களவெண்ணா அன்புடையார்

சமீபத்துல “ஜீவி”ன்னு ஒரு படம் வந்தது. “எட்டுத் தோட்டாக்கள்” பட தயாரிப்பாளர் & நாயகனோடது , படம் அருமையா இருந்தது, முக்கோண விதியை பத்தி படம் எடுத்தது தமிழ்ல இதான் முதல் முறைன்னு நினைக்கறேன். ஒரே மாதிரியான சம்பவங்கள் அடுத்தடுத்த சந்ததியை ஆக்கிரமிக்கும். அது தொடராம இருக்கணும்னா ஒரு மையப்புள்ளியில் முழுமை பெறணும்  இதான் முக்கோண விதி.

எனக்கு தெரிஞ்சு முக்கோண விதிக்கு சரியான உதாரணம் டெல்லி சுல்தான்கள் வரலாறுல இருக்கு. இதை முக்கோணம்னும் சொல்லலாம், சங்கிலித் தொடர்னும் சொல்லலாம்.

முதல் முதல்ல முகமது கஜினி தான் வென்ற பகுதிகளை நிர்வகிக்க தன்னோட அடிமைகள்ல ஒருத்தரான “குத்புதின் ஐபக்”அப்படிங்கறவரை சுல்தானா நியமிச்சுட்டு போறார், அப்போலருந்து டெல்லில அடிமை வம்சத்தோட ஆட்சி நடக்குது, அதுல கடைசியா வர மன்னர் கெய்கூபாத், அவருக்கு எதிரா நடக்கப்படற கலவரத்துல தனக்கு கீழ வேலை பார்க்கற சிப்பாயிடம் உதை வாங்கியே உயிரை விடுகிறார், அடுத்து ஆட்சிக்கு கலவரத்துக்கு காரணமான கில்ஜி வம்சம் வருகிறது. முதல் சுல்தான் ஜலாலுதின் கில்ஜி. முக்கோணத்தின் முதல் பக்கம்.

தொடர்ச்சியான போர் வெற்றிகளால் சுல்தான் ஜாலாலுதினின் மனம் கவர்ந்து, படைத் தளபதியாகி, சுல்தானின் மகளையும் மணந்து, அயோத்தியை பரிசாகப் பெற்று, பெரும்படை திரட்டி, சுல்தானிடம் அறிவிக்காமலே போரெடுத்து சென்று பல நகரங்களை வென்று தன் பலத்தை அதிகரித்து, சமயம் பார்த்து தன்னை நம்பிய மாமனார்/சுல்தான் ஜலாலுதின் கில்ஜியை முதுகில் குத்திக் கொல்கிறார் அடுத்த சுல்தானாக பதவியேற்ற அலாவுதின் கில்ஜி. முக்கோணத்தின் இரண்டாம் பக்கம்.

தன்னை விலைக்கு வாங்கி வந்த சுல்தான் அலாவுதின் கில்ஜிக்கு தேக சுகத்தை தந்தது மட்டுமில்லாமல், தனது போர் திறமையை காட்டுவதற்காக மாலிக் கபூர்(எஜமானனின் அடிமை) என்ற பட்டத்துடன் படைத் தளபதியாகி, செல்லும் இடமெல்லாம் வெற்றி பெற்றதுடன் பெண்ணும் பொண்ணும் பொருளுமாய் சூரையாடி வந்து நற்பெயர் பெறுகிறான் அந்த அடிமை, மேக நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையிலே படுத்து கிடந்த சுல்தான் அலாவுதின் கில்ஜிக்கு குழந்தைக்கு மருந்து கொடுப்பது போல் “இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்” என்று நஞ்சை கொடுத்து கொல்கிறான், பெயருக்கு ஒரு குழந்தையை அரியனையில் அமர்த்திவிட்டு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிறான். முக்கோணத்தின் மூன்றாவது பக்கம்.

இன்னும் முடிந்து விடவில்லை, அதிகாரத்தை வைத்து அரச குடும்பத்தை சார்ந்த அனைவரையும் கொல்ல பார்த்த அடிமை மாலிக் கபூரை, 35 நாட்களுக்கு பிறகு புத்தி வந்த அரச வீரர்கள் வெட்டிக் கொள்கிறார்கள். ஆட்சி, அதிகாரம் மீண்டும் கில்ஜி வம்சத்திற்கு செல்கிறது. மீண்டும் முக்கோணத்தின் முதல் பக்கம். சுல்தானாக முபாரக் கில்ஜி. மீண்டும் கில்ஜி வம்சத்து சுல்தானை கொல்வது அவரிடம் அடிமையாக இருக்கும் குஸ்ரூகான். எப்படி முக்கோண விதி?

இந்த தொடர்பியல் முக்கோண வரலாற்றில் கொல்லப்பட்ட சுல்தான்கள் அனைவரும் செய்த பொதுவான தவறு ஒன்று இருக்கிறது. இவர்கள் யாரும் தாங்கள் வகிக்கும் சுல்தான் பதவியை வெறும் அதிகாரமாக மட்டும் தான் பார்த்தார்கள், அதாவது அதை போர் மூலமாகத்தான் இழக்க நேரிடும் என்று நம்பினார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு சொத்து. அதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருடக்கூடும்.

இந்த டெல்லி சுல்தான்கள் கதையில் இன்னொரு சுவாரசியம் கவனித்தீர்களா? ஒவ்வொருவருமே நம்பிக்கை துரோகம் செய்துதான் திருடித்தான் அந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள், ஆனால் தனக்கு கீழே இருப்பவன் திருட மாட்டான், துரோகம் செய்ய மாட்டான் என நம்பி இருக்கிறார்கள்.

களவு என்றால் இரவோடு இரவாக வந்து, கன்னம் வைத்து உடும்பில் கயிறு போட்டு, ஏறி வந்து, பொருளை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு செல்வது மட்டுமல்ல, நமக்கு சொந்தமானது எதுவாயினும் அதை நம் விருப்பமின்றி எடுத்துக் கொள்வது அனைத்துமே களவுதான். அதை செய்ய வெளியில் இருந்துதான் ஆள் வர வேண்டும் என்பதில்லை. நம்முடனே இருக்கும் நம்பிக்கையானவர்கள்தான் அதிகம் அதைத் திருடுவார்கள்.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நம்முடன் இருப்பதே அண்ணன் எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும்? என்பதை எதிர்பார்த்துத்தான், சாகவில்லை என்றால் சாகடிப்பார்கள். எல்லாரும் அப்படித்தானா என்றால் இல்லை, பிற உயிர்களை மதிக்கும் அருள் உள்ளம் கொண்டவர்கள், பதவி, அதிகாரம், சொத்து சுகங்களை விட அன்பை பெரிதாக எண்ணுபவர்கள் அந்தக் காரியத்தில் ஈடுபடுவதில்லை.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0285

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

உரை:

அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

களவின்கண் கன்றிய காதலின் விளைவு

1981, கர்நாடகால, நஞ்சங்கோடுன்னு ஒரு தாலுகா, அது கேரளா பார்டங்கறதால அங்கே கன்னடர்களோட மலையாளிகளும் சமமா வாழ்ந்துட்டுருந்தாங்க. அப்போதைய காலக்கட்டத்துல அந்த வட்டாரம் முழுக்க சலிம் பாஷாங்கறவர்தான் பெரிய தலைக்கட்டா இருந்தார். அவர் ஒன்னும் அந்த ஊரை சேர்ந்த பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. 3 வருசத்துக்கு முன்ன பஞ்சம் பிழைக்கறதுக்காக பொண்டாட்டி பையனோட அந்த ஊருக்கு வந்தவர். பாயாசக்கடைதான் அந்த ஊர்ல அவர் செஞ்ச முதல் தொழில்

ஆனா அந்த 3 வருசத்துல அவரோட சொத்து மதிப்பு அங்க இருந்த பரம்பரை பணக்காரங்களையும் தாண்டி இருந்தது. 117 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து புகையிலை விவசாயம், அது இல்லாம மற்றவங்க நிலங்கள்ல இருந்து கிடைக்கற புகையிலையும் வியாபாரம் பண்ணி தரது, அது இல்லாம ஒரு பெட்ரோல் பங்க், ரெண்டு ஹோட்டம், ரெண்டு மெஸ், ஒரு சூப்பர் மார்க்கெட். எல்லாத்தையும் சேர்த்தா மதிப்பு பல இலட்சங்கள் தேறும்.

3 வருசத்துக்கு முன்ன 10000 போட்டு ஆரம்பிச்ச தொழில் இப்ப மாசமான இலட்சத்துல இலாபம் கொடுத்துட்டு இருக்கு. அது மட்டுமில்லாம அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் கண் கண்ட தெய்வம், வேலைக்காரங்களை கண்ணியமா நடத்தறது, கேக்கறப்ப முன்பணம் கொடுக்கறது, மத்த இடத்தை விட அதிக சம்பளம்னு எல்லாரும் மதிக்கற மாதிரியான வாழ்க்கை.

அப்ப அந்த வருசம் இடைத்தேர்தல் வருது, அங்க முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி குண்டுராவ், ஆளுங்கட்சி மேல மக்கள் அதிருப்தில இருக்காங்கன்னு எப்படியாவது இந்த தேர்தல்ல ஜெயிச்சுடனும்னு ஜனதா கட்சி ஹெக்டே வெற்றி வேட்பாளரை தேட எல்லாரும் சலிம்பாஷாவத்தான் கை காட்டறாங்க. பேசி ஒப்புதல் வாங்கி, அந்த ஊரை சார்ந்தவன்னு சான்றிதழ் தயாரிச்சு நாமினேசன்ல கையெழுத்து போட்டாச்சு.

காங்கிரஸ் முதலமைச்சர் குண்டுராவ் பார்க்க விரும்பறதா சொல்லி சலீம்பாஷாவ கூட்டி போறாங்க, நம்ம கட்சிலயே நின்னு ஜெயிச்சு வாங்கன்னு முதல்வர் கேட்க, இல்லைங்க வாக்கு கொடுத்துட்டேன், நாமினேசன்ல கையெழுத்தும் போட்டாச்சுங்கறார் சலீம்.

சரி, நாளைக்கு சபைல ஒரு ஓட்டு தேவைப்படறப்ப ஆதரவு கொடுப்பிங்களான்னு கேக்கறார் முதல்வர். கண்டிப்பா தரேன்னு சலீம் சொல்ல, எங்க கட்சிக்காரங்களுக்கு வேண்டியதை பண்ணி தருவிங்களான்னு கேக்க அதுக்கும் ஒத்துக்கறார், சந்தேகப்பட்ட முதல்வர் அந்த தொகுதியை சேர்ந்த தன்னோட கட்சிக்காரனை பார்க்க

“சலீம்பாஷா வாக்கு கொடுத்தா தாராளமா நம்பலாம்”னு சொல்றார். எதிர்கட்சிகாரனே பில்டப் பன்ற அளவுக்கான கேரக்டர். அப்படியே முதலமைச்சரோட ராணுவ ஹெலிகாப்டர்ல பறந்து பேசிட்டு வந்ததும் ஜனதா கட்சிக்காரங்களுக்கு பயம் வந்துருது. எங்கே முதலமைச்சர் பேச்சைக் கேட்டு நாமினேஷன் பன்னாம போயிருவாரோன்னு, அதுக்காக கட்சி தலைவர் ஹெக்டேவ பார்க்க கூட்டி போறாங்க. ஹெக்டேவும் கட்டுக் கட்டா பணம் எடுத்து கொடுத்து எப்படியாவது ஜெயிச்சுருங்கன்னு சொல்லி அனுப்பறார்.

மொத்தம் 27000 வாக்காளர்கள் இருக்க சின்ன தொகுதி. எப்படியும் சலீம் பாஷாதான் ஜெயிக்கப் போறார்னு இருக்கறப்ப நாமினேஷனுக்கு முன்னாடி நாள் அவருக்கு பின்னாடி இருந்து “மணியன்பிள்ளை”ண்னு ஒரு குரல். பழைய பேரை மறக்காத முன்னாள் திருடன் மணியன் பிள்ளையும் இந்நாள் சலீம்பாஷாவும் திரும்பி பார்க்க, போலிஸ் தோள் மேல கைப் போடுது.

“என் கைல ரொக்கமா 3 இலட்சம் இருக்கு, கொடுத்துடறேன், 10 நாள் கழிச்சு வந்திங்கன்னா மிச்சம் 7 இலட்சம் தரேன், என்னை விட்டுடுங்க, உங்களுக்கு என்ன வேணா பண்ணித் தரேன்”ண்னு மணியன் கெஞ்சுனாலும், இப்ப விட்டா மணியன் நிரந்தரமா சலீம்பாஷாவா மாறிடுவான்னு போலிஸ் கைது பண்ணுது.

கைது பண்றப்ப மணியனோட சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேல, வியாபாரத்துல மட்டும் 98 இலட்சம் புழங்கிட்டு இருக்கு. அத்தனையும் போலிஸ் முடக்கிருச்சு. நல்லா கவனிங்க, அந்த வருசம் அரசாங்கத்துல வேலை பார்க்கற ஒரு குமாஸ்தாவோட சம்பளம் 500 ரூபாய்தான். கோடிஸ்வரன் ஆனதுமில்லாம விட்டுருந்தா ஜெயிச்சு அமைச்சர் கூட ஆகிருக்க வேண்டிய கடைசி நிமிசத்துல மணியனை பின்னோக்கி இழுத்தது எது?

இங்கே புகையிலை வியாபாரம் துவங்க முதல் முதல்ல 10000 தேவைப்பட்டுச்சுன்னு கேரளால ஒரு வீட்டுல திருடிட்டு வந்த 40 சவரன் நகைகள்தான், விடாம துரத்திட்டு வந்து பாம்பு மாதிரி கொத்தி, பரம்பதம் மாதிரி ஆரம்பிச்ச இடத்துக்கே கீழ இழுத்து விட்டது.

அந்த 10000 அ வேற வழில புரட்டிருக்கலாம், இருந்தாலும் திருடனுங்குங்கற ஆசைக்காக திருடப் போய், அதை வச்சு தன்னோட உழைப்பினால் கோடிக்கணக்குல சம்பாதிச்ச சொத்தையும் சேர்த்து இழக்கற மாதிரி ஆகிருச்சு.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

உரை

களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலின் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும்.

திருடன் மணியன் பிள்ளை – ஜீ.ஆர்.இந்துகோபாலன் எழுதி தமிழில் குளச்சல் மூ யூசுப் மொழிப்பெயர்த்துள்ளா மணியன் பிள்ளை என்ற முன்னாள் திருடரின் சுயசரிதத்தில் இருந்து ஒரு அத்தியாயத்தை எடுத்து சுருக்கி பகிர்ந்திருக்கிறேன். கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகவே இதை கருதுகிறேன்.

ஆக்கம் அளவிறந்துக் கெடும்

ஆசிரியர்ன்னு நிறைய பேரை கடந்து வந்துருப்போம், சாக்ரடிஸ் சொல்ற மாதிரி “எதிரில் வரும் எல்லாரும் ஆசிரியர்தான், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்ற இருக்கும்”கறது வேற விஷயம், பள்ளியிலயோ கல்லூரியிலயோ சம்பளம் வாங்கிட்டு நமக்கு பாடம் நடத்தி, அட்டெண்டென்ஸ் எடுக்கறவங்கத்தான் ஆசிரியர்னு வச்சுப்போம். அதுல யாருக்கு ரொம்ப பயப்படுவோம்? பள்ளிக்கூடங்கள்ல அடிக்கற வாத்தியார்னு சொல்லுவோம், ஆனா அடிக்கறவங்களுக்கு மட்டுமா பயப்படுவோம்? எல்லா ஆசிரியர்களுமா அடிக்கப்போறாங்க? கவனமா பார்த்தா யார் யாரெல்லாம் நேர்மையா இருக்காங்களோ அவங்களை பார்த்துத்தான் பயப்படுவோம். அவங்களைத்தான் பிடிக்கும், அவங்களைத்தான் கடைசி வரை மறக்காம இருப்போம்.

ஆசிரியர் தொழிலை பொறுத்த வரை நேர்மைங்கறதுல முதல் விசயம் தங்களோட பாடம் தொடர்பான திறமையை வளர்த்தல், ரெண்டாவது அதை மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், ரெண்டாவதா சொன்ன பயிற்றுவித்தல்ல கூடுதலா ஒரு வார்த்தைய பயன்படுத்தனும். அனைத்து மாணவர்களுக்கும் சமமா பாடம் போய் சேர்ர மாதிரி சொல்லித் தரது, ஆசிரியர் பணி மட்டுமில்லை, எல்லா துறைகள்லயுமே நேர்மைன்னு சொன்னாலே இந்த பாரபட்சமற்ற அணுகுமுறைய சொல்லனும். அதாவது வேண்டியவங்களுக்கு ஒரு மாதிரி, வேண்டாதவங்களுக்கு ஒரு மாதிரின்னு நடந்துக்க கூடாது. அரசு அலுவலகங்களை உதாரணமா சொல்லனும்னா இலஞ்சம் கொடுக்கறவங்களுக்கு ஒரு மாதிரியும் சாதாரண பொதுமக்கள்கிட்ட ஒருமாதிரியும் வேலை செஞ்சுத் தரக்கூடாது. அதெல்லாம் நடக்கற கதையில்லைன்னு சொன்னாலும் அப்படித்தானே இருக்கனும். ஒவ்வொரு விசயத்துக்கும் எப்படி இருக்கனுங்கறது திரும்ப திரும்ப சொல்லித்தானே ஆகனும்.

சரி, இந்த மாதிரி நேர்மையா நடந்துக்கற, அதாவது பாரபட்சம் இல்லாத விசயம் இருக்கா? என்னைக் கேட்டா கடவுளைக் கூட சொல்ல முடியாது. அத்திவரதரை பார்க்கக் கூட ஒரு கூட்டம் விடியற்காலைல போய் இரவுதான் பார்க்க முடிஞ்சது, சிலரால நேரா போய் பார்க்க முடியுது. எல்லாருமே சமம்னு பார்க்கற இடம் ஏதாவது இருக்கா? மனிதனா உருவாக்குன எந்த இடத்துலயும் இந்த சமத்துவம் இருக்காது. கடவுளோ, கடவுள் இருக்க இடமோ மனிதனால உருவாக்கப் பட்டதுதானே? அப்படிப்பட்ட எல்லா இடத்துலயும் பணமும் அதிகாரமும் தன்னோட பலத்தை காட்டத்தான் செய்யும்.

இந்த விசயத்துல தான் இயற்கை மேல ஒரு பெரிய மதிப்பு உருவாகும். அது அரவணைக்கறதுலயும் சரிஅழிக்கறதுலயும் சரி எந்த பாரபட்சமும் காட்டாது.

பொன்னியின் செல்வன்ல வந்தயத்தேவன் ஒரு இடத்துல குந்தவையோட அழகை பத்தி சொல்லப் போய் பழவேட்டரையர் கோபப்பட்டு “உன் தகுதிக்கு இளவரசியின் அழகை இரசிக்கிறாயா?” என்று கேட்க “என்ன செய்வது? மாட மாளிகையில் வசிப்போருக்கும் மண்குடிசையில் வசிப்போருக்கும் சந்திரன் ஒன்றாகத்தானே அழகாய் தெரிகிறது?” என்று சமாளிப்பார். இயற்கையில் சமத்துவம் அந்த இடத்தில் உணர்த்தப்படும்.

அதே போல் சென்னை வெள்ளத்தை எடுத்துக் கொள்வோமே, சமூக வலைதளங்களில் ஒருவரின் நிலைத்தகவல் வைரலாக அப்போது சுற்றியது.

“நான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர், அமெரிக்கால இருக்க ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியோட சென்னை பிராஞ்ச்-ல வேலை பார்க்கறேன்.

மாசம் 1.5 லட்சம் சம்பளம் வாங்கறேன். என்கிட்ட 2 பெரிய பேங்கோட கிரிடிட் கார்ட் இருக்கு. ரெண்டுமே 1 லட்சம் லிமிட்டேசன்…

அது இல்லாம என் சேவிங் அக்கவுண்ட்-ல 50 ஆயிரம் வச்சுருக்கேன், இப்ப கையில கூட 10 ஆயிரம் பணமா இருக்கு.

சென்னைலயே சொந்தமா ஃபிளாட் வாங்கி இருக்கேன், ட்ருபிள் பெட் ரூம், அதுவும் சிட்டி சென்டர்ல, மதிப்பு வாங்கும் போதே 1.5 கோடி.

இவ்வளவும் இருந்தும்
அய்யா, இப்ப நீங்க போடப் போற சாப்பாட்டு பொட்டளத்தை நம்பித்தான் நான் இருக்கேங்கறத யோசிக்கும் போது

எனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு புரிஞ்சுருச்சுங்கய்யா…”

எப்படி இயற்கை பாரபட்சம் பார்க்காம அடிச்சுருக்கு பாருங்க? ஆமா எதுக்கு இயற்கை அடிக்கனும்? அதுகிட்ட இருந்து திருடுனா வேற என்ன செய்யும்? இயற்கைக்குன்னு ஒரு சம நிலை இருக்கு, ஒரு வழியா கொடுக்கும், ஒரு வழியா எடுத்துக்கும், எதை சொல்றன்னா நாம வளங்கள்னு சொல்ற விசயங்களைத்தான், அப்படிப்பட்டத வளர்ச்சிங்கற பேர்ல நாம திருடிக்கிட்டா? இப்ப சென்னை மக்களையே எடுத்துக்கோங்க, ஏரி போன்ற நீர் நிலைகளுக்கான இடத்தை திருடறது, அது பத்தாம நீர் போற பாதையை ஆக்கிரமிச்சு கட்டிடம் கட்டறது, அதுவும் திருட்டுத்தானே? பார்க்கறதுக்கு ஊர் நல்லா வளர்ந்து முன்னேறிக்கிட்டே போற மாதிரித்தான் தெரியும். ஒரே நாள்ல மொத்தமா உள்ளதும் சேர்ந்து போயிரும்.

பாரபட்சம் காட்டாத நேர்மையான இயற்கைகிட்ட திருடுனாவே இப்படினா, இருக்கறதுலயே மோசமான உயிரினமன மனுசங்கக்கிட்ட ஒருத்தருக்கொருத்தர் திருடி சேர்த்துக்கிட்டா என்னாகும்? அதுவும் ஆரம்பத்துல நல்லாருந்து ஒட்டுக்கா அழிஞ்சுத்தான் போகும்.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும். 

உள்ளத்தால் உள்ளலும் தீதே

வாரணம் ஆயிரம் படத்துல ஒரு சின்ன சீன் வரும், சின்ன வயசு சூர்யா ஒருத்தங்கிட்ட அடி வாங்கிட்டு வந்துருப்பார், அப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு அடுத்த முறை அவனை பார்க்கறப்ப எப்படி அடிக்கனும்னு செஞ்சு பார்ப்பார். இப்படி ஒரு பஞ்ச் வச்சுட்டு, இப்படி குனிஞ்சு இன்னொரு பஞ்ச் அப்படி இப்படின்னு, அப்புறம் அவங்கப்பா சூர்யா வந்து பண்ண அட்வைஸ்லாம் எல்லாரும் பார்த்துருப்போம். இந்த மாதிரி பழக்கம் இல்லாதவங்களே இருக்க மாட்டாங்கங்கறது என்னோட அபிப்பிராயம்.

அதாவது சண்டை போடறதுக்கு முன்ன அதை செஞ்சு பார்க்கறத மட்டும் சொல்லலை, சில விசயங்களை செய்யறதுக்கு முன்ன அதை ஒரு தடவை மனசுக்குள்ள ஓட்டிப் பார்க்கறது, எப்பப்பலாம் அதை செய்வோம்னா இண்டர்வியுக்கு போறப்ப, பிடிச்ச பொண்ணுக்கிட்ட பேச போறப்ப (பிடிச்ச பசங்ககிட்ட பேசப் போறப்ப பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும்னு அவங்கதான் சொல்லனும்) முக்கியமா காலேஜ் டைம்ல ஏதாவது தப்பு பண்ணி மாட்டி விசாரனைக்கு போறதுக்கு முன்ன செஞ்சு பார்த்துக்கற ரிகர்சல்தான் சுவாரசியமா இருக்கும்.

இப்படி மனசுக்குள்ள ஒரு சம்பவத்தை ஓட்டிப் பார்க்கறதுங்கறது நடக்கப் போறத விட நடந்து முடிஞ்ச விசயங்களுக்குத்தான் அதிகமா இருக்கும். ஒருமுறை நல்லா யோசிச்சு பாருங்க, உங்க வாழ்க்கைல அதிகம் உங்க மனசுல வந்து போன சம்பவங்கள் நீங்கள் தோற்ற, அவமானப்பட்ட, மாற்ற நினைக்கும் சம்பவங்களாகத்தான் இருக்கும். நீங்களே விரும்பாவிட்டாலும் அவைதான் திரும்ப திரும்ப மனதிற்குள் வந்து போகும்.

“அன்னைக்கு மட்டும் ஹெல்மெட் போட்டு போயிருந்தா?”

“அவ கேட்டப்பவே ஓகே சொல்லிருந்தா?”

“அந்த கேள்வியை இன்னொரு முறை ரிவிசன் பண்ணிருந்தா?”

“குழந்தைக்கு இருமல் வந்தப்பவே டானிக் கொடுத்துருக்கலாம்”

மேலே சொன்னவையெல்லாம் சாதாரணமாக அனைவரின் வாழ்விலும் திரும்ப ஓட்டிப் பார்க்கும் நிகழ்வுகள். சரவணன் சந்திரன் எழுதிய “வெண்ணிற ஆடை” நூலில் ஒரு கதையில் “அன்னைக்கு மட்டும் வெள்ளை டிரஸ் போடாம இருந்துருந்தா?”ன்னு ஒரு இடத்துல வரும். என்னை ரொம்ப பாதிச்ச இடம் அது. சரி விசயத்துக்கு வருவோம்.

இப்படி மனசானது அது பாட்டுக்கு நாம மறக்க நினைக்கற விசயத்தை ரீவைண்ட் பண்ணிக்கிட்டே இருக்கும். ஒரே சம்பவத்தை வெவ்வேற கோணத்துல இப்படி நடந்துருந்தா எப்படி இருக்கும்னு என யோசிச்சுக்கிட்டே இருக்கும். இது தப்பு, இப்படியே இருக்கறப்பத்தான் நாம கடந்த கால நினைவுகள்ல சிக்கிக்கறது, அதிகம் இந்த காதல் தோல்வி மக்கள் இதுலத்தான் சிக்கிப்பாங்க, பழையதையே நினைச்சு நினைச்சு பார்த்துட்டு இருக்கறது.

எதிர்காலத்தை பத்தி மட்டும் தான் சிந்திக்கனுமான்னா அதிகம் அதுலயும் மாட்டிக்க கூடாது, திட்டமிடலுக்காக சிந்திக்கலாம், ஆனா அதுலயும் நல்லது கெட்டது இருக்கு. ஒவ்வொருத்தரும் மனசுல எதெதுல்லாம் நடக்கனும்னு நினைக்கறாங்கன்னு அவங்களுக்குத்தான் தெரியும், இப்ப நல்லத பார்ப்போம், அதிகம் இந்த மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுக்கறவங்க என்ன சொல்லிக் கொடுப்பாங்கன்னா நீங்க எதுவாக நினைக்கறிங்களோ அதைப் பத்தி நல்லா கற்பனை பண்ணி பாருங்க, கலெக்டர் ஆனா உங்க ஆபிஸ் டேபுள்ல என்னென்ன இருக்கனும்னு கூட இப்பவே யோசிச்சு திட்டமிடுங்க, இது உங்க குறிக்கோளை நெருங்க ஒரு விதத்துல உதவி பண்ணும், இது மாதிரி.

இப்படி எதிர்காலத்தை பத்தி திட்டமிடறதுல செய்யக்கூடியதுன்னு சிலத சொல்ற மாதிரி, செய்யக் கூடாததும் இருக்கு, அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை உங்களோடதா நினைச்சு மனசுல கற்பனைய வளர்த்துக்க கூடாது,

இந்த பேனா மட்டும் எங்கிட்ட இருந்ததுன்னா,

இந்த கார் மட்டும் நான் ஓட்டுனன்னா,

இந்த வீடு மட்டும் எனக்கு சொந்தமா இருந்ததுன்னா,

இவ மட்டும் எனக்கு கிடைச்சான்னு பட்டியல் போய்கிட்டே இருக்கும், ஆனா அதோட விளைவு எங்க போய் முடியும்னா அதை திருடத்தான் தூண்டும், ஏன்னா நீங்க அது மாதிரி ஒன்னு வேணும்னு நினைக்கலை, அதையே உங்களுக்கு சொந்தமா நினைக்க ஆரம்பிச்சுட்டிங்க, அப்படி நினைக்கறது களவாட வைக்கும், களவு எப்பவும் கை விலங்குலத்தான் முடியும்.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல் 

உரை:

பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக. 
இது களவு தீதென்றது.

கள்ளாமை காக்கதன் நெஞ்சு

என்னோட பொண்ணு நறுமுகைக்கு அப்ப 4-5 மாசம் இருக்கும், அப்பதான் தவழவே ஆரம்பிச்சுருந்தான்னு நினைக்கறேன். ஒரு நாள் தரையில சப்பனங்கால் போட்டு உட்கார்ந்து காலோட பாதத்துல என்னவோ நோண்டிட்டு இருந்தா, எனக்கு குட்டியா ஒரு உருவம் இப்படி பெரிய மனுச தோரனைல உக்காந்து என்னவோ பன்றத பார்க்கவும் ஏனோ சிரிப்பு வந்துருச்சு, பக்கத்துல இருந்த வீட்டம்மாவ கூப்பிட்டு காட்டுனேன். எங்க 2 பேருக்கும் சிரிப்பு. கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டோம். எங்களை கவனிச்ச நறுமுகை ஏதோ கேலி செய்யறோம்னு புரிஞ்சுக்கிட்டு “ஏய்”ன்னு கத்திட்டு ஓன்னு அழுகை. சமாதானபடுத்திட்டு மனைவிக்கிட்ட கேட்கறேன் “ஒரு வயசு கூட ஆகலையே, இப்பவே இவளுக்கு இவ்வளவு கோபம் வருதே?”ன்னு. கோபம்ங்கற உணர்ச்சி எவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கப்படுதுன்னு ஆச்சர்யம்.

ஆனா அப்புறமா இன்னொரு விஷயம் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. என்னன்னா கோபம்ங்கறது கூட சாதாரணம்தான், அடிச்சாலோ, கிள்ளுனாலோ, கேட்டது கிடைக்கலைன்னாலோ இயல்பா எல்லா குழந்தைகளுக்கும் வரும். ஆனா நறுமுகை முதல் முறையா கோபப்பட்டது எதுக்குங்கறதுதான் என் சுவாரசியத்தை கூட்டுச்சு. அவ எள்ளலுக்கு எதிரா கோபத்தை வெளிப்படுத்திருக்கா, நாமளே கொஞ்சம் யோசிச்சு பார்ப்போமே, ஒருத்தங்க நம்மளை கேலி செஞ்சா ஏன் உடனே நம்மாள ஏத்துக்க முடியாத அளவுக்கு கோபம் வருது? எப்போலருந்து அந்த பழக்கம் நமக்கு வந்துருக்கும்? நம்ம வீட்ல நம்ம பெத்தவங்க நமக்கோ, இல்லை நாம நம்ம பிள்ளைங்களுக்கோ இதைப் பத்தி சொல்லிக் கொடுக்காமலே இது எப்படி மனிதர்களிடையே விரவி கிடக்கு, சில பேருக்கு கடின தோலா இருந்தா ஒன்னும் செய்யறதுக்கில்லை.

எள்ளல்ங்கறது என்ன மாதிரியானது? நம்மளை பரிகசிச்சு சிரிக்கற ஒரு செயல், அது எப்பப்ப நடக்கும்? நம்ம ஏதாவது தவறு செய்யறப்பத்தான் அதிகம் நடக்கும், உருவகேலியல்லாம் எள்ளல்ல சேர்த்த வேண்டாம், அதெல்லாம் தண்டிக்கப்படவேண்டிய வன்முறைகள். இப்போ ஒரு தேர்வுல பார்த்து எழுதி மாட்டிக்கறோம், மாட்டிக்கிட்டதால கிடைக்க போற அடிய விட, மொத்த வகுப்புக்கும் காட்சி பொருளாகிட்டோம்ங்கறதுதானே நம்மளை அதிகம் பாதிக்கும். எப்பவுமே சொல்லிக்கற வசனம் ஒன்னு இருக்கே, “நல்ல வேளை, யாரும் பார்க்கலை”. நமக்கு எவ்வளவு கேவலம், அவமானம் நடந்திருந்தாலும் அதை யாரும் பார்க்காத பட்சத்தில், வெளிய தெரிஞ்சுடாதுங்கற பட்சத்தில் அதோட தாக்கம் அப்படியே பாதிக்கு மேல குறைஞ்சுருதுங்கறதுதானே உண்மை. அதாவது எப்படின்னா நம்மக்கிட்ட கீழ்மைகள் அது எண்ணங்களோ செயல்களோ இருந்தாலும் அது வெளிய தெரிஞ்சு யாரும் பரிகசிச்சுடக் கூடாதுங்கறதுதானே எள்ளலுக்கு எதிரான பொதுவான மனித மனத்தொட நிலைப்பாடு.

இதுக்கு நேர்மாறா இன்னொன்னு இருக்கு, நம்மக்கிட்ட இருக்க மேன்மையானவைகளை எல்லாரும் பாராட்டனும்னு எதிர்பார்க்கறது, சத்தியமா இது இல்லாதவன் மனுசனே இல்லை, அவன் மகான், அவங்க வேணா சும்மா “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே”ண்னு வாழலாம், சராசரி மனுசன் வாழ்றதே அடுத்தவங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யறதுக்குத்தான். அது நல்லதா கெட்டதாங்கறது ரெண்டாவது, அப்படித்தானே போய்கிட்டு இருக்கு? நான் மாநில அளவுல முதல் மதிப்பெண் வாங்குவேன், ஆனா யாரும் கண்டுக்க மாட்டாங்கன்னா எப்படி இருக்கும்? ஊர்ல பெரிய பணக்காரன், பெரிய அதிகாரி, ஆனா அவனுக்கு ஒருத்தனும் வணக்கம் வைக்கமாட்டான்னா எப்படி இருக்கும்? சுத்தி இருக்கறவங்க கண்டுக்கலைன்னா நம்மால தொடர்ந்து செயல்படவே முடியாதுங்கறதுதானுங்க உண்மை, அப்படியே நின்னு துருப்பிடிச்சுட மாட்டோமா?

இப்படி அடுத்தவங்க தன்னை புகழனும், இல்லை அடுத்தவங்க அளவுக்கு தன்னையும் காட்டிக்கனுங்கறதுக்கான செஞ்சுக்கற பல விசயங்களை கவனிச்சிங்கன்னா அதோட தீவிரம் தெரியும். உதாரணத்துக்கு “வரவு எட்டணா செலவு பத்தணா”ன்னு ஒரு படம். நாசர் நேர்மையா இருப்பார், அவர் மனைவி பசங்களை கான்வெண்ட்ல படிக்க வைக்க நச்சரிச்சு, அதுக்காக இலஞ்சம் வாங்கி, வாழ்க்கையே திசை மாறிடும், இதுல நான் யாரையும் குறை சொல்லலை, காரணத்தை கவனிக்க சொல்றேன். அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து ஆசைப்பட்டு, தன்னோட வாழ்க்கைய கெடுத்துக்கிட்டு, எல்லோரும் கேலி பண்ற நிலைமைக்கு ஆளாகறதுதானே அதிகம் நடக்குது?

விஜய் டீவில மகாபாரதம் போட்டப்ப பார்த்தேன், அதுல சூதாட்ட சீன் வரப்ப பொருள் வச்சு ஆடக்கூடாதுன்னு விதிமுறைகளை வகுப்பாங்க, உடனே புகழை வச்சு ஆட ஆரம்பிப்பாங்க, நான் இப்படிப்பட்ட தம்பிகளை உடையவங்கற புகழுடையவன், அதை பணயமா வைக்கறன்னு வச்சு ஆடறது, அதை கவனிக்கறப்ப பொருளுக்கும் புகழுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு தோணுச்சு, இப்ப உங்ககிட்ட ஒரு கார் இருக்கு, அதே கார் எனக்கு வேணும்னு ஆசைப்பட்டா பொருளுக்கு ஆசைப்படறது, கார் வச்சுருக்கவன்ங்கற பேர் எனக்கும் வேணும்னு ஆசைப்பட்டா உங்க புகழுக்கு ஆசைப்படறது. பொதுவாவே அடுத்தவங்களை பார்த்து சூடு போட்டுக்கறது ஊர் பார்த்து சிரிக்கறதாத்தான் முடியும்.

இப்படி சொன்னா எப்படிங்க? எங்க ஊர்ல ஒருத்தர் முதல்முறையா 4 மாடி வீடு கட்டுனார், நானும் அவர் மாதிரி கட்டனும்னு நினைக்கறது தப்பா? சேச்சே, நான் சொல்ல வர்ரது அதில்லை, பேருக்கும் புகழுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவனுக்கு வாழ்க்கை அதே இடத்துலதான் தேங்கிக் கிடக்கும். ஆசைப்படலாம் தப்பில்லை, ஆனா அதுக்கு நேர்மையான வழில போகனும், நீங்களும் வீடு கட்ட நினைக்கறது தப்பில்லை, அதை ஏமாத்தி பிடுங்கிக்க நினைக்க கூடாது. ஒருவேளை அப்படி ஊரை அடிச்சு ஒருத்தன் முன்னேறி இருந்தாலும் ஊர் அவனை போக விட்டு பின்னாடி கேலி பேசி சிரிக்கத்தான் செய்யும், இன்னும் சொல்லப்போனா அவனால ஆபத்து வராதுன்னா நேராவே அசிங்கப்படுத்தும். என்னை அப்படி யாரும் கேலியா பேசிடக்கூடாதுன்னா அடுத்தவன் குடிய கெடுக்க நினைக்கதிங்க, அடுத்தவன் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாதிங்க.

அதிகாரம்:கள்ளாமை  குறள் எண்:281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

உரை

பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்  

துறவின்னா காவியேதான் கட்டனுமா? – குறளுரை

யோகிராம் சுரத்குமார், இந்த பெயரை கேள்விப் பட்டதுண்டா? இல்லை என்றால் நீங்கள் பாலகுமாரனை வாசிக்கவில்லை என்று பொருள். கதை சொல்லியாக இல்லாமல் வெறுமனே வாசகர்களுடன் உரையாடும் வகையில் அவர் எழுதும் அனைத்து புத்தகங்களும் அவரது குருவான யோகிராமை பற்றி பேசாமல் இராது. இதில் என்ன சிறப்பு என கேட்கிறீர்களா?

ஆரம்ப காலத்தில் பாலகுமாரன் இரஜினிகாந்தை விட அதிகம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார். அதிகமில்லை. தினசரி 20 பாக்கெட் தான். சினிமாவில் இருந்தவர்களுக்கு இது சாதாரணமாக தெரியும். அப்படி இருந்தவர் ஒருமுறை காஞ்சி பெரியவரை சந்திக்க போகிறார். அனைவரும் தமக்கு வேண்டியதை மனதில் நினைத்து வேண்டிக் கொள்வார்களாம். இவரும் வேண்டி இருக்கிரார், என்ன தெரியுமா? Continue reading “துறவின்னா காவியேதான் கட்டனுமா? – குறளுரை”

செய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை

மத்த நாடுகள் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம், ஆனால் கூடி வாழும் பழக்கம் சுத்தமா அங்கே இருக்காது. பக்கத்து அபார்ட்மெண்ட் பற்றி இங்கே நகரத்தில்  இருப்போர்களே கண்டுக் கொள்வதில்லை, அங்கே எப்படி இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்க்கள். இன்னமும் இந்தியாவில் நகரங்கள் உட்பட, சில மேட்டுக்குடியினரைத் தவிர, அனைவரும் சக மனிதருக்கு ஒன்றென்றால் பிரதிபலன் பாராமல் ஓடி வருவார்கள். அதனால் தான் எனக்கு சுத்தமான நாடுகள் என சொல்லிக் கொள்பவர்களை காட்டிலும், இந்த அழுக்கு தேசத்தை மிகவும் பிடித்திருக்கிறது. Continue reading “செய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை”

கருப்பா இருக்கிறது தப்பா? – குறளுரை

“அவனை எவ்வளவு நம்புனேன், என்னை இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டானே”

பொதுவாக யாரிடமாவது ஏமாறுகையில் அனைவரும் சொல்லும் வசனம் தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏமாற்றப் போகும் எவனும் “என்னை நம்புங்கள், நான் ஏமாற்ற மாட்டேன்” என உத்திரவாதம் தந்திருக்க மாட்டான். பின் எதை வைத்து ஒருவரை நம்புகிறோம்.

முதலில் எந்தெந்த விசயங்க்களுக்கு ஒருவரை நம்ப வேண்டி இருக்கிறது? அப்படி எல்லாம் பட்டியல் இடுவது மிக கடினம். பேருந்தில் நம்முடன் இரவு பயணிப்பவர் மீது சந்தேகம் வந்தாலே உறங்க இயலாது. எங்கே போனை தூக்கிச் சென்று விடுவானோ என்ற பயம் இருக்கும். முதலில் ஒருவரை பார்த்த உடனே மனம் அவரை ஆராய துவங்குகிறது. நமக்கென சில கற்பிதங்கள் இருக்கும். நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் “நிறம்”. Continue reading “கருப்பா இருக்கிறது தப்பா? – குறளுரை”

இடம் பார்த்து செய் – குறளுரை

ஒருவரை நல்லவர், கெட்டவர் என எதை வைத்து சொல்வோம்? அவரது செயல்களை வைத்துத்தானே? உண்மையில் செயல்களை வைத்து மட்டும் தானா? உதாரணத்திற்கு காதலிப்பது தவறா? இல்லை என்பீர்கள். திருமணத்திற்கு பின் மனைவி விடுத்து வேறு பெண்ணை காதலிப்பது? ஒரே செயல், வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட குணத்தை சொல்கிறது அல்லவா?

காதல் மட்டுமல்ல, வாழ்வில் அனைத்து செயல்களும் ஒவ்வொரு இடத்தை பொறுத்து மாறும். ஏனெனில் ஒழுக்க விதிகள் ஒவ்வொரு இடத்திலும் மாறும். கேரளாவில் கள்ளுக்கு தடையில்லை. குடிக்கலாம், அதையே கொஞ்சம் தள்ளி வந்து கோயமுத்தூரில் குடித்தால்? அப்படி என்றால் ஒரு அரசாங்கம் பார்த்து சொல்வதை கேட்டு நடப்பது தான் ஒழுக்கமா? அவர்கள் பார்த்து சரி என்றால் அனைத்தும் சரி, தவறென்றால் அனைத்தும் தவறு. Continue reading “இடம் பார்த்து செய் – குறளுரை”

நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? – குறளுரை

“சோதனைகளை கடந்தால் தான் சாதனை” அதனால் எப்போதும் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடாமல், எதிர்த்து போராடி வென்றிட வேண்டும். மேடையில் பலர் இப்படி பேசி கேட்டு இருப்போம். இதில் ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது. சொல்பவர்கள் அனைவரும் நம் பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்றுதான் சொல்லித் தருகிறார்களே ஒழிய, யாரும் மற்றவர்களின் பிரச்சனைகளை காண நேரிடுகையில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை. Continue reading “நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? – குறளுரை”