக்கும் உணவை சுவைக்க விரும்பினேன் . அதற்காக அடிக்கடி அவன் பெற்றோரிடம் சிலோன் சமையல் தெரிந்த பெண் கிடைத்தால் சொல்லுங்கள், எதையும் வேண்டாமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்பேன்.

இது நடந்தது எட்டு வருடங்களுக்கு முன்பு, அதன் பின் வாழ்க்கை எங்களை ஒவ்வொரு மூலைக்கு தூக்கி எறிந்தது. சமீபத்தில் எனது திருமணத்திற்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.

எப்போதும் என்னை அழைப்பதை போலவே அழைத்து கேட்டார்கள்
“என்னா, சிலோன் மாப்ளே, எங்கூர் பொண்ணு கேட்ட?, வேண்டாமா?”

சிரித்து சமாளித்து விட்டு வந்தேன், சமீபத்தில் நண்பர் Vijay Bhaskarvijay இலங்கை உணவை பற்றி எழுதிய பதிவு ஒன்றை படித்த பின் இந்நினைவுகள் வந்தது. எழுத இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.

அந்த நண்பன் யாரென்று சொல்லவில்லையே? நம்ம Deepak kumar தான்

இதுக்கு நீ சரிப்பட்டு வருவடா

“டேய் தம்பி உள்ற வா”

“உட்கார் உட்கார்”

“சரி சொல்லு, எங்க படிச்ச?”

“சேலம் சோனா காலேஜ்ல, சரி, இந்த பேப்பர்ல உன் வீட்டு அட்ரஸ் எழுது?”

“உனக்கு ஹிந்தி தெரியுமா?”

“கம்ப்யுட்டர்ல வேலை பார்க்க தெரியுமா?”

“சரி, எதுல வந்த? அந்த வண்டி சாவிய கொடு, போன் வச்சுருக்கியா கொடு, நான் சொல்றத எழுதிக்க, இந்த இடத்துக்கு விசாரிச்சு போ, போய்ட்டு நான் அனுப்பனேன்னு சொல்லு”

பட்டம் படித்து முடித்ததும் வேலைக்கு எங்கே செல்வதென்று தெரியாமல் தடுமாறுகையில் அண்ணன் மூலமாக இரும்பு தொழிற்சாலையினுள் கட்டுமான பணி செய்யும் நிறுவனத்தின் மேனேஜரை சந்திக்க சென்றேன், அவர் என்னை கேட்ட கேள்விகள்தான் மேலே படித்தவை…

தொழிற்சாலையின் இருபுறமும் நுழைவாயில் உண்டு, இரண்டு நுழைவாயிலுக்கும் இடையே 10 கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஒரு வாயிலினுள் உள்ளே வரும் தாது பொருளில் இருந்து, இரும்பை பிரித்து உருக்கி, தேவையான வடிவில் அளவில் வார்த்து மறு வாயிலின் வழியாக எடுத்து செல்வார்கள்.

எனக்கு மேற்படி நேர்முக தேர்வு நடந்த இடம் முதல் நுழைவாயில் அருகே, நான் அந்த தொழிற்சாலையில் நுழைந்ததும் அதுவே முதல் முறை, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான அடையாளங்களை குறிப்பெடுக்க சொல்லி அங்கு செல்லுமாறு பணித்து விட்டார்கள்.

முதல் முறையாக, பிரம்மாண்டமான தொழிற்சாலையில் நுழைந்த யாருக்கும் உடனே வேலை ஓடாது, புதிதாய் வேடிக்கை பார்க்க சுற்றி பல விஷயங்கள் அங்கே நம்மை ஈர்க்கும், பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம், கிராமத்தில் JCPயால் குழி தோண்டுவதை வேடிக்கை பார்ப்பதை போல…

எங்கு பார்த்தாலும் தலையில் ஹெல்மெட் அணிந்த வட இந்திய முகங்கள், படிக்கற காலத்திலேயே புதிதாய் யாரிடமும் பேச தயக்கம் விடாது, ஆனால் வேறு வழியில்லை, பேசி கேட்டால்தான் நான் செல்ல வேண்டிய இடத்திற்கான வழி தெரியும்..

எனக்கு அப்போது ஹிந்தி சுத்தமாக தெரியாது, ஆங்கிலத்தில் பேச தைரியமில்லை, தமிழிலேயே வழி கேட்டேன், அவர்களுக்கு புரிந்திருக்கும் போல, பிழைக்க வந்த இடத்திற்கான மொழியை கற்க ரொம்ப காலம் பிடிக்காது அல்லவா? ஆனாலும் எனக்கு தமிழில் பதிலளிக்க அவர்களுக்கு தெரியவில்லை, தெரிந்த மொழிகள் அனைத்தும் கலந்து வழி சொன்னார்கள், இது போல 8 இடத்தில் வெவ்வேறு மொழி பேசுபவர்களின் வழி கேட்டு சென்றேன்.

கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் கடந்து இலக்கை நெருங்கினால், என்னை அனுப்பியவர் என்னை வரவேற்றார்…

“தம்பி, வா வா, இன்னைக்கு என்ன வெள்ளிக்கிழமையா? திங்கள் இல்லை புதன் கிழமை வேலைக்கு வந்துடு, கிளம்பு”

எனக்கு எதுவும் புரியவில்லை, அதற்கு பல நிறுவனங்கள் ஏறி இறங்கியுள்ளேன், கட்டிட துறை சார்ந்த பல எழுத்து/நேர்முக தேர்வுகளைத்தான் எதிர்கொண்டிருக்கிறேன். இவ்வகை இண்டர்வியு எனக்கு பிடிபடவில்லை, வெறுமனே என் அண்ணனுக்காக வேலை தருவதாக இருந்தால் இப்படி அலையவிட தேவையில்லையே???

வீட்டிற்கு வந்து அண்ணனிடம் கேட்டதில் “அவர் உனக்கு வச்ச டெஸ்ட்ல நீ பாஸ் பண்ணிட்டடா” என்றார்.

“புரியலையே”

“அவர் கேட்ட எல்லா கேள்விக்கும் நீ தெரியாதுன்னு உண்மையை சொன்ன, அப்ப உன்னை நம்பலாம்னு முடிவு பண்ணிருப்பார், தெரியாத இடத்துக்கு போறப்ப தயக்கமில்லாம வழி கேட்டு தெரிஞ்சுகிட்டு சீக்கிரமா போனதுல, வேலை தெரியலைன்னாலும் கூச்சப்படாம கேட்டு கத்துகிட்டு செய்றவன்னு முடிவு பண்ணிருப்பாரு”

“தெளிவா சொல்லு”

“டேய், உனக்கு வேலை தெரியாது, ஆனா கத்துகிட்டு பண்ற கெப்பாசிட்டி இருக்குன்னு நம்பி வேலை கொடுக்கறாரு, போதுமா?”

“ஓகோ, இப்படி செக் பண்ணித்தான் எல்லாரையும் வேலைக்கு எடுப்பாரா?”

“வேலை தெரியாத யாரையும் எடுக்க மாட்டாங்க, தெரிஞ்ச பையங்கறதால இந்த டெஸ்ட் மட்டும் வச்சு எடுத்துகிட்டார்”

கொடுமை என்ன தெரியுமா மக்களே? எனக்கு அங்க வேலைக்கு போக பிடிக்காதாலதான் எல்லா கேள்விக்கும் தெரியாதுன்னு பதில் சொன்னேன், எப்படியாவது வீட்டுக்கு சீக்கிரம் போகனும்னுதான் முடிஞ்ச வரைக்கும் வேகமா வழி கேட்டு போனேன், நான் முதன்முதலாக 2008ல் வேலைக்கு போக ஆரம்பத்ததுக்கு இந்த சம்பவம்தான் ஒரு முக்கியமான காரணம்…

வாழ்வின் பல தருணங்களில் நாம் குதித்து குட்டிக்கரணம் அடித்து “அதுக்கு நான் சரிப்படமாட்டங்க” என்றாலும் விதி விடாமல் “இதுக்கு நீ சரிப்பட்டு வருவடா” என்று இழுத்து சென்று விடுகிறது. அத்தகைய தருணங்களில் அந்த பாதையிலேயே போய் விடுவது தான் சாலச்சிறந்தது “வேறு வழி இல்லாததால்?”

ஏண்டா டகால்டி-CTS SEN

அன்பர்களுக்கு வணக்கம், கல்லூரி நண்பர்கள் பற்றி எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று நண்பனின் பிறந்தநாள், அவனை பற்றி பேச மனம் விழைகிறது, அவனுக்கு அருமையான தமிழ் பெயர் “செந்தமிழ்”, பொதுவாக ஒவ்வொரு மனிதனையும் பிடித்தவர்கள் இருப்பது போல் பிடிக்காதவர்களும் இருப்பார்கள், எனக்கு தெரிந்து என்னுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் இவனை பிடிக்கும்.செந்தமிழை நினைத்தாலே மனம் குதுகலமடையும், ஒல்லியான உருவம், சிரித்த களையான முகம், அப்பப்போ தாடி வைப்பாறு, முக்கியமானது இவனுடைய உடல்மொழி, இரண்டு தோள்பட்டையையும் தூக்கி ஆட்டி “ஏண்டா டாய், டகால்டி” என்றால் அதை நினைத்து நான் இரண்டு நாள் சிரித்து கொண்டிருப்பேன்.

அவனது தந்தை  மத்திய வங்கி வேலையில் இருந்ததால், அவனது குடும்பம் வட இந்தியாவில் இருக்க, இவன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தான். இவன் பெயர் முதலாம் ஆண்டு எல்லாரிடமும் பிரபலமானதே சுவாரசியமான முறையில்தான், முதல் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த எல்லோரிடமும் “மச்சி, நீ பாஸ் ஆகிருவியா? எனக்கு போயிரும்னு பயமா இருக்குடா” என ரொம்ப அப்பாவாக முகத்தை வைத்து கொண்டு புலம்பானான், ஆனால் ரிசல்ட்  வந்த அன்று எல்லோரும் இவனை வெறி பிடித்து துரத்தினார்கள் “ஏனென்றால் இவனை தவிர எல்லோருக்கும் அர்ரியர் விழுந்திருந்தது”
மூன்றாம் வருடம் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கல்லூரி அருகில் வீடு எடுத்து தங்கினோம், அங்கு பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன, ஒன்றினை சொல்கிறேன், நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள், வழக்கம் போல நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி, துரத்தி பிடித்து விளையாடி கொண்டிருந்தோம், செந்தமிழ் மீது பூசுவதற்காக சிவா துரத்த இருவரும் ஓடிப்போய் ரொம்ப நேரம் ஆனது, நாங்கள் ரூம் முழுவதும் இறைந்து கிடந்த கேக்கை கழுவி விட்டு, மொட்டை மாடியில் குளித்து கொண்டிருந்தோம், திடிரென பார்த்தால் செந்தமிழும் சிவாவும் அமைதியாக ஒன்றாக நடந்து வந்தார்கள், “என்னடா இது!!!!?” என்று ஆச்சர்யமாக பார்த்தால் இவர்களை தொடர்ந்து ஒரு போலிஸ் SI பைக்கில் வந்தார், உடனே மொட்டைமாடியில் இருந்த எல்லோரும் தரையோடு தரையாக படுத்து விட்டோம், வந்த போலிஸ் Birthday boyஐ கூப்பிட்டு ஏதோ கடிந்துவிட்டு சென்றார்.
என்ன நடந்திருக்கிறது என்றால், செந்தமிழ் சிவாவுக்கு பயந்து ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்து, அவன் கடந்து சென்றதும் மின்னலென எழுந்து சாலையின் குறுக்கே ஓட, இவனுக்கு செங்குத்து திசையில் இரவு ரோந்து வந்து கொண்டிருந்த போலிஸ் இவன் சடாரென பாய்ந்ததால் பயந்து வண்டியோடு கீழே விழுந்துவிட்டார், பின் எழுந்து இவனை பிடித்து விசாரித்து, துரத்தி கொண்டு வந்த சிவாவை “ரேக்கிங்”கில் கைது செய்துவிடுவதாக மிரட்டி இருவரையும் அழைத்து வந்து பிறந்தநாள்காரனை எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த நிகழ்வை அந்த இடத்தில் இருந்த யாராலும் மறக்க முடியாது, இப்போது நினைத்தாலும் வெடி சிரிப்பு வருகிறது.
எங்கள் வகுப்பிலும் இரண்டு கோஸ்டி இருந்தது, ஆனால் அதிகம் முட்டி கொண்டதில்லை, அதற்கும் நேரம் வந்தது, Department secretary election, குறைந்தபட்ச தகுதி All clear studentஆக இருக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக எங்கள் பக்கம் அப்படி யாரும் இல்லை. எப்போதும் நடுநிலைவாதியாய் இருக்கும் செந்தமிழ் எங்களிடம் சிக்கினான், அவனை மூளைச்சலவை செய்து எங்கள் சார்பாக நிற்க வைத்து ஜெயிக்க வைத்தோம், அதன் பின் அவனது பதவியை வைத்து நாங்கள் ஆடாத ஆட்டம் ஆடி, எங்கள் சார்பாக எதற்கெடுத்தாலும் அவனை அலைய விட்டோம், ஒரு நள்ளிரவில் அரை தூக்கத்தில் எழுந்து பார்த்தால் விட்டத்தை நோக்கி கொட்ட கொட்ட விழித்து கொண்டிருந்தான், என்னவென்று கேட்டதற்கு “டேய், ரொம்ப தப்பா இருக்குடா, என் பதவியை எல்லாரும் தப்பா பயன்படுத்திக்கறாங்க, ராஜினாமா செய்யலாம்னு இருக்கேன்”னு சொன்னான், “சரிடா, பண்ணிக்கலாம்”னு அவனை தூங்க சொன்னேன், அந்த விஷயத்தை நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கலை,சொல்லிருந்தா அவனை மறுபடியும் பேசியே பதவில இருக்க வச்சுருப்பாங்க, சொன்ன மாதிரியே ராஜினாமா பண்ணிட்டான், அடுத்த வந்த தேர்தல்ல எங்களுக்குள்ள நடந்த கோஸ்டி தகறாறுல நாங்க தோத்துட்டோம், ஆனா நள்ளிரவில் அவனை தூங்க விடாம எழுப்பின அவன் நேர்மையை என்னால் எப்பவும் மறக்க முடியாது.
செந்தமிழ்க்கு பேய்னா பயம், எனக்கு கொஞ்சம் பயம், ஒருதடவை தெரிஞ்ச மெடிக்கல் ஸ்டூடண்ட்கிட்டருந்து மண்டைஓடு ஒண்ணு வாங்கி ஒரு பிளாஸ்டிக் கவர்ல போட்டு ரூம்க்கு கொண்டு வந்து எல்லார்கிட்டயும் “தேங்காய்பன் வாங்கிட்டு வந்துருக்கோம்,யாரும் இப்ப எடுக்காதிங்க,மிட்நைட்ல பசிச்சா சாப்பிட்டுக்கலாம்”னு சொல்லிட்டு வச்சோம், எதிர்பார்த்த மாதிரி செந்தமிழ் எனக்கு பசிக்குதுனு போய் கவர எடுத்து உள்ளே கைய விட்டு எடுத்து மண்டை ஓட பார்த்து அவன் போட்ட சத்தத்துல முருகன் பயந்து ரூமை விட்டு ஓடிட்டான், அப்புறம் என்ன எல்லாரும் சேர்ந்து என்னை திட்டினாங்க.
நாங்க தங்கி இருக்க ரூம்ல இருந்து ARRS multiplex theatre பக்கம்ங்கறதால படத்துக்கு போறப்ப நடந்துதான் போவோம், Final destination-4க்கு போறப்ப கன்னன் அவனோட TVS XLல வந்துருந்தான், அதுல ஒருத்தன் மட்டும்தான் போக முடியும்னதும் செந்தமிழ் போட்டி போட்டுகிட்டு கூட போனான், படம் முடிச்சு வரப்பவும் parkingக்கு 5₹ நான்தான் கொடுத்தேன், அதனால் நான்தான் வண்டில வருவேன்னு ரூல்ஸ் பேசி வண்டில போனான், நாங்க நடந்து போனோம், கொஞ்ச தூரம் போனதும் பார்த்தா 3-ரோடுகிட்ட ஒரு போலிஸ்காரர்கிட்ட 2 பேரும் கைகட்டி நின்னுகிட்டு இருந்தாங்க, எங்களுக்கு சிரிப்பு தாங்கலை, கிட்டதட்ட 3km நடந்து நாங்க ரூம்க்கு போனப்புறம் வந்து சேர்ந்தாங்க, எதுக்குடா போலிஸ் பிடிச்சதுனு கேட்டா, அந்த போலிஸ் சும்மா இவங்க வண்டி நம்பர் நோட் பண்ணிகிட்டு அனுப்பிருக்கு, கன்னன் வாய் சும்மா இருக்குமா? “எதுக்கு சார் நம்பர் நோட் பண்றிங்க?”னு விசாரிக்க, ஏற்கனவே போதைல இருந்த போலிஸ் கடுப்புல இங்கேயே நில்லுங்கடானு நிக்க வச்சுட்டார், அந்த இடத்துல செந்தமிழ் புலம்பனதுதான் ஹைலைட்,
 “வெறும் 5₹ பார்க்கிங்க்கு பணம் கொடுத்தது வீணா போக கூடாதுனு உன்கூட வண்டில வந்ததுக்கு என்னை நட்டநடு ராத்திரில நடுரோட்ல நிக்க வச்சுட்டியேடா கண்ணா டேய்”
ஒட்டு மொத்த சோனா காலேஜ் 2004-08 batchல முதல்ல place ஆனது செந்தமிழ்தான், எந்த கம்பெனினு கேட்கறிங்களா? “Indian military force” தெரியாத்தனமா செலக்ட் ஆனான், அப்புறம் அவன் CTS(cognazent)ல place ஆனதும் அவனை எல்லாரும் CTS senனுதான் கூப்பிடுவோம், பையன் இன்னமும் அங்கதான் இருக்கான், நல்லாரு மச்சி
-வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
வருத்தபடாத மாணவர் சங்கம்

மகாதேவன் – கரை சேர்ப்பாளன்

அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது.
நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக…
 
பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துருக்கிறார். 3 வது நாள் அவரது தாய் மரணித்தது அவரை பெரிதாய் பாதிக்கவில்லை…
ஒரு வயதான பெரியவர் (மகாதேவ் தாத்தா) யாரும் உதவாத நிலையில் மகாதேவ்வின் தாய் உடலை எடுத்து சென்று புதைத்துள்ளார், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும், மகாதேவ்விற்கு கன்னடம் மட்டுமே தெரியும், இருப்பினும் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர்…
ஒரு நாள் அந்த தாத்தாவும் போய் சேர்ந்தார், அப்போது வருடம் 1971, மகாதேவ்விற்கு வயது 10, இத்தனை நாள் தாத்தா எவ்வாறு குழி தோண்டி புதைத்தாரோ அதே போல் தாத்தாவையும் அடக்கம் செய்தார், அப்படி செய்ததற்கு அவருக்கு கிடைத்த முதல் வருமானம் 2.50 ரூபாய். அன்று ஆரம்பித்து இதுவரை 77,882க்கு மேலான உற்றாரில்லாத (அனாதை) பிணங்களை புதைத்துள்ளார்…
மகாதேவ்விற்கு இந்த வேலை பிடித்துருந்தது என்பதை விட இந்த வேலை மட்டும்தான் தெரியும், இது சம்பந்தபட்ட ஆட்கள்,இடத்தை மட்டும் தான் தெரியும், வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதை முழுமையாக செய்ய துவங்கினார், அவர் மிக கஷ்டபட்டது தனக்கான துனையை தேடும்பொழுதுதான்…
யாரும் அவருக்கு பெண் தர முன் வரவில்லை, வெறும் வெட்டியானாக இருப்பவனுக்கு யார் தெருவார்கள், 1979ல் அவருக்கு திருமணம் நடந்தது, தனது திருமணத்திற்காக தன் மாமனாருக்கு 2000 ரூபாய் வரதட்சனை கொடுத்துள்ளார். அது வரை தள்ளுவண்டி மூலமாக உடல்களை கொண்டு வந்தவர். அதன் பின் “அம்மு” என்ற குதிரை மூலமாக வண்டி இழுத்து கொணர்ந்திருக்கிறார்…
42000 உடல்களுக்கு மேல் அம்முவால் இழுக்க முடியவில்லை, 2000 வருடத்தில் அம்முவும் மகாதேவ்விடமிருந்து விடை பெற்றது, பல மரணங்களை கடந்த மகாதேவ்வினால் அம்முவின் பிரிவை ஏற்க இயலவில்லை, அடக்கம் செய்யவிடாமல் அழுது தடுத்திருக்கிறார், அதை பற்றி பேசுகையிலும் அவர் முகத்தில் துக்கம் தெரிகிறது, அம்முவை சரோஜ் நகரில் புதைக்க முடியாமல் போய் விட்டது என வருந்துகிறார்…
தற்போது 3 சக்கர வேன் மூலமாக உடல்களை கொணர்கிறார், அவருடைய வாகனத்தில் “VEHICLE FOR UNCLAIMED BODIES” என எழுதப்பட்டுள்ளது, நகரத்திலுள்ள அனைத்து லோக்கல் போலிஸ் ஸ்டேசனிலும் அவரது நம்பர் உள்ளது, அரசு மருத்துவமனையிலும் ஆள் இல்லாத உடல் வந்து விட்டால் இவருக்குதான் அழைப்பு வரும்…
பிரேத பரிசோதனை முடித்த பின்னர் சட்டப்படி எடுத்து சென்று புதைப்பது வழக்கம், அதற்கு மாறாக எரித்த உடல் ஒன்றே ஒன்றுதான். அது ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிசாரால் சுட்டுக்கொல்லப் பட்ட “சிவராசன்”னின் உடல்.
நகரத்தில் இருந்து வரும் உடலுக்கு 800 ரூபாயும் அரசு மருத்துவமனையிலிருந்து வரும் உடலுக்கு 200 முதல் 250 வரையிலும் வாங்குவதாக கூறும் மகாதேவ் ஒவ்வொரு உடல் அடக்கத்திலும் 100 முதல் 150 ரூபாய் தான் மீதம் என்கிறார்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட பல அறக்கட்டளைகள் இவருக்கு உதவி செய்துள்ளது, அனைத்து உதவிகளையும் தன் மகன் பிரவீனுடைய படிப்பிற்காக மட்டுமேபயன்படுத்துகிறார்.
மகாதேவ் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, இவரை 3 நாள் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறையில் தங்க வைத்து, கடைசி நாளில் அவரே நேரடியாக வந்து மகாதேவ் மகனுடைய படிப்பிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியது தானாம்.
இவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
1) கிடைத்த வேலையை குறை சொல்லாமல் ஏற்று கொண்டது
2) அந்த வேலையை முழு மனதுடன் நிறைவாக செய்தது.
3) எப்படியும் கரை சேர்வோம் என்ற நம்பிக்கையுடன் எந்த தவறான வழிக்கும் செல்லாமல் நேர்மையாக வாழ்வது
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

நன்றி :தி டைம்ஸ் ஆஃப் இந்தியா