“சேப்பியன்ஸ்” என்றொரு புத்தகம். வெளியான வேகத்திலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட புத்தகம். பில்கேட்சும் மார்க் ஸூக்கர்பெர்க்கும் தங்களுக்குப் பிடித்த முக்கியமான புத்தக பட்டியலில் அதனை வைத்திருக்கிறார்கள். நான் வாசித்த வரையில், இப்போது அனைவரையும் கட்டாயம் வாசிக்கச் சொல்லும் புத்தக பட்டியலில் முதல் புத்தகமாக சேப்பியன்ஸ் இருக்கும். அதன் தொடர்ச்சியாக வந்துள்ள புத்தகம் தான் “ஹோமோ டியஸ்”
ஹோமோ சேப்பியன்ஸ் என்றால் அறிவுள்ள மனிதன் என்று பொருள். சேப்பியன்ஸ் என்ற வார்த்தைதான் அந்த அறிவுள்ள என்ற பொருளை தருகிறது. அதே போல் ஹோமோ டியஸ் என்றால் கடவுள் நிலையிலான மனிதன். “டியஸ்” என்றால் இலத்தினில் கடவுள் என்று பொருள். சக குரங்கிலிருந்து மேம்பட்டு விலங்கு நிலையிலிருந்து மனித நிலையை அடைந்த மனிதன், அடுத்து மனித நிலையிலிருந்து கடவுள் நிலையை அடையப் போவதை விவரிக்கிறது இப்புத்தகம்.
நான் ஒரு பாஜக ஆதரவாளனாக இருந்த பொழுது அடிக்கடி என்னிடம் சொல்லப்பட்ட விசயம் ஒன்று. இந்தியாவில் சிறுபான்மையினர்களின் சதவீதம் சுதந்திரத்தின் போது இவ்வளவு இருந்தது, இப்போது இவ்வளவு அதிகரித்திருக்கிறது. விட்டால் அவர்கள் இந்தியாவை இஸ்லாமிய/கிறித்துவ நாடாக மாற்றி விடுவார்கள். ஆக இந்துவாக ஒன்றிணைவோம் என்பதுதான். அதைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது என்பதற்காகத் திரும்பத் திரும்ப அது சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். (இந்த வாதத்தை “ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்” புத்தகத்தில் ஸ்ரீதர் சுப்ரமணியம் அடித்து நொறுக்கி விடுகிறார்) “நாம், அவர்கள்” என்ற பதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப் படும். ஹிட்லர் பயன்படுத்திய அதே முறை. கொஞ்ச நாட்கள் நான் அதை நம்பி இருந்தேன். பிறகு சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பற்றித் தெரிய வருகையில் இன்னும் 50 வருடங்களில் இந்தியா எந்த மத நாடாக மாறியிருக்கும் என்பதை விட இந்தியாவில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அது குறித்துப் பேசவே அனுமதிக்கவில்லை.
அடுத்து பொருளாதாரம் பயங்கர வேகத்தில் பின்னோக்கி செல்கிறது என்று புரியத் துவங்கிய பின் அதைப் பற்றிய கேள்வி எழுப்பினாலும் அதே நிலைதான். தொடர்ச்சியாக வேறு எந்த பிரச்சனைகளைக் குறித்தும் பேச அனுமதியில்லை எனும்போதுதான் நான் வேறு கட்சிகளைத் தேட துவங்கினேன். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நம் கண்முன்னே நம் வாழ்க்கையை மாற்றக் கூடிய பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொன்றின் வீரியத்தையும் தெரிந்து கொள்ளும் போதுதான் நாம் அறைக்குள் இருக்கும் புலியைப் பற்றிப் பேசாமல், ஒளிந்திருக்கும் எலி எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்து நம் தீனிகளைத் தின்றுவிடும் என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம் எனப் புரிய வருகிறது.
இப்போது மேலே கூறியிருக்கும் பிரச்சனைகளுக்கும் இந்த புத்தகத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் மனிதக் குலம் அடுத்து எதிர்கொள்ளப் போகும் மிக முக்கிய பிரச்சனையை இப்புத்தகம் பேசுகிறது. எப்படி சிம்பன்சிகளிடம் இருந்து பிரிந்து வந்த ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தால்ஸ்களை காலி செய்து விட்டு ஹோமோ சேப்பியன்ஸ் உலகைக் கைப்பற்றினோமோ, அதே போல் சேப்பியன்சை காலி செய்து விட்டு ஹோமோ டியஸ்கள் கைக்கு இந்த மொத்த உலகமும் சென்று சேர இருப்பதை விவரிக்கிறது.
சேப்பியன்ஸ் புத்தகம் படித்திருந்தால் மனிதர்களின் 70000 ஆண்டுக்கால வரலாறும் மிகத் தெளிவாகப் புரியும். அது புரிந்திருந்தால் இப்புத்தகம் சொல்லக்கூடிய விசயங்கள் கொஞ்சம் தெளிவாகப் புரியும். இந்த புத்தகம் மூன்று பகுதிகளாகத் தான் சொல்ல வந்ததைக் கூறுகிறது.
- சேப்பியன்ஸ் இவ்வுலகை வெற்றி கொள்கின்றனர்
- சேப்பியன்ஸ் இவ்வுலகிற்கு ஒரு அர்த்தம் கொடுக்கின்றனர்
- சேப்பியன்ஸ் தங்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றனர்
குரங்கிலிருந்து வந்த மனிதன், மற்ற விலங்குகளைப் போல் தனித்தனி கூட்டமாக வாழாமல் ஒருங்கிணைந்து செயல்பட அவர்களது மொழியும், கற்பனா யதார்த்தவாதமும் உதவுகின்றன. அதைக் கொண்டு ஒரு பொது நோக்கம் என்ற பெயரில் மனிதர்கள் இணைந்து செயல்படத் துவங்குகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக உலகம் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
அப்படி உலகம் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் அடுத்த கட்ட நகர்விற்கும் வளர்ச்சிக்கும் ஒழுங்கு விதிகள் தேவைப்படுகின்றன. அதற்காகக் கடவுள்களும் மதங்களும் உருவாக்கப்படுகின்றன.
தொழிற்புரட்சிக்கு பிறகான அறிவியல் வளர்ச்சி மனிதர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. மனிதர்களின் மிக முக்கியமான பிரச்சனைகளான பஞ்சம், தொற்று நோய், போர் ஆகியவற்றில் இருந்து மனித சமூகத்தை அறிவியலும், தாராளவாதமும், பொதுவுடைமையும் எப்படி விடுவிக்கின்றன என விளக்கி விட்டு, அடுத்து இப்போது மனிதர்கள் ஏற்று கொண்டுள்ள மதங்களை விளக்குகிறார்.
ஹராரியை பொறுத்தமட்டில் எது நம் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஒழுங்குமுறை விதிகளோடு வருகின்றனவோ அவை மதங்களே. தாராளவாதமும் கம்யூனிசமும் மதங்கள்தான் என்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது மனிதத்துவம் என்ற மதம் கடைப்பிடிக்கப்படுவதை விளக்குகிறார். அதிலிருந்து தரவு வாதம் என்ற மதத்தை நோக்கி நாம் அனைவரும் பயணிப்பை நமக்குப் புரிய வைக்கிறார்.
தொழில் வளர்ச்சிக்காக முன்னெடுத்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதக்குல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது போல, இனி இணையதள தரவுவாதமானது எப்படி மனிதரிலிருந்து அதிமனிதர்கள் எனப்படும் புதிய இனத்தை உருவாக்கும் என்றும், அந்த புதிய இனம், மனிதர்களாகிற நாம் மற்ற விலங்குகளை நடத்தியது போலவே நடத்தும் எனக் கூறி வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.
யோசித்துப் பாருங்கள். நாம் உயிரைக் கொடுத்துப் படித்துத் தேர்வெழுதும் போது, கணினியுடன் தன் மூளையை கனெக்ட் செய்யும் தொழில் நுட்ப வசதி ஒரு கோடிஸ்வர மாணவனுக்கு இருக்குமெனில் யார் வெல்வார்?
ஓடி ஆடி ஆரோக்கியத்திற்காக மற்றவர்கள் மெனக்கெடும் போது, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மொத்த உடல் உறுப்புகளையும் மாற்றிக் கொள்ளும் வசதி உலக பணக்காரர்களுக்கு இருக்குமெனில் அவர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள்?
ஒவ்வொரு நாடும் அரசும் மக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் கொடுப்பது எதற்காக? நாட்டு மக்களின் மீதான அக்கறையா? கிடையாது. நம் ஆரோக்கியம் அவர்களின் முதலீடு. மனித வளம் என்ற ஒரு தேவை இருக்கும் வரைதான் சக மனிதர்களைப் பற்றி அதிகார வர்க்கம் கவலைப்படும். அதே நேரத்தில் அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவு போதும் என்ற நிலை வந்தால் என்னாகும்?
இதை நான் ஒரு பத்தியில் சொல்லிவிட்டேன். ஹராரி விவரிப்பதை படிக்கனுமே, ஒரு திரைப்படம் பார்ப்பது போல் இருக்கிறது. உதாரணத்திற்கு உலகின் அனைத்து வாகனங்களும் ஒற்றை புரோகிராமால் கட்டுப்படுத்துவது குறித்து எழுதியிருப்பதைச் சொல்லலாம்.
வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு வீட்டுக்கு முன் அமைக்கும் புல்வெளிகளைப் பற்றிச் சொல்லி ஒரு விளக்கம் கொடுத்திருப்பார் பாருங்கள். “வரலாற்றைப் படிப்பது, அதிலிருந்து விடுபடுவதற்கே” என்பதைப் புரியவைத்ததற்காகவே இப்புத்தகத்தைத் தனியாகக் கொண்டாடலாம்.
எனக்கு இன்னொரு முக்கியமான கேள்விக்கான விடை இப்புத்தகத்தில் கிடைத்தது. அதில் மனிதர்கள் ஏன் தங்கள் தவறுகளைத் தவறென்று தெரிந்தாலும் விடாப்பிடியாக அக்கருத்தினை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான பதில். ஏனென்றால் எனக்கு இந்த கேள்வி நெடுநாட்களாக இருந்தது. “குரங்கிலிருந்து மனிதன் வந்தது & பரிணாம கொள்கை” பற்றி நன்கு படித்துத் தெரிந்த கல்வி கற்றவர்கள் கூட, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இறைவனென்றும் இறைதூதுவனென்றும் யாரோ சொல்லியதை அனைத்தையும் விட முக்கியம் எனத் தூக்கிப் பிடிக்கிறார்கள்?”. இதற்கான ஓரளவு திருப்தி தரும் பதில் இந்த புத்தகத்தில் கிடைத்தது.
இது தரும் தரவுகள் நாம் இதுவரை உலகைப் பார்த்து வந்த பார்வையை முற்றிலுமாக மாற்றி விடுகின்றன. உலகைக் கைப்பற்றிய பிறகு நாம் என்னென்னவெல்லாம் செய்திருக்கிறோம் எனத் தெரிய வருகையில் அடடா என்று உத்து கொட்டுவதோடு நிறுத்தி கொள்ளலாம். ஆனால் நமக்கு அடுத்து ஒரு அதிமனித இனம் உருவாகி, அது நம்மை என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று நினைக்கையில் பதறுகிறது.
சேப்பியன்ஸ் அளவு சுவாரசியமான புத்தகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் வரலாறு தரும் சுவாரசியமே தனி. இதில் இசங்கள் குறித்த விளக்கங்கள் அதிகம் வருவதால் கொஞ்சம் அலுப்பூட்டும். ஆனால் எதிர்காலத்தின் வரலாற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்ளலாம்.
மிக மிக நிதானமாக வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரு நாளுக்கொரு அத்தியாயமாக வாசித்து விட்டு, அது குறித்து மனதை யோசிக்க விட்டு விடலாம். உலகை நாம் பார்க்கும் பார்வை முழுவதும் மாறிவிடும். பெரிதாக இனி எதையும் அலட்டிக் கொள்ளாமல் கடந்து செல்ல துவங்கி விடுவோம். எல்லாம் சில காலம்தானே..
இது போன்ற புத்தகங்களைத் தமிழுக்குத் தெளிவாகக் கொண்டு வரும் நாகலட்சுமி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். ஏனென்றால் தமிழில் வரவில்லையென்றால் நானெல்லாம் இவற்றை வாசித்திருக்கவே போவதில்லை. இதுதான் இப்போது மிக முக்கியமான தேவை. அறிவியற் சிந்தனைகள் அனைத்தும் தமிழ் மொழியில் வெளியிடப்பட வேண்டும்.