500 ரூபாயில் மின்சாரமில்லா AC

கண்டுபிடிப்புகள் குறித்து இரண்டு விஷயங்கள் சமீபத்தில் யோசிக்க வைத்தது. ஒன்று மகளீர் தினத்தன்று படித்தது, கிரைண்டரோ, வாஷிங்மிசினோ, மிக்சியோ அனைத்தும் எப்பொழுது கண்டுபிடிக்க பட்டது என்று யோசியுங்கள். தொழிற்புரட்சி ஏற்பட்டு பெண்களும் வேலைக்கு செல்ல துவங்கிய பின், அதாவது வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவ துவங்கிய பொழுது கடினமான வேலைகளை செய்கையில் இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்க வேண்டுமே என்ற தேடலின் விளைவாக கிடைத்தவைதான் வீட்டு உபயோக பொருட்கள். இது முதல் விஷயம்.

இரண்டாவது இதே காரணத்தினால் தான், படித்த அல்லது நன்கு சிந்திக்க தெரிந்தவர்களை செய்ய வைக்கும் வரை மலம் அள்ளவோ, சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்யவோ எளிதான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்படாது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரச்சனை. அதற்கு எதற்கு மூளையை செலவளிக்க வேண்டும் என அறிஞர்கள் ஒதுங்கி உள்ளார்கள் போல. ஆனால் இனி அப்படி அல்ல, சாமானியனும் அவன் தேவைக்கேற்ப இயந்திரங்களை உருவாக்க துவங்கிவிட்டான். உதாரணம் இந்த Eco cooler. Continue reading “500 ரூபாயில் மின்சாரமில்லா AC”

இப்படி வாழ்ந்து பார்க்கலாமே…

இப்படி வாழ்ந்து பார்க்கலாமே…

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*’நன்றி’,’தயவுசெய்து’-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*ரகசியங்களைக் காப்பாற்று.

*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*’எனக்குத் தெரியாது’, மன்னிக்கவும்’, என்பதை சொல்லத் தயங்காதே..!!

மகாதேவன் – கரை சேர்ப்பாளன்

அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது.
நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக…
 
பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துருக்கிறார். 3 வது நாள் அவரது தாய் மரணித்தது அவரை பெரிதாய் பாதிக்கவில்லை…
ஒரு வயதான பெரியவர் (மகாதேவ் தாத்தா) யாரும் உதவாத நிலையில் மகாதேவ்வின் தாய் உடலை எடுத்து சென்று புதைத்துள்ளார், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும், மகாதேவ்விற்கு கன்னடம் மட்டுமே தெரியும், இருப்பினும் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர்…
ஒரு நாள் அந்த தாத்தாவும் போய் சேர்ந்தார், அப்போது வருடம் 1971, மகாதேவ்விற்கு வயது 10, இத்தனை நாள் தாத்தா எவ்வாறு குழி தோண்டி புதைத்தாரோ அதே போல் தாத்தாவையும் அடக்கம் செய்தார், அப்படி செய்ததற்கு அவருக்கு கிடைத்த முதல் வருமானம் 2.50 ரூபாய். அன்று ஆரம்பித்து இதுவரை 77,882க்கு மேலான உற்றாரில்லாத (அனாதை) பிணங்களை புதைத்துள்ளார்…
மகாதேவ்விற்கு இந்த வேலை பிடித்துருந்தது என்பதை விட இந்த வேலை மட்டும்தான் தெரியும், இது சம்பந்தபட்ட ஆட்கள்,இடத்தை மட்டும் தான் தெரியும், வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதை முழுமையாக செய்ய துவங்கினார், அவர் மிக கஷ்டபட்டது தனக்கான துனையை தேடும்பொழுதுதான்…
யாரும் அவருக்கு பெண் தர முன் வரவில்லை, வெறும் வெட்டியானாக இருப்பவனுக்கு யார் தெருவார்கள், 1979ல் அவருக்கு திருமணம் நடந்தது, தனது திருமணத்திற்காக தன் மாமனாருக்கு 2000 ரூபாய் வரதட்சனை கொடுத்துள்ளார். அது வரை தள்ளுவண்டி மூலமாக உடல்களை கொண்டு வந்தவர். அதன் பின் “அம்மு” என்ற குதிரை மூலமாக வண்டி இழுத்து கொணர்ந்திருக்கிறார்…
42000 உடல்களுக்கு மேல் அம்முவால் இழுக்க முடியவில்லை, 2000 வருடத்தில் அம்முவும் மகாதேவ்விடமிருந்து விடை பெற்றது, பல மரணங்களை கடந்த மகாதேவ்வினால் அம்முவின் பிரிவை ஏற்க இயலவில்லை, அடக்கம் செய்யவிடாமல் அழுது தடுத்திருக்கிறார், அதை பற்றி பேசுகையிலும் அவர் முகத்தில் துக்கம் தெரிகிறது, அம்முவை சரோஜ் நகரில் புதைக்க முடியாமல் போய் விட்டது என வருந்துகிறார்…
தற்போது 3 சக்கர வேன் மூலமாக உடல்களை கொணர்கிறார், அவருடைய வாகனத்தில் “VEHICLE FOR UNCLAIMED BODIES” என எழுதப்பட்டுள்ளது, நகரத்திலுள்ள அனைத்து லோக்கல் போலிஸ் ஸ்டேசனிலும் அவரது நம்பர் உள்ளது, அரசு மருத்துவமனையிலும் ஆள் இல்லாத உடல் வந்து விட்டால் இவருக்குதான் அழைப்பு வரும்…
பிரேத பரிசோதனை முடித்த பின்னர் சட்டப்படி எடுத்து சென்று புதைப்பது வழக்கம், அதற்கு மாறாக எரித்த உடல் ஒன்றே ஒன்றுதான். அது ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிசாரால் சுட்டுக்கொல்லப் பட்ட “சிவராசன்”னின் உடல்.
நகரத்தில் இருந்து வரும் உடலுக்கு 800 ரூபாயும் அரசு மருத்துவமனையிலிருந்து வரும் உடலுக்கு 200 முதல் 250 வரையிலும் வாங்குவதாக கூறும் மகாதேவ் ஒவ்வொரு உடல் அடக்கத்திலும் 100 முதல் 150 ரூபாய் தான் மீதம் என்கிறார்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட பல அறக்கட்டளைகள் இவருக்கு உதவி செய்துள்ளது, அனைத்து உதவிகளையும் தன் மகன் பிரவீனுடைய படிப்பிற்காக மட்டுமேபயன்படுத்துகிறார்.
மகாதேவ் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, இவரை 3 நாள் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறையில் தங்க வைத்து, கடைசி நாளில் அவரே நேரடியாக வந்து மகாதேவ் மகனுடைய படிப்பிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியது தானாம்.
இவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
1) கிடைத்த வேலையை குறை சொல்லாமல் ஏற்று கொண்டது
2) அந்த வேலையை முழு மனதுடன் நிறைவாக செய்தது.
3) எப்படியும் கரை சேர்வோம் என்ற நம்பிக்கையுடன் எந்த தவறான வழிக்கும் செல்லாமல் நேர்மையாக வாழ்வது
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

நன்றி :தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்…!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .

நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவீதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.

மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . !


நன்றி: ராஜன் நெல்லை

விவசாயி கோடிசுவரரான கதை!

ஒரு சாமானிய விவசாயி மரம் தங்கசாமி கோடிசுவரரான வெற்றிக் கதை!

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!


தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்…

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

தொடர்புக்கு
மரம் தங்கசாமி, அலைபேசி: 97866-04177

நன்றி: well-bred kannan

கண்களை பார்த்துகொள்ளுங்கள்

அன்பர்களுக்கு வணக்கம், அதிக நேரம் இனையத்தில் இருக்கும் நமக்கு கண்கள் வெகுவாய் பாதிக்க படுகின்றன.

கண்களை பாதுகாக்க:-

 
1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது
மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

5. சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும்.

6. பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

8. சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்

 
 
நன்றி:  Well-bred Kannan



வியக்க வைக்கும் தகவல்கள்

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

அன்பர்களுக்கு வணக்கம், பதிவு எழுதி நாளாகி விட்ட நிலையில் முக நூலில் நான் கண்ட தகவல் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி- ரிலாக்ஸ் ப்ளிஸ்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

(இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.)

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
 
 

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

via ஆந்தை ரிப்போர்ட்டர்

 

பவர்கட் பிரச்னையா…இன்றே சோலாருக்கு மாறுங்க !

‘பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்’ என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது… இன்று 12 மணி நேரம்… 16 மணி நேரம்… 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை’ என்று உணர்ந்த மக்கள், ‘இன்வர்ட்டர்’களை வாங்கினார்கள். ஆனால்
, அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.
 

மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று… இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். ‘பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க…’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.

”மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட… மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்… அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.

பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்… குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.
தற்போது… வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்…” என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.

”சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!” என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் ‘மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்’. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ”சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!

வீடுகளில்… ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ… மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்” என்று சொன்னார்.

எல்லாம் சரி… சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?
அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ”அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை… சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்… மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.

இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்… (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்” என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,
”இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல… இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!” என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!

நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!
சோலார் தரும் லாபம்!

மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்… டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
————————–————————–——————

மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்… சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்…) 840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்… 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).
இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது… 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்… ‘அடேங்கப்பா… நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது’ என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்… மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.

————————–————————–—————-
சூரிய மின்சாரம்… அசத்தும் குஜராத்!

ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது, குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.

சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in

என்ற வலைதளத்தை அணுகலாம்.

தொடர்புக்கு:
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே. சம்பத் மாளிகை,
ஐந்தாவது மாடி,
68, காலேஜ் ரோடு,
சென்னை 6,
தொலைபேசி: 044-28224830

 

வீட்டில் சோலார் பயன்படுத்துவது குறித்த தகவல்கள்

அன்பர்களுக்கு வணக்கம், மின்வெட்டிற்கு சரியான நிவாரணம் சோலார்தான் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே சில பதிவுகள் போட்டு இருக்கிறேன், இப்போது அரசும் இதை ஒப்புக் கொண்டு விட்ட நிலையில், இணையத்தில் மேய்கின்ற பொழுது நான் படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? என்பது பற்றிய கேள்விகளை வலை நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். என் நண்பர் ஒருவர் மகாராஷ்டிரா, புனாவில் சோலார் செல் பிசினஸ் நடத்துகிறார். அவரிடமிருந்து கேட்டுப் பெற்ற தகவல்களை இங்கே கொடுக்கிறேன்.

வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.

உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவனமே மானியத்தை வாங்கிக் கொள்ளும். அதாவது நீங்கள் 1.1 லட்சத்திற்கு செக் கொடுத்தால் போதும், மற்றபடி மானிய அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போட்டால், மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக, டிரைவிங் ஸ்கூலில் சென்று மொத்தமாகப் பணம் கொடுத்தால், அவர்களே எல்லா அப்ளிகேசனையும் நிரப்பிக் கொடுப்பார்கள். நீங்கள் கையெழுத்து மட்டும் போட்டால் போதும். ஆர்.டீ.ஓ. ஆபிசில் யாரையும் பார்த்து நேரடியாக தனித்தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும். அது போல, சோலாரிலும் மானியம் பற்றிய விவரங்களை உங்களுக்கு விற்பவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மானியத் தொகையை மத்திய அரசு கொடுக்கிறது. இது 100 ரூபாய் சிஸ்டத்திற்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். மானியம் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் இது சுமார் 45 ரூபாயாக மாறும். என்னைக் கேட்டால், இந்த விசயங்களில் நாம் 5 ரூபாய்க்காக தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் , போனால் போகட்டும் என்று ‘அவுட்சோர்ஸ்’ செய்வதுதான் நல்லது.

நியாயமாகப் பார்த்தால், வீட்டிற்கு சோலார் செல் வாங்க, இந்த 1.1 லட்சம் கூட உங்கள் கையில் இருக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் திட்டப்படி, வங்கிகள் குறைந்த வட்டி (7.5%) கடன் கொடுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இது எப்படி வாங்குவது , எந்த வங்கியில் சுலபமாகக் கிடைக்கும் என்ற விவரம் என் நண்பருக்கு தெரியவில்லை. ”மகாராஷ்டிராவில் இதையும் நானே கவனித்துக் கொள்வேன், தமிழகத்தில் சொல்ல முடியாது” என்று சொன்னார். அதனால் இப்போதைக்கு இந்த 1.1 லட்சத்தை உங்கள் கையில் இருந்துதான் போடவேண்டும் அல்லது நீங்களே அலைந்து லோன் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

வீட்டில் சோலார் செல் மின்சாரம் பயன்படுத்துவதில் இன்னொரு விசயம் இருக்கிறது.. ஏ.சி. மற்றும் வாசிங் மெசின், வாட்டர் ஹீட்டர் மற்றும் போர்வெல் பம்பு, இவை நான்கும் சுவிட்சு பட்டதும் ஆரம்பத்தில் அதிக கரண்டு இழுக்கும். இவற்றை சமாளிக்க இந்த 1 கிலோவாட் சிஸ்டம் பத்தாது.

”எனக்கு எல்லாமே சோலாரில் ஓட வேண்டும்” என்றால் என்ன செய்வது?

இதற்கு குறைந்த பட்சம் 2 கிலோ வாட் சிஸ்டமாவது வேண்டும். இது தவிர, ‘சாஃப்ட் ஸ்டார்ட்” (Soft start) அல்லது ”மெதுவாக தொடங்கும்” சாதனம் தேவைப்படும். இதனால் விலை கொஞ்சம் அதிகமாகும். இதை வைத்து ஏசி, வாசிங் மெசின், வீட்டிற்கு போர்வெல் பம்பு ஓட்டலாம்.

வாட்டர் ஹீட்டருக்கு, நேரடியாக சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதுதான் நல்லது. அது சுமார் ரூபாய் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஆகலாம். சோலார் செல்லில் மின்சாரம் எடுத்து, பேட்டரியில் சேர்த்து, அப்புறம் சாப்ட் ஸ்டார்டர் வைத்து எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது “ரொம்ப ஓவர்” என்று நண்பர் சொன்னார்!

”மொத்தத்தில் நீங்கள் ரெகமண்ட் செய்வது என்ன” என்று கேட்டால், “வீட்டில் இருக்கும் விளக்குகள், மின் விசிறி , ஃப்ரிஜ், கம்ப்யூட்டர், டி.வி. , மிக்சி இதை எல்லாம் சோலாரில் ஓட்டுங்கள். ஏசி, வாசிங் மெசின் இதை எல்லாம் அரசு மின் இணைப்பில் ஓட்டுங்கள், அதுதான் சுலபம், எகனாமிகல்”.

”நாலு நாள் மேக மூட்டமாக இருந்தால் சோலார் கரண்டு வராதே, என்ன செய்வது?”

”உங்கள் வீட்டில் அரசு மின் இணைப்பு இருக்கட்டும், துண்டிக்க வேண்டாம். சோலார் மின்சாரம் இல்லாவிட்டால், தானாகவே (automatic) அரசு மின் இணைப்பு மூலம் மின்சாரம் வரும் வகையில் இணைப்பை கொடுக்கலாம். ”

அதாவது, பேட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை அரசு மின்சார மீட்டர் ஓடாது. பேட்டரி தீர்ந்து விட்டால், மீட்டர் ஓடும். மறுபடி பேட்டரி சார்ஜ் ஆனால், அரசு மீட்டர் ஓடாது என்ற வகையில் இருக்கும்.

இந்த பேட்டரிகள், ‘லோ மெயிண்டெனன்ஸ் ” (Low maintenance) என்ற வகையைச் சார்ந்தவை. வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவில் “AMC” (annual maintenance contract) போட்டால், கம்பெனி ஆள் 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து இவற்றை கிளீன் செய்து செல்வார். இந்த பேட்டரியில் தண்ணீர் அல்லது ஆசிட் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது.

வியாபாரத்திற்கு: இதையே உங்கள் கடைக்கு சோலார் செல் மின்சாரம் வேண்டும் என்றால், மானியம் வீட்டுக்கு கிடைப்பது போலவே கிடக்கும். ஆனால் கடன் மட்டும் இவ்வளவு குறைந்த வட்டியில் கிடையாது. கமர்சியல் ரேட்டில்தான் கிடைக்கும்.

 
நன்றி: well-bred kannan