ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம் – ஸ்ரீதர் சுப்ரமணியம்

சமூக வலைத்தளங்கள் எதற்காகத் துவங்கப்பட்டன என்பதை விட அது தற்போது எவ்வளவு பெரிய சக்தியாக உலகைக் கட்டுப்படுத்துகிறது என்பது சமீபத்திய முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. ஊர் திருவிழாக்களின் போது ஒவ்வொரு சாதிக் குழுக்களின் தலைவர்களைக் கூப்பிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த கலவரமும் செய்யமாட்டேன் என எழுதி வாங்குவதைப் போல் ஒவ்வொரு நாட்டுத் தேர்தலின் போதும் மார்க் ஸூக்கர்பெர்க் இதில் எந்த தலையீடும் செய்யமாட்டேன் என உறுதியளிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சமூக வலைத்தளங்களின் உதவியுடன் தான் மோடி 2014ல் பிரதமரானார். அதன் பின் சமூக வலைத்தளங்களின் போக்கே மாறியது.

2014 வரை மோடி பக்தனாக இருந்த எனக்கு ஒரு கட்டத்தில் மோடியை ஆதரிப்பவர்களின் பேச்சில் எப்போதும் “நாம்-அவர்கள்” என்ற தொனி மிக வெளிப்படையாகப் பயன்படுத்தப் பட்டது. அதில் அந்த அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாகத்தான் இருந்தார்கள். பின்னர் கம்யூனிஸ்ட்டுகள், அடுத்து திராவிட ஆதரவாளர்கள், அவர்களுக்குக் காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே இருந்தது இல்லை.

வெறுமனே பள்ளியில் தேர்வுக்கு மட்டும் படித்துவிட்டு, வாசிப்பிற்கு சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டாத வயதில் சங்கர் படம் போன்ற ஒரு திடீர் மாற்றம் வந்து அப்துல்கலாம் ஆசைப்பட்ட வல்லரசு இந்தியா பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் பாஜகவிற்கு வாக்களித்தவர்களில் பாதிப் பேருக்கு “ஏதோ தப்பா இருக்கே” என்ற உணர்வு வருவதற்குள் தமிழ்ச் சமூக வலைத்தளங்களில் வெறுப்பரசியல் புரையோடிப் போயிருந்தது. ஒரு சம்பவம் என்றால் மோடிக்கு ஆதரவாக பற்பல பதிவுகள் கண்ணில் படும், ஒன்று கூட உண்மையானதாக இருக்காது, அதே சமயம் அத்தனையிலும் மதம் கலந்தே இருக்கும். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2016க்கு பிறகே, துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகே தமிழ்ச் சமூக வலைத்தளங்களின் போக்கு மாறியது. ஆளும் மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் நின்ற காலம் அது. பலரது நிஜ முகங்களை அடையாளப்படுத்திய நேரம் அது.

அப்போது முதல் அரசியல் பதிவுகளில் ஒரு மாற்றம் தென்படத் துவங்கின. என்னவென்றால் தரவுகளை முன்வைப்பது. மத அரசியல் பேசும் யாரிடமும் எந்த ஆதாரமும் இருக்காது. சூரிய ஒளியைக் கண்ட இரத்த காட்டேறிகளைப் போல மத அரசியல் பேசுபவர்களை ஓடச் செய்யும் ஒரு வஸ்துவா தரவு(டேட்டா) இருந்தது. அதைத் தனது பதிவுகளில் வெகு சிறப்பாகக் கையாளும் ஒரு நபராக ஸ்ரீதர் சுப்ரமணியம் முக நூலில் பிரபலமானார். அவருடைய மூன்றாவது புத்தகம்தான் இந்த “ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்”.

1976, 42வது சட்டத்திருத்தத்தின் படி இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தப்பட்டது. அதுதான் முதலும் கடைசியுமான முகப்புரை திருத்தம். அதில் மூன்று வார்த்தைகள் இந்தியாவை வரையறுப்பதற்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டன. “சமதர்ம, சமய சார்பற்ற, ஒருமைப்பாடு” கொண்ட நாடு இந்தியா. இதில் சமய சார்பற்ற, அதாவது செக்யூலரிசம் என்பது குறித்தான நூல்தான் இது.

படித்த பலருக்கும் கூட அறியாமையால் பொது புத்தியாக சில தவறான தகவல்கள் கற்பிக்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவின் தேசிய மொழி இந்தி. அதே போலத்தான் இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருப்பது முழுக்க முழுக்க சிறுபான்மை மதங்களான கிறித்துவ & இஸ்லாமியத்தின் வளர்ச்சிக்காகத்தான். அதன் மூலம் நாம் இழந்தவைகள்தான் அதிகம். மீண்டும் பழையபடி நம் தேசத்தை இந்துமயமாக்க வேண்டும். அகண்ட இந்து பாரதத்தை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்கள் அனைவரது மனதிலும் நஞ்சூட்டப்பட்டுக் கொண்டே இருக்கிற இந்த நேரத்தில் மதச்சார்பின்மை பற்றிய இந்த புத்தகம் மிக மிக மிக அவசியமான ஒன்றாகிறது.

புத்தகத்தில் மொத்தம் ஐந்து பாகங்கள்

  1. செக்யூலரிசம்
  2. இந்துத்துவ புகார்கள்
  3. மதங்கள் – சில சிந்தனைகள்
  4. இந்துத்துவ பெருமைகள்
  5. செக்யூலரிசத்தின் சாதகங்கள்

முதலில் மதச்சார்பின்மை என்றால் என்ன? மத அடிப்படைவாதம் என்றால் என்ன என்று பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்குகிறார்.

அடுத்துத்தான் மிக முக்கியமாக “இந்துத்துவ புகார்கள்” பகுதி. ஏன் இதை முக்கியம் எனச் சொல்கிறேன் என்றால் ரோபோக்களில் சில விதிகள் புரோகிராம் செய்யப்பட்டுத் தயாரிக்கப்படுவதைப் போல, இந்துத்துவ ஆதரவாளர்களுக்கும் சில கேள்விகள் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் எந்த இந்துத்துவ வாதியைச் சந்தித்துப் பேசினாலும் ஒரே பல்லவியைத்தான் பாடுவார்கள். ஒரே விதமான கேள்விகள், ஒரே விதமான பதில்கள்தான் அவர்களிடமிருந்து கிடைக்கும். உதாரணத்திற்குச் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். பிரிட்டிசாரின் சதி என்று பதில் கிடைக்கும். அது தவறான பதில் என்று நிரூபித்து விட்டால் அவரிடமிருந்து வேறு எந்த பதிலும் உங்களுக்குக் கிடைக்காது. அப்படி முழுக்க முழுக்க இந்துத்துவ வாதிகளால் சிறுபான்மையினரை நோக்கியும், மதச்சார்பின்மையை நோக்கியும் எழுப்பப்படும் புகார்களுக்கு எளிமையாகவும், விளக்கப்படங்களுடனும் பக்கா தரவுகளுடனும் பதிலளிக்கிறார். அதில் மிக முக்கியமானது காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்த கட்டுரை.

அடுத்து மதங்கள் – சில சிந்தனைகள் பகுதியை வாசிப்பதற்கு முன் சிறு அடிப்படை அறிவியல் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். என்னவென்றால் பெரிதாக ஒன்றுமில்லை. மனிதன் குரங்கிலிருந்து வந்தது, ஆப்பிரிக்காவிலிருந்து பூமியெங்கும் பரவியதும் பற்றித் தெரிந்திருந்தால் போதுமானது. அது புரிந்திருந்தாலே மதங்கள் என்பவை வாழ்வியல் ஒழுக்க விதிகளுக்காக, கடவுள் என்பவரை உருவாக்கி எழுதப்பட்ட சட்டங்கள் என்பது புரியும். சுருக்கமாகச் சொன்னால் ஏன் எப்படி உலகில் இத்தனை மதங்கள் என்று முன் கூட்டியே யோசித்திருந்தால் போதுமானது.

இந்த பகுதியில் இந்துத்துவத்தின் தேசபக்தி என்ற கட்டுரை மிக முக்கியமானது. தேசபக்தி என்பது தேசியக்கொடியையும் தேசிய கீதத்தையும் நேசிப்பது மட்டுமல்ல. தேசத்தில் வாழும் மக்களை நேசிப்பது என்ற புரிதல் வேண்டும். முழுக்க தேசத்திற்கு எதிரான சிந்தனைகள் கொண்ட ஒரு கூட்டம், பல தசாப்தங்களாக தேசியக் கொடியைப் புறக்கணித்த ஒரு கூட்டம் இன்று நாட்டிற்குத் தேசபக்தியைப் பற்றி வகுப்பெடுக்கிறது.

இந்துத்துவ பெருமைகள் என்ற பகுதி மிக முக்கியமானது. இதற்கு முன்பு வரை இந்துத்துவம் கேட்கும் கேள்விகளுக்குத் தரவுகளோடு பதிலளித்து விட்டு, இப்பகுதியில்தான் இந்துத்துவத்தினை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இறுதியாக செக்யூலரிசத்தில் சாதகங்கள். அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், சமூக முன்னேற்றத்தில் செக்யூலரிசத்தின் தேவையானது எவ்வளவு இன்றியமையாதது என்பது வரைபடங்களோடே விளக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரைக்கும் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது, அதற்கு உதவியாகக் குறிப்பிட்டுள்ள புத்தக பட்டியலைப் பார்க்கும் போதே தெரிகிறது. ஏதேனும் ஒரு புத்தகமாவது அதில் இருப்பதை வாசித்திருப்பேனே எனத் தேடிப் பார்த்ததில் “சேப்பியன்ஸ்” மட்டும் தான் காப்பாற்றியது.

எண்ணிப் பார்த்தேன். மொத்தம் 50 இடத்திற்கு மேல் எங்கிருந்து தகவலை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 35க்கு மேல் புத்தகங்கள், அதன் பின் ஆய்வுக்கட்டுரைகள், தலைவர்களின் உரைகள், அரசாங்க தரவுகள் எனக் கொடுத்துள்ளார். சேப்பியனை தவிர்த்து மீதமுள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்காகக் குறித்து வைத்துள்ளேன்.

இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டுமா என்று கேட்டால் கட்டாயம் வாசியுங்கள். அதை விட முக்கியம், தெரிந்தவர்கள் யாரேனும் மத அடிப்படைவாதம் பேசினாலோ அல்லது அதை நோக்கி நகர்வது தெரிந்தாலோ அவருக்கு இந்த புத்தகத்தைப் பரிசளியுங்கள். குறிப்பாக இளந்தலைமுறைகளுக்கு இந்த நூல் கட்டாயம் போய்ச் சேரவேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இந்த நூலை உங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது இந்தியா என்னும் மதச்சார்பற்ற தேசத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவை என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னிடம் இந்த புத்தகத்தின் இன்னொரு பிரதி இருக்கிறது. தெரிந்த தம்பி ஒருவர் தனது வாட்சப் டிபியாக அண்ணாமலை படத்தை வைத்திருந்தார். அவருக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்ல இருக்கிறேன்.

எழுத்தாளரது “ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்” வாசித்து விட்டேன். “பாதி நிரம்பிய கோப்பை” கைவசம் இருக்கிறது. இனிதான் வாசிக்க வேண்டும்.

வடசென்னைக்காரி – ஷாலின் மரிய லாரன்ஸ்

ஷாலின் எனக்கு முகநூலில்தான் அறிமுகம். சொல்லப் போனால் முதலில் மதிமுகம் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியைப் பார்த்த பிறகே அவரது புத்தகங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். கடந்த ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் உயிர்மை அரங்கில் அவரது இரண்டு புத்தகங்களையும் வாங்கி வந்தேன். இரண்டாவது புத்தகமான ஜென்ஸி ஏன் குறைவாகப் பாடினார்? என்பதைத்தான் சிறிய புத்தகம் என்பதால் முதலில் வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அடுத்து இந்த புத்தகம்.

முதலில் அட்டைப்படத்தைப் பாருங்கள். வடசென்னைக்கு அடையாளமே இந்த சிரிப்புதான். மெட்ராஸ் படத்தின் துவக்கத்தில் சென்னை வடசென்னை என்ற பாடலை பாருங்கள், விதவிதமான வெகுளித்தனமான சிரிப்பை வரிசையாகக் காட்டிருப்பார்கள்., இந்த படத்தில் இருப்பவர் கூட கார்த்தியின் அம்மாவாக வருபவர்தான். எனக்கு அட்டைப்படம் மிகவும் பிடித்திருக்கிறது.

அடுத்து இது என்ன வகை புத்தகம் என்றால் இது ஒரு கட்டுரைத் தொகுப்பு. எது குறித்த கட்டுரைகள் என்றால் சமூக நீதி குறித்தவை. முதலில் சமூக நீதி என்பதற்கான அர்த்தம் பலருக்குப் புரிவதில்லை. அது ஏதோ ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான சொல்லாடல் என்று நினைக்கிறார்கள். சமூக நீதி என்பது சாதி, மதம், இனம், நிறம், மொழி, பிறப்பிடம், பாலினம் போன்ற காரணங்களால் ஒருவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராக, அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் இட ஒதுக்கீடு, தனித்தொகுதி, பெண்களுக்கான சலுகைகள் இன்னும் பல. ஆனால் அந்த சமூக நீதி ஏன் தேவைப்படுகிறது? நிகழ்காலத்தில் அதன் தேவையைக் கோரும் விசயங்களைத்தான் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

முதலில் ஷாலின் தான் ஒரு வடசென்னைக்காரி என அறிமுகமாகும் கட்டுரையிலிருந்தே அவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். என்னளவில் நான் அறிந்த சிறந்த எம் ஜி ஆர் ரசிகை என்றுதான் முதலில் சொல்வேன். அதன்பின் தான் அவரது மற்ற அடையாளங்கள். சென்னை குறித்து நேரடியாக எந்த வாழ்வனுபவங்களும் இல்லாமல் திரைப்படத்தில் பார்த்து இப்படித்தான் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு ஷாலின் காட்டும் சென்னையின் புதிய முகம் படு சுவாரசியமாக இருக்கும்.

சமோசா & மைசூர்பாக் கட்டுரைகளை விட, சியர்ஸ் ஜீசஸ் தான் என்னைப் பயங்கரமாகப் பொறாமை கொள்ளச் செய்தது. உண்மையில் ஆங்கிலோ இந்தியர்கள் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாத என்னைப் போன்றவர்கள் கட்டாயம் இந்த நுலை வாசிக்க வேண்டும். அவர்களைப் பற்றி சட்டமன்றத்தில் ஒரு நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியர் நியமிக்கப்படுவார் என்பதுதான் இதுவரை என் அதிகபட்ச அறிதலாக இருந்தது. சியர்ஸ் ஜீஸஸ் கட்டுரையைப் படித்த பின் ஏதோ புதிய உலகத்தைப் பார்ப்பது போல இருந்தது. இதையெல்லாம் ஏன் எந்த படத்திலும் காட்டவில்லை என்று இருந்தது.

மிக முக்கியமானது ஜெய் ஹிந்துக்கு முன்பே தோன்றிய ஜெய் பீம். சமீபத்தில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் அம்பேத்கர் தொடரின் டைட்டில் சாங்கில் “ஜெய் ஜெய் ஜெய் பீம்” என்று வரும். உண்மையில் பலர் ஜெய் பீம் என்பது அம்பேத்கரை வாழ்த்தும் துதி என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. அது அம்பேத்கர் முன்னெடுத்த கோஷம். இதைப் படித்திருந்ததால்தான் வீட்டில் ஜெய் பீமுக்கு என்னால் தெளிவாக விளக்கம் தர முடிந்தது.

ஜெயலலிதாவின் கடைசி நாள், இது அட்டகாசமான ஒரு சிறுகதையாக வந்திருக்க வேண்டிய ஒன்று. அதே போல் தாஜ்மஹால் சில அந்தரங்க குறிப்புகள் கட்டுரையும். ஒரு கட்டுரையில் இரத்தமெல்லாம் கொதிக்கும்படி எழுதி விட்டு, அடுத்த கட்டுரையில் எங்கே ரோஜாப்பூ என்று தேட வைத்து விடுகிறார்.

“மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” இந்த கட்டுரை எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்த ஷாலின் பலரைத் தற்கொலையிலிருந்து கவுன்சிலிங் கொடுத்துக் காப்பாற்றுமளவு தெளிவானவர். மனம் நொந்து கைகளில் முடிந்தளவு தூக்க மாத்திரைகளை அள்ளி விழுங்கியிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த தருணத்திலிருந்து தான் மீண்டதை அட்டகாசமாக எழுதியிருக்கிறார்.

அப்படியே கற்பனை செய்து கொள்ளுங்கள். தூக்க மாத்திரைகளை விழுங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் கண் விழிக்கையில் பெரியார் மடியில் படுத்திருக்கிறார். பாரதி அவர் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். தஸ்லீமா நஸ்ரின் அவர் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார். இந்த இடத்திலிருந்து அவர்களது உரையாடல் துவங்குகிறது. ஒவ்வொருவரும் என்ன சொல்லியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறதா? இதெல்லாம் பதின்மத்தில் இருக்கும் குழந்தைகளும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

எம் ஜீ ஆரையும் கலைஞரையும் இப்படி சமமாக இரசிப்பவரைப் பார்க்கையில் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. அதிலும் எம் ஜி ஆரை பற்றி இதில் விட ஜென்ஸி புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு செய்து இருப்பார்.

“இசைக்கு யார் ஓனர்?” என்ற கட்டுரையும் மிக மிக முக்கியமானது. தமிழ் மரபு இசையின் மும்மூர்த்திகளான வேதநாயக சாஸ்திரிகள், சாமுவேல் வேத நாயகம் பிள்ளை, ஆப்ரஹாம் பண்டிதர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தாலும் முழு விவரங்களை அறிந்தது இந்த கட்டுரையில்தான். அதிலும் விஜய் ஆண்டனியின் பூர்வீகம் வெகு சுவாரசியம்.

ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியுமே நிறையச் சொல்லலாம். ஆனால் சிலவற்றையெல்லாம் வாசித்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் அரசியலையும் சமூக அறிவியலையும் புத்தகத்தில் படித்தால் ஷாலின் தனது 35 வருட வாழ்வியலிலேயே அதனை அறிந்திருக்கிறார்கள். அதனால் அவ்வளவு எளிதாக ஒவ்வொரு சம்பவத்துடன் தொடர்புடைய சமூக நீதியை எளிதாக அவரால் விளக்க முடிகிறது.

ஒவ்வொரு கட்டுரையும் எழுந்து நின்று கைதட்டுமளவு முக்கியமான விசயங்களை நறுக்கென்று பேசுகிறது. ஒரு பெண்ணாக, ஒரு சிறுபான்மையினராக, ஒரு சமூக செயல்பாட்டாளராக அவரது அனுபவங்களை மிக மிக எளிமையாக வாசிப்பவருக்குக் கடத்துகிறார். குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் மருந்தினை மறைத்து வைத்துக் கொடுப்பது போல, யாருக்காவது சமூக நீதி சிந்தனைகளை அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் விதைக்க வேண்டும் என நினைத்தால் தாராளமாக இந்த புத்தகத்தை அவர்களுக்குப் பரிசளிக்கலாம்.

மற்றபடி சமூக நீதி ஆர்வலர்கள், பெண்கள் தவறவிட்டு விடாதீர்கள்.

தடித்த கண்ணாடி போட்ட பூனை – போகன் சங்கர்

சரளமாக தமிழ் எழுதத் தெரிந்தவனுக்கு கவிதை எழுத வரும் என நம்பும் வெள்ளந்தி சமூகம் இது. என் கல்லூரி நண்பன் ஒருவன், எப்போதாவது என்னுடன் பேசுபவன், என்னை கவிஞரே என்பான். அவன் இதுவரை நான் எழுதியதை எதையுமே வாசித்ததில்லை, எழுதுகிறேன் என்றுத் தெரியும், கவிதையும் எழுதுவேன் என்று நினைத்து விட்டானோ அல்லது எழுதுபவர்களுக்கு அனைத்தும் கைவரும் என்று நம்புகிறானோ என்னவோ. ஒருமுறை நன்றாக திட்டிவிட்டேன். ஏன் இவ்வளவு கோபப்படற என்றவனிடன் நேராகப் போய் திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்த்து “வணக்கம் முதலமைச்சரே” என்று சொல்லிப் பார் என்றேன். நானே எனக்கு கவிதை வாசிக்க கூட வருவதில்லை என்று நொந்துப்போய் இருந்தால் கவிஞராம், கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

பதின்ம வயதில் காதலைக் கடக்கையில் வெற்றியோ தோல்வியோ அங்கு கவிதை இல்லாமல் இருக்காது. ஆனால் என் போன்ற அறிவீலிகள் சினிமா பாடலையும் கவிதையையும் ஒன்றென்று நம்பி ஏமாந்திருப்பார்கள். அவர்களுக்கு கவிதையின் உச்சக்கட்டம் என்பது தபூ சங்கரது கவிதைகள் தான். ஓரளவு தொடர்ச்சியாக வாசிக்கத் துவங்கிய பின் கவிதைகளும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த நேரம் பார்த்து பிரமீளின் “சிறகிலிருந்து பிரிந்த. இறகு ஒன்று. காற்றின் தீராத பக்கங்களில். ஒரு பறவையின் வாழ்வை. எழுதிச் செல்கிறது.” கவிதையை எதெச்சையாக காண, அவரது மொத்தக் கவிதைகளின் தொகுப்பை வாங்கினேன். அதில் ஒவ்வொரு கவிதையாக நானும் அவ்வபோது வாசித்தாலும் இன்னும் அது என்னை உள்ளே நுழைய விடாமல் வெளியே தள்ளிக் கதவை சாத்திக் கொண்டிருக்கிறது.

தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் ...

நம் குழுமத்தின் ஆண்டு விழா போட்டிக்காக, போகன் சங்கர் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்பினை நான் தேர்வு செய்ய காரணம் இதற்கு முன்பு படித்த அவரது போக புத்தகம் தான் காரணம். என்னளவில் மிக மிக கொண்டாட்டமாக வாசித்த புத்தகம் அது. கதைகளையே கவிதை போல சொல்லியிருப்பவரின் கவிதை எப்படி இருக்கும் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தான் வாசிக்க வைத்தது. இதுதான் நான் முதன்முதலாக வாசித்து முடித்த கவிதைத் தொகுப்பு.

காட்சிகளை கற்பனை செய்யவைக்கும் கதைகளுக்கும், உணர்வுகளை தூண்டும் கவிதைகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டென்பதையும், வார்த்தைகள் எத்தனை வீரியமானவை என்பதனையும் ஓரளவு புரிந்துக் கொண்டேன்.

கவிஞர் தமது சூழல்/அனுபவங்களை வெளிப்படுத்தும் வண்ணமே கவிதைகளை எழுதி இருக்கிறார். அதை போகப்புத்தகம் வாசித்ததால் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இதன் வீச்சு வேறு இரகம்.

‘அழகிய வாதாம்பருப்பு வாசனை மிதக்கும்’ என்று துவங்கும் ஒரு கவிதையில் வெளிப்படும் எண்ணங்கள் என்னை மிகவும் பாதித்தது. எனக்கு இந்த அனுபவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் என்னிடம் இதில் வருவதை போலவே “மற்றவர்களுக்கு நல்ல கனிகள் கொடுப்பவர்கள், எனக்கு மட்டும் அழுகிய பழங்களையே நீட்டுகிறார்கள்” என்று அழுததுண்டு. இக்கவிதையை வாசித்து விட்டு சற்று நேரம் தனித்து அமைதியாக இருந்தேன்.

ரயிலில் இருந்து 

பார்க்கும் மழை

வேறு மாதிரி இருக்கிறது

மனைவியை

அவள் அலுவலகத்தில் வைத்து

சந்திப்பது போல

இந்த உவமையை நான் மிகவும் இரசித்தேன். இதன் இறுதியில் வரும் பகடியையும்.

“எதையும்

விட மறுக்கும் நபர்கள் 

நாற்றம் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்”

இவ்வரிகள் வரும் கவிதை, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. எனக்காகவே சொல்லப்பட்டது போல இருந்தது.

பிணமானது தன்னை அறுப்பவனிடம் “எஸ் எஸ் நிறுத்தாதே” என்று சொல்வது போல ஒரு கவிதை வரும் பாருங்கள், மிக அருமை.

பெண்களிடம் தொலைப்பேசி எண்ணை கேட்பதற்கு வசதியாக ஒரு கவிதை உண்டு. வாத்து முட்டையை வைத்து, அதை எங்காவது உபயோகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

வரலாற்று மன்னர்கள் குதிரைகளுடன் வருவது போன்றொரு கவிதை வெகு சுவாரசியம்.

“என்னுடைய துக்கம் கிண்ணத் தொட்டிகளுக்குத் திரும்ப மறுக்கும் போன்சாய் மரங்களின் துக்கம்” – வெகுவாய் இரசித்தேன்.

திடிரென அறைவிளக்குகளை அணைக்கையில் அவசரமாக தத்தம் ஆடைகளை சரி செய்துக் கொள்ளும் இருளைக் கவனித்திருக்கிறீகளா?

சிறியது பெரியதுமாய் மொத்தம் 200 கவிதைகள், பத்து பத்து நிமிடங்களாக ஒதுக்கி ஓரளவுக்கு நிதானமாகத்தான் வாசித்தேன். என்னளவில் இது புதிதான சிறப்பான அனுபவமாகத்தான் இருந்தது. ஆனால் வேறொரு கவிஞர் தனது வலைதளத்தில் இப்புத்தகம் குறித்து எழுதி இருந்ததை படிக்கவும், இன்னும் பயிற்சி தேவை என்பது புரிந்தது. எதுவாயினும் நல்ல புத்தகம்.

இப்புத்தகத்தினை மீண்டுமொருமுறை நேரம் கிடைக்கையில் வாசிப்பேன். இனி அவ்வபோது கவிதைகளையும் வாசித்து பழக நினைக்கிறேன். 

மற்றவர்களும் வாசித்து விட்டு, அல்லது ஏற்கனவே வாசித்திருந்தால் உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

முள்ளம்பன்றிகளின் விடுதி – அய்யனார் விஸ்வநாத்

முன்னுரையில் சாரு சொல்லியிருப்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. சிறுகதைகளுக்கான காலமும் களமும் தற்போது இல்லை. என்ன எழுதி விட முடியும் சிறுகதையில்? விரும்புவதை சமூக ஊடகங்களில் இன்னும் சுருக்கமாக எழுத பழகியாகிவிட்டது. ஆழமான உணர்வுகளுக்கு நாவல் வடிவம் போதுமானதாக இருக்கிறது. இந்த எண்ணங்களினாலேயே சிறுகதை வாசிப்பை விட்டு நகர்ந்து வந்து விட்டேன். நண்பர்கள் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கும் அவர்களது சிறுகதைகளைக் கூட வாசிப்பதில்லை. இரண்டு நாட்களாகத்தான் மானசீகன் தினம் ஒரு சிறுகதை வாசிப்பை முன்னெடுத்திருப்பதால் வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். இந்த புத்தகம் மீண்டும் என்னைச் சிறுகதைகளை நோக்கி நகர்த்துகிறது.

1.முள்ளம்பன்றிகளின் கதை.

புத்தகத்திற்குத் தலைப்பாக வைக்கப்படும் சிறுகதைதான் அந்த புத்தகத்தின் சிறந்த சிறுகதையாக இருக்கும் என்பது அறிந்த விசயம் தான். அதை நிரூபிப்பது போலவே இந்த கதை புத்தகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. அறிவியல் புனைவு என்று சொல்லப்பட்டு இருக்கிறதே, என்னவாக இருக்கும் என வாசிக்க ஆரம்பித்தால் அதிகம் மனித உறவுகள், மன உணர்வுகள் என்றுதான் சென்றன. ஆனால் இடையிடையே கதை பேசி இருக்கும் அரசியல் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் அரசு என்னும் அதிகார மையம் நம்மை எப்படி எல்லாம் கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் என இலைமறைகாயாகச் சொல்லி இருக்கிறார். அதிலும் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பதைச் சொல்லும் இடம் அற்புதம். அறிவியல் புனைவு சிறுகதைகளில் இக்கதை பெரும் பாய்ச்சல்.

2. சமீபத்திய மூன்று சண்டைகள்

கணவன் மனைவி இடையிலான சண்டைகளை நான் லீனியரில் சொல்லி இருக்கும் இக்கதை, கிட்டத்தட்ட தற்போதைய தலைமுறை தம்பதிகளின் மணவாழ்க்கையைப் படம் பிடித்துத் தந்துள்ளது என்றே சொல்லலாம். கதையின் கடைசிக் கட்டத்தை வெகுவாக ரசித்தேன்.

3. ஈரப் பன்னீர்ப்பூ

அழுதுவிட்டேன். ஏன்னா இது என்னுடைய வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டு வந்தது. இக்கதை சொல்லும் உணர்வு எத்தனை பேருக்கு புரியுமென்று தெரியலை.

4. மல்லிகா அத்தை

கதையின் முடிவு பெரிய திருப்பமாக எனக்குப் படலை, ஆனால் ஒரு சிறுவனுடைய மனப்போக்கை ரொம்ப இயல்பா வெளிப்படுத்தி இருந்தார். அதை நிறைய ரசித்தேன்.

5. தில்லி 06

இந்த கதையுடைய இறுதியில் பயங்கரமா சிரித்தேன். ஆரம்பத்தில் பெருசா என்னை ஈர்க்கவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் சிரிக்க வச்சுருச்சு.

6,7,9. கினோகுனியா, சமவெளி மான், காட்சிப் பிழை

இந்த நான்கு கதைகளும் மேஜிக்கல் ரியலிசம் வகையில் எழுதப்பட்டுள்ளது. எனக்கு இது போன்றவற்றைப் புரிந்து கொள்வதில் போதாமை உள்ளது. இது கடத்த வரும் உணர்வு எது என்பதில் குழப்பம் ஏற்படும். அதை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். அதனாலேயே எனக்கு இவ்வகை கதைகள் மீது பெரிய ஆர்வமில்லை. சமவெளி மானின் கதையை விரித்து ஓரிதழ்ப்பூ நாவலாக எழுதியிருக்கிறதாகக் குறிப்பிட்டுள்ளார். கண்டிப்பாக அதனை வாசிப்பேன்.

8,13,14. நீலகண்டப்பறவை, ராவண சீதா, பவழமல்லிப் பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்

இந்த மூன்று கதைகளும் கிட்டத்தட்ட ஒரே கதையின் மூன்று பகுதிகளாகத்தான் எனக்குப் பட்டது. ஏனென்றால் மூன்றிலும் ஒரே கதைசொல்லிதான். தன் வாழ்வில் வந்த மூன்று பெண்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். ராவண சீதாவை வெகுவாக ரசித்தேன். அதிலும் “கருத்த பெண்களும் கனத்த முலைகளும்” இடம் அட்டகாசம்.

10. எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை

இது போன்ற பெண் ஒருத்தியை என் வாழ்வில் கடந்து வந்திருக்கிறேன். படிக்கையில் அட நாம் கூட அவளைப் பற்றி எழுதி இருக்கலாமே எனத் தோன்றியது. கதையின் முடிவு அருமை. அதிலும் எண்களைக் குறிப்பிடுவது அட்டகாசம்.

11. மூங்கில் மலரும் பெயரற்ற நிலங்களின் கதை

அட்டகாசம். எப்படி இப்படி யோசிக்க முடிந்தது என்றே தெரியவில்லை. நாம் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத கதைக் களத்தை எடுத்தது கூட பரவாயில்லை. அந்த கதை முடிவு, யப்பா சாமி, எப்படிய்யா இந்த கதையை எழுதுன? செம செம செம.

12. சரக்கொன்றையின் கடைசி தினம்.

முள்ளம்பன்றிகளின் விடுதி கதையைப் போலத்தான். அறிவியல் புனைவையும் மனித உணர்வுகளையும் இணைத்து எழுதப்பட்ட கதை. அறிவியல் புனைவுகளில் அரசியலை இணைப்பதைத்தான் பெரும் வெற்றி என்பேன். இதுவும் அறிவியல் புனைவில் ஒரு புதிய திறப்பு.

ஸீரோ டிகிரியின் எழுத்து பிரச்சாரம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. அட்டைப்படமும் சரி, புத்தகமும் சரி மிக அருமையாக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

கதாபாத்திரங்களின் பெயர் தேர்வுகள் அனைத்தும் தமிழ்ப் பெயர்களாக மிக அழகாக இருந்தன. அவற்றை இரசிக்காமல் கடக்க இயலவில்லை. எழுத்தாளரது “ஹப்பி” புத்தகத்துடன் சேர்த்துக் கடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன்.

அய்யனார் விஸ்வநாத் கண்டிப்பாகத் தமிழ் எழுத்துலகில் தவிர்க்க இயலாதவராக வளர்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் – அறிஞர் அண்ணா

நம் மாநிலத்தை பொறுத்தவரை சிவாஜி என்றாலே முதலில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கனேசன்தான் நினைவுக்கு வருவார். ஆனால் அவர் பெயரில் உள்ள சிவாஜி என்பது மராட்டிய மன்னன் சிவாஜியாக வேடமிட்டு செம்மையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதால் தந்தை பெரியார் அவர்களால் வழங்கப்பட்ட பட்டம். அப்படிப்பட்ட அடையாளத்தை நடிகர் கனேசனுக்கு கொடுத்த நாடகம் தான் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்”.

வரலாறு அறிந்தவர்களுக்கு மராட்டியர்களின் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் சிவாஜி என்பது தெரிந்திருக்க கூடும். ஆனால் மராட்டியர்களின் வரலாறும் எழுச்சியும் மிக சிறியதல்ல. முகலாயர்களால் இந்தியா ஆண்ட பொழுது முதலில் எதிர்த்த பல ராஜபுத்திர அரசர்கள் பின்னர் மன்சப்தாரர்களாய் அவர்களுக்கு கப்பம் கட்டத் துவங்கி இருந்தனர். ஔரங்கஷிப் ஆட்சிக் காலத்தில் அவரது அதீத இஸ்லாமித்துவம் அதுவரை அடங்கி இருந்தவர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்ய துவங்கியது.

தக்காண பாமினி அரசினை வென்று தென்னிந்தியா முழுவதும் முகலாய ஆட்சியை விரிவுபடுத்த ஔரங்கசிப் முயன்றுக் கொண்டுருக்க, முகல் & பாமினி என்ற இரண்டு இஸ்லாம் ஆட்சியும் வேண்டாம், இந்துக்கள் நிறைந்த இம்மராட்டியம் இந்து தேசமாகத்தான் இருக்க வேண்டும் என்று எழுந்த ஒரு புயல்தான் சிவாஜி. உண்மையில் தந்தையின் அரவணைப்பு கூட இல்லாமல் வளர்ந்த அந்த சிறுவன் தனது 20 வயதுக்குள்ளாகவே போர்க்களம் புகுந்திருந்தான்.

சிவாஜியின் வரலாற்றை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். வேண்டாம். சுருக்கமாக சொல்வதென்றால் மராட்டியர்களை ஒடுக்க டெல்லியில் இருந்த தக்காணத்திற்கு வந்த ஔரங்கஷிப்பால் 20 ஆண்டுகளை கடந்தும் டெல்லிக்கு திரும்ப முடியவில்லை. அங்கேயே இறக்க நேர்ந்தது. அப்படி போராடி மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியை அவரது பிறப்பை காரணம் காட்டி, சத்ரியர் மட்டுமே நாடாள முடியும் என்று சித்பவண் பிராமணர்கள் பட்டாபிஷேகம் செய்து வைக்க மறுக்கிறார்கள். 

யோசித்து பாருங்கள். தன் வாழ் நாள் முழுவதும் போராடி ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மனிதரை சாதியை வர்ணத்தை சொல்லி நாடாளும் தகுதியில்லை என்றால் எப்படி இருக்கும்? குடியானவன் போர் புரியும் பொழுதே தடுத்திருக்கலாமே? அப்போது வாழ்த்தி அனுப்பியவர்கள் இதற்கு மட்டும் தடை சொல்லலாமா? மராட்டிய பிராமனர்கள் மறுத்த பின் காசியில் உள்ள காகபட்டர் என்ற பிராமணர் உதவியால் சத்ரபதியாக சிவாஜி பதவியேற்றுக் கொண்டார் என்பது வரலாறு. இதைத்தான் அம்பெத்கரின் நூலும் சொல்கிறது. இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகம் தான் சந்திரமோகன் – சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்.

அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் ஆழமான கதையோ திடுக்கிடும் திருப்பங்களோ இருக்காது. செந்தமிழும் திராவிடமுமே மிகுந்திருக்கும். ஆரியத்தை தோலுரிக்க வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா? ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு படிப்போருக்கு இதன் வீரியம் பெரிதாய் தெரியாது.

அதிலும் சந்திரமோகன் என்பவர் சிவாஜியின் தளபதி போன்றொரு பாத்திரம், அதற்கு தனியாய் ஒரு காதல் காட்சிகள் என்று சொல்ல வரும் கருத்துக்களுக்கு தேவையற்ற காட்சிகள் இருக்கின்றன.

நாடகத்தை படித்து விட்டு, இணையத்தில் இதனைப் பற்றி தேடுகையில் நிறைய தகவல்கள் கிடைத்தன. முதலில் சிவாஜியாக நடிக்க இருந்த எம்ஜியார் மறுக்கவே, அவசர அவசரமாக கனேசனுக்கு வசனங்கள் சொல்லித் தரப்பட்டன. ஒரு நாளிலேயே தயாராகி சிவாஜியாகவே வாழ்ந்து காட்டினார் கனேசன். இந்த நாடகத்தில் வரும் காகப்பட்டர் பாத்திரத்தை அண்ணாதான் அதிகம் நடிப்பாராம். அண்ணாவின் நடிப்பு எப்படி இருக்கும் என தெரிந்துக் கொள்ள மிகவும் ஆசைப்படுகிறேன்.

ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தில் இந்த நாடகத்தின் ஒரு காட்சி எடுத்துக் கையாளப் பட்டுருக்கும். அதன் இணைப்பினை தருகிறேன். பாருங்கள். அப்போது இந்த நாடகத்தின் வீரியம் பிடிபடலாம்.

இந்த நூல் பல தளங்களில் இலவசமாக கிடைக்கின்றன. கூகுள் தளத்தில் பெயர் போட்டு தேடினாலே கிடைக்கும்.

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே – நா.முத்து நிலவன்

கல்வி தொடர்பான புத்தகம் ஒன்றினை வாசிக்க வேண்டும் என்றதுமே நான் இந்த நூலைத்தான் நினைத்தேன். காரணம் இதன் தலைப்பே மிகவும் எதிர்பார்ப்பினை தூண்டுவதாக இருந்தது. பலர் இந்த புத்தகத்தினைப் பற்றி நம் குழுமத்திலேயே எழுதி இருந்தாலும் அதற்கு முன்பே நூலின் தலைப்பினைப் பார்த்தே இதனை வாசித்து விடுவது என நினைத்திருந்தேன். 

Mudhal Mathipen Eduka Vendam Magale! (Tamil Edition) eBook: Naa ...

ஆசிரியர் பல பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. அனைத்துமே கல்வியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவைதான்.

ஆசிரியர் உமாவை கொலை செய்தது யார் என்ற கட்டுரையினை நான் வெளியான போதே வாசித்த நினைவு இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் விவாதித்த விசயம் அது. ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரை அத்தனை முறை கத்தியால் குத்தி கொலை செய்ததை மறக்க இயலுமா? நான் அப்போது உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த காலம். கல்லூரியில் அனைவரும் அது குறித்து விவாதித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. கல்வித்துறையில் மட்டுமன்றி எந்தெந்த சமூக காரணங்கள் அம்மாணவனை கத்தியெடுக்க வைத்தது என்பதைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்.

அடுத்து கல்வித் துறையின் தலையாய பிரச்சனையாக இருக்கும் கல்வி ‘புகட்டப்படுவதைப்’ பற்றி சொல்லியிருக்கிறார். இது எத்தனை ஆண்டுகள் பேசினாலும் தீராத காஷ்மீர் பிரச்சனை போலவேதான் இருக்கிறது. நாட்டில் அனைவருக்குமே தெரிகிறது, இப்போதுள்ள கல்விமுறை வெறுமனே மனப்பாடம் செய்வதை மட்டும் தான் ஊக்குவிக்கிறது என்பது ஊரறிந்த இரகசியமாக இருந்தும் இன்னும் எதற்காக இந்த மதிப்பெண்ணை நோக்கிய ஓட்டப் பந்தயம்?

சமச்சீர் கல்விமுறை வந்த பொழுது இத்தனை சிக்கல்கள் இருந்தன என்பதனை இந்த நூலில் வாசிக்கையில்தான் தெரிந்துக் கொண்டேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. ஆனால் தேங்காமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றளவு மகிழ்ச்சிதான்.

முத்தாய்ப்பான கட்டுரையாக இல்லை இல்லை கடிதமாக இருப்பது “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” தான். கல்லூரியில் பயிலும் தனது மகளுக்கு ஆசிரியர் எழுதியுள்ள இந்தக் கடிதமானது, நாட்டின் அனைத்து பிள்ளைகளுடன் அனைத்து பெற்றொர்களும் படிக்க வேண்டிய ஒன்று. உண்மையில் இந்த முதல் மதிப்பெண் என்பதெல்லாம் ஒரு நாள் கூத்துதான். அதற்காக வாழ்வில் ஓராண்டு மன அழுத்தத்தோடு, மற்ற அனைத்து விசயங்களையும் தியாகம் செய்துவிட்டு பாடப்புத்தகத்திலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று.

ஆசிரியர் கூறும் இரண்டு விசயம் கட்டாயம் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஒன்று ஒரே வினாத்தாளுக்கு நாடு முழுக்க மாணவர்கள் தேர்வெழுதி, யார் எத்தனை மதிப்பெண் என்று பட்டியலிடுவதைத் தவிர்த்துவிட்டு, நூற்றுக் கணக்கில் வினாத்தாள்களை தயார் செய்து, ஆளுக்கொன்றாய் கொடுத்து, கணிணியில் தேர்வெழுத வைத்து, கணிணியே திருத்தி கொடுத்தல். இம்முறை அவன் படித்திருக்கிறானா என்று சோதிக்க போதுமானது. அவன் வேறெந்த மானப்பாடமும் செய்ய வேண்டி இருக்காது. காபியடித்தான் நிகழாது.

இன்னொன்று தேர்வு என்ற ஒன்று நடந்தால் அது திருத்தப்பட்டதும் விடைத்தாள் மாணவனுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தேர்வெழுதும் மாணவர்களின், அதற்கு பணம் கட்டும் பெற்றோர்களின் உரிமை. அதை அரசு/தனியார் கல்வி நிறுவனங்கள் செய்தே ஆக வேண்டும்.

எனக்கு இன்னொரு எண்ணம் வெகு நாட்களாக உண்டு. திறந்த புத்தக தேர்வு முறை. மாணவர்கள் தேர்வு எழுதுகையில் கையில் புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தினை கொடுத்து விட வேண்டும். அதில் முக்கியமான தரவுகள் மட்டும் இருக்கும். உதாரணத்திற்கு ஆண்டுகள், எண்ணிக்கைகள் போன்ற மனனம் செய்ய வேண்டியவைகள். தேர்வு அறையில் அமர்ந்து அந்த தரவுகளில் சந்தேகம் வரும் பொழுது எடுத்துப் பார்த்துவிட்டு சொந்தமாக எழுத வேண்டும். வாழ்வில் கல்விச்சாலையை தாண்டிய பிறகு யாரும் இப்படி அமர்ந்து நிஜவாழ்வில் தேர்வு எழுத போவதில்லை. தேவையான தகவலை புத்தகத்தில் பார்க்கத்தான் போகிறோம். மாணவர்களுக்கு இப்படி எந்தேந்த தகவல்கள் எங்கிருந்து கிடைக்கும் என்ற விவரம் தெரிந்தால் போதாதா? உதாரணத்திற்கு பாரதியாரின் பாடல்களை படிப்பதுடன் அவர் பிறந்த/இறந்த ஆண்டை மனனம் செய்வதான் அவனுக்கு என்ன இலாபம் இருக்கிறது? ஒரு நானோ மீட்டர் என்றால் எத்தனை மீட்டர் என்பது அந்த தேர்வெழுதும் கணத்தில் நினைவில் இல்லை என்பதற்காக அவனுக்கு எதற்கு முட்டாள் பட்டம்? மனனம் செய்வதை தவிர்க்கும் வகையினை இந்த திறந்த புத்தக தேர்வு முறை நீக்கும். அடுத்து வினாக்களின் தரத்தை உயர்த்தினால் போதுமானது.

தனியார் பள்ளிகளின் பித்தலாட்டங்களாய் தோலுரித்திருக்கிறார். அதற்கு அரசு அதிகாரிகளின் துணை வேறு. அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றால் சுயமரியாதை இருப்பவர்கள் விருது பெற வாய்ப்புண்டா என அருமையான கேள்வியினையும் எழுப்புகிறார்.

நான் மிகவும் இரசித்தது, தமிழய்யா தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை அவர்களது கிராமத்திற்கே சென்று பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ள கட்டுரை. மிக மிக அருமை.

நூலை வாசித்து முடித்த பிறகுதான் நினைவு வந்தது. ஆசிரியருடன் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். நமது வாசிப்பை நேசிப்போம் குழு துவங்கி முதல் வாசிப்புப் போட்டி நடந்த பொழுது, அவராக தொடர்பு கொண்டு பேசி, நம் முயற்சியை பாராட்டி, புத்தக பரிசளிக்க பணமும் அனுப்பி வைத்தார். அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். கிண்டில் அன்லிமிட்டட்டில் கிடைக்கிறது.

Letters from a Father to his Daughter – Jawaharlal Nehru

நாட்டின் முதல் பிரதமர் நேருவை பற்றிய அறிமுகமில்லாதவர்கள் யாரும் இருக்க இயலாது. ஆனால் அதுவே இந்திரா பிரியதர்ஷினியின் தந்தை நேருவை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். நாட்டுக்காக சிறைகளில் உழன்ற நேரத்திலும் தன் மகளின் வளர்ப்பில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தந்தையும் குழந்தைகளின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதை போலவே நேருவும் தன் மகளுக்கு தனக்கு தெரிந்ததை சொல்லித்தருகிறார், கடிதங்களின் வாயிலாக…

1928ல் அலகாபாத் சிறைச்சாலையில் இருந்து தனது 10 வயது மகளுக்கு எழுதும் கடிதங்கள் வாயிலாக அவளுக்கு இந்த உலகத்தை எங்ஙனம் பார்க்க வேண்டும் என கற்றுத் தருகிறார். அதற்கு வரலாறை விட சிறந்த பாடமுறை என்ன இருக்க போகிறது? வரலாற்றின் துவக்கம் இப்போது பெருவெடிப்பில் இருந்து இருக்கலாம். ஆனால் அப்போது சூரியனில் இருந்து பூமி தனியாக பிரிந்து வருவதில் இருந்துதானே துவங்குகிறது.

ஒரு கூழாங்கல்லை உற்று நோக்குவதன் மூலம் அது எப்படி பாறையில் இருந்து, வெடித்து சிதறி, ஆற்றில் அடித்து வரப்பட்டு, கரைகளில் வந்து சேர்கிறது என்பதை அறியலாம் என வரலாற்றை கற்றுக் கொள்ளும் முறையில் இருந்து வரலாற்றை சொல்ல துவங்குகிறார். சூரியனில் இருந்து கோள்கள் பிரிந்ததையும், பூமியில் இருந்து நிலா பிரிந்ததையும் சொல்லி விட்டு, பெரும்பனிக் காலத்தில் இருந்து உயிரினங்களின் தோற்றம் பற்றி சொல்கிறார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் எது வரை கண்டறிந்திருக்கிறது என்பதற்கு இந்த நூல் ஒரு அளவுகோளாக உதவக்கூடும். அதிலும் ஒவ்வொன்றை பற்றி சொல்லும் பொழுதும் நாம் இந்த நாட்டிற்கு இந்த அருங்காட்சியகத்திற்கு செல்லும் பொழுது பார்த்தோமே, நினைவு இருக்கிறதா என கேட்கிறார். எவ்வளவு பெரிய பணக்காரார்? குடும்பத்தை பிரிந்து நாட்டுக்காக சிறையில் இருந்திருக்கிறார் என புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்து மனிதர்களின் தோற்றம் பற்றி அவர் சொல்வதைத்தான் சேப்பியன்ஸ் புத்தகமும் விரிவாக சொல்கிறது. ஆதிவாசி எப்படி இயற்கையை சரிவர புரிந்து கொள்ளாமல், அதற்கு பயந்து, கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி, அதனுடன் சமரசத்திற்காக பலி கொடுப்பதை துவங்கி வைத்தான் என விளக்குகிறார்.

அடுத்து ஆதிமனிதன், வேட்டையாடியாகி, இனக்குழுவாக மாறி, அதற்கு ஒரு தலைவன் உருவாகி, மன்னர் முறைக்கு அது வித்திட்டதை விளக்குகிறார். குறிப்பாக எப்படி, ஒரே குடும்ப வம்சாவழிக்கு அந்த பதவி செல்கிறது, அதன் மூலம் பொது சொத்து எப்படி தனியார் உடைமையாகிறது, ஒன்றாக உழைத்தாலும் ஏற்றத்தாழ்வு உருவானது எப்படி என விளக்குகிறார்.

அடுத்து மனித இனக்குழுக்கள் பற்றி விளக்க துவங்கும் பொழுது இந்தியாவின் பூர்வக்குடிகள் திராவிடர்கள்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறார். அதற்கு ஆதாரமாக, வெப்ப நடுநிலைப்பகுதியான இந்தியாவில் காலகாலமாக வாழ்ந்து வரும் மக்களின் நிறம் கருப்பாக மட்டும் தான் இருக்க முடியும். மத்திய/மேற்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் நிறம் வெண்மை/கோதுமை நிறமாக இருப்பதை சொல்கிறார். மேலும் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வெவ்வேறு திசைக்கு நாடோடிகளாக தனித்தனி குழுக்களாக செல்கிறார்கள். அவர்களின் மொழி ஒவ்வொரு பக்கமும் தனித்தனியாக கிளை மொழிகளாக வளர்ந்தாலும் மூலச்சொற்கள் வழி அனைத்தும் ஒரு மூலமொழியில் இருந்துதான் உருவானவை என்பதை உதாரணத்துடன் விளக்குகிறார்.

இப்போது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள், சிந்து வெளி நாகரீகம் திராவிடர்களுடையது என ஆதாரங்களுடன் தனது ஆய்வை வெளியிட்டுருக்கிறார். ஆனால் சிந்துவெளி கண்டுபிடிக்கப்பட்டது 1925ம் ஆண்டு, அதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய கடிதத்திலேயே நேரு அங்கு இருந்தவர்கள் திராவிடர்கள் என்றுதான் குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரங்களை வேதங்கள், புராணங்கள், இதிகாசத்திலிருந்து தருகிறார்.

உலகம் முழுக்க இப்படி ஆற்றங்கரை நாகரீகங்கள் எப்படி உருவானது என்பதை விளக்கி, அவை எவ்வாறு மறைந்தன என்பதையும் சொல்கிறார். இதிகாசங்களான இராமாயண, மகாபாரதங்களை அறிமுகப்படுத்துவதோடு அவரது கடிதத்தொடர் நிறைவுறுகிறது. இது அவரது முதல் கடித தொகுப்பு. அடுத்த முறை சிறைக்கு வந்த பொழுது மகளுக்கு கடிதங்கள் மூலம் உலக நாடுகள் வரலாற்றினை சொல்லி தந்திருக்கிறார். அடுத்து அதையும் வாசிக்க விரும்புகிறேன்.

என்னுடைய தோழி ஒருத்திக்கு அவளது தந்தை படிக்கும் காலத்தில் வாரவாரம் கடிதம் எழுதுவார். போனில் பேசும் பொழுது கடிதம் வந்ததா என விசாரிப்பார். தொடர்ச்சியாக மகள்களுக்கு கடிதங்கள் வாயிலாக நிறைய கற்று தருவார். அவர் மூலமாகத்தான் இது நேருவின் முறை என்பது முதலில் எனக்கு அறிமுகமானது. 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நேருவின் கடிதங்களை படித்திருக்கிறேன்.

ஆனால் ஆர்வத்தில் நானும் கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். இன்னமும் அனுப்புவதற்காக வாங்கி வைத்திருக்கும் கடிதங்கள் 200 இருக்கும். எப்போது யாருக்கு அனுப்ப போகிறேன் என தெரியவில்லை.

இந்த புத்தகம் வெளிவந்து 90 வருடங்களாகிறது. யார் வேண்டுமானாலும் எந்த வகையில் வேண்டுமானாலும் இலவசமாக வாசிக்கலாம். தமிழில் கிடைக்காததால் ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். என்னை கேட்டால் 5ம் வகுப்பு குழந்தைகளுக்கு இதனை கட்டாய பாடமாக்க வேண்டும். அப்போதுதான் வரலாறு குறித்த அறிமுகம் கிடைக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் கட்டாயம் வாங்கி கொடுங்கள். தமிழிலும் மொழிப்பெயர்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். வரலாறு குறித்த அறிமுகம் தேவைப்படும் பெரியவர்களும் இதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

பருவம் – எஸ்.எல்.பைரப்பா

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வளரும்போதே இயல்பாய் ஊட்டப்படும் கதைகள் இராமாயணமும் மகாபாரதமும். தமிழர்களே கூட ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் இந்தியர்கள் கட்டாயம் இந்த இதிகாசங்களை அறிந்திருப்பார்கள். ஒருவேளை வாழும் காலத்தில் நேரம் கிடைக்கவில்லை என்றாலும் ஓய்வான காலத்தில் இதை நோக்கித்தான் அவர்களது தேடல் இருக்கும். அப்படிப்பட்ட இதிகாசங்களில் எனக்கு இராமாயணத்தை விட மகாபாரதம் தான் மிகவும் பிடிக்கும்.

சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் பார்த்த தெருக்கூத்துகளில் துவங்கும் இந்த கதை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் துளியும் அலுக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் புதிதாக சொல்கிறார்கள். கூத்தில் இருந்து, சினிமா, சீரியல் என பார்த்தும் புத்தகங்களில் படித்தும் கேட்ட கதைகள் முற்றிலும் வேறு ஒரு கதையாக சொல்லப்பட்டால் அதை விட வேறு எது சுவாரசியம் தந்து விடப்போகிறது?

இதற்கு முன்பு “இரண்டாம் இடம்” நாவல் வாசித்திருந்தேன். அது மொத்த மகாபாரதத்தையும் வேறு கோணத்தில் காட்டியது என்றால் இந்த “பருவம்” தலைகீழாக புரட்டி விட்டது என்றே சொல்லலாம். 927 பக்க நூலை, தினம் 100 பக்கங்களாக நிதானமாக இரசித்து வாசித்தேன்.

பருவம் – Dial for Books

கதை துவங்கும் பொழுதே நூறு வயது கடந்த மத்ர தேசத்து அரசன் சல்லியனிடம் இருந்து தொடங்குகிறது. இதுவரை படித்த மகாபாரதங்களில் போரில் துணைப்பாத்திரமாக வந்த சல்லியனைக் கொண்டு கதையை துவங்குவதே வித்தியாசமாக இருந்தது. அதுவும் அவரது வயது. குரு நாட்டில் யுத்தம் வர வாய்ப்பிருக்கிறதாம் என காற்றுவாக்கில் வரும் செய்திக்கு அவர்களின் எதிர்வினை என புதிய கோணம்.

என்னதான் அரசனாக இருந்தாலும் பேத்திக்கு சுயம்வரம் நடத்த வசதி இல்லாமல் இருப்பதே புது தகவல். அவளின் திருமணத்தினை மனதில் கொண்டே போரில் கலந்து கொள்கிறார். இப்போது மேடைக்கு மேடை பாரத கலாச்சாரம் என்று ஒற்றைத்தன்மையை நிறுவ முயற்சிப்பது போல் அப்போது இல்லை. முழுக்க ஆரியர்களே இருந்தாலும் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் ஒவ்வொரு வித கலாச்சாரம். ஒரு பகுதியில் பெண்ணுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வரலாம். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் கொடுப்பார்கள். வடக்கே சென்றால் சகொதரர்களுக்கு பொது மனைவி முறை என ஏகப்பட்ட வகைகளில் வாழ்வியல் முறைகள்.

அப்ப்டியே கதை 80 வயதினைக் கடந்த குந்தியின் பார்வையில் நகர்கிறது. தன் பிள்ளைகளுக்காக கிருஷ்ணன் சமாதான தூது வந்திருக்கையில் ஆற்றங்கரையோரம் அமர்ந்திருந்து, தன் மொத்த வாழ்வினையும் ஒருமுறை ஓட்டிப் பார்க்கிறாள். நாம் சினிமா/சீரியல்களில் பார்த்தது போல் ஒரு மந்திரத்தை சொன்னால் குழந்தை பிறக்கும் லாஜிக் மீறல்கள் எதுவுமில்லை.

இளமையும் அழகும் கொண்ட பாண்டுவினை மணந்து வரும் குந்தி & மாதுரி இருவருமே எந்த குறையும் இல்லாதவர்கள். ஆனால் சிறுவயதிலேயே நூற்றுக்கணக்கான பணிப்பெண்களுடன் ஆட்டம் போட்ட பாண்டு சுத்தமாக வீரியம் இழந்திருக்கிறான். வடக்கே இமயமலை அடிவாரம் சென்று பர்ணசாலை அமைத்து, வைத்தியம் செய்து கொள்ள முயல்கிறான். ஆனால் அவன் காட்டுக்கு வந்ததும் அவனது பார்வையற்ற அண்ணனுக்கு காந்தாரியுடன் திருமணம் நடக்கிறது. அவனுக்கு முதலில் குழந்தை பிறந்தால் அரசாட்சி மூத்த குழந்தைக்கு செல்ல வேண்டும் என்பதால் நியோகம் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறான் பாண்டு.

நியோகம் என்றால் கணவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழலில் வேறு ஒருவரிடம் இருந்து விந்துவை தானமாக பெறுவதுதான். ஆனால் அந்த காலத்தில் அறிவியல்முறைகள் இல்லாததால் நேரடியான உடலுறவில் ஈடுபட வேண்டி இருக்கும். ஆனால் அது ஒரு பூஜை போலத்தான் நடக்கும். விதிமுறைகளை கவனியுங்கள்.

  • நியோகம் பெரும்பாலும் பிராமணர்களால் தான் செய்யப்பட வேண்டும். சமயங்களில் கணவனின் உறவினர்களும் ஈடுபடுத்தபடுவார்கள்.
  • குழந்தைக்காக என்பதை தவிர இருவரிடையே வேறு எந்த உணர்வுகளும் இருக்க கூடாது
  • கூடலின் போது கூட மனைவி, கணவன் குறித்தே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்
  • கரு உண்டாகும் வரை தொடர்ச்சியாக கூடலாம். அதன் பின் அவரை தந்தையாக நினைத்து வணங்கி, அவரிடமிருந்து விலகி விட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாண்டு நியோகம் செய்ய முடிவெடுத்த பொழுது, அவர்களுடன் இருக்க வேண்டிய பிராமணர் ஊருக்கு சென்றிருப்பார். அதனால் அருகிலுள்ள தேவலோகத்தில் உள்ள தர்மஅதிகாரியை உதவி கேட்க, பாண்டவர்களின் மூத்தவனான தர்மன் பிறப்பான். அடுத்து வலிமைக்காக தேவர்களின் தளபதி, அதே போல் அடுத்து தேவர்களின் தலைவன் இந்திரன் நியோகம் செய்து பீமன், அர்ச்சுனன் பிறப்பார்கள். இரட்டை சகோதரர்களான அஸ்வினி வைத்தியர்களுடன் கூடி மாதுரி நகுலன், சகாதேவனை பெற்றெடுப்பாள்.

தேவலோகம் என்றதும் வானத்தில் இருக்கும் என நினைக்க வேண்டாம். இமயமலைக்கு மேலே இருக்கும் தேவர்கள் என்ற இனக்கூட்டம் வாழும் இடம் தான் தேவலோகம். அங்கு முப்பது இனக்குழுக்கள் இருக்கும். யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம். நாம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என சொல்வது இவர்களைத்தான்.

அதே சமயம் திருதராட்டினுக்கு துரியோதனன் பிறந்திருப்பான். அடுத்தடுத்து கௌரவர்கள் பிறந்திருப்பார்கள். மகாபாரத கதை அனைவரும் அறிந்தது தானே? சுவாரசியம் என்னவென்றால் யார் யாருடைய பாணியில் விவரிக்க படுகிறது என்பதுதான்.

அடுத்து பீமன் பார்வையில் கதை துவங்கும். சினிமா/சீரியலில் பார்த்தவர்களுக்கு ஒரு தோற்றப்பிழை இருக்கும். என்னவெனில் தொலைவினை அவர்கள் உணரவே வாய்ப்பில்லை. இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் நடமாட எத்தனை நாட்கள் தேவை என யோசியுங்கள்? அஸ்தினாபுரம்-விராடதேசம்-மத்ரதேசம்-துவாரகை இது அத்தனையுமே குறைந்தது 15 நாட்கள் பயணம் தேவைப்படக்கூடிய தொலைவில் இருக்கும் இடங்கள். அதேபோல் கதை மாந்தர்களின் வயது. கர்ணன் படம் பார்த்தவர்களுக்கு கடைசிவரை சிவாஜிக்கு வயதே ஆகாததை பற்றி யோசிக்கவே வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் மகாபாரதத்தின் படி குந்திக்கு 15 வயதில் பிறக்கும் கர்ணனுக்கு, குருஷேத்திரம் துவங்குகையில் 65 வயது ஆகியிருக்கும். பேரன் பேத்தி எடுத்திருப்பான். அதை விட விஜய் டீவி சீரியல் பார்த்தவர்கள் பலமாய் ஏமாந்திருப்பதும் இந்த உருவத்தில் தான். அனைத்து பாத்திரங்களும் சிக்ஸ் பேக்கிலேயே மனதில் தங்கும். ஆனால் நிதர்சனம் என்ன?

காலங்கள் உருண்டோட முதுமையும் வருமே…! சூதில் தோற்ற நாட்டினை திரும்ப கேட்க வருகையில் பாண்டவர்கள் அனைவரும் 50ஐ தாண்டி இருப்பார்கள். பாஞ்சாலிக்கு நரை விழ துவங்கி இருக்கும். அனைவருக்கும் மூத்தவனான கர்ணனுக்கு பற்களே விழ துவங்கி இருக்கும். அந்த நிலையில்தான் இவர்கள் அனைத்து நாட்டினரையும் திரட்டி யுத்தத்தை தொடங்குவார்கள்.

யுத்தத்தையும் திரையில் பார்த்த நமக்கு இந்த புத்தகம் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். முதலில் யுத்தமெனில் மகாராணி ஆரத்தி எடுத்து வெற்றித்திலகமிட்டு அனுப்புவார்கள். வீரன் அடுத்த ஷாட்டில் இரதத்தில் இருந்து அம்பெய்து கொண்டிருப்பான். ஆனால் நிஜம் என்ன? அனைவருமே கிளம்பி நகருக்கு வெளியே ஏதோ ஓரிடத்தில் கூடாரமிட்டு தங்கி போரிட வேண்டும். அங்கு உணவு கூட சமாளித்து விடலாம். தண்ணீர்? அதுவும் இயற்கை உபாதைகளுக்கு?

முதல் நாள் பெரிதாக இருக்காது. அடுத்தடுத்த நாள் மரணபயத்தில் பேதியாகும் இலட்சகணக்கான வீரர்கள் நிறைந்த அந்த இடத்தின் சுகாதார நிலை எப்படி இருக்கும் என யோசிக்க முடிகிறதா? அந்த நாற்றத்தில் உண்ண முடியுமா? உறங்க முடியுமா? இதில் என்ன இலட்சணத்தில் போரிட முடியும்? இது போன்ற பல யதார்த்த சிரமங்களை வெளிப்படையாக சொல்வதுதான் இந்த புத்தகத்தின் முதல் நல்ல விசயம்.

அடுத்து மனிதர்களின் உணர்வுகளை பேசுவது. பீமனின் பார்வையில் கதை செல்கையில் அவன் வாழ்வில் வந்த பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டே அப்படியே மற்றவர்கள் குறித்தும் யோசிக்கிறான். ஏற்கனவே இரண்டாம் இடம் நாவல் பீமனின் பார்வையிலான கதை என்றாலும் இது கொஞ்சம் மாறுபடும். அடுத்து துரௌபதியின் பார்வை. நான் மிகவும் இரசித்த பகுதி இது. கண்டு காதலித்த அர்ச்சுனனிடமிருந்த அவள் காதலும் நேசமும் பீமன் பக்கம் திரும்பும் இடம் அவ்வளவு அருமையாக இருக்கும்.

இந்த புத்தகத்தில் எனக்கு முழுவதும் புதியதாய் இருந்தது கிருஷ்ணன் பற்றி அவனது யாதவ நண்பன் யுயுதானன் பார்வையில் கதை சொல்லப்படும் பகுதி. மனிதனாக காட்டினாலும் இவனை போல் தந்திரசாலி யாருமில்லை என அனைவரும் போற்றும் கிருஷ்ணன் வாழ்வானது முற்றிலும் புதிய கோணத்தில் மிகவும் இரசிக்கத்தக்க வகையில் இருந்தது.

அடுத்து அர்ச்சுனன் பார்வையில் போய்விட்டு, பேரன் பேத்தி எடுத்த கர்ணன் தாத்தா பார்வையில் வருகையில் எழுந்து அமர்ந்து விடுவோம். கர்ணன் தாத்தாவா? விஜய் டீவி மகாபார்தம் சீரியலில் பலருக்கு கர்ணனாக நடித்தவரை பிடித்திருக்கும். ஆனால் என்ன செய்ய? யுத்தம் நடக்கையில் கர்ணன் தாத்தாதான். பேரன் பேத்தி என்றால் அவருக்கு உயிர். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள நம் மனம் போராடுவதில் இருக்கிறது எழுத்தாளரின் வெற்றி.

விதுரன், திருதராட்டிரன், பீஷ்மர், துரோணாச்சாரியார், வியாசர் என ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்களது வாழ்வினை சொல்லிக் கொண்டே மகாபாரத கதையினையும் அட்டகாசமாக சொல்லி செல்கிறார் எழுத்தாளர். அதிலும் குருஷேத்திரத்தை நெருங்கியதும் கதை கிளாசிக் தன்மையாக மாறுகிறது. ஒவ்வொருவரும் தன் வாழ்வின் முடிவினை குறித்து யோசிக்க துவங்குவது அருமையாக இருக்கும். அதுவும் பீஷ்மரின் முடிவு கவித்துவம்.

யுத்தத்தினை சுருக்கமாக சொன்னாலும் நாம் இதுவரை கேட்ட ஜாலங்களை சில்லு சில்லாய் நொறுக்குகிறார். பீமன் கௌரவர்களை கொல்வது மட்டும்தான் இதுவரை நாம் கேட்ட பாணியிலேயே இருக்கிறது. மற்ற அனைத்தும் புதிய கோணம்தான்.

யுத்தம் நிறைவு பெற்ற பிறகு நான் லீனியர் பாணியில் ஒவ்வொரு இடத்திலும் நிகழ்வதை சொன்ன இடம் அட்டகாசம். அப்படியே இதே முறையை ஒத்துதான் ஜெயமோகன் விஷ்னுபுரத்தின் இறுதியை வைத்திருப்பார். ரெண்டும் வெவ்வேறுதான். ஆனால் எனக்கு இரண்டும் ஒரே விதமான் உணர்வினை கொடுத்தன என சொல்கிறேன்.

ஆரியர்களுக்கிடையே நிகழ்ந்த இந்த யுத்தமானது பாரதத்தின் வரலாற்றினை, கலாச்சாரத்தை மாற்றி, புதிய இனக்கலப்புகளை உருவாக்கியது. அனைவரும் புனிதமாக கருதும் மகாபாரதத்தை சிரிக்காமேலேயே வைத்து செய்திருக்கிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இந்த நூலை பற்றி மட்டுமே அவ்வளவு எழுதலாம். ஆனால் இதெல்லாம் வாசித்து அனுபவிக்க வேண்டிய நூல். அதனால் சுருக்கமாக முடித்து கொள்கிறேன்.

மகாபாரதம் விரும்புபவர்கள் கட்டாயம் இந்த நூலினை வாசிப்பீர்கள் என்பது உறுதி. தவிர்க்கவே முடியாது. எஸ்.ராவின் இந்த கட்டுரை உங்களுக்கு உதவக்கூடும். https://www.sramakrishnan.com/?p=3337

இதையெல்லாம் முடித்தவர்களுக்கு ஜெயமோகனின் வெண்முரசு இருக்கிறது. அதற்கு பிறகு அசல் மகாபாரதத்தினை ஒருவர் தமிழில் மொழிபெயர்த்து ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதை வாசிக்கலாம். மகாபாரதம் பற்றி மட்டுமே நிறைய பேசலாம். அது ஒரு கடல். அவ்வளவுதான்.

இந்த நூல் வாசிக்கையில் எனது வாசிப்பனுபவங்களை மீம் வடிவில் கொடுத்துள்ளேன். அதற்கான இணைப்பு https://www.facebook.com/kathir.rath/media_set?set=a.10219862066436248&type=3

இந்தியப் பயணம் – ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தமது நண்பர் குழாமுடன் இந்தியா முழுக்க(ஓரளவு) சென்ற பயண அனுபவத்தை குறித்த நூல் இது. எழுத்தாளர் என்றால் வருடத்திற்கு 10000 கிமீ பயணிக்க வேண்டும் என்று சொல்பவராயிற்றே…! 

இது சற்று பழைய நூல். அதாவது 2008 ம் ஆண்டு பயணித்த அனுபவம் இது. ஆனால் பயணத்தின் போதே அவ்வபோது தனது வலைதளத்தில் பயண அனுபவங்களை பகிர்ந்து வந்திருக்கிறார். தனது வாசகர்களுக்கு தனது அனுபவத்தை உடனுக்குடன் பகிர்வது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

இந்தியப் பயணம் Inthiya Payanam

ஈரோட்டில் இருந்து கிளம்பி, ஆந்திரம், மத்திய பிரதேசத்தை கடந்து, காசி வரை, அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டிணம் வந்து சென்னை வந்திருக்கிறார்கள். இது முழு இந்தியாவில் பாதி கூட வராதுதான். ஆனால் இந்தியாவை கண்ட்டைவதற்கான துவக்கமாக இப்பயணத்தை கொண்டிருக்கிறார்கள்.

முதலில் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்றருக்கிறார்கள். இக்கோயில் எனக்கு பக்கம். 20 கிமீதான் வரும். நான் ஒரு 5 முறை சென்றிருக்கிறேன். ஆனால் இவர் குறிப்பிட்டுள்ள எந்த விசயத்தையும் நான் இதுவரை கவனித்ததே இல்லை என்பதுதான் உண்மை. அது கொஞ்சம் வெட்கமாக இருந்தது. சரி அதற்கு இந்து ஞானமரபு அறிந்திருத்தல் அவசியம் போல.

அங்கிருந்து ஆந்திரா லெபாக்‌ஷி. அப்படியே தொடர்ந்து மொத்தம் 21 இடங்களை/கோயில்களை/மடங்களை சென்றடைந்திருக்கிறார்கள். அது 19 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன.

ஒரு தேர்ந்த வாசகருடன்/எழுத்தாளருடன் பயணிப்பதல்தான் எத்தனை வசதிகள்? உடன் செல்பவர்கள் கேட்கையில் சிறுகதைகளை சொல்லகிறார். அந்தந்த தளங்களை பற்றி, அதன் வரலாற்றை பற்றி சொல்லி தருகிறார். மேலும் அது குறித்து எந்தந்த புத்தகங்களில் படிக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறார். ஏற்கனவே பாலைநிலப்பயணம்-செல்வேந்திரன் நூலை வாசிக்கையில் இந்த குழுவுடன் ஒரு பயணம் செல்ல வேண்டும் என்றொரு ஆவல் எழுந்த்து. அது மேலும் அதகரித்துள்ளது.

அப்படியே ஆந்திரா முழுக்க கடக்கையில் ஆந்திராவின் நலனுக்காக மூன்று மாநிலமாக கூட பிரிக்கலாம் என பரிந்துரைக்கிறார். சொன்னபடி ஆந்திரா இரண்டு மாநிலமாக இப்போது பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோயில்களை கட்டிய மன்னரை பற்றிய கதைகளை சொல்கையில் அந்த பேரரசு பற்றிய தகவல்களையும் நிறைய குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கு விஜயநகர பேரரசு பற்றிய தகவல்கள், காகத்திய அரசு, ஹொய்சாள அரசு, சாளுக்கிய அரசு, அவர்களின் கட்டிடக்கலை பாணி என பயணத்தினூடே தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆந்திரா தாண்டிய பிறகான இந்தியா வேறு மாதிரி இருப்பதை அழகாக குறிப்பிடுகிறார். தக்காண பீடபூமியை கடந்து இறக்கத்தில் இறங்குவதை குறிப்பிட்ட இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து. நான் அங்கெல்லாம் போனதேயில்லை. போகவேண்டும். இந்த நூலை படித்துவிட்டு பலர் இதே வழியில் பயணித்தார்களாம். என்னை போலத்தானே அனைவருக்கும் தோன்றிருக்கும்.

பயணம் எதற்காக? அது தரும் உணர்வுகளை எத்தகையது? வாழ்வின் நோக்கத்தில் அதன் பங்கு என்ன என்பதை ஆங்காங்கு சொல்லிக் கொண்டே வருகிறார். 

ஒவ்வொரு கோயிலை பற்றி வர்ணிப்பதை கேட்டுக் கொண்டே அதன் புகைப்படங்களை பார்த்து இரசிப்பதும் அதன் பின்னனி கதைகளை கேட்டு கொண்டு தற்போதைய சுற்றுச்சூழலை விவரிப்பதும் நாமே உடன் சென்றதை போன்ற உணர்வினை தருகின்றன.

சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என அனைத்து விதமான வழிபாட்டு தளங்களுக்கும் செல்கிறார்கள்.

ஒரு இடத்தில் ரெட்டி சமூகத்தார் நன்கொடையால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதியை பற்றி பாராட்டிவிட்டு, இது போல் சாதியை வைத்து ஏதேனும் நன்மை செய்ய முடியுமா என யோசிக்க சொல்கிறார். அதாவது சாதியை ஒழிக்க முடியாது, அதோடு வாழ பழகிக் கொள்ளலாம் என்கிறார்.

அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலமும் தமிழகத்தை விட எந்தெந்த விதத்தில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்கிறார். தமிழகம் இந்தியை மறுதலித்து ஆங்கிலத்தை கைவிடாமல் இருப்பதன் பலனை பாராட்டுகிறார்.

உண்மையில் நேரடியான பயணம் போன்றொரு அனுபவம் எந்த புத்தகமும் கொடுத்து விடாது. ஆனால் இயலாதவர்களுக்கு வேறென்ன வழி இருக்கிறது? இனி இயன்ற வரை அதிகம் பயண நூல்களை வாசிக்க விரும்புகிறேன்.

நானும் இது போல ஒரு குழுவாக திட்டமிட்டு ஊர் ஊராக சுற்றவும் விரும்புகிறேன்.

நான் கிண்டிலில் வாசித்தேன். அதே சமயம் இந்த நூல் ஜெயமோகன் அவர்களின் தளத்திலும் பதிவுகளாக உள்ளன. அங்கேயும் வாசிக்கலாம்.

சந்திரபாபு – கண்ணீரும் புன்னகையும் – முகில்

தமிழர்களுக்குச் சொந்த குடும்பத்தைத் தாண்டி மிகப்பெரிய ஈர்ப்பு உள்ள விசயம் சினிமாதான். நிஜத்தில் ஒருவரைக் காதலித்தால் திரையில் ஒருவரைக் காதலிப்பர். வெறும் கதாநாயகனை மட்டுமில்லாமல் ஒவ்வொரு நடிகரையும் ஒவ்வொரு விதத்தில் நேசிப்பான். சிறுவர்களுக்கு சூப்பர் ஹீரோ மேல் இருக்கும் நேசம் போல அது இருக்கும்.

ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொருவரை ரசிக்கும், நேசிக்கும். நான் கமலஹாசனை இரசித்து பெருமையாகச் சொல்லுகையில் என் தந்தை சிவாஜி போல வருமா என்பார். எதிர்த்து வாதாடினாலும் தந்தை வயதிற்கு வருகையில் சிவாஜியையும் நேசிக்காமல் இருக்க இயலாது. இங்கு சினிமாவையும் நடிகர்களையும் நேசிக்காதவர்கள் உண்டா என்ன?

நடிகர்கள் என்ற பதத்தைத் தாண்டி, கலைஞன் என்ற இடத்தை அடைபவதற்கான அர்ப்பணிப்பு இருப்பவர்களே காலம் கடந்து நேசிக்கப்படுகிறார்கள். சந்திரபாபு என்ற நடிகரின் திரைப்படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை, ஆனால் அவரது பாடல்களை கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். சந்திரபாபு நடித்து நான் பார்த்த முழுத் திரைப்படம் சபாஷ் மீனா மட்டும் தான். மற்றபடி அவரைப் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஆகச்சிறந்த பணக்காரராகவும் பெரும் குடிகாரராகவும் எம்ஜியாரால் வஞ்சிக்கப்பட்டவராகவும் இருந்தார் என்பது மட்டும் தான்.

மிக முக்கியமான விசயம், பாக்யாராஜின் அந்த 7 நாட்கள் திரைப்படம் சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது பரவலாகப் பேசப்பட்ட விசயம். திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலித்தவருடன் அனுப்பி வைத்து விட்டார் என்று சொல்லக் கேள்வி. இந்த அளவு அறிதல்களுடன் சந்திரபாபு குறித்து முகில் எழுதிய நூலை வாசிக்கத் துவங்கினேன்.

சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும்: Chandrababu (Tamil Edition) eBook:  முகில், Mugil: Amazon.in: Kindle Store

முதல் அத்தியாயமே புதிய தகவல்களுடன் ஆரம்பித்தது. படவாய்ப்புகள் கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, தற்கொலைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி தன் நிலையை விளக்கும் இடம். அபாரம். இத்தனை திறமைகளுடன் வாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு நொந்திருப்பான் இந்த மனிதன்?

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன். சிறுவயதில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி & காமராஜரின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஓரளவு சாப்பாட்டுக்குப் பிரச்சனையில்லாத குடும்பத்திலிருந்தாலும் தனது கலையார்வத்திற்காக வீட்டை விட்டு வெளியேறி தெருத்தெருவாய் பட்டினியாய் அலைந்தவர். எந்த நிலையிலும் “என்னோட பிராண்ட் கோல்ட் பில்டர் தான், அது வாங்கி கொடுக்கிறதா இருந்தால் வாங்கிக் கொடுங்கள், இல்லை வேண்டாம்” எனச் சொல்லும் மேன்மகன்.

வாய்ப்பு கிடைத்த பிறகு உச்சம் தான். காத்துக் கிடந்த அத்தனை திறமைகளுக்கும் நிதானமே இல்லாமல் பொங்கி வழிந்தன. எழுத்தாளரும் சந்திரபாபுவின் நண்பருமான ஜெயகாந்தன் சொல்வது போல “தனது நடிப்பாற்றலை ஊதாரியாய் வாரி வழங்கினார்” என்றே சொல்லலாம்.

அதிலும் சபாஷ் மீனா படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் கேட்கும் அளவு தன் திறமை மீது நம்பிக்கை கொண்டவர். அவருக்கு மட்டுமல்ல, மொத்த திரையுலகத்திற்கும் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை. உதாரணத்திற்கு ஒரு நிகழ்வினை சொல்கிறேன்.

ஏவிஎம் நிறுவனம் “சகோதரி” என்றொரு படத்தினை எடுக்கிறது. ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் படம் முடிந்த பிறகு போட்டுப் பார்க்கிறார். ஓடுவதற்கான சரக்கு ஏதுமில்லை என்பது புரிகிறது. சந்திரபாபுவை வரச் சொல்கிறார். படத்தைப் பார்த்து விட்டு வரச்சொல்லி, இதனை ஓடவைக்க வேண்டும் என்கிறார். அதற்கு சந்திரபாபு தனது நகைச்சுவைக் காட்சிகளை 7 நாள் படப்பிடிப்பு நடத்தி படத்துடன் இணைத்துப் படத்தை மேம்படுத்தித் தருவதாகச் சொல்கிறார்.

அதற்கான சம்பளமாய் ஒரு இலட்சம் கேட்கிறார். அப்போது எம்ஜிஆர், சிவாஜிகளின் சம்பளமே 75000ஐ தாண்டவில்லை. ஒருவாறு ஒப்புக்கொள்ளப்பட்டு, சொன்னது போல் தனது நகைச்சுவை பகுதிகளை எடுத்து இணைத்துத் தருகிறார். படம் ஹிட். சொன்னது போல ஒரு இலட்சம் சம்பளமும் பெற்றுக் கொண்டார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது, ஏவிஎம் போன்ற நிறுவனம் கூட, ஓடாத படத்தை சந்திரபாபு நினைத்தால் ஓட வைக்க முடியும் என நம்பிய சூழல். வெறுமனே இயக்குநர் சொன்னதைக் கேட்டு நடிப்பவராய் மட்டும் இல்லாமல் திரைப்பட உருவாக்கம் பற்றி அனைத்தும் அறிந்திருந்ததால்தான், ஏற்கனவே எடுத்த படத்தின் இடையே தனிப்பட்ட காட்சிகளை எழுதி, அதைத் தானே இயக்கி, அதில் தானே நடித்து, அதனை எங்கெங்கு இணைக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் கையாள முடிந்தது.

வெறும் நடிப்பு, நடனம், இயக்கம் மட்டுமில்லாது இசையமைப்பும் சந்திரபாபுவிற்கு கைகூடும். பல பாடல்களை எழுதி, மெட்டமைத்து, தானே பாடியிருக்கிறார். அவருக்கு மட்டுமன்றி மற்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.

எம்ஜிஆரை நம்பியது, குடிக்கு அடிமையானது என்ற இரண்டு விசயங்கள் இந்த மாபெரும் கலைஞனைக் கலையிலிருந்து வெளியேற்றி சிறுவயதிலேயே உலகத்தை விட்டும் விரட்டி விட்டது.

அவரது சொந்த வாழ்க்கை சோகங்கள் பற்றிப் படிக்கையில் ஏற்படும் சோர்வைக் கூட எப்படி இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும் அந்த மனிதனால் இப்படி நடிக்க முடிந்தது என்ற வியப்பு விரட்டி விடுகிறது. தான் விருப்பப்பட்டு ஆசைஆசையாய் நிகழ்ந்த தனது திருமணம் தோல்வியடையும் வேளையில் கூட மனிதன் “சபாஷ் மீனா” படத்தில் இரட்டை வேடத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

எந்த நிலையிலும் சுத்தமாக உடையணிவது, மற்ற நடிகர்கள் பாகவதர் பாணியில் வேட்டி சட்டையுடன் நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்த காலத்தில், கோட் சூட்டுடன் ஸ்டைலாக உலா வந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சார் என்றிழைக்காமல் மிஸ்டர், மிஸ், மிஸ்ஸஸ் போட்டுப் பெயர் சொல்லி அழைப்பது, எந்த நிலையிலும் யாருக்கும் அஞ்சாமல் அவர் மனதில் பட்டதைச் சொல்வது என மனிதன் தனக்கு நேர்மையாக வாழ்ந்திருக்கிறார்.

இந்த புத்தகத்தின் மூலம் சந்திரபாபுவைப் போலவே அவரது வாழ்வில் வந்த வேறு சிலரின் முகங்களையும் அறிந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது. உதாரணத்திற்கு எம் எஸ் விஸ்வநாதனின் நடனத்திறமை.

வேறு நாட்டில் ஏன் வட இந்தியாவில் பிறந்திருந்தால் கூட சார்லி சாப்ளின் அளவுக்குப் புகழ் பெற்றிருக்க வேண்டிய மனிதர், தமிழ் நாட்டில் பிறந்ததாலோ என்னவோ சரியாகக் கொண்டாடப்படாமல் போய்விட்டார்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு டீவி போட்டால் ஆதித்யா சேனலில், இப்புத்தகத்திலிருந்து ஒரு காட்சியை அனிமேஷனாக போட்டு, பின்னணியில் அவர் கதையைச் சொல்கிறார்கள். கே டீவியில் மனம் கொத்திப் பறவை திரைப்படம். அதில் சிங்கம்புலி வைத்திருக்கும் டீக்கடை முழுக்க சந்திரபாபு படங்கள், யதெச்சையாக வேறு சேனல் வைத்தால் “புத்தியுள்ள மனிதரெல்லாம்” பாடல் ஓடுகிறது. இப்படி ஒரு பாடலுக்கு மென்மையான மேற்கத்திய நடனமெல்லாம் வேறு யாருக்கும் வந்து விடாது.

சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய நபர் சந்திரபாபு. வாழ்வில் உச்சத்தையும் பள்ளத்தையும் பாபு போல் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். புத்தகத்தின் தலைப்பில் சொல்வது போல தன் வாழ்வு முழுக்க கண்ணீரால் நிரம்பியிருந்தாலும் நம்மைப் புன்னகைக்க வைத்துவிட்டே சென்றிருக்கிறார்.

இறுதியாக இந்த ஒரு பாடல்,கண்ணதாசன் எழுதியது, பாபு பாடியது, அப்படியே பாபுவின் வாழ்க்கையை முழுமையாகச் சுருங்கச் சொல்கிறது.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

சிறப்பானதொரு மனிதனை, கலைஞனை அறிமுகபடுத்தியதற்கு எழுத்தாளார் முகிலுக்கு நன்றி.