கற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை

2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.

எங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார்? வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா? என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.

தமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குரல். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.

10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.

“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.

அதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.

சோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.

“ஏன் ரெகார்ட் எழுதலை?”

“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”

இப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.

அதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்

“போய் பார்க்க யாருமில்லை

வந்து பார்க்கவும் யாருமில்லை

வழிபோக்கன் போவான் வருவான்

வழிகள் எங்கும் போகாது”

அந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா?

“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.

எழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.

அம்மன் – நாஸ்டால்ஜியா

எந்த ஊர் பேருந்து நிறுத்தத்திலும் ஒரு மரம் இருக்கும், அதனை கடந்து தான் அந்த ஊருக்குள்ளேயே நுழையும் வண்ணம் இருக்கும். சினிமா ஊருக்குள்ளும் அது போன்ற சில நுழைவாயிலாக மரங்கள் போன்ற படங்கள் உண்டு, அது எந்த மொழிப் படமாக இருந்தாலும் அனைவரும் அப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாதவாறு பிரபலமானதாய் இருக்கும். அதற்கு பல படங்களை உதாரணமாக கூறலாம். தமிழில் “பாட்ஷா” படத்தை பார்க்காமல் யாராவது இருப்பார்களா? கிட்டத்தட்ட அதே போல அனைவரும் இரசித்த ஒரு படம் தான் “அம்மன்”

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடைய ஜோடி நம்பர் ஒன் ப்ளூப்பர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஜட்ஜ்ஜாக இரம்யா கிருஷ்ணன் ஒருவருடைய பெர்ஃபார்மென்சை குறித்துக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, சிவா இடையில் புகுந்து கலாய்த்ததும் இரம்யா கிருஷ்ணன் “யேய்ய்ய்ய்ய்” என்று கத்துவார். எல்லோரும் ஒரு நிமிடம் பயந்து ஸ்தம்பித்து விடுவார்கள். பாவனா “மேடம், எனக்கு ஒரு நிமிஷம் நீலாம்பரி கேரக்டர்லாம் தெரிஞ்சது” எனச் சொல்ல, சிவா “அட நீ வேற ஏம்மா, எனக்கு அம்மன் பட கிளைமாக்ஸ் லாம் வந்துட்டு போச்சு, அதுல இப்படி கத்திகிட்டு தான் சூலத்தை எடுத்து குத்துவாங்க, மேடம் நீங்க பேசுங்க, சாமி நான் ஒதுங்கியே நிற்கிறேன்” என்பார். எனக்கு சிறுவயதில் பார்த்த அம்மன் படத்தின் நினைவுகள் வந்தது. தரவிறக்கி பார்த்தேன். Continue reading “அம்மன் – நாஸ்டால்ஜியா”

விடியும் வரை காத்திரு – நாஸ்டால்ஜியா

ஊட்டி

ஒரு பெரிய வீடு

அதன் தோட்டத்தில் செடிகளை வெட்டி கொண்டிருக்கும் தோட்டக்காரன்,

வேலைக்காரர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என கண்காணிக்கும் முரட்டு சூப்பர்வைசர்,

இரண்டு பூட்ஸ் கால்கள் வீட்டில் இருந்து வெளியே வருகிறது, அந்த பெரிய வீட்டின் முதலாளியாகத்தான் இருக்க வேண்டும். வாயிலிருக்கும் பைப்பை எடுத்து விட்டு, துப்பாக்கியை எடுத்து அதில் குறிபார்க்கும் லென்சை பொறுத்தி விட்டு ஒரு மரத்திலிருக்கும் பறவையை குறி பார்க்கிறார்.

திடிரென வீட்டுக்குள் இருந்து “ஆ…..” வென அலறல் சத்தம் கேட்கிறது. வெளியிலிருக்கும் வேலைக்காரர்களில் இருந்து முதலாளி வரை யார் முகத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை.

மீண்டும் மீண்டும் அலறல் சத்தம் கேட்க, அதை பொருட் படுத்தாமல் குறி வைத்த புறாவை சுட்டு வீழ்த்துகிறார் அந்த பெரிய மனிதர்.

டூமில்

படத்தின் பெயரையே போடுகிறார்கள்

“விடியும் வரை காத்திரு”

இந்த இடத்திலையே தெரிந்து விடும், கண்டிப்பாய் இது ஒரு த்ரில்லர் படமென்று. பாக்யராஜ் நடித்திருக்கும் படமென்றால் நாம் என்ன யூகிப்போம்? அவர்தான் படத்தில் வரும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பார் என்று தானே? ஆனால் அவர்தான் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் கொலைத்திட்டங்களை தீட்ட போகிறார் என யாருமே எதிர்பார்க்க மாட்டோம்.

உதாரணத்திற்கு ஒரு காட்சி

தன்னை பிடிக்க வந்திருக்கும் போலிஸ் இன்ஸ்பெக்டரை துப்பாக்கி முனையில் பாக்யராஜ் பிடித்து வைத்திருப்பார். அறைக்கு உள்ளே வர முயற்சிக்கும் காவலர்களை குறிபார்தது சுட்டு கொண்டிருக்கும் பாக்யராஜிடம் இன்ஸ்பெக்டர் கேட்பார்

“நீ எப்படியும் தப்பிக்க முடியாது, இந்த இடத்தை போலிஸ் சுத்தி வளைச்சுட்டாங்க, எதுக்காக உன் துப்பாக்கி தோட்டாவை வீண்டிக்கற?”

“கடைசி ஒரு தோட்டாவை தவிர மீதி எல்லா தோட்டாவும் என்னை பிடிக்க உள்ள வரவங்களுக்குதான்”

“அந்த கடைசி தோட்டா யாருக்கு? உன்னை பிடிக்க முதல்ல வந்த எனக்கா?”

“இல்லை, எனக்கு”

இந்த மாதிரி ராவா வன்முறையான வசனத்தை பாக்யராஜ் பேசுனா கண்டிப்பா எடுபடாதுனு தான் நினைப்போம், ஆனா இந்த படத்துல பாக்யராஜ் பண்ணிருக்க நெகடிவ் ரோலுக்கு கச்சிதமா பொருந்திய வசனம் இது.

பாக்யராஜ் கெட்டவனாக நடித்த படங்கள் மிக குறைவு, கெட்டவன் என்றால் சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்பவராக, அதிகபட்சம் இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ஏழைப்பங்காளனாகத்தான் நடித்திருப்பார், உதாரணம் ருத்ரா படத்தில் செய்திருக்கும் திருடன் பாத்திரம்.

ஆனால் முழுக்க முழுக்க ஏமாற்றி பிழைப்பதையே வாடிக்கையாய் கொண்டு, பணத்திற்காக மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருக்கும் கதாபாத்திரமாக இந்த படத்தில் நடித்திருப்பார்.

90 களில் வந்த க்ரைம் நாவல்களில் முக்கால்வாசி இந்த கதைக்களத்தையே கொண்டிருக்கும். ஒரு பெரிய பணக்காரன், அவருடைய ஏகப்பட்ட சொத்துகளை அடைய அவரை சுற்றி நிகழும் குற்றங்கள். அவரது வாரிசுகளுக்கு வரும் ஆபத்துகள். இந்த மையக்கருவை கொண்டு எழுதப்பட்டிருக்கும் எடுக்கப்பட்டிருக்கும் படமிது.

வேலை தேடி ஊட்டி வரும் திறமைசாலியான இளைஞன் ராஜாவிற்கு வேலை தரும் கோடிஸ்வரர் ராஜசேகர், அவனது தூய்மையான உள்ளத்தை நம்பி அவனுக்கு தனது மனநலம் சரியில்லாத மகள் சத்யாவை திருமணம் செய்து வைக்கிறார். கூடவே ஒரு உயிலும் எழுதி வைக்கிறார். அனைத்து சொத்துக்களும் மகள் சத்யாவிற்கு பின் மருமகன் ராஜாவிற்கு போய் சேரும். இதனை அடுத்து சத்யாவினை தீர்த்து கட்ட கொலை திட்டங்கள் ஒவ்வொன்றாக அவளது கணவன் ராஜாவினால் அரங்கேற துவங்குகிறது.

இடையில் திடிர் திருப்பமாக சத்யாவின் மனநோய் குணமாகிவிடுகிறது, அது வரை சத்யா இறந்தால் விபத்தென சொல்லி விட நினைத்திருந்த ராஜாவின் திட்டங்களுக்கு பெரிய திருப்புமுனை, கூடவே நடக்கும் அசம்பாவிதங்களுக்கு ராஜாவை கச்சிதமாய் சந்தேகிக்கும் போலிஸ் இன்ஸ்பெக்டர். இது போதாதா பாக்யராஜிற்கு விறுவிறுப்பான திரைக்கதை எழுத….?

ராஜாவாய் பாக்யராஜ். அவருடைய டிரேட்மார்க் நகைச்சுவைகளுடன் கொஞ்ச நேரம் நல்லவன் போல் நம்மை ஏமாற்றிவிட்டு அடுத்து இரக்கமே இல்லாமல் நிதானமாய் விபத்து போல தெரியும் கொலை திட்டங்களை தீட்டுவார். அதிலும் கடைசியாக விரக்தியடைந்து கூட்டாளிகள் எல்லோரையும் கொலை செய்ய தயாராகும் போது…? அசல் கிரிமினல் தான்.

நாயகனுக்கு அடுத்தப்படியாக இந்த படத்தை விறுவிறுப்பாக்குவது போலிஸ் இன்ஸ்பெக்டராய் வரும் “கராத்தே மணி” தான். நாயகனை வலிமையாக காட்ட வேண்டுமென்றால் வில்லனின் பலத்துடன் ஒப்பிட்டுத்தான் காட்ட முடியும், நாயகனின் புத்திசாலித்தனத்தை காட்ட அவனது திட்டங்களை எந்த நேரத்திலும் முறியடித்து விட கூடிய அளவு திறமையுள்ள பாத்திரம் கட்டாயம் படத்தில் வேண்டும். இந்த படத்தில் பாக்யராஜிற்கு சரியாய் டஃப் கொடுப்பவராய் ‘கராத்தே மணி’ வருவார். இவரை நீங்கள் ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் ரஜினிகாந்திற்கு அண்ணனாய் பார்ககலாம்.

இந்த படத்தை இந்த கதாபாத்திரத்தை பார்த்ததும் இரண்டு போலிஸ் பாத்திரங்கள் நினைவுக்கு வந்தன.ஒன்று சுஜாதா எழுதிய “ஒரு நடுப்பகல் மரணம்” நாவலில் வரும் இன்ஸ்பெக்டர்.இன்னொன்று “special 26” படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.குற்றவாளியின் செயல்களை சரியாய் யூகித்து பின்தொடரும் போலிஸ்.

நாயகியாய் சத்யகலா. இன்று பல மெகாத்தொடர்களில் “அம்மா”வை சின்னத்திரையை அலங்கரிப்பவர், ஒரு நாயகி கொடுக்க வேண்டியதை சரியாய் படத்திற்கு கொடுத்திருப்பார்.

ஒரு நல்ல திரைக்கதை என்பது, கதையின் போக்கை விட்டு வெளியே எந்த காட்சியையும் படத்தில் திணிக்காததாய் இருக்க வேண்டும். அத்தகைய திரைக்கதையை பாக்யராஜின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என தவிக்க விடும் திரைக்கதைக்கு இந்த படம் ஒரு உதாரணம்.

அதிலும் ஒரு கொலைத்திட்டம்…

எல்லோரும் பார்க்கும்படி ஒரு ரயில்வே ஸ்டேசனில் ரயிலேறி, யாருக்கும் தெரியாமல் அடுத்த ஸ்டேசனில் இறங்கி வீட்டிற்கு அருகே வந்து மனைவியை தூரத்தில் இருந்து குறிபார்தது சுட்டுவிட்டு மறுபடியும் அதே ரயிலை பிடித்து யாருக்கும் சந்தேகம் வராமல் சரியான நேரத்தில் இறங்கி, மனைவி இறந்ததாக வரும் தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து போல் நடிக்க வேண்டும்.

திட்டமிட்ட நேரத்தை ஒரு இடத்தில் தவறவிட்டால் கூட கம்பி எண்ண வேண்டியதுதான். இந்த கொலை திட்டத்தை செயல்படுத்துகையில் பார்க்கும் நமக்கு திக் திக் நிமிடங்கள் தான்.

கிளாசிக் கலெக்சனில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய படம். பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாய் ஒரு முறை பாருங்கள்.

நெற்றிக்கண் – நாஸ்டால்ஜியா 

எல்லா மனிதர்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கும், ஒரு பக்கம் அவர்களின் பலம், இன்னொரு பக்கம் அவர்களின் பலவீனம். வழக்கமாக சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பலத்தை மையப்படுத்தி மட்டுமே கதை எழுதப் பட்டிருக்கும், ஒருவனது பலவீனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் “நெற்றிக்கண்”.

n1

20 வயதில் sales representative வாக தனது வாழ்க்கையை துவங்கி 25 வருடத்தில் கோயமுத்தூரில் முதல் பெரும் பணக்காரராய் வளர்ந்திருக்கும் சக்ரவர்த்தி, நல்லவர், உழைப்பாளி, குடும்பத்தை நேசிப்பவர், ஒரே ஒரு பலவீனம் பெண் பித்தர் என்பது, அதை அவரது மகன் சந்தோஷ் எப்படி மாற்றுகிறார் என்பதுதான் கதை, தந்தை-மகன் இரண்டு வேடத்திலும் ரஜினிகாந்த்.

படத்தின் டைட்டில்கார்ட் போடப்படும் பொழுதே இளையராஜா களத்தில் இறங்கி இருப்பார், படத்தில் வரும் முக்கியமான இசைகளை கலந்து தந்திருப்பார், மிகவும் ஒழுக்கமானவனாக மகன் ரஜினிகாந்த் அறிமுகப் படுத்தப்பட்ட பின், அவரது தங்கையாக லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியினை காட்டுவார்கள், இப்படத்தை முதல்முறை பார்ப்பவர்கள் இவரை கவனிக்க வாய்ப்பு குறைவு, அடையாளமே தெரியாது, அழகாக இருப்பார்கள். தந்தை ரஜினியை அறிமுகம் செய்வதே கலாட்டாவாகத்தான் இருக்கும், பார்க்குமிடமெங்கும் நிர்வாண பெண்களின் புகைப்படங்களுடன் கிளுகிளுப்பாக கண் விழிப்பார்.

கோயிலுக்கு டொனேசன் கொடுக்க முடியாது என முதலில் சொல்லி விட்டு, அந்த கோவிலோட டிரஸ்ட்டி MLA னு சொன்னதும் “ஆண்டவனை கூட பகைச்சுக்கலாம், அரசியல்வாதிங்களை பகைச்சுக்க கூடாது”னு சொல்வார், அப்பவே பாதிக்கப்பட்டுருப்பார் போல, அடுத்து மகளிர் சங்க தலைவி மிஸ்.ஆஷா னதும் வரச்சொல்லுங்கனுட்டு ரகசியமா பாக்கெட்ல இருந்து செண்டர் எடுத்து அடிச்சுகிட்டு நின்னுட்டு, வயதான பெண்ணை பார்த்து விட்டு கடுப்பில் “மிஸ்ஸ்ஸ்.ஆஷா?????”னு கேட்பார் பாருங்க, செமயா இருக்கும்.

அதே மாதிரி சரிதா வ உள்ளே கூப்பிட்டு செண்ட் அடிச்சுகிட்டு வரதுகுள்ள தயாராகற இடம், இதுக்குனே இளையராஜா வயலின்ல ஒரு தீம் போட்டுருப்பார், அதை சமிபத்துல வந்த “தீராத விளையாட்டு பிள்ளை”ல யுவன்சங்கர்ராஜா பயன்படுத்தி இருப்பார். தீராத விளையாட்டு பிள்ளை பாடலையும் கவனிச்சிங்கன்னா தெரியும் SPB முதல்ல ஆரம்பிக்கும் போது ஒரு குரல்ல ஆரம்பித்து முடிக்கும் பொழுது வேறு குரலில் முடித்துருப்பார்.

சரிதாகிட்ட அடி வாங்குனதை சமாளிச்சுட்டு, அவருக்கு வேலை கொடுத்துட்டு வெளியே அனுப்புனதும், கன்னத்தை பிடிச்சுகிட்டு “பொண்ணுங்க கிட்ட அடி வாங்கறது கூட இன்ட்ரஸ்டா தான் இருக்கு”னு சொல்றதுலயே அவர் கேரக்டர் நின்னுடுது.

அடுத்து நம்ம கவுண்டமணி தான் அப்பா ரஜினிக்கு வெப்பன் சப்ளையர், ஒரு பொண்ணை கூட்டி வரும் போது சொல்வார்

“அய்யாவுக்கு ரொம்ப தாராள மனசு, அவருக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ, உன்னை சின்னவீடா வச்சுப்பார்”

“ஏன், இப்போ சின்ன வீடு இல்லையா?”

“சின்ன வீடா, சின்ன ஊரே இருக்கு”

ரஜினிக்கு சம்பந்தி ஆனதுக்கப்புறமா அப்புறம் இவர் பண்ற அலம்பல் இருக்கே, செம கலாட்டாவாகத்தான் இருக்கும். அதிலும் ரஜினிக்கு அவரை மாதிரியே பெண்ணாசை உள்ள சரத்பாபு மாப்பிள்ளையா பெண் பார்க்க வரப்ப கேட்பார் “என்ன முதலாளி, கார் ஓட்டிட்டு வந்த எனக்கே தூக்குல தொங்கலாம் போல இருக்கே, நீங்க எப்படி தாங்கறிங்களோ?”னு.

ரஜினிகாந்தோட ஆளுமை முழுக்க வெளிப்படுவது படத்தோட இரண்டாம்பாதிலதான். மகனுக்கு தனது பலவீனம் குறித்து தெரிந்த பின்னர் தந்தை ரஜினி டென்சனாகும் ஒவ்வொரு இடத்திலும் 100க்கு 100 வாங்கிருப்பார். இந்த படத்தில் தான் முதன்முதலாக உடையின்றி பார்ப்பதற்கென்று ஒரு வகை கண்ணாடி உண்டு என அறிமுகப் படுத்தினார்கள், அதை அதன் பின் பல படங்களில் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருப்பார்கள், உதாரணத்திற்கு “பூவே பூச்சூடவா” படத்தில் கூட நதியா இது போல் ஒரு கண்ணாடி வைத்திருப்பதாக எஸ்.வி.சேகரை ஏமாற்றுவார்.

கற்பழித்த பின்னர் சரிதாவிடம் திமிராக மிரட்டும் பொழுது இவர்தான் மகனாக நல்லவராகவும் நடிக்கிறார் என்பது நமக்கு மறந்திருக்கும், அந்த அளவுக்கு வில்லத்தனம் தெரியும். திரும்பி கோயமுத்தூர் வந்து கம்பெனியில் நடந்திருக்கும் மாற்றங்களை பார்த்து விட்டு கடுப்பாகி வீட்டுக்கு வந்து “மீனாட்சி” என கத்துவார், வேலைக்காரர்கள் அனைவரும் ஓடி வருவார்கள் “உங்களை கூப்பிட்டனாடா? கெட் அவுட்”னு கத்துவார் பாருங்க.

படத்துலயே ரொம்ப முக்கியமான இடம், கல்யாணம் நடந்ததுனு சரிதா சொன்னது பொய்னு தெரிஞ்சதும் லட்சுமிகிட்ட விசாரிக்க ரூம்குள்ள போய் ஸ்டைலா கதவை சாத்துவார் பாருங்க, கிளாஸ் சீன், ஒரு கேள்வி கேட்டுட்டு, பொய் சொன்னதும் பளார்னு அறைஞ்சுட்டு “சிகரெட் லைட்டர் எங்கம்மா இருக்கு?”னு கேஷுவலா கேட்டு வாங்கி சுருட்டு பத்த வச்சுட்டு, மறுபடியும் அதே கேள்விய கேட்பார் பாருங்க. இதுதான் ரஜினியோட கிளாசிக்கான சீன்னு நான் சொல்லுவேன்.

 n2

சரத்பாபுகிட்ட போய் முதல்ல கோபமா “என் பொண்ணை நீ கல்யாணம் பண்ண கூடாது”ன்னு சொல்ல ஆரம்பிச்சு, டக்ன்னு இறங்கி “டேய், நானே உனக்கொரு பொண்ணை செட் பண்ணி கொடுத்துருக்கேனேடா, உனக்கு எப்படிடா என் பொண்ணை கட்டி வைப்பேன்”ன்னு கேட்பார் பாருங்க, செம மாடுலேஷன்.

சமிபத்துல வடிவேல் படத்துல பேசி ஹிட்டான “ஆஹான்” வசனத்தை தலைவர்தான் முதல்முதலா இந்த படத்துல பேசிருப்பார், மகனோட காதலியை கடத்தனதுக்கு அப்புறம் மகன்கிட்ட பேசும்போது

“அப்பா கல்யாணத்துக்குனு நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம், நாங்களே எல்லாத்தையும் பார்த்துக்கறோம்”
“ஆஹான்”
“இப்ப கூட ஜோசியர பார்க்கத்தான் போய்கிட்டு இருக்கோம்”
“ஆஹான்”
“நீங்க பொன்னோட அப்பாவா சும்மா வந்து உட்கார்ந்துட்டு இருந்தா போதும்”
“ஆஹான்”

ஆனா பாருங்க, எனக்கு இந்த படத்தோட கருத்துல உடன்பாடு இல்லை. ஒவ்வொருத்தரோட குண்நலன்களும் அவங்களோட ஜீன்ல இருக்கு, ஒபிசிட்டி இருக்கவங்க பசிக்கலைன்னாலும் எதாவது சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க, அது மாதிரி இதுல அப்பா ரஜினிக்கு இருக்கற பிரச்சனைய அறிவுப்பூர்வமா அணுகி இருக்கலாம், உணர்வுப்பூர்வமா அணுகி அவரை ரொம்ப கட்டுப்பாடா வைக்க முயற்சி பண்னதாலதான் அவர் கற்பழிப்பு வரைக்கும் போனார்னு சொல்வேன், அதே மாதிரி கடைசி வரைக்கும் யார் சொல்லியும் திருந்தாத ரஜினிகாந்த் கால் போனதால திருந்தனது, வேறு வழியில்லை, அதான் திருந்திட்டாருங்கற மாதிரி இருக்கு.

ரஜினிகாந்த் என்றொரு ஆளுமை உருவாகி கொண்டிருந்த காலகட்டம், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து உருவான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நெருங்கி கொண்டிருந்த நேரம், இந்த காலகட்டத்தில் பெண்பித்தனாக நடிக்க ஒப்புக்கொண்டதை பாராட்டியே ஆக வேண்டும், ஏனென்றால் எம்ஜிஆர் திரையில் கடைபிடித்த டிடோடல்லர் இமேஜை ஏற்கனவே சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்து உடைத்திருந்தாலும், பெண் ரசிகைகளை இழந்து விட வாய்ப்பு 50% உள்ள படம் இது, கயிற்று மேல் நடப்பது போல், கொஞ்சம் பிசகினாலும் விரசமாகி விடும். ரஜினிகாந்தை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து, இயக்குனருக்கும் நம்பிக்கை சொல்லி படத்தை தயாரித்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர், படத்திற்கான பின்புலமாய் இருந்த குழுவே அபாரமானது

கதை, வசனம் -விசு,

திரைக்கதை,தயாரிப்பு-பாலசந்தர்,

இயக்கம் – s.p.முத்துராமன்.

மக்கள் என் பக்கம் – நாஸ்டால்ஜியா 

ஒருவன் வளர்ந்த பிறகு என்னவாக போகிறான் என்பதை அவனது சிறுவயது செயல்களை வைத்தே கண்டு பிடிக்கலாம் என்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கதை சொல்கிறேன். கூட்டம் அதிகமான தியேட்டர் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் பிக்பாக்கெட் அடிப்பதற்காக நுழைகிறார்கள்.

ஒரு அரசியல்வாதியிடம் இருந்து பர்சை சிறுவர்களில் ஒருவன் எடுப்பதை, அவனது மனைவி  பார்த்து விட்டு அருகில் வருவதற்குள் இன்னொரு சிறுவனிடம் பர்ஸ் கை மாறுகிறது. “திருடன் திருடன்” என்ற அலறல் கேட்டவுடன் கூட்டம் கூடிவிடுகிறது, போலிஸ் கான்ஸ்டபிளும் வந்து மிரட்டியதும் பர்சை எடுத்தவன் “நான் எடுக்கலை, அவன்தான் திருடுனான்” என் கூட்டாளியை காட்டி கொடுத்து விடுகிறான். கூட்டாளியோ போலிஸ் நெருங்குவதற்குள் பர்சை அருகில் இருந்த காருக்கடியில் மறைத்து விடுகிறான். போலிஸ் மிரட்டி விசாரிக்கையில் “தெரியாது” என்றும், அடிக்க கை ஓங்குகையில் “அடிப்பதற்கு  சட்டத்தில் இடமில்லை” என பதிலுக்கு மிரட்டுகிறான்.

இந்த கதையில், யாருக்கும் தெரியாமல் அடுத்தவனிடம் இருந்து திருட முயற்சித்து, மாட்டி கொண்டதும் அடுத்தவன் மேல் பழியை போடும் சிறுவன் பிற்காலத்தில் அரசியல்வாதி ஆகிறான்.

போலிசிடம் திருட்டு மாட்டியதும் திருட்டு சரக்கான பர்சை பதுக்கியதுடன், கூட்டாளியை காட்டி கொடுக்காமல், தைரியமாக போலிசினை எதிர்கொண்ட சிறுவன் கடத்தல் மன்னனாகிறான். இந்த சிறுவர்களின் கதைதான் “மக்கள் என் பக்கம்”.

அரசியல்வாதியாக ராஜேஸ், தான் முன்னேறுவதற்காக உடன் இருப்பவர்களை பலி கொடுக்க தயங்காத பாத்திரம். பொது வாழ்க்கையில் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக கர்ப்பமாக்கிய காதலியை கை விட்டுவிடுவார்.

கடத்தல் மன்னனாக சத்யராஜ், ஹீரோவாக வில்லத்தனத்தை நக்கலாக வெளிப்படுத்துவதில் இன்று வரை இவர் இடத்தை யாரும் நிரப்பவில்லை. வில்லனில் இருந்து ஹீரோவாக மாறிக் கொண்டிருந்தவருக்கு இந்தப்படம் ஒரு மைல்கல்.

படத்தில் சத்யராஜின் அறிமுக காட்சியே அதகளப்படுத்தும். கோர்ட்டில் ஆஜராக வரப்போகும் சாராயக்கடத்தல் மன்னன் சாம்ராஜ்க்காக எல்லோரும் காத்திருக்க, பந்தாவாய் காரில் இறங்கும் சத்யராஜை படம் எடுத்து விடுவார் பத்திரிக்கைகாரர் ஒருவர், வாயில் சிகரெட்டினை பற்ற வைப்பதற்கு முன்பாக படமெடுத்ததை கவனித்து விட்டு அவரை உற்று பார்த்ததும் எடுத்த ரோலை அவரே கேமராவில் இருந்து உருவிய பின் சிரிப்புடன் சிகரெட்டை பற்ற வைப்பார். இந்த காட்சியிலேயே சத்யராஜின் மீதான சமூகத்தின் பயத்தை புரிந்து கொள்ளலாம்.

அரசியலில் பேரெடுக்க, சத்யராஜ் ஐ ஒழிக்க ராஜேஸ் முழு மூச்சோடு காவல்துறையையும் சட்டத்தையும் முடுக்கி விட, அதிலிருந்து தப்பிக்க சத்யராஜின் வலது, இடது கைகளான ரகுவரன் & நிழல்கள் ரவி செய்யும் தகிடு தத்தங்களால் அம்பிகா அநாவசியமாக சிக்கலில் சிக்குகிறார்.

அம்பிகாவிற்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என் நினைக்கும் சத்யராஜ், கடத்தப்படும் அம்பிகாவின் மகனை மீட்டு தர, பிரதி உபகாரமாக சத்யராஜ்க்கு ஆதரவாக வழக்குகளில் வக்கிலாக ஆஜராக துவங்குகிறார் அம்பிகா. இதற்கிடையில்தான் அம்பிகா பெற்ற பிள்ளையின் தகப்பன் ராஜேஷ் என தெரிய வருகிறது. பின்னர் ஒருவரை ஒருவர் ஒழிக்க முழுதாய் களமிறங்குகிறார்கள். சத்யராஜ்-அம்பிகா-ராஜேஷ், இந்த மூன்று பாத்திரங்களுக்கிடையேயான உணர்வு போராட்டங்களும் தெளிவாய் விளக்கம் பட்டிருக்கும்.

“ஆள் யார்னு தெரிஞ்சா நீ உட்கார்ந்த இடத்துல இருந்தே அடிப்பயே!!!”

“எங்கடி இருக்கான் சுத்தமான அக்மார்க் நெய்யினால் செய்யப்பட்ட உன் மச்சான்?”

இன்னும் மறக்க முடியாத நிறைய வசனங்கள் இடம் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் டிரேட்மார்க் பாடல்தான் “ஆண்டவனை பார்க்கனும், அவனுக்கும் ஊத்தனும்” பாடல்.

கடத்தப்பட்ட சிறுவனை மீட்க சத்யராஜ் & டீம் செய்யும் விறுவிறுப்பான காட்சிகள் மிகவும் சுவாரசியமானவை, அதிலும் அந்த காட்சிகளுக்கான பிண்ணனி இசை(ஜிகிஜா ஜிகிஜா) மறக்க முடியாதது. நாகேஷ், மனோரமா, ஜனகராஜ், டெல்லி கனேஷ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தை சிறப்பித்திருப்பார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ரீமேக் படங்கள் ஹிட்டாவதை குறிப்பிட்ட நடிகர் சத்யராஜ் அவரது படங்களில் திரும்பவும் எடுத்தால் மிகப்பெரும் வெற்றி அடையக்கூடிய படமாக இப்படத்தை குறிப்பிட்டார்.

 

நாஸ்டால்ஜியா

தமிழில் மலரும் நினைவுகள் என்று சொன்னால் சரியாய் இருக்கும் என் நினைக்கிறேன் , நம் அனைவருடைய மூளையும் ஓரு கணிணி போல, வாழ்வில் பார்க்கும் அனைத்தையும் பதிந்து கொண்டே வருவோம். ஏதோ ஒரு தூண்டுதல் மூலம் திடிரென பழைய நினைவினுள் உந்தப்பட்டு அதனுள் மூழ்கி நேரம் போவதே தெரியாமல் சம்பவங்களை அசை போட்டு கொண்டிருப்போம்.

உதாரணத்திற்கு எதெச்சையாக வீட்டை சுத்தம் செய்கையில் கிடைக்கும் பள்ளி நண்பர்களுடனான புகைப்படம், முக்கியமான ரசீதினை தேடுகையில் கிடைக்கும் எழுதி மட்டும் வைக்கப்பட்ட காதல் கடிதம், சிறுவயதில் விளையாடும் போது ஏற்பட்ட தழும்பு என பல நினைவு சின்னங்களில் தூண்டப்படும் நாஸ்டால்ஜியாக்களில் மிக அதிகமாய் நம்மை தூண்டுவது சிறு வயதில் பார்த்த சினிமா படங்களும், கேட்ட சினிமா பாடல்களும் தான்…

அடிக்கடி கேட்பதும் பார்ப்பதுமான படங்களை விட எப்போதாவது காண நேரிடும் அக்கால படங்கள் ஏற்படுத்தும் நினைவலைகளின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இத்தகைய நாஸ்டால்ஜியாக்களின் முடிவில் மனதில் உண்டாகும் அமைதி தியானத்திற்கு சமம். நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆன ஏதேனுமொரு திரைப்படத்தை ஓய்வு நேரத்தில் முழுமையாய் பார்த்து விட்டு சொல்லுங்கள்…

There’s nothing like a old school என்றொரு சொல்லாடல் உண்டு, கல்லூரி வாழ்க்கையை விட பள்ளி வாழ்க்கையைத்தான் அதிக காலம் இழந்து இருந்திருப்போம், அதை மீண்டும் நினைக்கையில் ஏற்படும் உவகை விவரிக்க இயலாதது. அது போலத்தான் பால்யத்தில், விவரம் புரிய ஆரம்பித்த வயதில் பார்த்த திரைப்படங்கள்…

அத்தகைய படங்களை பற்றி முதலில் எழுத துவங்கிய அண்ணன் பால கனேசன்  வழியில் எனது நாஸ்டால்ஜியாக்களின் பதிவுகளை இனி வரும் நாட்களில் உங்களுடன் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி