அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ

மழை ஓரளவிற்கு குறைந்து விட்டது. முன்பே கிளம்பி இருக்க வேண்டும். இப்போது தூறல் தான். அதுவும் சன்னமாகத்தான். வண்டி இப்போதுதான் இராண்டாவது கொண்டை ஊசி வளைவைத் தாண்டுகிறது. ஏறி முடிப்பதற்குள் முழுவதுமாக மழை நின்றிருக்கும். ஏற்காட்டில் பாதி மழையில் ஒரு மூங்கில் காடு இருக்கிறது. எப்போது மழை பெய்தாலும் நான் அங்கு இருக்க வேண்டும் என நினைப்பேன். அடிவாரத்திற்கு அருகில் தான் வீடு என்பதால் மழை வந்தாலே கிளம்பி விடுவேன்.

இப்போதெல்லாம் நிறைய மயில்களைப் பார்க்க முடிகிறது. இந்தப் பக்கம் மிகவும் குறைச்சலாகத்தான் வரும். பருவ நிலை மாறுதல் காரணமாக இப்படியெல்லாம் நடக்கும் என்று சூர்யாதான் சொல்வான். அவன் இருந்திருந்தால் அவனையும் கூட்டி வந்திருப்பேன். அவனுக்கு இப்படி மழையில் வெளியில் திரிவது பிடிக்காது என்றாலும் எனக்காக வருவான். இப்போதெல்லாம் அதிகம் தனியாகத்தான் சுற்ற வேண்டி இருக்கிறது. ஆளுக்கொரு பக்கமாக போய்விட்டார்கள்.

வானம் முழுக்க மேகம் தான் நிரம்பி இருந்தது. வெளிச்சம் எதனுள் புகுந்து வந்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இந்த கொஞ்ச வெளிச்சமும் இல்லை என்றால் இரவு போல் இருக்கும். காலை 10 மணி வாக்கில் இந்த மாதிரி கிளைமேட்டெல்லாம் டிசம்பர் மாதத்தில் தான் கிடைக்கும். அதுவும் மலை ஏறினால்தான் முழுதாய் உணர முடியும்.

என் இடம் வந்து விட்டது. மூங்கில் தோட்டம். வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டி விட்டு, இறங்கி நடந்தேன். ஈரமான தரையில் நடப்பது மொத்த மன நிலையையும் மாற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இந்த மழை நேர மூங்கில் தோட்டம் தான் சொர்க்கம். உண்மையில் என்னைப் போல யாரும் பைத்தியம் பிடித்து இப்படி இந்த நேரத்தில் வராமல் இருப்பதும் நல்லதுதான். இல்லை என்றால் இந்த ஏகாந்தம் கிட்டாது.

இதற்கு முன்பு கல்லூரிக் காலத்தில் அடிக்கடி வருவேன் அவளுடன். அதைப் பற்றி பேச எதுவுமில்லை. மீண்டும் மழை வந்தால் நன்றாக இருக்கும். கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே சாலை ஓரமாக இருந்த தடுப்பு சுவரில் அமர்ந்தேன். அங்கங்கு மழை நீர் இறங்கி சிறு சிறு ஓடைப் போல் கீழ் நோக்கி சாலையில் இறங்கிக் கொண்டிருந்தது.அருகில் இருந்த ஒரு மரத்தில் இலையைப் பறித்து அதில் போட வேண்டும் போல இருந்தது.

எட்டிப் பறித்தேன். மரத்தின் இலைகளில் சேகரமாகி இருந்த தண்ணீர் மழையாக என் மேல் கொட்டியது. இலையை பறிப்பதை நிறுத்தி விட்டு மரத்தை பிடித்து வேகமாக உலுக்கி நனைந்தேன். மொத்தமாக தண்ணீர் கொட்டவும் என்னை மறந்து “ஊவ்வ்வ்” என்றுக் கத்தினேன். அப்போது என்னைக் கடந்த பேருந்தினுள் இருந்து அவள் என்னைப் பார்த்தாள்.

விரிந்த கண்களுடன் ஏதோ சொல்ல வருவதைப் போல் இதழ்கள் திறந்து என்னைப் பார்த்தவளை என்ன மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளிடமும் எந்த அசைவும் இல்லை. அவள் காது ஜிமிக்கி மட்டும் பேருந்தின் அசைவிற்கு ஏற்றார் போல் ஆடிக் கொண்டிருந்தது. யார் இவள்?

************************************

தேவதையோ! தெரிந்தெடுக்கப்பட்ட மயிலோ! அல்லது காதணி கொண்ட மனிதப்பெண்தானோ! என் சிந்தை மயங்குகிறதே!

அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

************************************

அவள் முழுவதும் என் கண்ணில் இருந்து மறைந்த பிறகுதான் சுய நினைவிற்கு வந்தேன். அது பள்ளிப் பேருந்து. இந்த கான்வென்ட் பள்ளி எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். பள்ளிப் பேருந்து என்றால் மாணவர்களும் இருந்திருப்பார்களே? நான் எங்கே கவனித்தேன். ப்பா, என்ன பொண்ணுடா…!

நேரே அந்தப் பள்ளிக்குச் சென்றேன். உள்ளேச் செல்வதற்கு முன்பாகவே என்னவென்று யோசித்து விட்டேன். இந்த மாதிரி நேரத்தில் எப்படி பேச வேண்டும் அணுக வேண்டும் என்று சூர்யா சொல்லிக் கொடுத்திருக்கிறான்.

பள்ளியில் அடுத்த ஆண்டு அக்கா மகளுக்கு அட்மிஷன் போட விரும்புவதாக சொல்லி அலுவலகத்தில் ஃபீஸ் விவரங்களை விசாரித்தேன். அவர்கள் கொடுத்த பிரவுச்சரை வாங்கிக் கொண்டு பள்ளியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றேன். ஒருவர் கூட்டிச் சென்றார். இன்ஸ்பெக்சனுக்கு வருபவர்கள் கூட என்னைப் போல் சுற்ற மாட்டார்கள்.

ஒருவழியாக அவளைக் கண்டு பிடித்தேன். ஒரு வகுப்பிற்குள் கணக்கு நடத்திக் கொண்டிருந்தாள். நின்று பார்க்கவும் திரும்பி பார்த்தாள். அவள் கண் விரிந்தது. புன்னகைத்தேன். அப்படியேதான் நின்றிருந்தாள். அவள் இப்படி நீண்ட நேரம் உறைந்து நின்றால் சரியாக இருக்காது என்று நானே நகர்ந்து வந்தேன்.

பள்ளியை விட்டுக் கிளம்புகையில் பைக்கில் கேட்டைத் தாண்டியதும் சூர்யாவிற்கு போனடித்தேன்.

“மச்சி, ஹரிடா, ஒரு பொண்ணைப் பார்த்தண்டா”

-சாரல் காலம்

ஊர் என்ன வேணா பேசட்டும்…! – குறள்கதை

“எல்லாம் நீ இடம் கொடுத்துதான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு, பார்த்தியா?”

“அப்படிலாம் இல்லை”

“என்ன இல்லை? முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்?”

“அவன் எங்கே சுத்துனான்? ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே?”

“ஃப்ரெண்ட்தான், ஆனா தினம் இங்கே உன்னை விட்டு தனியா எங்கேயாவது போயிருக்கானா? போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா?”

“இப்ப மட்டும் என்ன? போனை எடுக்காமயா இருக்கான்?”

“எடுக்குறான், எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வச்சுடறானே, ஏன்டி இப்படி இருக்க? அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்…! – குறள்கதை”

எப்படி என் மனதை அறிந்திருப்பான்? – குறள்கதை

“அவசரம் இல்லை, யோசிச்சு பொறுமையா சொல்லு, நீ என்ன சொன்னாலும் சரி, திரும்ப வற்புறுத்த மாட்டேன்”

நான் எந்த பதிலும் சொவதற்கு முன்பாகவே அனிதா என்னை இழுத்து வந்து விட்டாள். அவள் இல்லை என்றால் சரி என்று சொல்லி இருப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் என் முகம் காட்டி கொடுத்து விடும். என் முகவெட்டு அப்படி. கோபப்பட்டாளோ, சோகத்தை உள்ளே வைக்க முயற்சிக்கையிலோ உடனடியாக காட்டி கொடுத்து விடும். இது போன்ற உணர்ச்சிகளை மட்டும் அல்ல, ஒருவர் மீதான உணர்வுகளையும் என் முகம் காட்ட துவங்கி விட்டது போல, இல்லையென்றால் எந்த தைரியத்தில் என்னிடம் வந்து அப்படி சொல்லிருப்பான். Continue reading “எப்படி என் மனதை அறிந்திருப்பான்? – குறள்கதை”

நீயிருக்கும் நெஞ்சமிது – குறள் கதை

முந்தைய பாகம்:-

“எனக்கு விருப்பமே இல்லை, ஏன் நான் இங்கே இருந்தா என்ன?”

“எனக்கு நீ இருக்கறது பிரச்சனைன்னா உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விடறேன், எல்லோரும் பேசறதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த?”

“ம் போடா, யாருமே என் பேச்சை கேட்க மாட்டேங்கறிங்க?”

“லூசு, நீதான் இங்க இருக்கறதலயே சின்னவ, நாங்க உன் பேச்சை கேட்கனுமா?”

“…..”

முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட மதுவினை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று மகேசிற்கு தெரியவில்லை. சாதாரணாமாகவே அவளை காயப்படுத்தும்படி எதையும் பேசவோ, செய்ய மாட்டான். எவ்வளவு ஏங்கி பிரிந்து தவித்த பின் மிகவும் சுலபமாக நடந்த திருமணத்தின் மூலம் கிடைத்தவள். மனம் விரும்பிய காதலியே மனைவியை வரும் பாக்கியம் இங்கு அனைவருக்குமா கிடைக்கிறது? அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள்? அத்தனை அதிர்ஷ்டத்தையும் அழைத்துக் கொண்டல்லவா வந்தாள். Continue reading “நீயிருக்கும் நெஞ்சமிது – குறள் கதை”

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் – குறள்கதை

முந்தைய பாகம்:-

எத்தனை வயதானாலும் காதல் கதைகளை கேட்பவர்கள் அதன் முடிவு சுபமாக முடியவே வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது தங்கள் வீட்டு பிள்ளைகளின் காதலாக இல்லாத வரை அப்படித்தான். அரிதாக சில பெற்றோர் தம் பிள்ளைகளின் காதலும் இணைய வேண்டும் என விரும்புவார்கள். மகேசின் காதல் முதலில் அவன் வீட்டினரால் வெறுக்கப்பட்டாலும், அக்காதலால் அவனுள் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த எண்ணத்தை மாற்றியது. தொழில் துவங்க போகிறேன் என சொல்லிக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் இன்று பொறுப்பாக ஒரு வேலைக்கு செல்கிறான் என்றால் அந்த காதலால் தானே, இப்படி நல்ல வழி காட்டும் காதலை எதற்கு வெறுக்க வேண்டும்? இத்தனைக்கும் மது ஒன்றும் அவர்களுக்கு புதியவள் கிடையாதே. ஏற்கனவே அறிமுகமானவள்தான் என்பதுடன் மகேஷ் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடித்தவள் தான். Continue reading “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் – குறள்கதை”

காதலுக்காக செய்யாமல்…? – குறள்கதை

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, அதுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும்”

தன் கன்னத்தை பிடித்து சொல்லியவளை மகேஷ் உற்றுப் பார்த்தான். எங்கே ஆற்றாமையில் கண்கள் கலங்கி விடுமோ என பார்வையை வேறு பக்கம் திருப்பினான். இந்த முகத்தை பார்க்காமல் எப்படி வாழ்வது? கொஞ்ச நாட்கள்தான் என சொல்கிறாள். எத்தனை நாட்கள் என யாருக்கு தெரியும்? எப்படியும் இவளுக்கு இன்னும் 6 மாதத்தில் படிப்பு முடிந்து விடும். அதற்குள் நிச்சயம் ஒருவேளை அமைந்து விடும். ஆனால் அவள் வீட்டை சம்மதிக்க வைக்குமளவிற்கான வேலையாய் அது இருக்குமா என்பதுதான் இங்கு கேள்வியே…! Continue reading “காதலுக்காக செய்யாமல்…? – குறள்கதை”

அழகிய திமிரே…! – குறள்கதை

“உனக்கென்னடா பிரச்சனை?”

“ஒன்னுமில்லையே”

“அப்புறம் ஏன்டா கொஞ்ச நாளா ஒழுங்கா பேசறதில்லை. ஏதோ விலகி விலகி போற? எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொன்னாதானே தெரியும்?”

“அப்படிலாம் ஏதுமில்லை”

“இல்லை ஏதோ இருக்கு. பிரேம் தானே பிரச்சனை? சொல்லுடா, நான் அவன் கூட பழகறது உனக்கு பிடிக்கலையா?”

“சேச்சே, ஏன் அப்படி கேட்கற?”

“இல்லை அருண், நீ வேணும்னேதான் விலகி போற, பிரேம்தான் பிரச்சனைன்னா சொல்லு” Continue reading “அழகிய திமிரே…! – குறள்கதை”

கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் – குறள்கதை

“சும்மா சும்மா முத்தம் கொடுக்காதடா”

“ஏன்டி, பிடிக்கலையா?”

“பிடிக்காமலா இப்படி வந்து பேசிட்டுருக்கேன்? நீ கடிக்கற மாடு “

“அப்புறம்?”

“நீ இதுக்கா என்னை வரச்சொன்ன? ஏதோ பேசனும் வான்னு சொல்லி கூப்ட்டு என்ன வேலை பார்க்கற நீ?”

“ம், ஒரு காரணமாதான் வர சொன்னேன், அதுக்குன்னு என் ரூம்க்கு வரவளை ஒன்னும் பன்னாம இருக்க முடியுமா?”

“ஏன் நான் இதுக்கு முன்ன வந்தது இல்லையா?”

“அப்ப வெறும் ஃப்ரெண்டா வந்த, இப்ப என் லவ்வர். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம். கல்யாணத்துக்கு முன்ன என் ரூம்ல உன்ன ஒன்னுமே செஞ்சதில்லைன்னு சொன்னா வரலாறு என்னை துப்பாதா?”

“டேய் காஞ்சமாடு, வழியாத, என்ன விசயம்ன்னு சொல்லு?”

“சும்மாதான். லீவ்தானே, என் லைஃப் ஹிஸ்டரியை உன் கூட ஷேர் பண்ணிக்கலாம்னுதான். இதோ என்னோட சின்னவயசு ஆல்பம்ல இருந்து எல்லாத்தையும் வரிசையா எடுத்து வச்சுருக்கேன். ஒவ்வொன்னா காட்டலாம்னுதான்”

“ஏன்டா, எத்தனை நாள் இங்கே வந்துருக்கேன்? ஏன்டா முன்னமே காட்டலை?”

“சில விசயங்கள் வரப்போறவளுக்காகன்னு சேர்த்து வச்சுருப்போம் இல்லையா? இது அது மாதிரி” Continue reading “கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் – குறள்கதை”

தோழியா? என் காதலியா? நீ யாரடி கண்ணே? – குறள்கதை

“நான் யார் கூட பேசுனா உனக்கென்னடா?”

“எனக்கென்ன? ஒன்னுமில்லையே”

“அப்புறம் ஏன்டா போய் தினேஷ் கிட்ட போய் என் கூட பேசக்கூடாதுன்னு சொன்னியாம்”

“நான் அப்படிலாம் சொல்லலையே”

“வேறென்ன சொன்ன?”

“ஏன் அவனே சொல்லிருப்பானே?”

“நீ சொல்லு, என்ன சொன்ன?”

“கவிதா கூட க்ளோசா பழகறன்னு கேள்விப்பட்டேன், நல்ல பொண்ணு, ஒழுங்கா லிமிட்டா இருந்துக்கோன்னு சொன்னேன்”

“வேற எதுவும் சொல்லலை?” Continue reading “தோழியா? என் காதலியா? நீ யாரடி கண்ணே? – குறள்கதை”

ஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை

“முத்தம் கொடுப்பது எப்படி?” என்று சொல்லித்தர ஏதேனும் புத்தகம் உள்ளதா? எனக்கு இப்போது அவசியம் தேவை. என்ன விலை சொன்னாலும் வாங்க தயாராய் இருக்கிறேன். உடனடியாக சொல்லித்தர எனக்கு யாருமில்லை. முன் அனுபவமும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இன்று வாய்ப்பு அமைந்துள்ளது. சொதப்பிவிடுவோமோ என்று பயமும் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் தர்மசங்கடம் வருமென்று தெரிந்திருந்தால் முன் அனுபவமுள்ள நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்திருப்பேன்.

நான் காதலிக்கும் விஷயமே யாருக்கும் தெரியாது. என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. ஒவ்வொரு நண்பர்கள் கூட்டத்திலும் என்னைப்போல் ஒருவனை நீங்கள் பார்க்கலாம். மிகவும் நல்லவனாக, அதுக்கு சரிபட்டு வரமாட்டான் என ஒதுக்கி வைப்பவனாக இருந்து, திடிரென மற்றவர்கள் பொறாமை படும்படியான பெண்ணை கவர்ந்து, பலரின் வயித்தெரிச்சலுக்கு ஆளாகுபவர்களில் நானும் ஒருவன். Continue reading “ஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை”