வேதங்கள் – யார் எழுதியது?

அம்பெத்கர் எழுதிய இந்து மதத்தில் புதிர்கள் என்ற நூலினை வாசிக்க துவங்கிய பொழுது ஏகப்பட்ட கேள்விகள் என்னுள் எழுந்தன. அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பல பத்தாண்டுகளாக யாருமே இதுவரை பதில் அளிக்கவில்லை. உண்மையில் இந்து மதத்தின் ஆதார நூல்களான வேதங்கள், உப நிஷத்துகள், கீதை என அனைத்தையும் வாசித்து அதில் இருந்துதான் கேள்விகளை எழுப்பி இருக்கிறார். கிட்டத்தட்ட பல நூறு நூல்களை அவர் வாசித்து ஒரு நூல் எழுதியிருந்தால் நான் அதையும் சுருக்கி, அவர் எழுப்பும் கேள்விகளை மட்டுமே பொது தளத்தில் முன்வைக்கிறேன். அதற்கு கிடைத்த எதிர்வினைகள் நான் எதிர்பார்த்ததே, அதில் ஒரு பெண்மணி, ” நான் பிராமின், வேதம் படிக்கறவங்க, வேதத்தை எல்லாரும் படிக்கனும்னு அவசியமில்லை, அதை ஏன் தோண்டறிங்க, அதுல ஏதாவது நல்லது இருந்தா மட்டும் சொல்லுங்க”னு நேரடியா கமெண்ட் பண்ணாங்க. இத்தனைக்கும் இன்னும் வேதத்துக்குள்ள என்ன இருக்குன்னு நான் பேசவே ஆரம்பிக்கலை. வேதத்தின் தோற்றம் பற்றிதான் போய்கிட்டு இருக்கு.

ஏன் வேதம் பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு சொல்றாங்க? இப்ப இல்லை, எப்பவுமே வேதங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாதுங்கறதுதான் சட்டம். இப்ப சொல்ற மாதிரி எங்க மனசு புண்படும்ங்கற காரணம் சொல்லப்படலை. ஏனெனில் வேதங்கள் “அபௌருஷேயம்” என்பதே. இதன் பொருள் வேதங்கள் மனிதனால் படைக்கப்பட்டவை அல்ல. ஆதலால் மனிதனில் காணப்படும் தவறுகள், குறைகள், பலவீனங்கள் வேதத்தில் இருக்காது. ஆதலால் வேதங்கள் பொய்யாதவை, ஆதலால் வேதத்தை கேள்வி கேட்கக் கூடாது.

வேதங்கள் பொய்யாதவை, மனிதனால் ஆக்கப்படாதவைங்கறதோட நிறுத்தலை. வேதங்கள் கடவுளாலும் ஆக்கப்படாதவைனும் சிலர் கூறினார்கள். உதாரணத்திற்கு பூர்வ மீமாம்ச என்ற பிராமணீய தத்துவத்தை வெளியிட்ட ஜைமினி அது ஏன் கடவுளால் உருவாக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்

 1. கடவுளுக்கு உருவம் இல்லை, அண்ணம் இல்லை, எனவே அவர் வேதங்களை உச்சரிக்க முடியாது
 2. கடவுளுக்கு உடல் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அவர் புலன்களுக்கு எட்டாத பொருள்களை அறிய முடியாது; ஆனால் வேதத்தில் மனிதப் புலன்களுக்கு எட்டாத பொருள்கள் கூறப்படுகின்றன.
 3. ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இடையிலான தொடர்பு சாசுவதமானது
 4. ஒலி சாசுவதமானது
 5. ஒலி சாசுவதமானதால் ஒலிகளால் ஆன சொற்களும் சாசுவதமானவை
 6. சொற்கள் சாசுவதமானவை என்பதால் வேதங்கள் சாசுவதமானவை; வேதங்கள் சாசுவதமானவை என்பதால் அவை மனிதராலோ கடவுளாலோ செய்யப்பட்டவை அல்ல.

இந்த விளக்கம் கிட்டத்தட்ட கடவுள்களை மனிதர்களுக்கு இணையான ஆற்றல் கொண்டவர்களாக சுருக்கவில்லையா? சிலர் வேதங்களின் தோற்றம் பற்றி வேறு கருத்துக்களை கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு நியாய தத்துவமுறையை நிறுவிய கௌதமர், அதிகாரம் மிக்கவர்களால் உருவாக்கப்பட்டவைதான் வேதங்கள் என்கிறார். வைசேஷிக தத்துவமுறையும் இதை ஏற்றுக் கொண்டு கூடுதலாக “நுண்ணறிவுள்ள ஒரு மனதின் படைப்பு” என்கிறது.

ஆனால் வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. சம்ஸ்கிருத இலக்கிய வகையில் ‘அனுக்கிரமணிகைகள்’ என்றொரு அட்டவனைத் தொகுப்புகள் உண்டு. அவை இலக்கியத்தின் விவரங்களை பட்டியலாக காட்டும். ரிக் வேதத்துக்கு 7 அனுக்கிரமணிகைகள் உண்டு. இயற்றியவர்கள் சௌனகரும் காத்தியாயனரும் ஆவர். யஜீருக்கு 3 அனுக்கிரமணிகைகள் உண்டு. சாம வேதத்திற்கு 2, அதர்வணத்திற்கு ஒன்று. இதில் ருக் வேதத்துக்கு காத்தியாயனரால் செய்யப்பட்ட சர்வானு கிரமணிகை பல விவரங்களை தருகின்றன.

 • ஒவ்வொரு மந்திரத்தின் முதல் சொல்
 • மந்திரங்களின் எண்ணிக்கை
 • அதை இயற்றிய ரிஷியின் பெயர் மற்றும் அவரது குடும்ப பெயர்
 • தெய்வங்களின் பெயர்கள்
 • ஒவ்வொரு மந்திரத்தின் சந்தம்

உதாரணத்திற்கு ரிக் வேதத்தில் இருந்து

“கண்வர்கள் உனக்கு ஒரு பிரார்த்தனை செய்கிறார்கள், இவர்களின் வேண்டுதலை நன்றாக கேள், இவ்வாறாக இந்திரனே, குதிரைகளைப் பூட்டுபவனேம் கோதமர்கள் இதற்கெனப் பலனுள்ள மந்திரங்களை செய்திருக்கிறார்கள்”

இதில் கண்வர்கள், கோதமர்கள்,மணாக்கள், கிரித்சமதாக்கள், குசிகாக்கள், நோதஸ்கள், ரகுவனாக்கள் என ஸ்லோகங்களை இயற்றிய பல ரிஷிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றால் kanva என்று கூகுளில் தேடினாலே அவருக்கும் ரிக் வேதத்திற்குமான தொடர்பு தெரிந்து விடுகிறது.

அதே போல ரிக் வேதமானது ஒருமுறை மட்டும் இயற்றப்பட்டதல்ல, அதில் பல புதிய மந்திரங்கள், அடுத்தடுத்து வந்த ரிஷிகளால் சேர்க்கப்பட்டுள்ளதையும் காத்தியாயனார் சொல்கிறார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக வேதங்கள் “அபௌருஷேயம்” என்று சொல்லி அதை நோக்கி வரும் கேள்விகளை தவிர்க்க வேண்டும். காத்தியாயனார் போன்ற பிராமணர்கள் உண்மைகளை சொல்ல தயங்காத பொழுது மற்றவர்கள் எந்த ஆதாயத்திற்காக பொய்யுரைக்க நேர்ந்தது? ரிக் வேத – புருஷசுக்தம் தரும் சதுர்வர்ண தலைமைப்பீடத்திற்காகவா?

(அம்பெத்கர் எழுதிய இந்து மதத்தில் புதிர்கள் நூல் மத்திய அரசால் நாட்டுடுமையாக்கப்பட்டு இலவசமாக இணையத்தில் கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.)

வாய்மை எனப்படுவது யாதெனின்

கல்லூரியில் படிக்கையில், ஒரு நாள் இரவு சுமார் 11 மணிக்கு மேல் இருக்கும், நன்றாக நினைவிருக்கிறது. அன்று நான் மொட்டை மாடியில் படுத்திருந்தேன். நான் மட்டுமல்ல. சக நண்பர்களும் தான். திடிரென்று போன் அடித்தது. அந்தக் காலகட்டத்தில் அந்நேரத்திற்கு அழைத்து பேசக்கூடிய தோழிகளையோ காதலிகளையோ நான் பெற்றிருக்கவில்லை, நீங்க நம்பலன்னாலும் அதான் நிசம். போன் செய்திருந்தது என் நண்பனின் காதலி.

“டேய் அவன் போன் பண்ணா நான் இவ்வளவு நேரம் உங்கிட்டதான் பேசுனேன்னு சொல்லிரு” என சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.

எனக்கு அவள் வைத்த பின் தான் தூக்கமே தெளிந்தது. உடனே இன்னொரு போன். நண்பன்.

“மச்சி”

“சொல்லுடா”

“***** கூட நீயா பேசிட்டுருந்த?”

“ஆமா ஏன் டா?”

“ஒன்னுமில்லைடா, குட் நைட்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். ஆனால் அதன் பிறகு எங்கிருந்து நான் தூங்குவது?

அப்போது தோழியிடம் பேசிவிட்டு வந்தவனை பிடித்துக் கொண்டேன். டீ சாப்பிடப் போகலாம் என்று அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினேன். அவன் ஏதோ, அவன் காதலியைப் போல் “வேறு யாரிடம் பேசிக் கொண்டிருந்திருப்பாள்?” என்ற யோசனைக்கு சென்றான். சுடு தண்ணியை வாங்கி மூஞ்சில ஊத்திருவேன் என மிரட்டி என் பிரச்சனைக்கு இழுத்து வந்தேன்.

“நடு நிசி நேரமாக இருந்தாலும் நான் என்ன பேசிக் கொண்டிருந்தேன் என கொஞ்சம் கூட சந்தேகப் படாத அந்த துரியோதனுனுக்கு நான் செய்தது துரோகம் அல்லவா?” என்றுக் கேட்டேன். பொறுமையாக சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்ட அவன் “அப்படியா நினைக்கற?” என்றான்.

அவனுக்கு என் பிரச்சனை புரியவில்லை. நண்பன் போனில் “இந்நேரத்துக்கு என்னடா பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று சந்தேகப் பட்டு இருந்தால் இப்படி குற்ற உணர்வு தோன்றி இருக்காது. அவன் என்னை முழுமையாக நம்புகிறான். அதனால் தான் குழப்பம் என தெளிவாகக் கூறினேன்.

“அவன் எப்படி உன்னை நம்பி சண்டை போடாம விட்டானோ, அதே மாதிரிதானே அவளும் உன்னை நம்பித்தானே உதவி கேட்டா? இப்ப நீ ஏதாவது மாத்தி சொன்னா அவளுக்கும் தானே துரோகம் பண்ற மாதிரி ஆகிரும்?” என்றுக் கேட்டு குட்டையை மேலும் குழப்பினான்.

இதை யோசித்துக் கொண்டிருந்தால் விடியா தூக்கம் வராது. நான் தூங்கவில்லை என்றால் உன்னையும் தூங்க விட மாட்டேன் என மிரட்டினேன்.

“மச்சி, நீ பொய் சொன்னன்னுதான் ஃபீல் பன்ற?”

“ஆமாடா”

“நீ பொய் சொல்லலை மச்சி”

“என்னடா சொல்ற?”

“அவன் போன் பன்றதுக்கு முன்ன அவ கூடதானே போன்ல பேசுன?”

“ஆமா, ஆனா அது ஒரு 10 செகண்ட் தான்”

“அந்த கணக்கெல்லாம் யார் கேட்டா? அவன் கேட்டது என்ன? அவ கூட நீயா பேசிட்டிருந்தன்னு தானே? நீதானே பேசுன, அது 10 செகண்ட்னா என்ன? 10 மணி நேரம்னா என்ன?”

“என்னடா சூழ் நிலைக்கு ஏத்த மாதிரி பொய்யை உண்மையாக்குற? தப்புடா”

“அப்படி இல்லை மச்சி, இப்ப நீ அவன் கிட்ட இல்லைடா நான் 10 செகண்ட் தான் பேசுனேன். அதுக்கு முன்னாடி நான் பேசலைன்னு சொன்னா என்ன நடக்கும்?”

“என்ன நடக்கும்?”

“அவங்களுக்குள்ள பிரச்சனை வரும், ஏற்கனவே ஆரம்பிச்சுருச்சுங்கறது வேற விஷயம், ஒருத்தருக்கொருத்தர் மறைக்க ஆரம்பிக்கறப்பவே இது நீடிக்க போறதில்லைன்னு ஆகிருச்சு. ஆனா இப்ப நீ சொல்லி பிரிஞ்சா காலகாலத்துக்கும் உன்னாலதான் பிரிஞ்சோம்னு அவங்க மனசுல ஆழமா பதிஞ்சுரும், அது வெறுப்பாகும். உங்க 3 பேத்துக்குள்ள இருக்க நட்பும் சிதஞ்சுரும், அவங்க காதல் என்னைக்கா இருந்தாலும் முடியத்தான் போகுது. நீ கொஞ்சம் தள்ளிப் போட்டுருக்க, அவ்வளவுதான். ஆனா உன்னோட தனிப்பட்ட நட்பைக் காப்பாத்திருக்க. இது மாதிரி நல்லது செய்யறதுக்காக சொல்ற பொய் மட்டுமில்லை, தீமைய தடுக்கறதுக்காக சொல்லபடற பொய்யும் உண்மைதான்னு….”

“திருவள்ளுவரே சொல்லிருக்காரு, அதானே?”

“அதேதான்”

அதிகாரம்:வாய்மை குறள் எண்:291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

உரை:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

மசாவ்க்கு எப்படி கிடைச்சது?

ஷின்ஷேன், கசாமா, மசாவ், போ, நேனி ஐவரும் நண்பர்கள். 8 வயது பிள்ளைகள். சிறுவயதில் இருந்தே ஒன்றாக படிப்பவர்கள். என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசியம்.
 
உதாரணத்திற்கு ஷின்ஷேன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன். கசாமாவைப் போல் ஒருவனை கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் சொல்லும் பாடங்களை சரியாக படிப்பான். வீட்டில் அனைவரும் தன்னை நல்ல பையன் என சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பான்.

Continue reading “மசாவ்க்கு எப்படி கிடைச்சது?”

கற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை

2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.

எங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார்? வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா? என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.

தமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குரல். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.

10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.

“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.

அதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.

சோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.

“ஏன் ரெகார்ட் எழுதலை?”

“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”

இப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.

அதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்

“போய் பார்க்க யாருமில்லை

வந்து பார்க்கவும் யாருமில்லை

வழிபோக்கன் போவான் வருவான்

வழிகள் எங்கும் போகாது”

அந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா?

“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.

எழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.

ஏழை கர்ப்பிணிகள் அடிவாங்கவா அரசு மருத்துவமனை?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உள்ளூர் நண்பர் ஒருத்தர் கையில் தமிழில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் வைத்துக் கொண்டு வந்து பார்த்துப் பேசினார். எதற்காக அத்தனை நாளிதழ்கள் என்று கேட்டதும் ஆர்வமாகப் பிரித்து அவரது புகைப்படம் வந்துள்ளதாக பெருமை பொங்கக் காட்டினார். சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் 900 ரூபாய் கேட்டு, தராததால் திட்டியதுடன், இரும்புக் கம்பியால் தாக்கிய செவிலியரை எதிர்த்து பெண்ணின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக வந்த செய்தி அது. அதில் மருத்துவமனைக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகவும், பின் மருத்துவமனை டீன் அவர்களை சமாதான படுத்தியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.  Continue reading “ஏழை கர்ப்பிணிகள் அடிவாங்கவா அரசு மருத்துவமனை?”

500 ரூபாயில் மின்சாரமில்லா AC

கண்டுபிடிப்புகள் குறித்து இரண்டு விஷயங்கள் சமீபத்தில் யோசிக்க வைத்தது. ஒன்று மகளீர் தினத்தன்று படித்தது, கிரைண்டரோ, வாஷிங்மிசினோ, மிக்சியோ அனைத்தும் எப்பொழுது கண்டுபிடிக்க பட்டது என்று யோசியுங்கள். தொழிற்புரட்சி ஏற்பட்டு பெண்களும் வேலைக்கு செல்ல துவங்கிய பின், அதாவது வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவ துவங்கிய பொழுது கடினமான வேலைகளை செய்கையில் இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்க வேண்டுமே என்ற தேடலின் விளைவாக கிடைத்தவைதான் வீட்டு உபயோக பொருட்கள். இது முதல் விஷயம்.

இரண்டாவது இதே காரணத்தினால் தான், படித்த அல்லது நன்கு சிந்திக்க தெரிந்தவர்களை செய்ய வைக்கும் வரை மலம் அள்ளவோ, சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்யவோ எளிதான இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்படாது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரச்சனை. அதற்கு எதற்கு மூளையை செலவளிக்க வேண்டும் என அறிஞர்கள் ஒதுங்கி உள்ளார்கள் போல. ஆனால் இனி அப்படி அல்ல, சாமானியனும் அவன் தேவைக்கேற்ப இயந்திரங்களை உருவாக்க துவங்கிவிட்டான். உதாரணம் இந்த Eco cooler. Continue reading “500 ரூபாயில் மின்சாரமில்லா AC”

கிராமசபை கூட்டம்

நாட்டில் எங்கு பார்த்தாலும் அதிருப்தி, அரசினை குறித்து புகார்கள், ஜல்லிக்கட்டிற்கு எதிராக திடிரென வெடித்த புரட்சி, அது முடிக்கப்பட்ட விதம், அனைத்தையும் கடந்து மனதில் சில கேள்விகளை நண்பர்கள் எழுப்பினார்கள். பெருமை பட்டுக் கொள்ளுமளவிற்கு இந்த போராட்டம் தேவையான ஒன்றா? என்று. கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என சொல்லப்பட்டதற்கு முற்றிலும் தலைகீழாய் புரட்சியின் மூலம் ஒன்று சேர்ந்து தடியடி பட்டு கற்றுக் கொள்ள துவங்கியிருக்கிறோம். இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு வந்துவிட்டால் மட்டும் அனைத்தும் சரியாகிவிடுமா என்றும் கேட்கிறார்கள். அப்படி எதை சரி செய்ய சொல்கிறார்கள் என்று புரியவில்லை. சரி நாமே களத்தில் இறங்குவோம் என யோசித்தேன். அரசியல் விழிப்புணர்ச்சி பெறுவதற்காக குடியரசு தினத்தில் கூடும் கிராமசபையில் கலந்துக் கொள்ள முடிவெடுத்து பதிவும் எழுதினேன். Continue reading “கிராமசபை கூட்டம்”

நாட்டின் மீது அவ்வளவு அக்கறையா?

கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு மனதில் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்திருக்கும். சிலருக்கு பல வருடங்களாக மனதினுள் இருக்கும் அந்த விஷயம் என்னவென்றால் “இங்கே ஏதோ தப்பா இருக்கே, ஏதோ ஒவ்வொன்னா நம்மகிட்ட இருந்து போற மாதிரியே இருக்கே, இந்த அரசாங்கம்ங்கற விஷயம் உருவானதுல இருந்து இப்படித்தானா? நம்மாள எதுவுமே செய்ய முடியாதா?” என்று. அதிர்ஷ்டவசமாக நமக்கு ஒரு போராட்டம் ஜல்லிக்கட்டு வாயிலாக அமைந்தது. நம் ஆற்றாமைகளை எல்லாம் கொண்டு சென்று கொட்டி விட்டோம். மீண்டும் சொல்கிறேன் அதிர்ஷ்டவசமாகத்தான் இப்போராட்டம் நமக்கு அமைந்தது. ஏன் அப்படி சொல்கிறேன் என யோசிப்பவர்கள், அதிகம் வேண்டாம், தாமிரபரணி, பரமக்குடி, இடிந்தக்கரை போராட்டத்தில் அரசின் சுயமுகத்தை விசாரித்து பார்த்துக் கொள்ளலாம். Continue reading “நாட்டின் மீது அவ்வளவு அக்கறையா?”

இப்படித்தான் இருக்கோம்

“ஜெமினி” படத்துல ஜெயில்ல மாட்டுனதும் விக்ரம் கலாபவன்மணியிடம் இங்கிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் திருந்துவது போல நடிக்க வேண்டும் என சொல்ல அதற்கு கலாபவன்மணி அதிர்ந்து “திருந்தனுமா? நாம என்ன தப்பு பண்ணோம், திருந்தறதுக்கு?” என்பார். அதாவது தான் செய்த கொலைகளோ, கடத்தல்களோ தவறு என்பதையே அவர் மனம் ஒப்புக் கொள்ளாது. Continue reading “இப்படித்தான் இருக்கோம்”

திருடி

அவளை முதலில் பார்க்கையிலேயே சந்தேகம் வந்தது.
நிச்சயம் இவளும் அந்த கும்பலை சேர்ந்தவளாய்த்தான் இருப்பாள் என…
இது போன்ற பெண்களை பற்றி நண்பர்கள் என்னை எச்சரித்ததுண்டு
நான் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கலாம்.
என் வயது கொடுத்த தைரியம், அங்கேயே நின்றிருந்தேன்.
நான் பார்த்ததை அவள் கவனிக்கவில்லை.
என்னை மட்டுமல்ல, அவள் யாரையும் கவனிக்கவில்லை.
நானும் யாரும் கவனிக்காத வண்ணம் அவளை பார்த்து கொண்டிருந்தேன்.
நேரமும் பேருந்தும் கடந்து கொண்டே இருந்தன…
எதிர்பாராத கணத்தில், செல்போனை நோண்டி கொண்டிருந்தவள் நிமிர்ந்து, கூந்தலை ஒதுக்கியவாறே என்னை பார்த்தாள்…

vlcsnap-2015-03-20-00h04m16s240என் சந்தேகம் ஊர்ஜிதமானது…
அவள் என் இதயத்தை திருடிவிட்டாள்…
அதே கும்பல் தான் –  “தேவதைகள்”
#அவளதிகாரம்