நாட்டின் மீது அவ்வளவு அக்கறையா?

கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு மனதில் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்திருக்கும். சிலருக்கு பல வருடங்களாக மனதினுள் இருக்கும் அந்த விஷயம் என்னவென்றால் “இங்கே ஏதோ தப்பா இருக்கே, ஏதோ ஒவ்வொன்னா நம்மகிட்ட இருந்து போற மாதிரியே இருக்கே, இந்த அரசாங்கம்ங்கற விஷயம் உருவானதுல இருந்து இப்படித்தானா? நம்மாள எதுவுமே செய்ய முடியாதா?” என்று. அதிர்ஷ்டவசமாக நமக்கு ஒரு போராட்டம் ஜல்லிக்கட்டு வாயிலாக அமைந்தது. நம் ஆற்றாமைகளை எல்லாம் கொண்டு சென்று கொட்டி விட்டோம். மீண்டும் சொல்கிறேன் அதிர்ஷ்டவசமாகத்தான் இப்போராட்டம் நமக்கு அமைந்தது. ஏன் அப்படி சொல்கிறேன் என யோசிப்பவர்கள், அதிகம் வேண்டாம், தாமிரபரணி, பரமக்குடி, இடிந்தக்கரை போராட்டத்தில் அரசின் சுயமுகத்தை விசாரித்து பார்த்துக் கொள்ளலாம். Continue reading “நாட்டின் மீது அவ்வளவு அக்கறையா?”

திருடி

அவளை முதலில் பார்க்கையிலேயே சந்தேகம் வந்தது.
நிச்சயம் இவளும் அந்த கும்பலை சேர்ந்தவளாய்த்தான் இருப்பாள் என…
இது போன்ற பெண்களை பற்றி நண்பர்கள் என்னை எச்சரித்ததுண்டு
நான் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கலாம்.
என் வயது கொடுத்த தைரியம், அங்கேயே நின்றிருந்தேன்.
நான் பார்த்ததை அவள் கவனிக்கவில்லை.
என்னை மட்டுமல்ல, அவள் யாரையும் கவனிக்கவில்லை.
நானும் யாரும் கவனிக்காத வண்ணம் அவளை பார்த்து கொண்டிருந்தேன்.
நேரமும் பேருந்தும் கடந்து கொண்டே இருந்தன…
எதிர்பாராத கணத்தில், செல்போனை நோண்டி கொண்டிருந்தவள் நிமிர்ந்து, கூந்தலை ஒதுக்கியவாறே என்னை பார்த்தாள்…

vlcsnap-2015-03-20-00h04m16s240என் சந்தேகம் ஊர்ஜிதமானது…
அவள் என் இதயத்தை திருடிவிட்டாள்…
அதே கும்பல் தான் –  “தேவதைகள்”
#அவளதிகாரம்

எனக்குனு யார் இருக்கா?

சென்ற வருடத்தின் இறுதியில் பல நண்பர்களுடன் விவாதித்த பொழுது எல்லோரும் கூறியது தொடர்ந்து எழுதி கொண்டிருந்தால் மட்டுமே தமக்கென ஒரு எழுத்துப்பாணி அமையும் என்பது தான். எழுதுவதற்கு தளமா இல்லை???

இருக்கவே இருக்கிறது முகநூலும் ட்விட்டரும் என்ற பொழுது அவையெல்லாம் தினசரி செய்தித்தாள்கள் போல, அன்றைய சூடான செய்திகளை விவாதிக்க மட்டுமே சிறந்தவை, நீ என்றோ ஒரு நாள் எழுதும் நல்ல பதிவை தேடி எடுக்க அவற்றில் மிகவும் சிரமப்பட வெண்டி இருக்கும், அதுவுமில்லாமல் அது வாசகர்களுக்கு சரியான தளம், எழுத்தாளர்களுக்கென தனியாய் ஒரு தளம், அவர்களுக்கென ஒரு வலைப்பக்கம் இருத்தல் நலம் என்றார்கள்…

அந்த நேரத்தில் கிடைத்த நிறைய ஓய்வு நேரத்தில் நிசப்தம் தளத்தை முழுவதுமாக வாசிக்க முடிந்தது,வா மணிகண்டன் அவரது ஆரம்ப கால எழுத்திற்கும் தற்போதைய எழுத்து நடைக்கும் இருக்கும் முதிர்ச்சி அவரது தினசரி எழுத்து பயிற்சியினால் விளைந்தது என புரிந்து கொண்டேன், சரி நாமும் எழுத்து பயிற்சி செய்ய என இந்த வலைத்தளத்தை துவங்கினேன்.

2015 புத்தாண்டு துவக்கத்தில் கூட தினசரி ஒரு பதிவாவது எழுத வேண்டும் என சூளுரைத்து கொண்டேன், அப்படி எழுதி இருந்தால் இந்த நேரத்திற்கு இந்த வருடத்தில் குறைந்தது 180 பதிவுகளாவது எழுதி இருப்பேன், ஏதோ ஒன்று அது சினிமாவோ, நூல் விமர்சனமோ, அரசியலோ, தினசரி நிகழ்வுகளோ எதையாவது ஒன்றை தொடர்ந்து எழுதி இருந்திருக்க வேண்டும்.

ஆனால் திடிரென நடந்த திருமணம், சரி அதற்காக ஒரு 50ஐ குறைத்தாலும் 130,
கல்லூரியில் அதிக வேலைப்பளு, சரி அதற்காக ஒரு 50ஐ குறைத்தாலும் 80 பதிவுகளையாவது எழுதி இருக்க வேண்டும்.

மொத்தம் 22 பதிவுகளதான் கடந்த ஆறு மாதங்களில் எழுதி இருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு பெரிய சோம்பேறி என பார்த்துக் கொள்ளுங்கள், அதிலும் அதிகம் வெறும் திரை விமர்சனங்கள் தான். யோசித்து பார்த்தால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையும் மிக குறைவு தான். வாங்காமல் இல்லை, வாங்கி படிக்காமல் இருக்கிறேன்.

படிப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை எனில் நான் பண்பட வேறு என்ன வழி?

முன்பெல்லாம் அடிக்கடி கமலஹாசனை குறை கூற ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்கள் “சுயசொறிதல்” அதாவது அவரது புகழை அவரே புகழ்ந்து பேசுவார், இப்போது சமீபத்தில் நடிகர் சிவக்குமாரை இந்த கருத்தை வைத்துத்தான் கிழித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அப்படியே எதிர்ப்பதமாய் இருக்கிறது என் மனநிலை, அதாவது என்னை நானே திட்டி கொண்டிருக்கிறேன்…

ஒரு பிரபலமான, 1000க்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட ஒரு இணைய எழுத்தாளர் எழுதவில்லை என்றாலாவது “என்ன ஆச்சு சார்? ஏன் கொஞ்ச நாளா எந்த போஸ்ட்டும் போடலை?”ன்னு கேட்பார்கள். நானெல்லாம் யார் என்பதே யாருக்கும் தெரியாது. என் குடும்பத்தினருக்கு கூட நான் எழுதுவேன் என்பது தெரியாது. இந்த நிலையில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்நேரமும் டீவி சீரியல்களிலும் முகநூலிலுமே புதைந்து கிடக்கும் என்னை யார்தான் திருத்துவது?

வேறு யார் திருத்துவார்கள்?

எனக்குனு யார் இருக்கா?

நானே திருந்திக்கறேன்…

இனிமேல் ஒழுங்காய் எழுத முயற்சிக்கறேன்…

நினைவுகளின் பயணம்

யாரும் சொல்லாமல், உங்களுக்கே அக்கறை வந்து வீட்டை சுத்தம் பண்ணிருக்கிங்களா? பொழுது போகலைன்னு பண்றது கணக்குல வராது. வீட்டை பெருக்கறது, துடைக்கறது பத்தி சொல்லலை, பழைய பொருட்கள்னு ஒரு அட்டை பொட்டில போட்டு வச்சுருக்க விசயங்களை ஒவ்வொன்றாய் கிளறி பார்த்ததுண்டா?

நாம் மறந்த பல பொருட்கள் நம்மகிட்ட இருக்கும், உதாரணமா நம்மகிட்ட இருக்க பழைய புத்தக கட்ட பிரிச்சு ஒவ்வொண்ணா எடுத்து பார்க்கும் போது எவ்வளவு விஷயங்கள் நினைவுக்கு வரும்!!!

போகிக்காக வீட்டை சுத்தம் பண்ணப்ப என்னோட பழைய புத்தக கட்டு கிடைச்சது, அதில் இருந்த கல்லூரி புத்தகங்கள் பெரிதாய் என்னை ஈர்க்கலை, ஒருவேளை இப்பவும் பாடம் நடத்த அதே புத்தகங்களை உபயோகிக்கறதால ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம்,எதிர்பாராத, மறந்த 12வது தமிழ் இரண்டாம் தாள் துணைப்பாட நூல் கிடைச்சது, பிரபலமான எழுத்தாளர்களோட சிறுகதை தொகுப்புன்னு சொல்லலாம்..

இதுல என்ன விசேசம்னா அது எங்க அண்ணனோட புத்தகம், 9வது படிக்கறப்பவே அதுல இருக்க கதைகள் படிச்சு, பிடிச்சு போய் எடுத்து பத்திரமா வச்சுகிட்டேன். இன்னைக்கு ரொம்ப நாள் கழிச்சு எடுத்து எல்லா கதையையும் ஒருமுறை படிச்சேன்.

அப்போ படிக்கும் போது வெறும் கதைகளை மட்டும்தான் படிப்பேன், ஆனா இப்ப படிக்கும் போது தான் எழுத்தாளர்களோட பெயரையும் சேர்த்து படிச்சேன், எல்லோருமே இப்போ எனக்கு பரிட்சியமா எழுத்தாளர்கள்

புத்தகத்தின் பொருளடக்கம்
1. ராஜா வந்திருக்கிறார்-கு.அழகிரிசாமி
2. முள்முடி-தி.ஜானகிராமன்
3. மைதானத்து மரங்கள்-கந்தர்வன்
4. ஐந்தில் நான்கு-நாஞ்சில் நாடன்
5. ஆமைச் சமூகமும் ஊமை முயல்களும்-இந்துமதி
6. எண்ணும் எழுத்தும்-க.ரத்னம்
7. மழை-அசோகமித்திரன்
8. மாயிருளு-தனுஷ்கோடி ராமசாமி
9. பாட்டையா-மேலாண்மை பொன்னுச்சாமி
10. சுமைகள்-அரசு மணிமேகலை
11. பாயம்மா-பிரபஞ்சன்
12. இருளில் இரு பறவைகள்-ஹரணி

இந்த எழுத்தாளர்களோட சிறுகதைகளை 13 வயசுலயே பரிட்சைக்காக இல்லாம, பிடிச்சு படிச்சுருக்கேன்னு தெரிய வரப்ப எனக்கு ரொம்ப கர்வமா இருக்கு…

ஒவ்வொரு கதையை பத்தியும் தனியா ஒரு பதிவு எழுதலாம், காதலிக்கும் போது கேட்ட பாடல்களை பல வருசம் கழிச்சு கேட்கும் போது மனசு தானா பின்னோக்கி பயனிச்சு பழைய உணர்வுகளை ஞாபக படுத்தும், அது போலத்தான் புத்தகங்களும், மனம் பயணிக்க உதவும் ஒரு வகை வாகனம்.

அந்த பயணம் ஒவ்வொரு முறையும் நிகழாது, பல காலம் கழித்து முதல் முறை படிக்கையில்தான் சாத்தியம், இரண்டாம் முறை படிக்கையில் வேறு வகை உணர்வுக்கு உந்தபடுவோம், அப்படி ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உணர்வுகள் வரவில்லையெனில் அது குறையுள்ள புத்தகம், சரி இதை பற்றி வேறு பதிவில் விவரமாய் பார்ப்போம்.

நான் மீண்டும் 13 வயதிற்கு பயணிக்கிறேன்…